SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளம் பெருங்கோயில்!

2020-01-03@ 10:05:12

*இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 37

அவரவர் மனத்திலும் ஆயிரக் கணக்கான எண்ணங்கள் ஆகாயத்தில் அலையும் மேகக்கூட்டம் போல் வெளிப்பட்டும் மறைந்தும் விளங்கிக் கொண்டே இருக்கின்றன. நினைப்பதெல்லாம் நிறைவேற வேண்டும் என்கிற தணியாத தாகம் அனைவர்க்குள்ளும் அலைமோதுகின்றது எண்ணியவை ஈடேறுமா?
ஆனால் பாரதியார் பாடுகின்றார் :

‘எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி ! எதனினும் வெற்றி !

ஆம் நினைவின் ஆற்றலை, எண்ணத்தின் வலிமையை நம்மால் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது.

‘‘ஒன்றைப் பற்றி ஒருவன் திடமாக நினைத்துக் கொண்டேயிருந்தால், அதைக் கட்டாயம் அடைவான்’’ என்பதே வாழ்ந்து சிறந்த பல மனிதர்களின் வரலாறு புகல்வது. எல்லா நேரங்களிலும் ஒன்றையே நினைத்தால், அது நடக்கும் என்பதுதான் உண்மை.

ஏனென்றால், ஒன்றைத் திடமாக ஒருவன் எண்ணும் போது அதை மையமாக வைத்தே அவன் செயல் யாவும் நிகழும் ! அவனுடைய உறுதிப்பாட்டை அவன் தோழர்கள் வியந்து அவனுக்கு உறுதுணையாவார்கள் !

அவன் இரு கையோடு பல கைகள் இணையும்!  ஆம் நம்பிக்கை நடத்திக் காட்டாத செயல்களும், இந்த நானிலத்தில் உண்டோ ?

‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்’’
என்பது தானே திருக்குறள் ?
‘என்னிருகையும் நம்பிக்கையும்
எனக்கு வாய்த்த மூலதனம் ! - ஒரு
திண்ணிய எண்ணப் பாதை நடப்பதால்
சிவக்கும் வானம் நாளைதினம் !
என்று பாடுகிறார்கள் பாவலர்கள்.
பத்து நாள் ஒன்றைப் பற்றுவது, பதினோராம் நாள் அதை விட்டு விட்டு வேறொன்றோடு சுற்றுவது என்றால், என்று முந்துவது நம் எண்ணங்கள்? ‘ஆணி அடித்தாற் போன்ற உறுதியோடு அசையாமல் ஒன்றில் அனுதினமும் ஈடுபடுபவன் கைகளில் வெற்றிக் கனி வந்து விழும்’ என்பது வரலாற்றுண்மை! வெறும் ஜோதிடம் அன்று.

விவேகானந்தராக பின்னாளில் விளங்கிய நரேந்திரன், நேரடியாக இறைவனைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினான். கை கூடுகிற செயலா அது ? அதுவே நிறைவேறியதே ! எப்படி நிறைவேறியது அந்த எண்ணம்?காவி உடுத்து வந்த சாமியார்களின் காலடியில் எல்லாம் விழுந்தான் நரேந்திரன். ‘‘கடவுளைக் கண்டதுண்டா? எனக்கும் காட்டுகிறீர்களா ?’’ என்று கேட்டான். இசைவான பதில் எவரிடமிருந்தும் வரவில்லை.நாம் இந்த நிலையைச் சந்தித்திருந்தால் என்ன முடிவெடுப்போம் ? இத்தனை சாமியார்களாலேயே கடவுளைப் பார்க்க முடியவில்லை என்றால் நாம் எங்கே பார்ப்பது ? நம் எண்ணம் தவறு என நினைத்திருப்போம். கடவுளைக் காண வேண்டும் என்ற தீவிர ஆசையைத் திசை மாற்றியிருப்போம்.

