SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்

2020-01-08@ 17:48:43

215. நிமிஷாய நமஹ (Nimishaaya namaha)
    
ராமாநுஜர் ஆரம்பக் காலத்தில், காஞ்சியில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்ற குருவிடம் பாடம் பயின்றார் என்பது வாசகர்கள் அறிந்த செய்தி. ஒருநாள் சாந்தோக்கிய உபநிஷத்தைப் பற்றிச் சீடர்களுக்குப் பாடம் எடுத்த யாதவப்பிரகாசர், “தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ” என்ற உபநிஷத் வாக்கியத்துக்கு விளக்கம் கூறுகையில், “இறைவனின் கண்கள் குரங்கின் ஆசனத்தைப் போலே சிவந்திருக்கும்!” என்று பொருள் கூறினார்.

அதைக் கேட்டவாறே, ராமாநுஜரின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. “ராமாநுஜா! ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார் யாதவப்பிரகாசர். “சுவாமி! இறைவனின் கண்களுக்கு இவ்வாறு அருவருக்கத்தக்க உவமையைச் சொல்லலாமா? அப்புறம் இறைவனைத் தியானிக்கும் போதெல்லாம் குரங்கின் ஆசனமல்லவோ நம் நினைவுக்கு வரும்? தாங்கள் சொன்ன இந்த உவமையைக் கேட்டு என் கண்கள் கலங்கின!” என்று விடையளித்தார் ராமாநுஜர்.

 “நான் வாக்கியத்துக்குரிய சரியான பொருளைத் தானே சொன்னேன்? ‘கபி’ என்றால் குரங்கு என்று பொருள்.
‘ஆஸம்’ என்றால் ஆசனம். ‘கப்யாஸம்’ என்றால் குரங்கின் ஆசனம் என்று தானே பொருள்? இது தவறென்றால் இவ்வாக்கியத்துக்கு வேறு எப்படித்தான் பொருள் உரைப்பது?” என்று கேட்டார் யாதவப்பிரகாசர்.

அதற்கு ராமாநுஜர், “ ‘கம்’ என்றால் தண்ணீர் என்று பொருள். அந்தத் தண்ணீரை உறிஞ்சும் சூரியனுக்குக் ‘கபி’ என்று பெயர். ‘ஆஸம்’ என்றால் மலர்த்துதல் என்று பொருள். கபி+ஆஸம்=கப்யாஸம். ‘புண்டரீகம்’ என்றால் தாமரை மலர். ‘கப்யாஸம் புண்டரீகம்’ என்றால், சூரியனால் மலர்த்தப்படும் தாமரை என்று பொருள். இறைவன் கண்களை மூடித் திறப்பது தாமரை மொட்டு மலராக மலர்வதை ஒத்திருக்கும் என்று இவ்வாக்கியத்துக்குப் பொருள் கூறலாமே!” என்றார். அந்தப் பதிலைக் கேட்டு மற்ற மாணவர்கள் அனைவரும் வியந்தார்கள். குரு கூறிய விளக்கத்தை விடச் சக மாணாக்கரான ராமாநுஜர் கூறிய விளக்கம் சிறப்பாக இருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள்.

மிகவும் அனுபவம் வாய்ந்த குருவான யாதவப்பிரகாசரால் விளக்க முடியாத இந்த உபநிஷத் வாக்கியத்தை இளமைப் பருவத்திலிருந்த ராமாநுஜரால் எப்படிச் சரியான முறையில் விளக்க முடிந்தது?

இக்கேள்விக்குப் பெரியோர்கள் கூறும் பதில் யாதெனில், “தஸ்ய யதா கப்யாஸம்...” என்ற இந்த உபநிஷத் வாக்கியம் இறைவனின் கண்ணழகை வருணிக்கும் வாக்கியம். இறைவனின் அருள்பெற்றவர்களால் மட்டுமே அவனது கண்ணழகைப் பற்றிப் பேச முடியுமே ஒழிய, அவனருள் இல்லாமல் அவன் கண்ணழகை மட்டும் பேசவே முடியாது.

