SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூலோக சொர்க்கம்!

2020-01-02@ 17:33:26

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

?கடந்த சில மாதங்களாக கடுமையான மனக்குழப்பத்திற்கு ஆளாகியுள்ளேன். மும்பைக்கு வந்து பணி புரிந்த 30 ஆண்டுகளில் நன்கு சம்பாதித்திருந்தும் பல  சொத்துக்களை இழந்திருக்கிறேன். நான் தற்போது கன்சல்டன்சி வைக்கலாமா? இழந்த சொத்துக்களை மீண்டும் சம்பாதிக்க இயலுமா? உடல் ஆரோக்யம் எந்த  நிலையில் உள்ளது? எனது எதிர்காலம் குறித்த கவலை அதிகமாக உள்ளது.
- ஹரிஹரன், மும்பை.


தற்காலம் 26.12.2020 வரை சந்திர தசையில் ராகு புக்தி நடைபெறுகிறது. பொதுவாக சந்திரனுடன் ராகு பகவான் இணைந்து செயல்படும் காலங்களில் மன  அமைதி பாதிக்கப்படும் என்பது ஜோதிட விதி. உங்களுக்கும் அவ்வாறே தற்போதைய கிரஹ நிலை செயல்படுவதால் சுத்தமாக அமைதியை இழந்து மன  உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். அதிலும் புக்திநாதன் ராகு பகவான் மூன்றாம் இடமாகிய தைரிய ஸ்தானத்தில் பகை பலத்துடன் அமர்ந்திருப்பதால்  முற்றிலும் தைரியத்தை இழந்து காணப்படுகிறீர்கள்.

உத்யோகம் மற்றும் வருமானத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். லக்னாதிபதி குரு நான்கில் அமர்ந்திருப்பது உங்களை ஒரு சுகவாசி எனக் காட்டுகிறது.  அதே போல ஜீவன ஸ்தானாதிபதி புதன் 12ல் அமர்ந்திருப்பதும் உத்யோக ஸ்திரமின்மையை வெளிப்படுத்துகிறது. ஆயினும் ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரனும்,  சனியும் இணைந்து அமர்ந்திருப்பதால் அநாவசிய செலவுகளை தவிர்த்தீர்களேயானால் இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியாக சாப்பிட இயலும் என்றும்  தெரிய வருகிறது. சொந்தமாக கன்சல்டன்சி வைத்து நடத்துவது என்பது தற்போதைய கிரஹ சூழலில் இயலாத காரியமே ஆகும்.

தற்போதைய கிரஹ நிலையைக் கணக்கிட்டால் உங்களின் 60வது வயதிற்கு பின்னரே இடமாற்றத்திற்கான நிலை உண்டாகும். 61வது வயதில் மும்பையை  விட்டு இடம் பெயரலாம். தென்திசையில் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இழந்த சொத்துக்களை மீண்டும் அடைவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆறாம்  இடமாகிய ரோக ஸ்தானம் சுத்தமாக இருப்பதால் ஒரு நாளும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் படுக்க மாட்டீர்கள். உங்களது 61வது வயதிலிருந்து மீண்டும்  சுகமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். கவலை வேண்டாம்.

?திருமணமான நாள் முதலாக என் கணவரோடு பெரும் போராட்டமாக உள்ளது. விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பான்மை சுத்தமாக இல்லை. இதனால்  தற்போது நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோம். லக்னத்தில் ராகு இருந்தால் தோஷமா? அவரது உடல்நிலை சீரடையுமா? அடுத்து வரும் சனி தசை  நல்வாழ்வினைத் தருமா?
- உமாசங்கரி, பெங்களூரு.


கணவரைப் பிரிந்து வாழ்ந்தாலும் உங்கள் கடிதம் முழுவதும் அவரைப் பற்றிய சிந்தனையும், கவலையுமே அதிகமாக வெளிப்படுகிறது. திருமணம் நடந்த நாள்  முதலாக அவர் செய்த கொடுமைகளைப் பற்றி விலாவாரியாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் அவரது உடல்நிலை பற்றிய உங்களது கவலை இந்தியப்  பெண்கள் என்றுமே கணவரின் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் என்பதை எடுத்துரைக்கிறது. உங்கள் கணவரின் ஜாதகத்தில் 17.03.2020 வரை குரு தசையில்  செவ்வாய் புக்தி நடைபெற்று வருகிறது.

இந்த குரு தசையின் இறுதிக்குள்ளாக அதாவது ராகு புக்தி நடைபெற்று வரும் காலத்தில் 11.08.2022 க்குள் மனம் மாறி மீண்டும் உங்களுடன் இணைய வாய்ப்பு  உள்ளது. லக்னத்தில் அமர்ந்திருக்கும் ராகு பகவான் அவரது பிடிவாத குணத்தைக் காட்டினாலும் லக்னாதிபதி புதன் நான்கில் அமர்ந்திருப்பதால் நல்ல நேரம்  வரும் காலத்தில் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துச் செல்வார். குரு தசை முடிந்து சனி தசை வரும் காலம் நல்ல விதமாகவே இருக்கும். பயம்  வேண்டாம். சனி பகவான் கேதுவின் சாரம் பெற்று குருவின் வீட்டில் அதாவது நான்காம் இடத்தில் அமர்ந்திருப்பதால் வாழ்க்கையைப்  பற்றிய ஞானம்  உண்டாகும்.

