SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்

2020-01-13@ 17:29:37

அயன சயன போகஸ்தானம்

லக்கினத்திற்கு 12 ஆம் இடம் என்பது பொதுவாக விரய ஸ்தானம் அதாவது செலவுகள். செலவுகள் என்பது சுப செலவுகள், அசுப செலவுகள், வீண் செலவுகள், மருத்துவ செலவுகள், ஆடம்பர செலவுகள், அன்றாட செலவுகள், அவசிய செலவுகள் எனப் பல வகையில் ஏற்படும். மேலும் இந்த 12 ஆம் வீட்டில் இருந்து பல முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இந்த இடத்திற்கு மோட்ச ஸ்தானம் என்று ஒரு பெயர் உண்டு. பொதுவாக 12ல் கேது இருந்தால் மோட்சம் என்று சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில் 12ஆம் அதிபதி எந்த கிரகமோ அந்த கிரகம் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, வர்கோத்தமம் என பலமாக ஜாதக கட்டத்தில் கிடையாது.

இதைத்தான் பல ஞானியர்கள் பிறவாவாமை வேண்டும் என்று சொன்னார்கள். அந்த மிகப் பெரிய ஒரு ஞான யோகத்தைத் தரும் இடம். பன்னிரெண்டாம் இடம். மேலும் கஷ்டம், நஷ்டம், அலைச்சல், பயணங்கள், கணுக்கால், பாதங்கள், கண்கள், பழிவாங்குவது, துரோகங்கள், தாழ்வு மனப்பான்மை, முன் ஜென்மம், கொலை வெறி, ரகசிய நோய்கள், அவதூறுகள். அவமானம், மனநோய். பய உணர்வுகள், கவலைகள், ஏமாற்றங்கள், போதை பழக்க வழக்கங்கள், கூடா நட்பு, சிறைத் தண்டனை, வீண் வம்பு வழக்குகள், விபத்தில் உறுப்பு இழப்பு இரண்டாம் தாரம், பெண்கள் தொடர்பு , விபசார தொடர்பு. துக்கம், தூக்கமின்மை.

மனைவிக்கு வரும் நோய், வெளி மாநிலம், வெளிநாடுகளில் நீண்ட நாள் வசித்தல் எனப் பல வகையான வாழ்க்கையின் முக்கிய விஷயங்கள் அடங்கி உள்ள இடம். எந்த ஒரு ஸ்தானமாக இருந்தாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். யோக, அவயோகங்கள் கலந்ததே ஜாதகம். சுக்கிரன் 12ல் இருந்தால் போக சுகம், உடல் உறவு, காம இச்சை அதிகம் இருக்கும். பெண் என்றால் ஆண் தொடர்பு, ஆண் என்றால் பெண்கள் தொடர்பு வர வாய்ப்புள்ளது. எல்லாவிதமான போக பாக்கியங்களை அனுபவிப்பார்கள். நல்ல தூக்கம் வரும்.சாப்பாட்டு பிரியர்களாக இருப்பார்கள்.

ஏழாம் அதிபதி விரய ஸ்தானத்தில் இருந்து தசா புக்தி நடந்தால் கணவன் அல்லது மனைவிக்கு இனம் புரியாத நோய்கள் தாக்கும், இல்லற சுகம் கெடும். அறுவை சிகிச்சை, விபத்து, உறுப்பு இழப்பு, நீண்ட மருத்துவச் சிகிச்சைகள் செய்ய வேண்டி வரும். நோய்கள் வராவிட்டால் கருத்துவேறு பாடு, பிரிவினை, விவாகரத்து வழக்கு, இரண்டாம் திருமணம், கல்வித் தொடர்புகள் ஏற்படும். கூட்டுத் தொழிலில் நஷ்டம், பிரச்னை, தொழில் முடக்கம், நண்பர்களால் பிரச்னை, ஏமாற்றப்படுதல் எனப் பல வகையான நிம்மதிக்குறைவும், இயல்பு வாழ்க்கை முடக்கப்படும் சூழ்நிலைகள் உண்டாகும்.

செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருந்தால் எப்பொழுதும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே இருப்பார்கள். 12ல் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷமாகும். இதன் காரணமாகத்தான் தோஷ சமன் உடைய ஜாதகங்களைச் சேர்ப்பார்கள். செவ்வாய் பார்வை காரணமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அதனால் இல்லற சுகம் கெடும். உடல் உறவில் திருப்தி இல்லாத நிலைகளை ஏற்படுத்தும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் B.P. அதாவது ரத்த அழுத்த குறைபாடு ஏற்ற இறக்கமாக ருக்கும். மேலும் 12ஆம் இடம் எந்த கிரகத்தின் வீடாக அமைகிறது என்பதை பொருத்து பலன்கள் அமையும்.

12 ஆம் வீட்டில் குரு இருப்பது ஒவ்வொரு லக்கினத்தை பொருத்து மாறு படும். ஜாதகர் எப்போது போக சுகத்தை நாடுவார். நீண்ட நாட்கள் வெளிநாட்டில் வாசம் செய்வார்கள். சாஸ்திர தர்மங்கள், சம்பிரதாயங்களைப் பற்றி அதிகமாக பார்க்க மாட்டார்கள் .சூழ்நிலை, சந்தர்ப்பம், தங்கள் சுய நலத்திற்கேற்ப எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். புத்திர பாக்கியத் தடை இருக்கும். புத்திரர்களால் பிரச்னைகளை சந்திப்பார்கள். அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். ஜாதி, இனம், மதம், மொழி எதையும் பார்க்காமல் குலதர்மத்திற்கு விரோதமாக திருமணம் செய்து கொள்வார்கள். பெரும்பாலும் ரகசிய திருமணம் செய்து கொள்வார்கள்.

அதாவது தாய், தந்தை உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறாமல் போகும். 12ஆம் வீட்டில் சனி, ராகு, சூரியன் போன்ற கிரகங்கள் இருப்பது சாதகமான அமைப்பு கிடையாது. பொதுவாக எப்போதும் மன உளைச்சலுடன் காணப்படுவார்கள். ரத்தக் கொதிப்பு, மூலம், வயிறு சம்மந்தமான கோளாறுகள் இருக்கும். அடிக்கடி இடம் மாற்றம் இருக்கும். வெளிமாநிலம், வெளிநாட்டில்வசிப்பார்கள். கண்கள் சம்மந்தமாக பிரச்னைகள் வரும். பூர்வீக சொத்தில் பிரச்னைகள் இருக்கும். வழக்கு, பஞ்சாயத்து என்று போராட்டமாக அமையும். அடுத்தடுத்து எதாவது சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும்.

சுப கிரக பார்வை, லக்னாதிபதி பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறையும். 12ஆம் வீட்டில் சந்திரன், புதன் இருப்பது நிம்மதியற்ற தன்மையை குறிக்கும். எதையாவது சிந்தித்து குழப்பம் அடைவார்கள். தாய், தாய் வழி உறவுகள், தாய் மாமன் போன்ற வகையில் நிம்மதி குறைவு, பிரச்னைகள், அலைச்சல், வழக்குகள், மருத்துவ செலவுகள் வரும். தண்ணீரில் கண்டம் வருவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட வயதிற்கு மேல் மறதி நோயால் அவதிப்படுவார்கள். நரம்புத்தளர்ச்சி அதிகம் இருக்கும். கற்பனை உலகில் சஞ்சரிப்பார்கள். மனம் எல்லாவற்றையும் அனுபவிக்க ஆசைப்படும். ஆனால் உடல் ஒத்துழைக்காது.

இவர்களைப் பிஞ்சிலே பழுத்தவர்கள் என்று சொல்லலாம். இளமைப் பருவத்திலேயே கூடா நட்பு, தகாத உறவுகள், சேர்க்கைகள், மது, மாது, சூது என பல வகையான தீய பழக்கங்கள் இவர்களை எளிதாகப் பற்றிக் கொள்ளும் நீச கிரக பார்வை இருந்தால் நிலைமை மேலும் மோசமாகும். சுப கிரக பார்வை இருப்பின், மற்றும் யோக தசை நடந்தால் கெடுபலன்கள் வெகுவாக குறையும்.