இளமைக் காலத்திலேயே அனைத்து நற்பண்புகளும் வாய்ந்தவராக, இறையருளைப் பரிபூரணமாகப் பெற்றவராக ராமாநுஜர் விளங்கியதால், அவர் இறைவனின் கண்ணழகைக் கூறும் இவ்வாக்கியத்துக்குச் சரியாகப் பொருளுரைத்து விட்டார். ஆனால், செருக்கும் பொறாமையும் நிறைந்தவரான யாதவப்பிரகாசருக்கு இறைவனின் அருள் கிட்டவில்லை, அதனால் அவரால் இவ்வாக்கியத்தின் பொருளையும்சரியாக உரைக்க முடியவில்லை.

நற்பண்புகளும் பக்தியும் மிக்கவர்களாக, அறவழியில் வாழும் மகான்களுக்கே இறைவன் அருள்புரிந்து தனது அழகையும் மேன்மைகளையும் காட்டியருளுகிறான், அறவழிக்குப் புறம்பாகச் செல்பவர்களை இறைவன் கணிசிப்பதில்லை என்பதை இதிலிருந்து நாம் உணரலாம்.

அவ்வாறே மத்ஸ்யாவதாரத்திலும், பிரம்மதேவர், சத்தியவிரதப் பாண்டிய மன்னன், சப்தரிஷிகள் உள்ளிட்ட தர்மாத்மாக்களைத் தன் கண்களால் கடாட்சித்து அருள்புரிந்தார் மத்ஸ்யமூர்த்தி. அதே சமயம், இத்தகைய அடியார்களுக்குத் தீங்கு செய்ய நினைத்த அசுர சக்திகளைக் கண்கொண்டு பார்க்கவுமில்லை, அவர்களுக்கு அருள்புரியவுமில்லை.

வடமொழியில் ‘நிமிஷ:’ என்றால் கண்களை மூடிக் கொள்ளுதல் என்று பொருள். அறவழியில் வாழும் அடியார்களுக்கு மட்டும் கண் திறந்து அருள்புரிந்து விட்டு, அறவழிக்குப் புறம்பாக வாழ்வோரைக் கண்ணால் பாராமல் கண்களை மூடிக் கொண்டதால், மத்ஸ்ய மூர்த்திக்கு ‘நிமிஷ:’ என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 215-வது திருநாமம்.

“நிமிஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், அறநெறியிலிருந்து வழுவாத படித் திருமால் காத்தருள்வார்.

216. அநிமிஷாய நமஹ(Animishaaya namaha)

(211-வது திருநாமமான ‘குருதமோ குரு:’ முதல், 225-வது திருநாமமான ‘ஸமீரண:’ வரையுள்ள 15 திருநாமங்கள் மத்ஸ்ய அவதாரத்தின் பெருமைகளை விளக்கவந்தவை.)

திருமாலின் திருமேனி அவயவங்களுக்குள் ஒருமுறை போட்டி வந்துவிட்டதாம். ஆம்! “நான் தான் பெரியவன்!” என்றது திருமாலின் திருவடி. “இல்லை! இல்லை! நான் தான் பெரியவன்!” என்றது திருக்கரம். “இல்லவே இல்லை! உங்கள் இருவரை விடவும் நானே பெரியவன்!” என்றது திருமாலின் திருக்கண்கள்.

மூவருக்கும் இடையே நடைபெற்ற வாக்கு வாதம் முற்றிக்கொண்டே சென்ற நிலையில், திருமாலிடமே யார் பெரியவர் என்று கேட்கலாம் என்று அம்மூவரும் முடிவெடுத்தார்கள்.

முதலில் திருவடி திருமாலிடம், “நான் தானே பெரியவன்? உன் திருமேனியையே நான் தானே தாங்கிக் கொண்டிருக்கிறேன்? பக்தர்கள்
சரணாகதி செய்ய வரும் போது, என்னைத் தானே பிடித்துக் கொள்கிறார்கள்? கரங்களையோ கண்களையோ யாரேனும் வந்து பிடித்துக்கொள்வதுண்டா? இதிலிருந்தே நான் பெரியவன் என்று புரிகிறதல்லவா?” என்று சொன்னது.

