SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களை காத்து நிற்கும் மாசி பெரியண்ணன் சுவாமி

2020-01-14@ 10:03:23

நாமக்கல் மாவட்டத்தில் குளிர்காற்று வீசி, மூலிகைகள் வாசம் பரப்பும் கொல்லிமலையில் இருக்கிறது பிரசித்தி பெற்ற மாசி பெரியண்ணன் சுவாமி கோயில். இவருக்கு சங்கிலி கருப்பு, நாட்டுமுனி, பெரியசாமி, பெரியண்ணன் என்று பல பெயர்கள் உண்டு. கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசிக்குன்றில் வாழம்புல் என்ற ஒருவகை புல்லினால் அமைத்த சிறிய கூரைக்கட்டிடத்தில், வேங்கை வாகனத்தில் அமர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறார் மாசி பெரியண்ணன் சுவாமி.
மாசி பெரியசாமிக்கு நாமக்கல், துறையூர், திருச்சி வட்டங்களில் பல கோயில்கள் உள்ளன. மாசிக் குன்றிலிருக்கும் இந்த கோயில்தான் மூலக்கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘காசியிலிருந்து தேவி பார்வதியும், பெருமாளும் தென்திசை நோக்கி வந்தனர். தேவி பார்வதி காமாட்சியாகவும், பெருமாள் பெரியண்ணனாகவும் மானிட ரூபமெடுத்தனர். துறையூர் பக்கமுள்ள  வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட்டாள். பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு போனார். பெரியண்ணன் கொல்லிமலையில் உள்ள குன்றின் மீது ஏறி,  நின்றபோது அது அவரின் பலம் தாங்காமல் ஆட்டம் கண்டது. எனவே பெரியண்ணன் அந்த குன்றிலிருந்து அடுத்த குன்றுக்கு மாறிச் சென்றார். அடுத்த குன்றும் ஆட்டம் கண்டது. இது போல ஏழு குன்றுகளில் ஏறி நின்ற பிறகு கடைசியாக மாசிக் குன்றை அடைந்தார்.

மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருந்த மக்கள் வழிபடவே, அவர்களின் பக்தியினால் மகிழ்ந்த பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்’’ என்பது தலவரலாறு. கல்லாத்துக்கோம்பு என்பது கொல்லிமலையின் அடிவாரத்தில் அமைந்த ஊர். வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் அவரைத்தேடி கொல்லி மலைக்கு போனார். கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதை பார்த்த காமாட்சி தானும் அங்கு தங்குவதாக சொன்னார். பெரியண்ணனோ வேண்டாமென்று சொல்லி காமாட்சியை கல்லாத்துக்கோம்பையில் தங்கவைத்தார் என்றும் தகவல்கள் உலா வருகிறது.

மாசிக்குன்றுதான் கொல்லிமலைத்தொடரில் மிகவும் உயர்ந்த மலைப்பகுதி. இக்குன்று கோயிலுக்கு செல்ல மூன்று பாதைகள் உள்ளன. இம்மூன்று பாதைகளில் எந்தப்பாதையில் சென்றாலும் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பிறகுதான் கோயிலை அடைய இயலும். பாதை நெடுக முட்புதர்களும் பாறைக்கற்களும் நிறைந்ததுள்ள செங்குத்தான மலைப்பாதையில் சற்று சிரமப்பட்டே நடந்து செல்ல வேண்டும். மாசி பெரியசாமி கோயில் மலை உச்சியை அடையும் போது சில்லென்று குளிர்ந்த காற்று நம்மை வருடும் போது, களைப்பெல்லாம் காற்றோடு காற்றாக கலந்து விடுகிறது என்கின்றனர் பக்தர்கள்.

அமாவாசை நாட்களில் கோயிலில் கூட்டம் களைகட்டுகிறது. பல நம்பிக்கைகள், வேண்டுதல்கள், நேர்த்திக் கடன்கள் எல்லாம் கோயிலைச் சுற்றி இடைவிடாது நடக்கிறது. குழந்தை வரம் கேட்டு  தொட்டில் கட்டி வழிபடுவது இங்கு சிறப்பம்சமாகும். திருமணத்தடை நீங்கவும் மாசி பெரியசாமியை வழிபடுகின்றனர். வீடு கட்ட நினைப்பவர்கள் பலகைக்கற்களால் அடுக்கி கல்வீடு அமைப்பதும்,  நேர்த்திக்கடனாய் கிடாய் வெட்டுவதும் தொடர்கிறது. தீய சக்திகளின் பிடியில் இருந்து காக்க, கோழிகளை வேல்களில் குத்தி வைப்பதும் தொடர்கிறது. மொத்தத்தில் மாசி பெரியண்ணண் சுவாமி, கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி, காலமெல்லாம் காத்து நிற்கும் ஒப்பற்ற காவல் தெய்வம் என்பது மலைவாழ் மக்களிடமும், பக்தர்களிடமும் தொடரும் நம்பிக்கை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்