தனம்  பணம்  சொத்து  ஆபரணங்கள்

பணம் என்ற காகிதம் அல்லது ரூபாய் நோட்டு அன்றைய கால கட்டத்தில் இருந்து முக்கிய வாழ்வாதார பிரச்னையாக இருக்கிறது. தற்காலத்தில் கருவறை முதல் கல்லறை வரை சில்லறை தேவை என்ற நிலை இருக்கிறது. பணம், பாதாளம் வரை பாயும், பணம் பத்தும் செய்யும், பணத்தால் பலவற்றைச் சாதிக்கலாம். பணம், பந்தியிலே குணம் குப்பையிலே என பணம் அத்தியாவசியமானதாகிவிட்டது. பணம் என்பது செல்வ யோகம், தனலட்சுமி பாக்கியம், ஐஸ்வர்ய யோகம் கோடீஸ்வரபட்டம், என எல்லாவற்றையும் ஒருவருக்குத் தருகிறது.

பரம்பரை பரம்பரையாக முன்னோர்கள் போட்டுவைத்த அடித்தளத்தைப் பயன்படுத்திக் கொண்டு பலர் எளிதாக பணத்தை அள்ளி விடுகிறார்கள். பலருக்கு வியாபாரம், தொழில்கள், மூலம் தன வரவு உண்டாகிறது. அதே நேரத்தில் தற்கால கல்வி அமைப்பு. ஒருவரை மிகச்சாதராணமாக லட்சங்களைக் கொடுத்து நல்ல அந்தஸ்தில் அமர வைத்து விடுகிறது. சரஸ்வதி என் நாவில் குடியிருப்பாள் என்று சொல்வார்கள். அந்த சரஸ்வதி தரும் கல்வி யோகம் மூலம் பணம் கொட்டும் தசம தனட்சுமி யோகம் ஒருவருக்கு மிகச் சாதாரணமாக கோடிகளில் புரளவைக்கிறது.

யோகம், அம்சம், பாக்கியம், அதிர்ஷ்டம் என்ற வார்த்தைகள் எல்லாம் செல்வ வளத்தைப் பற்றி குறிப்பிடும் சொற்களாகும். இன்றைய சமூகத்தில் அதிர்ஷ்டம் என்ற சொல்லை சர்வ சாதாரணமாக எல்லோரும் பயன்படுத்துவார்கள். தமக்கு ஏதாவது கிடைக்க வில்லை என்றால், அதற்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கவேண்டும் என்று சொல்வார்கள். இந்த அதிர்ஷ்டம் என்பது நம் ஜாதகத்தில் கட்டங்களிலும், கிரக அமைப்பு, சேர்க்கை, பார்வைகளில் மறைந்து இருக்கிறது. இந்த அமைப்புக்கள் எல்லாம் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடும். சில விசேஷ தன யோகங்கள். எல்லோருக்கும் பொதுவாக இருக்கும். சில ஜோதிட பரி பாடல்கள் மூலம் விசேஷ ராஜயோகங்களை தெரிந்து கொள்ளலாம்.

லக்கின - சுக அஸ்வ யோகம்

லக்கினம் என்பது ஒரு ஜாதகத்தில் மிக மிக முக்கியமான இடமாகும். ஏனென்றால் இந்த லக்கினம் அமையும் இடத்தில் இருந்து தான் ஒரு ஜாதகம் இயக்குகிறது. இதை இயக்குபவர்தான் லக்னாதிபதி. இந்த லக்கினம், லக்னாதிபதி பலத்துடன் சுப அம்சத்தில் இருந்தால் ஜாதகரை ஒரு கவசம் போல் இருந்து பாதுகாக்கும். இத்தகைய பலம் பெற்ற லக்கினத்திற்கு 12 ஆம் இடம் விரய ஸ்தானம் ஆகும். அதே போல் லக்கினத்திற்கு இரண்டாம் இடம் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம் ஆகும்.

இந்த இரண்டு ஸ்தானங்களுக்கு நடுவில் லக்கினம் அமைந்திருக்கிறது அதாவது இரண்டாவது இடம் வரவு தனம், பணம், செல்வத்தைக் குறிக்கிறது. பன்னிரெண்டாம் இடம் செலவு எல்லா விதமான விரயங்களையும் குறிக்கின்றது. நிலம், தோட்டம், வீடு, நகை வாங்குவதும் செலவுதான். அதாவது பணத்தை முதலீடு செய்கிறோம். வங்கியில் பணம் சேமிப்பதும் செலவுகள். இதைப் போன்ற அமைப்புக்கள் ஒருவருக்கு ஜாதக பலம் மூலம் தான் கிடைக்கிறது. எப்போதோ, யாரோ கட்டிக் காத்த பரம்பரை சொத்து தலைமுறைகள் தாண்டி பின்னால் வரும் வாரிசுகளுக்குக் கிடைக்கிறது.