“நியாயமாகத் தான் தோன்றுகிறது!” என்று சொன்னார் திருமால்.

“இல்லை!” என்று மறுத்த திருக்கரம், “அந்தத் திருவடியில் போய் சரணாகதி செய்யுங்கள் என்று அந்தத் திருவடியைக் காட்டிக் கொடுப்பவனே நான் தானே? நான் இல்லாவிட்டால் எப்படி அடியார்கள் திருவடியில் சரணாகதி செய்வார்கள்?” என்று கேட்டது.

(இன்றும் திருமலையப்பன் தனது வலது திருக்கரத்தால் தனது திருவடிகளைக் காட்டிக் கொண்டு, தன்னிடம் சரணாகதி செய்ய வருமாறு அடியார்களை அழைக்கும் வண்ணம் அல்லவா எழுந்தருளியுள்ளார்?)

“உன்னுடைய தரப்பிலும் நியாயம் இருக்கவே செய்கிறது!” என்று திருக்கரத்தைப் பார்த்துச் சொன்னார் திருமால்.

திருக்கண்களோ, “திருமாலே! நல்லது, தீயது, நியாயம், அநியாயம் அனைத்தையும் தாங்கள் நன்கு அறிவீர்கள். நீங்களே பார்த்து நியாயமான தீர்ப்பைத் தாருங்கள்!” என்றது.

“திருவடியே! உன்னிடம் அடியார்கள் சரணாகதி செய்கிறார்கள் என்பது சரி தான். திருக்கரமே! நீதான் திருவடியைக் காட்டிக் கொடுக்கிறாய் என்பதும் சரிதான். ஆனால், எனது திருக்கண்களின் கடாட்சம் ஒருவன் மேல் பட்டால் தானே அவன் திருக்கரத்தையும் பார்ப்பான், திருவடியையும் பிடிப்பான்? இந்தக் கண்களின் கடாட்சத்தைப் பெறாதவன், திருக்கரத்தையும் கவனிக்க மாட்டான், திருவடியையும் பிடிக்க மாட்டான்! எனவே திருக்கண்களே திருவடி, திருக்கரம் இரண்டை விடவும் உயர்ந்தது!” என்று திருமால் தீர்ப்பளித்தார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அந்த திருக்கண்களால் அனைத்து உயிர்களையும் கடாட்சிக்க வேண்டும், அவ்வாறு கடாட்சித்து அவர்கள் உய்வடையும்படிச் செய்யவேண்டும் என்று கருதினார் திருமால். அதற்கு என்ன வழி என்று சிந்தித்தார்.

பறவைகள், பாம்பு, பல்லி போன்ற உயிரினங்கள், ஸ்பரிசத்தால் தாங்கள் இட்ட முட்டைகளைப் பொரிக்க வல்லவை. கடல் ஆமைகள்,
கடற்கரையில் முட்டைகளை இட்டுவிட்டுக் கடலுக்குள் சென்றுவிடும். பின் கரைக்கு வராமல், கடலில் இருந்துகொண்டே தமது சிந்தனையாலேயே முட்டைகளைப் பொரித்து விடும். ஆனால் மீன்களோ, தங்கள் கண்களில் உள்ள கருணைப் பார்வையால் - தாய் மீனுக்கு மீன் குஞ்சின் மேல் உள்ள அருட்பார்வையாலேயே முட்டையைப் பொரிக்க வல்லவை. பார்வையாலேயே முட்டையைப் பொரிக்கவேண்டுமானால் அந்த மீன்களின் கண்களில் எவ்வளவு கருணை இருக்க வேண்டும்?

