SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறள் காட்டும் விண்ணுலகம்!

2020-01-03@ 09:52:23

குறளின் குரல் 116

விண்ணுலகம் என்ற ஓர் உலகம் இருக்கிறது, அங்கு தேவர்களும் தெய்வங்களும் வாழ்கிறார்கள் என்பது தமிழர்களிடம் தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை வள்ளுவரிடமும் இருந்திருக்கிறது என்பதைத் திருக்குறள் பல இடங்களில் உணர்த்துகிறது.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

(குறள் எண் 18)
மழை பெய்யாவிட்டால் வானுலகத்தில் உள்ள தேவர்களுக்கும் பூசை நிகழாது. (விண்ணுலகில் வாழும் தேவர்களை வானோர் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.)

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல். (குறள் எண் 84)

 மலர்ந்த முகத்துடன் எவனொருவன் விருந்தினரை உபசரிக்கிறானோ, அவன் இல்லத்தில் அகம் மலர்ந்து லட்சுமி வாசம் செய்வாள். (எனவே லட்சுமி தேவி விண்ணுலகில் வாசம் செய்கிறாள் என்பதும் அவள் மண்ணுலகம் வந்து வசிப்பாள் என்பதும் வள்ளுவம் வலியுறுத்தும் நம்பிக்கைகள்.)

 செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
 நல்விருந்து வானத் தவர்க்கு!

வானுலகில் வாழும் வானவரோடு இணைந்து வாழ்வதற்கு எளிதான வழி ஒன்றிருக்கிறது. வந்த விருந்தினரை உபசரித்து, வரும் விருந்தினரை எதிர்பார்த்து நாம் காத்திருப்போமானால், வானகத்துத் தேவர்கள் நம்மை விருந்தினராக ஏற்பார்கள்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்!’ (குறள் எண் 167)

பொறாமை உள்ளவன் வீட்டில் திருமகள் வந்து தங்கமாட்டாள். தன் அக்கா மூதேவிக்கு அவள் கைகாட்டி விடுவாள். எனவே மூதேவிதான் அவன் வீட்டில் வாசம் செய்வாள். (ஆக விண்ணுலகில் லட்சுமி, மூதேவி ஆகிய இருவரும் உறைகிறார்கள் என்பதும் அவர்கள் மண்ணுலகில் வந்து வசிப்பதுண்டு என்பதும் வள்ளுவர் கருத்தாக இருக்க வேண்டும்.)

மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாள் உளாள் தாமரையி னாள்!
(குறள் எண்: 617)

(சோம்பல் உள்ளவனிடம் மூதேவிதான் குடியிருப்பாள். சோம்பல் இல்லாது உழைப்பவனின் காலடியில் தாமரைச் செல்வியான திருமகள் வாசம் செய்வாள். (இந்தக் குறளிலும் ஸ்ரீதேவி, மூதேவி என இருவர் இருப்பதை வள்ளுவர் ஏற்கிறார்.)

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
 வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.’(குறள் எண்: 24)

மனக் கட்டுப்பாடு என்ற அங்குசத்தால் ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்பவன் மேலுலகிற்கு விதை போன்றவன் ஆவான். (விண்ணுலகம் உண்டு என்பதை இக்குறளில் தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர்.)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.’ (குறள் எண்: 50)

 உலகத்தில் வாழவேண்டிய முறைப்படி எவன் வாழ்கிறானோ அவன் வானுலகில் உள்ள தெய்வத்தோடு வைத்து எண்ணப்படுவான்.
யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். (குறள் எண்: 346)

 உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் தோன்றும் கர்வத்தை எவன் விட்டொழிக்கிறானோ அவன் வானவர்கள் வசிப்பதற்கும் மேலான உலகை அடைவான்.
ஸ்ரீதேவ ரனையர் கயவர் அவரும் தான்
மேவன செய்தொழுக லான்!’ (குறள் எண்: 1073)

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் வாழ்வதால் கயவர்கள் தேவர்களைப் போன்றவர். (வஞ்சப் புகழ்ச்சி அணியாகச் சொல்லப்பட்ட இக்குறளில் வள்ளுவர் தேவர் என்ற பிரிவினர்இருப்பதை ஏற்கிறார்.) தமிழின் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் நிலங்களை ஐந்தாகப் பகுத்து ஒவ்வொரு வகை நில மக்களும் வழிபடுவதற்குரிய தெய்வம் எது என்பதையும் வரையறுத்து விளக்கியுள்ளது.

ஸ்ரீ மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே!’