தாத்தா, அப்பா , ஒரு காலத்தில் புறநகர்ப் பகுதியில் வாங்கிப் போட்ட நிலம் இன்று பேரன், பேத்திகளை கோடீசுவரர்களாக ஆக்குகிறது. இப்படிப்பட்ட யோக பாக்கியத்தை தருவது தான். சுக அஸ்வ யோகம் அல்லது சுபகத்திரியோகம் இந்த யோகம் மிகப் பிரபலமான தனயோகம் ஆகும். அதாவது லக்கினத்திற்கு 12 ஆம் வீட்டில் ஒரு சுப கிரகமும், லக்கினத்திற்கு 2ஆம் வீட்டில் ஒரு சுப கிரகமும் அமைந்திருப்பதே சுபகத்திரியோகமாகும். இந்த அமைப்பில் ஏதாவது ஒரு கிரக ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் வாழ்நாள் முழுக்க சுபயோகத்தையும், போகத்தையும் அனுபவிப்பார்கள்.

கேந்திரம் - கோணம்

லக்கினத்திற்கு நான்கு, ஏழு, பத்து ஆகிய இடங்கள் கேந்திர ஸ்தானங்களாகும். இதில் லக்கினத்தில், நான்கில், ஏழில், பத்தில், ஏதாவது ஒரு கிரகம் ஒவ்வொரு ஸ்தானத்திலும் இருந்தாலும் கேந்திரம் கட்டிய ஜாதகம் என்று சொல்வார்கள். இதில் ஏதாவது ஒரு கிரக ஆட்சி, உச்சம் பெற்றால் யோகபலன் கூடும். அடுத்து லக்கினம், ஐந்து, ஒன்பது ஆகிய ராசிகளில் ஏதாவது கிரகம் அமையப் பெற்றல் லட்சுமி யோகம். இந்த இரண்டு அமைப்புக்களும் தன ஜன வசியத்தைத் தரும்.
 
ராகு - கேது
 ஜென்ன லக்கினம் ஏதுவாக இருந்தாலும் கருநாகம் என்று சொல்லக்கூடிய ராகு, மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் எங்கு இருந்தாலும் குதிரை, பல்லக்கு, புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட சப்ர மஞ்சத்தில் படுத்துறங்கும் பாக்கியம் கிட்டும் என்று சோதிட அலங்கார பாடல் குறிப்பிடுகிறது அதாவது செல்வாக்கு மிக்க ராஜ வாழ்க்கை அமையும்.

சந்திராதி யோகம்

சந்திரன் இருக்கும் ராசி தான் ஒருவரின் ஜெனனராசி. லக்கினத்திற்கு அடுத்து ராசியைத் தான் பார்ப்பார்கள். இந்த சந்திரன் இருக்கும் ராசிக்கு 6, 7, 8, 9 ஆகிய வீடுகளில் வரிசையாக கிரகங்கள் இருந்தால் அதுதான் சந்திராதி யோகம் இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் எல்லாத் துறைகளிலும் புகழ் அடையும் பாக்கியம் பெற்றவர்கள். குறிப்பாக சந்திரனுக்கு சம சப்தம கேந்திரமான ஏழாம் வீட்டில் சூரியன் இருந்தால் பட்டம் பதவி யோகம். கவிஞர், கதாசிரியர், எழுத்தாளர். செவ்வாய் இருந்தால் சந்திர மங்கள யோகம் அதிகாரம், பதவி ஆற்றல், பூமி யோகம் உண்டு.