“அடியார்களின் மேல் கண்களின் கடாட்சத்தை நன்கு பொழிவதற்கு நாமே மீனாகப் பிறப்பது தான் சிறந்த வழி!” என்று கருதிய திருமால், மத்ஸ்யாவதாரம் செய்து, பிரம்மா, மனு, சப்தரிஷிகள், சத்தியவிரத மன்னன் உள்ளிட்ட மெய்யடியார்களின் மீது தனது அருட்பார்வையை நன்கு பொழிந்தார். ஒருநொடி கூட கண்களை இமைக்காமல் தொடர்ந்து அவர்களைக்
கடாட்சித்தார்.

‘நிமிஷ:’ என்றால் கண்களை மூடுதல், அல்லது இமைத்தல். கண்களை இமைக்காது தொடர்ந்து அடியார்களைக் கடாட்சித்தபடியால், மத்ஸ்யமூர்த்தி ‘அநிமிஷ:’ கண்களை இமைக்காதவர் என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர
நாமத்தின் 216-வது திருநாமம்.

“அநிமிஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமாலின் அருட்பார்வை பரிபூரணமாகக் கிட்டும்.

217. ஸ்ரக்விணே நமஹ(Sragviney namaha)

பாண்டிய நாட்டைச் சேர்ந்த சத்தியவிரத ராஜரிஷி, ஒருநாள் சந்தியாவந்தனம் செய்வதற்காக வைகைக் கரைக்குச் சென்றார். சந்தியாவந்தனத்தின் ஒரு பகுதியாக, கையில் நீரை எடுத்து, காயத்ரி மந்திரத்தை ஜபித்துக் கீழே விடவேண்டும். அதற்காக வைகை நதி நீரைக் கையில் அவர் எடுக்கையில், சிறிய மீன் ஒன்று அவரது கையில் சிக்கிக் கொண்டது. அந்த மீன் கழுத்தில் ஒரு வனமாலையை அணிந்திருந்தது. சத்தியவிரதர் அம்மீனை மீண்டும் தண்ணீரில் விடப்போனார். ஆனால் அந்த மீன், “சுவாமி! என்னைத் தண்ணீரில் விட்டுவிடாதீர்கள். அங்குள்ள பெரிய மீன்கள் என்னை உண்டுவிடும். என்னைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் சேர்த்து விடுங்கள்! எனக்கு உயிர் பிச்சை தாருங்கள்!” என்று சத்தியவிரதரிடம் மன்றாடியது.
    
சத்தியவிரதர் அந்த மீனைத் தனது கமண்டலத்திலுள்ள தண்ணீரிலே விட்டார். அங்கே பாதுகாப்பாக அந்த மீன் வாழ்ந்தது. மறுநாள் காலை அந்தக் கமண்டலத்தை விடப் பெரியதாக மீன் வளர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் சத்தியவிரதர். அதனால் ஒரு குடத்தினுள்ளே அந்த மீனை இட்டார். மறுநாள் அந்தக் குடத்தை விடவும் பெரியதாக அம்மீன் வளர்ந்து விட்டது. அதனால் தனது ஊரிலுள்ள குளம் ஒன்றில் மீனைக் கொண்டு சேர்த்தார் சத்தியவிரதர். என்ன விந்தை! மறுநாள் அக்குளத்தை விடவும் பெரியதாக மீன் வளர்ந்திருந்தது. அதன்பின் வைகை நதியில் மீனைச் சேர்த்தார். நதியை விடவும் பெரிதாகி விட்டது அந்த மீன்.

“மீனே! நீ யார்? என்னிடம் நீ உயிர்பிச்சை கேட்டாய்! ஆனால் உன் வளர்ச்சியைக் காணும் போது நீ என்னைக் காட்டிலும் பன்மடங்கு வலிமை வாய்ந்தவன் என்று உணர முடிகிறது. நீ யாரென்று சொல்!” என்று மீனைப் பார்த்துக் கேட்டார்
சத்தியவிரதர்.

