SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரம் கூப்பியவர்க்கு வரம் அளிப்பான் சீவலப்பேரியான்

2020-01-13@ 10:13:23

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் திருநெல்வேலி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சீவலப்பேரியான் அருட்பாலிக்கிறார்.
தோவாளை என்னும் ஊரில் அதிகமாக விவசாய மக்களே வாழ்ந்து வந்தனர். உழவுத் தொழில் செய்தல் மலர்கள் பயிரிடுதல் மலர்களை விற்பனை செய்தல் மலர்மாலை கட்டுதல் ஆகிய தொழில்களை செய்து வந்தனர். இவ்வூரை சுற்றிலும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பூந்தோட்டம் நிறைய அமைந்திருந்தது.
 
தோவாளை ஊரில் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த எட்டு நண்பர்கள் தங்களுடைய விவசாய பணி தேவைக்காக மாடுகளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து, திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற மாட்டுச்சந்தையான சீவலப்பேரி மாட்டுச் சந்தைக்கு மாடு வாங்க சென்றனர். சீவலப்பேரியில் ஓடும் தாமிரபரணியில் நீராடி விட்டு, நல்ல மாடுகள் அமைய வேண்டும். அது நோய், நொடி இல்லாமல் உழைக்கவேண்டும். அதன் மூலம் வருமானம் பெருக வேண்டும். வாழ்க்கை வளமாக வேண்டும் எனக் கருதி சீவலப்பேரியில் மூவாற்றங்கரையில் வீற்றிருக்கும் சுடலைமாடசுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
தரிசனத்தின்போது சுவாமியிடம் நாங்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள நாஞ்சில் நாட்டில் இருந்து வருகிறோம். எங்கள் ஊரில் விவசாய பணிக்கு மாடுகள் தேவைப்படுவதால் அவற்றை வாங்குவதற்கு உன் ஆலயத்தின் அருகில் உள்ள சந்தைக்கு வந்துள்ளோம். எங்களுக்கு நல்லபடியாக உன் அருளால் நல்ல மாடுகள் கிடைக்கட்டும். கிடைத்த பிறகு ஒரு கால பூஜையை எங்கள் செலவில் நடத்தி வழிபாடு செய்தபிறகே ஊருக்கு செல்வோம் என்று முறையிட்டு விட்டு சந்தைக்குள் நுழைகின்றனர். நல்ல தரமான மாடுகளை வாங்கிய எட்டு நண்பர்களும், வந்த வேலை முடிந்த சந்தோஷத்தில் தங்கள் வாங்கிய மாடுகளுடன் அங்கிருந்து புறப்பட்டனர்.

இரண்டு நாள் பயணத்திற்கு பிறகு நாஞ்சில் நாட்டு எல்லையான ஆரல்வாய்மொழியை வந்தடைந்தனர். ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மனை வழிபடும் போது அவர்களுக்குள் உடல் நலம் குன்றி சோர்வு ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் என்னவென்று விசாரிக்கும் பொழுது நடந்து வந்த களைப்பு என்று எண்ணி தோவாளை கிளம்பினர். (தற்போது கோயில் அமைந்துள்ள இடமான தோவாளை எல்லைப் பகுதிக்கு வந்தனர்) அந்த இடத்திற்கு வந்தவுடன் யாரும் எதிர்பாராத வகையில் அனைத்து மாடுகளும் அந்த இடத்தில் மயங்கி விழுந்தது. பதறிய அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நண்பர்கள் நான்குபேர் ஊருக்குள் சென்று வைத்தியரை அழைத்து வந்தனர். மாடுகள் நல்ல நிலைமையில் உள்ளன. ஆனால் மயக்கத்தில் உள்ளதாக கூறினார் வைத்தியர்.  அந்நேரம் சுடலை மாடன் வயதானவர் ரூபம் கொண்டு அவ்விடம் வந்தார். ‘‘என்னப்பா மாடுகள் நல்லா தான் இருக்கு நீங்க தான் ஏதோ தப்பு பண்ணியிருக்கீங்க உடனடியாக ஒரு கோடாங்கி அழைத்து அல்லது ஒரு தந்திரியை அழைத்து பிரசன்னம் பாருங்கப்பா’’ என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றார். உடனே நண்பர்கள் எட்டு பேரும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் புகழ்பெற்ற தேவப்பிரசன்னம் பார்க்கும் தந்திரியை அழைத்துவந்தனர்.

மாடுகள் மயங்கி விழுந்த இடத்தை சுத்தம் செய்து கோலமிட்டு கும்பம் ஏற்றிவைத்து தெய்வப் பிரசன்னம் பார்த்தனர். தெய்வப் பிரசன்னத்தில் தந்திரியே அதிரும் வண்ணம் ஸ்ரீ சுடலைமாடன் தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டினார் உடனே தந்திரி ‘‘சீவலப்பேரி சுடலைமாட சுவாமிக்கு வேண்டுதல் வைத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் வந்ததால் மாடுகளுடன் வந்துள்ளார். நீங்கள் சென்று அவருக்கு பூஜை செய்து விட்டு வாருங்கள்’’ என்று கூறினார். உடனே எட்டு பேரும் சரி என்று ஒப்புக் கொள்ள மயங்கியிருந்த மாடுகள் எழுந்து அசைபோடலாயின. உடனே மாடுகளை வீட்டில் தொழுவத்தில் கட்டிவிட்டு எட்டு பேரும் சீவலப்பேரிக்கு கிளம்புவதாக கூறினர்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. சீவலப்பேரி வந்து என்னை வணங்கி விட்டு திரும்பி வருகையில் என் தலத்தில் இருந்து ஒருகைப்பிடி மண்ணோடு வந்து எனக்கு இவ்விடம் ஒரு நிலையம் கொடுங்கள். நிலையம் இடுகையில் என் தாயான பேச்சிக்கும், தில்லையில் ஆதரித்த பிரம்ம சக்திக்கும், முன் பிறந்த முண்டனுக்கும், துணை நிற்கும் புதியவனுக்கும் பீடம் கொடுங்கள். எனக்கு ஏணி வைத்து மாலை சாத்தும் அளவிற்கு எட்டாத பீடம் சுட்ட மண்ணால் அமையுங்கள் என்றது. அதன்படியே அந்த எட்டு பேரும் சீவலப்பேரி சென்றனர். சுடலைமாட சுவாமியை மனதார வேண்டினர்.

பின்னர் அங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணோடு வந்து தோவாளையில் மயானத்திற்கு அருகில் சுடலைமாட சுவாமிக்கு திறந்த வெளியில் நிலையம் கொடுத்தனர். அதோடு பேச்சி, பிரம்மசக்தி, முண்டன், புதியசாமிக்கு நிலையம் கொடுத்தனர். பின்னர் சித்தூர் கோயிலை குல தெய்வ சாஸ்தாவாக வழிபட்டு வந்தவர்கள் அங்கிருந்து பிடிமண் கொண்டு வந்து வீரமணி சுவாமிக்கும் இங்கே நிலையம் கொடுத்தனர். பின்னர் சில காலம் கடந்த நிலையில் கற்சிலை வைக்கப்பட்டது. கரம் கூப்பி தொழுவார்க்கு வரமளிக்கிறார் தோவாளை சீவலப்பேரியான். வெள்ளிக்கிழமை தோறும் காலை மாலை என இருவேளைகளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. கோயில் கொடைவிழா  மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

- படங்கள்:  எஸ்.காளிராஜ்
சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்