காடும் காடுசார்ந்ததுமான முல்லை நிலத்தின் கடவுள் திருமால். மலையும் மலைசார்ந்ததுமான குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகன். வயலும் வயல் சார்ந்ததுமான மருத நிலத்தின் கடவுள் இந்திரன். கடலும் கடல் சார்ந்ததுமான நெய்தல் நிலத்தின் கடவுள் வருணன். இவ்வாறு தொல்காப்பியம் வானுலகில் வாழும் எந்தெந்தத் தெய்வங்களை மண்ணுலகில் எந்தெந்த நிலமக்கள் தொழ வேண்டும் என இலக்கணமே வகுத்திருக்கிறது. எனவே விண்ணுலகத்தையும் தெய்வங்களையும் தொல்காப்பியரும் ஒப்புக் கொள்கிறார் என்பது தெளிவு. இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டத்தில் வானுலகம் பற்றிய குறிப்பு வருகிறது. மதுரையைக் கண்ணகி பற்றி எரியச் செய்த பிறகு ஒரு வேங்கை மரத்தடியில் வந்து நிற்கிறாள். அப்போது வானுலகிலிருந்து ஒரு தேர் இறங்கி மண்ணுலகம் வருகிறது. அதில் கோவலன் அமர்ந்திருக்கிறான். அவன் தன் மனைவியைத் தேரில் ஏற்றி அழைத்துச் செல்கிறான். அந்தத் தேர் மீண்டும் பறந்து வானில் சென்று மறைகிறது.

கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தனித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி’
 தேரில் வானகம் சென்றதாக சிலப்பதிகார வரிகள் தெரிவிக்கின்றன. வானவர் வாழும் விண்ணுலகம் ஒரு தனி உலகமாக இருக்கிறது என்பதும் அவர்கள் மனிதர்கள் மேல் கருணையுடையவர்கள் என்பதும் அவர்கள் மனிதர்களைக் காப்பவர்கள் என்பதும் விண்ணுலகத் தேவர்களைப் போற்றுவது மனிதர்களின் கடமை என்பதும் தமிழர்களின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. மழைக் கடவுளான இந்திரனுக்கு மிக விமரிசையாக இந்திர விழா எடுக்கும் வழக்கம் தமிழர்களிடம் இருந்ததையும் சிலப்பதிகாரம் பதிவு செய்கிறது. ராமாயணத்திலும் ஒரு விந்தையான நிகழ்வு இடம்பெறுகிறது. மண்ணுலகில் உயிர் விட்ட மன்னன் தசரதன் வானுலகம் சென்று சேர்கிறான். ராம ராவண யுத்தம் முடிந்தபின் அக்கினிப் பிரவேச நிகழ்ச்சி நடந்தேறுகிறது. ராமன் தன்னைச் சோதித்ததால் சீதாதேவி அவன் மேல் பிணக்குக் கொள்ளக் கூடாதே எனக் கவலைப்படுவது யார் தெரியுமா? சிவ பெருமான்!

சிவன் தசரதனை அழைக்கிறார். மறுபடியும் மண்ணுலகம் சென்று போர்க்களத்தில் அக்கினிப் பிரவேசம் நிகழ்ந்த இடத்தில் வானில் தோன்றி மருமகள் சீதையைச் சமாதானப் படுத்தி ராமனுடன் சேர்ந்து வாழுமாறு செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். தசரதன் அதற்கு ஒப்புக்கொண்டு விண்ணில் தோன்றுகிறார். நிலைமையை தன் அன்பு மருமகள் சீதாதேவிக்குப் புரியவைக்கிறார். சீதை தன் மாமனாரை வணங்கி அவர் அறிவுரையை ஏற்றுக் கொள்கிறாள். பின் தசரதன் தன் மகன் ராமனிடம் இரண்டு வரங்கள் தருகிறேன், என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள் என்கிறான். (உயிரோடிருக்கும்போது இருந்த குணம் உயிர் போனாலும் போகாது போலும். கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களால் தானே இத்தனை பிரச்னைகளும் வந்தன!)

ராமன் தன் தந்தையிடம்,
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தந்தையும் ஆம் வரம் தருக!

என வேண்டுகிறான். கைகேயியை மனைவி என்ற உறவிலிருந்தும் பரதனை மகன் என்ற உறவிலிருந்தும் துறந்துவிட்டதாக அறிவித்துவிட்டே தசரதன் உயிர் துறந்தான். அந்த அறிவிப்பை நீக்கி மறுபடி அவர்களை மனைவியாகவும் மகனாகவும் ஏற்க வேண்டி ராமன் கேட்ட வரத்தை மகிழ்ச்சியோடு தந்து வானில் மறைந்தான் தசரதன் என்கிறது ராமாயணம். ஆக வானுலகம் உண்டு என்பதும் அங்கு வாழ்வோர் அத்தியாவசியம் நேர்ந்தால் மண்ணுலகம் வரவும் கூடும் என்பதும் தமிழர்களின் நம்பிக்கை எனப் புரிகிறது.