“என் கட்டளையை முதலில் நிறைவேற்று! அதன்பின் நான் யார் என்று சொல்கிறேன்!” என்றது அம்மீன். “என்ன கட்டளை?” என்று கேட்டார் சத்தியவிரதர். “ஒரு வாரத்தில் ஊழிக் காலம் வந்து, அனைத்துலகங்களும் பிரளயக் கடலால் சூழப்படும். அச்சமயம் ஒரு படகு உன்னைத் தேடி வரும்! நீ சப்த ரிஷிகளையும், வேதங்களையும், விதைகளையும் காப்பாற்றி அப்படகில் ஏற்றிக் கொள்! அந்தப் படகு வெள்ளத்தில் தத்தளிக்கும் போது, நான் உன் முன்னே தோன்றுவேன். எனது கொம்புடன் சேர்த்துப் படகைக் கட்டி விடு! படகில் உள்ள உங்கள் அனைவரையும் நான் காப்பாற்றுவேன்! இக்கட்டளையை நீ நிறைவேற்றிய பின், நான் யார் என்பதை உனக்கு நானே உபதேசிக்கிறேன்!” என்று சொன்னது அந்த மீன்.

அவ்வாறே பிரளய காலம் வந்து உலகெல்லாம் கடலால் சூழப்பட்ட போது, சத்தியவிரத ராஜரிஷியைத் தேடி ஒரு படகு வந்தது.
வேதங்களையும், விதைகளையும், சப்த ரிஷிகளையும் காத்து அப்படகில் ஏற்றிக்கொண்டார் சத்தியவிரதர். படகு தண்ணீரில் தத்தளித்த போது, சொன்னபடி அந்தப் பெரிய மீன் அவர் முன் தோன்றியது. அந்த மீனின் கொம்போடு இணைத்துப் படகைக் கட்டினார் சத்தியவிரதர்.

“நான் யார் என்று இப்போது புரிந்து கொண்டாயா?” என்று கேட்டது அந்த மீன். சத்தியவிரதர் மீனைப் பார்த்து, “திருமாலே! முன்பு ஹயக்ரீவாசுரன் பிரம்மதேவரிடம் இருந்து வேதங்களைக் கவர்ந்து சென்ற போது, நீங்கள் மீனாக வந்து அந்த வேதங்களை மீட்டுக் கொடுத்தீர்கள். இப்போது பிரளயக் கடலிலிருந்து வேதங்களையும், வேதம் வல்லார்களையும் காக்க மீண்டும் மீனாக வந்துள்ளீர்கள்! நீங்களே திருமாலின் மத்ஸ்யாவதாரம் என உணர்ந்து கொண்டேன்!” என்றார்.

“எவ்வாறு என்னை அறிந்துகொண்டாய்?” என்று கேட்டார் மத்ஸ்யமூர்த்தி. “உங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் வைஜயந்தி வனமாலையை வைத்து நீங்களே திருமால் என அறிந்து கொண்டேன்! வைஜயந்தி வனமாலை, திருமார்பில் மகாலட்சுமி, தாமரைக் கண்கள் போன்றவை எல்லாம் திருமாலான உங்கள் ஒருவருக்கே உரித்தான பிரத்தியேக அடையாளங்கள் அன்றோ?” என்று விடையளித்தார் சத்தியவிரதர். மேற்கொண்டு ஜீவாத்ம-பரமாத்ம தத்துவங்களை எல்லாம் சத்தியவிரதருக்கு மத்ஸ்யமூர்த்தி உபதேசம் செய்தார். அந்த உபதேசங்களின் தொகுப்பே மத்ஸ்ய புராணமாக உருவானது.

மத்ஸ்யமூர்த்தியைத் திருமாலின் அவதாரம் என்று சத்தியவிரதர் அடையாளம் கண்டுகொள்ள ஏதுவாகக் கழுத்தில் வைஜயந்தி வனமாலையுடன் தோன்றியதால், மத்ஸ்யமூர்த்தி ‘ஸ்ரக்வீ’ என்றழைக்கப்படுகிறார். வடமொழியில் ‘ஸ்ரக்’ என்றால் மாலை, ‘ஸ்ரக்வீ’ என்றால் மாலையை அணிந்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 217-வது திருநாமம்.