சுக்கிரன் இருந்தால் அஷ்ட லட்சுமி யோகம் கலைத்துறை, இசைத்துறையில் புகழ் அடைவார்கள். புதன் இருந்தால் வித்தை உண்டு. கணிதம், அகட விகடம், நகைச்சுவை, பேச்சாளர், சொற்பொழிவாளர். எந்தக் கலையும் இவர்களுக்கு எளிதில் வசப்படும். குரு இருந்தால் கெஜகேசரி யோகம். செல்வாக்கு, சொல்வாக்கு, நிதித்துறை, நீதித்துறை, பன்மொழிப் புலமை, ஆசிரியர், சாஸ்திர வேத பண்டிதர். இந்த சந்திரன், குரு கேந்திர அமைப்பு ஜாதகத்தில் உள்ள சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும்.

கிரக மாலை யோகம்

ஜெனன லக்கினத்திற்கு எந்த ஸ்தானத்தில் இருந்தாவது கிரகங்கள் இடை விடாமல் இருப்பது ‘‘கிரக மாலை யோகம்’’ அல்லது ‘‘கிரகமாலிகா யோகம்’’. அல்லது ‘‘மாலா யோகம்’’. ‘‘வல்லகி யோகம்’’ என பல வகைகளில் பெயர் பெற்றுள்ளது. இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தில் இருந்து. ஏழாம் இடம் வரை தொடர்ந்து கிரகம் இருப்பது தனதானிய சம்பத்து யோகம். சுகஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்து பத்தாம் இடம் வரை தொடர்ந்து கிரகங்கள் இருப்பது பூமி பாக்கிய யோகம். பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் இடத்தில் இருந்து லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் இடம் வரை கிரகங்கள் இடை விடாமல் இருப்பது சௌபாக்கிய யோகம். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்கள். ராஜயோக பலன்களை அனுபவிப்பார்கள். யோகதசா புக்தி காலங்களில் பட்டம், பதவி, கௌரவம் என திரண்ட ஐஸ்வர்யத்தை அனுபவிப்பார்கள்.

சூரியன் , புதன்

‘‘விளையும் புதனுஞ் சூரியனும் விரும்பி யெட்டு நான் கொன்றில்
 விளையக் கூடின் மன்னவனும்’’ என்ற ஜோதிட செய்யுளின் படி.
 
சூரியனும், புதனும் ஜாதக கட்டத்தில் லக்கினம், நான்கு, எட்டு ஆகிய வீடுகளில் சேர்ந்து இருந்தால். சாஸ்திர நுண்ணறிவு, மேதாவிலாசம், மதியூகம், கல்வியில் வல்லமை. பட்டம், பதவி எனப் பெருமை மிக்கவர்களாக இருப்பார்கள். 8ல் மறைந்த புதன் நிறைந்த செல்வம் என்பது ஜோதிட வாக்கு அதற்கேற்ப பொன், பொருள், வாக்கு, செல்வாக்கு என அஷ்ட ஐஸ்வர்யங்களை அனுபவிப்பார்கள்.

நான்கு -- பத்து

நான்காம் இடம் முக்கியமாக சுகஸ்தானமாகும். மேலும் கல்வி, வீடு, சொத்து அமை வதை குறிக்கும். பத்தாம் இடம். முக்கியமாக உத்யோகம், தொழில், வியாபார ஸ்தானமாகும். இந்த இரண்டு வீடுகளும் சம சப்தம ராசிகளாகும். நான்காம் வீட்டில் உள்ள கிரகம் பத்தாம் வீட்டை பார்க்கும். பத்தாம் வீட்டில் உள்ள கிரகம் நான்காம் வீட்டை பார்க்கும். நான்காம் அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தாலும், பத்தாம் அதிபதி நான்காம் வீட்டில் இருந்தாலும். யாவரும் தன்னை வந்து வணங்கும் மேன்மை பெற்றவராய் இருப்பார்.

இது ஒரு வகையில் சொத்து யோகமாகும். புதையல் யோகம் என்றும் சொல்வார்கள். எந்த வகையிலாவது வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள். உழைப்பில்லாத செல்வம் சேரும். உயிர் சொத்து சேரும் பாக்கியம் பெற்றவர்கள். கல்வி மூலம் உயர்ந்த ஸ்தானத்திற்கு செல்வார்கள். ரியல் எஸ்டேட். பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் அடுக்குமாடி வீடுகள் கட்டிவிற்கும் தொழிலில் கொடி கட்டிப் பறப்பார்கள். அரசியலில் இருப்பவர்களுக்குப் பட்டம், பதவி, அமைச்சராகும் யோகம் உண்டு.


ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்