ஆனால் நரேந்திரன் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. இறைவனை யாராவது நமக்குக் காட்டுவார்கள் என மேலும் தீவிரமாக நினைத்தான். உறுதியான எண்ண ஆற்றல் ஈடேறியது. ஸ்ரீ ராமகிருஷ்ண மாமுனிவர் அவனுக்கென்றே வந்து வாய்த்தார். பார்த்தீர்களா ? எண்ணத்தின் வண்ணத்தை ! இறைவனைப் பார்க்கும் எண்ணமே ஈடேறியது என்றால், நம் நம்பிக்கைகள் பழுக்காதா ?அறுதியிட்டுச் சொல்லலாம், இறுதி வரை உறுதி இருந்தால் பரிதி கூடப் பக்கத்தில் வரும். ‘‘மண்ணில் தெரியது வானம். அது நம் வசப்படலாகதோ?’’ என்பது தானே மகாகவி பாரதியாரின் வாக்கு? சோதனைகளில் வேதனை அடையாமல், இடர்களில் இடறாமல், துன்பத்தில் துவண்டு போகாமல், கஷ்டத்தில் நஷ்டப்படாமல் தடைக் கற்களைப் படிக்கற்கள் ஆக்கினால், வெற்றி தானாக வரும் !

‘எழுமின் - விழுமின் - குறிசாரும் வரை நில்லாது செல்மின்’
என்பது விவேகானந்தரின் வேதம் அல்லவா !
‘வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு’’

என்ற திருவள்ளுவர், மனிதர்களின் மனங்களை அளக்கிறது. இவன் உயரம் என்ன என்பதை உலகினருக்குக் காட்டுகிறது.

ஒருவனை உறுதியான எண்ணமே உயர்ந்தவனாக்குகிறது. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுவாய் ! ஆம் ! ‘‘யத் பாவாயஸி தத் பவஸி’’ என்பது ஞானிகளின் நல்ல மொழி. அசோகவனத்தில் சிறை இருந்த சமயம். சீதை அல்லும் பகலும் ராமனையே நினைத்தாள். அவள் திரிசடையிடம், ‘‘எப்போதும் ராமனையே நினைத்து வரும் எனக்கு பயமாக இருக்கிறது. நான் ராமனாகவே மாறி விடுவேனா!’’ என்று கூறினாள்.திரிசடை சொன்னாள், ‘‘அச்சப்படாதே! உன்னைப் போலவே ராமன் எப்போதும் சீதையாகிய உன்னையே நினைப்பதால், அவன் சீதையாக மாறிவிடுவான். இடர்ப்பட ஏதும் இருக்காது’’ என்று எண்ணங்களுக்குத்தான் எத்தனை வண்ணங்கள் என்று இதன் மூலம் பார்த்துப் பரவசப்படுவோம். ‘‘இந்து மகா சமுத்திரத்தின் அடியில் இருக்கும் ஒருவன் கூட இதய ஆற்றலை ஒருமுகப்படுத்தினால், இமயமலையின் உச்சிக்கு உயரலாம்’ என்பதே உண்மை. மெய்ஞ்ஞான உண்மைகளும், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளும் ஆழமான எண்ணங்களின் அன்பளிப்புகள் தாமே!

ஆகவே, சிறந்த எண்ணங்களில் சிந்தை நிறையட்டும்! ‘‘எண்ணிய முடிதல் வேண்டும், நல்லதே எண்ணல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும்.’’ இந்த பாரதியாரின் பாடலே இறுதி வரை நமக்கு வேண்டும்! எண்ணங்கள் என்ன நோக்கத்துடன் நம் மனதில் தோன்றினவோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் குறியாய் இருக்கின்றன, அதற்கான சூழலை அமைக்கின்றன !’ என்கின்றனர் மன இயல் அறிஞர்கள்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா என சித்தர் சிறப்பாகக் குரல் கொடுக்கிறார். எண்ணங்களின் வல்லமை எத்தகையது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

நான் எப்போதோ படித்தது குணசீலன் என்பவனின் கதை. குணசீலன் பெயருக்கேற்ப நல்லதையே விரும்பும் இனிய இயல்பு கொண்டவன். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அவன், நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவன். ஓரளவு வசதியுடன் ஓடிக் கொண்டிருந்தது அவன் வாழ்க்கை. எதிர் காலம் எப்படியிருக்கும் எனக்கு என எண்ணிய வண்ணம், பெரிய ஜோதிடர் ஒருவரிடம் அவன் போய் தன் ஜாதகத்தைக் காண்பித்தான். ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர் அதிர்ச்சியுற்றார் ! ஜாதமக் அவனுக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பாதகமாக இருந்தது. அதாவது குணசீலனுக்கு அன்று மாலையே மரண கண்டம் இருப்பதாக ஜோதிடர் அறிந்தார். ஜோதிட சாத்திரத்தில் மிகுந்த வல்லமை பெற்ற அவர், இங்கிதமும், பண்பாடும் அறிந்தவர். எனவே குணசீலனைப் பார்த்தார்.