வைகுண்ட லோகத்தில் திகழும் திருமாலின் மேன்மைக்கு அடையாளமாக இருப்பது வைஜயந்திமாலை. அவதார தசையிலும் தனது மேன்மைகள் குன்றாதபடி  வைகுண்டநாதனுக்குரிய அனைத்துப் பெருமைகளோடும் அவர் அவதரிக்கிறார் என்பதை உணர்த்தவே, மேன்மைக்கு அடையாளமான அம்மாலையுடன் தோன்றினார்.

“ஸ்ரக்விணே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி, திருவரங்கத்தில் தசாவதார சந்நதியில் உள்ள மத்ஸ்ய மூர்த்தியைத் தியானித்து வரும் அன்பர்களின் இல்லங்களில், விரைவில் மாலை மாற்றும் வைபவம் நடக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

218. வாசஸ்பதயே நமஹ  (Vaachaspathaye namaha)

கேரளாவிலுள்ள மேல்புத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்த நாராயண பட்டத்ரி என்ற நம்பூதிரிக்கு வாதநோய் ஏற்பட்டது. எத்தனையோ மருத்துவர்களிடம்  அலைந்தும் அந்நோய் குணமாகவில்லை. விரக்தியடைந்த பட்டத்ரி, தமது வேலைக்காரனான கோபாலனைப் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவரிடம் அனுப்பி, ஏதேனும் பிராயச்சித்தம் செய்தாலாவது இந்த நோய் தீருமா எனவிசாரிக்கச் சொன்னார்.

பட்டத்ரியின் ஜாதகத்தோடு ஜோதிடரிடம் சென்ற கோபாலன், சிறிது நேரத்திலேயே அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தான். “ஐயா! குருவாயூரப்பன் கோயிலில் நீங்கள் மீனை நாவில் தொட்டுக் கொண்டு பாடினால் உங்களது வாத நோய் தீரும் என்கிறார் அந்த ஜோதிடர்! புனிதமான க்ஷேத்ரமாகிய குருவாயூரில் இத்தகைய அசுத்தமான காரியத்தைச் செய்யலாமா? இப்படிப்பட்ட பரிகாரத்தை அவர் சொல்வார் என்று தெரிந்திருந்தால், அவரிடம் நான் சென்றிருக்கவே மாட்டேன்!” என்று சொன்னான் கோபாலன்.

“கோபாலா! ஜோதிடர் சொன்னதன் பொருளை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ‘மீனைத் தொட்டுப் பாடு’ என்றால், நாவில் மீனை மென்று கொண்டே பாடவேண்டும் என்று பொருளல்ல! திருமாலின் பத்து அவதாரங்களுள் முதல் அவதாரமான மீனில் தொடங்கி, பத்து அவதாரங்களையும் பாடச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். வா! நாம் குருவாயூரப்பன் முன்னே பத்து அவதாரங்களையும் பாடினால், ஸ்துதிப் பிரியனான அவன் இந்த வாதநோயைக் குணப்படுத்தி அருள்வான்!” என்று சொன்னார் பட்டத்ரி.

வாதநோயால் நடக்க முடியாமல் முடங்கிக் கிடந்த பட்டத்ரியைப் பத்துப் பதினைந்து பேர் பல்லக்கில் தூக்கி வைத்துக் கொண்டு குருவாயூருக்கு அழைத்துச் சென்றார்கள். அடுத்தநாள் விடியற்காலை அவர்கள் குருவாயூரை அடைந்தனர். அங்குள்ள பொய்கையில் பட்டத்ரியை நீராட்டி, புதிய ஆடை அணிவித்து, குருவாயூரப்பன் முன்னே வலப்புறமாக இருக்கும் திண்ணையில் அவரை அமர்த்தினார்கள்.