வானுலகில் வசிக்கும் தேவர்களை தொடர்ந்து தவத்தின் மூலம் திருப்தி அடையச் செய்து மண்ணுலகில் தோன்றச் செய்யலாம். பின்னர் அவர்களிடம் வேண்டிய வரங்களைக் கேட்டுப் பெறலாம். இவை நம் புராணங்கள் சொல்லும் செய்திகள். ராவணன் போன்ற அரக்கர்களும் கடுமையான தவம் செய்து அதன் மூலம் தேவர்களைக் காணும் பேறு பெறுகிறார்கள். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த தேவர்கள் அவர்கள் வேண்டும் வரங்களைத் தரக் கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்.

என்றாலும் என்றென்றும் நிரந்தரமாய் வாழவேண்டும் என யாரேனும் வரம் கேட்டால் தேவர்கள் அந்த வரத்தைக் கொடுப்பதில்லை. அத்தகைய வரத்தைக் கொடுப்பதற்கில்லை என்பதைத் தெரிவித்து ஆனால் வேறுவகையில் சாமர்த்தியமாக வரம் கேட்டு நிரந்தரத் தன்மையைப் பெற இயலுமெனில் பெற்றுக் கொள்ளுமாறு தேவர்களே அறிவுறுத்துகிறார்கள். பிரகலாதனின் தந்தையான இரணியன் கடும்தவம் செய்து விந்தையான வரங்களைப் பெற்றான். தன் மரணம் மனிதராலோ விலங்காலோ நிகழக் கூடாது என்றும் வீட்டின் உள்ளேயோ வெளியேயோ தனக்கு மரணம் வரக் கூடாது என்றும் தன்னை உயிருள்ள அல்லது உயிரற்ற எதனாலும் வதைக்க முடியாது என்றும் இரவிலோ பகலிலோ தன் மரணம் நிகழலாகாது என்றும் பல விதத்தில் அவன் வரம் வாங்கிக் கொள்கிறான்.

ஆனால், அவன் நிபந்தனைகள் அத்தனைக்கும் உடன்பட்டு அவனை வதம் செய்கிறார் திருமால். அவனை வதம் செய்த நரசிங்கம் விலங்குமல்ல, மனிதனுமல்ல. வாயிற்படியில் வைத்து அவன் வதம் நிகழ்ந்ததால் அந்த இடம் வீட்டின் உட்புறமுமல்ல, வெளிப்புறமுமல்ல. நகத்தைப் பயன்படுத்தி நரசிங்கம் அவனைக் கொன்றது. நகம் உணர்ச்சியில்லாததால் உயிரற்றது. வளர்வதால் உயிருள்ளது. எனவே அது உயிருள்ள வகையிலும் சேராது. உயிரற்ற வகையிலும் சேராது. இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தில் அவன் கொல்லப்பட்டதால் இரவிலோ பகலிலோ தன் மரணம் நிகழக் கூடாது என்ற அவனின் அந்த நிபந்தனையும் மீறப்படவில்லை. மனிதர்கள் எவ்வளவு புத்திசாலித் தனமாக வரம் கேட்டாலும் வானுலகில் வாழும் தெய்வங்களும் தேவர்களும் மனிதர்களை விட மிஞ்சிய புத்திசாலிகள் என்பதை நம் புராணங்கள் பல இடங்களில் புலப்படுத்துகின்றன.

கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம் வானுலகத்தில் உண்டு என்று சொல்லப்படுகிறது. அந்த மரத்தில் பூக்கும் கற்பக மலர் அபாரமான நறுமணம் கொண்டது. அருணகிரிநாதரிடம் அதைத் தனக்குக் கொண்டுவந்து தரவேண்டும் எனக் கேட்டான் மன்னன். அதன்பொருட்டு கூடுவிட்டுக் கூடுபாய்ந்து புதிய கிளியுடல் பெற்று வானுலகிற்குப் பறந்து சென்றது அருணகிரிக் கிளி. இந்திரனிடம் கேட்டு கற்பக மலரைப் பெற்று அந்தக் கிளி மண்ணுலகம் திரும்பியபோது தான் விட்டு வைத்த பழைய மனித உடலை அது காணவில்லை.

அருணகிரியாரின் மனித உடலை எரித்துவிட்டிருந்தான் அவர்மேல் பொறாமை கொண்ட சம்பந்தாண்டான். கற்பக மலரை மன்னனிடம் கொடுத்த கிளி கைலாயத்திற்குப் பறந்துசென்று அன்னை பார்வதியின் கரத்தில் போய் அமர்ந்து கொண்டது. மதுரை மீனாட்சியின் திருக்கரத்தில் இருக்கும் கிளி அருணகிரிநாதர்தான் என்கிறது அருணகிரியாரின் புனித வரலாறு.வள்ளுவர் சுட்டிக் காட்டிய விண்ணுலகமும் தெய்வங்களும் இன்றுவரை தமிழர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட நம்பிக்கைகள். பலப்பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இத்தகைய நம்பிக்கைகள் தான் தமிழர் பண்பாட்டின் அஸ்திவாரம்.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்