‘‘நீங்கள் நாளைய மறுநாள் வாருங்கள். பலன் சொல்கிறேன். இன்று எனக்கு முக்கிய வேலை இருக்கிறது’’. குணசீலன் விடைபெற்றான். வீடு நோக்கி நடந்தான். அப்போது ஆகாயம் திடீரென்று இருண்டது. மின்னல்கள் பளிச்சிட்டன. இடி ஓசை பூமியையே அதிக வைத்தது. பேய் மழை பெய்தது. குணசீலன் தங்குவதற்கு இடம் தேடினான். ஒரு பாழடைந்த கோயில் அவன் பார்வையில் படவே அங்கு சென்று ஒதுங்கினான். அவ்வப்போது அடித்த மின்னல்களின் ஆயிரம் வாட்ஸ் வௌிச்சத்தில் பாழடைந்த கோயிலைப் பார்த்தான் குணசீலன்.வௌவால்கள் பறந்தன. பாம்புகள் நெளிந்தன. சிவலிங்கம் கவனிப்பாரின்றி இருந்தது. குணசீலன் மனம் எண்ணியது, ‘அடடா! எவ்வளவு நேர்த்தியான சிவலிங்கம்! கோயில் உள்ள இடமும் பரந்த மைதானம் போல் உள்ளது. பிராகாரங்கள் புதர் மண்டிக் கிடந்தாலும் அருமையாக உள்ளன. நம் கையில் மட்டும் பணம் இருந்தால், ஆஹா, எவ்வளவு அழகாகத் திருப்பணி செய்யலாம்’ என்று.

இப்படி நினைத்த குணசீலனின் மனம், பெரிய புராண பூசலார் நாயனார் பாணியில் சிந்தனை அளவிலேயே கோயிலைப் புதுப்பிக்கத் தொடங்கியது. சுற்றுச்சுவர் இப்படி, மதில் அலங்காரங்கள் இப்படி, மூல ஸ்தானம். கர்ப்பக் கிரக முறைமை இவ்வாறு, வாகனங்கள் இந்த வண்ணத்தில் - என எண்ணினான்.மனத்திற்குள்ளேயே அக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகமும் நிகழ்த்தி முடித்தான். வெளியே மழையும் முடிந்து போயிருந்தது. ஜோதிடர் சொன்ன நாளில் மீண்டும் அவரைப் பார்க்கச் சென்றான். குணசீலனைப் பார்த்த ஜோதிடர், ஒரு கணம் திகைப்புற்றார். அன்றே இறந்திருக்க வேண்டியவன் எப்படி வந்தான் ?உள்ளே சென்று, அவன் ஜாதகத்தை மீண்டும் ஆராய்ந்து, ‘நான் அறிந்தது நூற்றுக்கு நூறு சரி’ என உறுதி பெற்றார். ஆனால், இன்று என் எதிரில், எப்படி இவன்? மரண கண்டத்திலிருந்து இவனைத் தப்ப வைத்தது எது? பரிகாரம் எதுவும் இருக்குமோ ? என எண்ணி, வேறு ஜோதிடப் புத்தகங்களை ஆராய்ந்தார் ஜோதிடர்.

ஒரு புத்தகம் உரைத்தது, ‘இப்படிப்பட்ட மரண கண்டத்திலிருப்பவன் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்தால் உயிர் நீடிக்கும்’ என்று குணசீலன் எண்ணத்தால், சிந்தனையால் தான் ஆலயத்தைப் புதுப்பித்தான். மனத்தால் தான் மகா கும்பாபிஷேகம் நிகழ்த்தினான். ஆனால், நினைவுக்கு இருக்கிற ஆற்றல் தான் எவ்வளவு ? மானசீகப் புண்ணியமே மரணத்தைத் தடுத்து நிறுத்திவிட்டது! நம்மால் சில சமயம் நற்செயல்களைச் செயல்படுத்த முடியாது. ஏன் ? சில சூழல்களில் நல்லவற்றைப் பேசக்கூட முடியாமல் போய் விடுகிறது. ஆனால்  நல்லதை நினைக்க முடியாத நிலை ஒரு போதும் யாருக்கும் அமையாது.ஆகவே, நல்லனவற்றை எந்நேரமும் நினைப்போம். வசதியும் வாய்ப்பும் அமையும் போது, அவை செயலாகப் பரிணமிக்கும்.

‘இதய பாவனாதீதம் அருள்வாயே!’ என்பது தானே
அருணகிரியாரின் அருள் வாக்கு !
திருமூலர் பாடுகின்றார்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்