திண்ணையில் அமர்ந்த பட்டத்ரியால், முகத்தைத் திருப்பி குருவாயூரப்பனைத் தரிசிக்க முடியவில்லை. வாதநோய் அவரது அனைத்து விதமான அசைவுகளையும் பாதித்திருந்தது. அப்போது, “பட்டத்ரி! நீங்கள் ஏன் கழுத்தைத் திருப்ப முயன்று சிரமப்படுகிறீர்? என் கழுத்தின் இருபுறமும் நன்றாகத் தானே உள்ளது!” என்று சொன்ன குருவாயூரப்பன், தானே தன் தலையைச் சாய்த்து பட்டத்ரியை நன்குகடாட்சித்தான். “மீனைத் தொட்டுப் பாட ஆரம்பிக்கலாம்!” என்று குருவாயூரப்பன் உத்தரவு வழங்க, மத்ஸ்யாவதாரம் தொடங்கி, திருமாலின் அவதாரங்களை எல்லாம் தொகுத்து ‘நாராயணீயம்’ என்றநூலாகப் பாடினார் நாராயண பட்டத்ரி.

மொத்தம் ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்ட நாராயணீயத்தை நூறு தசகங்களாகப் பிரித்துப் பாடினார். ஒவ்வொரு தசகத்தையும் பட்டத்ரி நிறைவு செய்யும் போதும், குருவாயூரப்பன் தன் தலையை அசைத்து அவர் பாடிய ஸ்லோகங்களை அங்கீகரித்தான். நாராயணீயம் நூலை அவர் நிறைவு செய்த வேளையில், குருவாயூரப்பன் அருளால் அவரது வாத நோயும் பூரணமாகக் குணமானது.

நோய் குணமானபின், தனக்கு இந்த நல்ல உபாயத்தைக் காட்டிய ஜோதிடரிடம் சென்று நன்றி தெரிவித்தார் நாராயண பட்டத்ரி. “ஜோதிடரே! குருவாயூரப்பனாக இங்கே கோயில் கொண்டிருப்பவன் கிருஷ்ணன் அல்லவா? அவ்வாறிருக்க, கிருஷ்ணாவதாரத்தை மட்டும் பாடு என்று சொல்லாமல், மத்ஸ்யாவதாரம் தொட்டு அனைத்து அவதாரங்களையும் தாங்கள் பாடச் சொன்னதற்கான காரணம் என்ன?” என்றும் வினவினார்.

அதற்கு ஜோதிடர், “மீனாய் அவதரித்த திருமால், யாராலும் உபதேசிக்க இயலாத வேத ரகசியங்களை எல்லாம் உள்ளடக்கிய மத்ஸ்ய புராணத்தைச் சத்தியவிரதருக்கும், பிரம்மதேவருக்கும், சப்தரிஷிகளுக்கும் உபதேசம் செய்தார். இத்தகைய வாக்கு வன்மை மிக்கவராக மத்ஸ்யமூர்த்தி திகழ்வதால், அவர் ‘வாசஸ்பதி:’ (வாக்குக்கு அதிபதி) என்றழைக்கப்படுகிறார். ஆயிரம் ஸ்லோகங்களை நீங்கள் இயற்ற வேண்டுமென்றால், அது வாசஸ்பதியான மத்ஸ்யமூர்த்தியின் அருள் இருந்தால் மட்டுமே முடியும். அதனால் தான் மீனை நாவில் தொட்டுக் கொண்டு பாடும்படி உங்களுக்கு அறிவுறுத்தினேன்!” என்றார் ஜோதிடர்.

‘வாக்’ என்றால் பேச்சு. ‘வாசஸ்பதி:’ என்றால் பேச்சுக்கு அதிபதி என்று பொருள். கூறுவதற்கரிதான பற்பல வேத ரகசியங்களை எல்லாம் மத்ஸ்யபுராணத்தில் விளக்கி அருளியதால் மத்ஸ்யமூர்த்தி ‘வாசஸ்பதி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 218-வது திருநாமம்.

“வாசஸ்பதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல பேச்சாற்றலைத் திருமால் அருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்