மேலும் கேது பகவான் ஏழாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் வாழ்க்கைத்துணையைப் பற்றிய தெளிவான அறிவைத் தோற்றுவித்து நல்வழிப்படுத்துவார். கேது  பகவானும், சனியும் இணைந்து செயல்படுவதால் உண்டாகும் நிகழ்வுகளும், பிரச்னைகளும் அவருக்கு உங்களது தேவையை உணர்த்தும். உங்களுடன் இணைந்து  குடும்பம் நடத்தும் காலமாக சனி தசை அமையும். கவலை வேண்டாம். அவரது ஜாதகத்தைப் பொறுத்தவரை அவ்வப்போது உடல்நிலையில் சிறுசிறு  பிரச்னைகளை சந்தித்து வருவார். உடல்நிலையை கருத்தில்கொண்டு உணவு வகைகளில் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது. ரோக ஸ்தானம் சுத்தம் பெற்று  இருப்பதால் பெரிய வியாதி ஏதும் ஏற்படாது. இருந்தாலும் சுகர், கொலஸ்ட்ரால் போன்ற இனங்களில் கட்டுக்குள் வைத்துக்கொள்வது நல்லது.

?இருபத்தாறு வயதாகும் என் மகன் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். படிக்கும்போது வீட்டிற்கு அடக்கமாக இருந்த பிள்ளை தற்போது  பெரியவர்கள் பேச்சை கேட்பதில்லை. என் வார்த்தையை மீறி வெளிநாடு செல்வதில் ஆர்வமாக உள்ளான். நாங்கள் பார்க்கும் பெண்ணை அவன் திருமணம்  செய்து கொள்வானா? அவனது எதிர்காலம் எப்படி அமையும்?
- அழகம்பெருமாள், தேனி மாவட்டம்.


கிராமத்தில் வசிக்கும் பெற்றோருக்கும் நகரத்தில் வாழும் பிள்ளைகளுக்கும் இடையிலான மனப் போராட்டம் உங்கள் கடிதத்தில் வெளிப்படுகிறது. யாரையும்  நம்பியிருக்காமல் சொந்தக்காலில் நிற்க ஆசைப்படும் மகனை நினைத்து நீங்கள் பெருமைப்பட வேண்டும். உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின்  துணைகொண்டு கணிதம் செய்ததில் தற்சமயம் 20.01.2021 வரை சுக்கிர தசையில் சனி புக்தி நடைபெற்று வருகிறது. லக்னாதிபதி ஆறாம் இடத்தில்  அமர்ந்திருப்பதால் வாழ்க்கையில் போராட்டத்தைச் சந்திப்பார்.

மேலும் லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் நான்கு கிரஹங்கள் அமர்ந்திருப்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னையை சந்தித்து மீண்டு வருவார்.  இதுபோன்ற சூழலில் பெற்றோர் தரப்பிலிருந்தும் அவரது மனதிற்கு எதிரான கருத்துக்கள் வரும்போது அவரது வார்த்தைகளில் கடுமையான கோபம் என்பது  வெளிப்படுகிறது. உங்களது குணமும் அவரது குணமும் ஒத்துப் போகாததால் இந்த நிலைமை உண்டாகி இருக்கிறது. இருந்தாலும் உங்கள் மேல் அவருக்கு பாசம்  என்பது உண்டு. தகப்பனாரைக் குறிக்கும் ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் தந்தையைக் குறித்த கவலை சதா இருந்து  கொண்டே இருக்கும்.

தனது வாழ்வியல் நிலை என்ன என்பதை உங்களுக்குப் புரியும்படியாக எடுத்துரைப்பார். உத்யோகத்தைப் பொறுத்த வரை தற்போது நல்ல நேரம்தான் நடந்து  கொண்டிருக்கிறது. வெளிநாட்டு உத்யோகம் மிகுந்த நன்மையைத் தரும். ஜீவன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் கடல் கடந்து உத்யோகத்திற்கு செல்லும்  வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அதற்கு தற்போதைய கிரஹ நிலையும் உதவுவதால் நேரத்தை பயன்படுத்திக்கொண்டு அவர் அயல்நாடு செல்வது நன்மையைத்  தரும். அவரை வெளிநாடு செல்வதற்கு முழுமனதுடன் அனுமதியுங்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பி விடுவார்.

திருமணம் என்பது அவரது விருப்பத்தின் பேரிலேயே அமையும். இருந்தாலும் பெற்றோரின் சம்மதத்தை எப்படியாவது பெற்றுவிடுவார். திருமணத்திற்கு முன்பாக  குரு ப்ரீதி செய்து கொள்வது நல்லது. அதோடு அவரது திருமணத்தை முருகப்பெருமானின் ஆலயத்தில் வைத்து நடத்துவதால் குடும்ப வாழ்வு என்பது  நல்லபடியாக அமையும். மகனைப் பற்றிய கவலையை விடுத்து அவரது எண்ணத்தோடு ஒத்துழைக்க முயற்சியுங்கள். வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு  முன்னேறுவார் என்பதையே உங்கள் மகனின் ஜாதகம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

?வருவாய்த்துறையில் பணியாற்றி வரும் எனக்கு அலுவலகத்தில் தொடர்ந்து ஏதேனும் ஒரு பிரச்னை உண்டாகிறது. துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கும்  ஆளாகி உள்ளேன். வெளியூருக்கு இடமாற்றத்திற்கு முயற்சிக்கலாமா? பணியில் இருந்து ஓய்வு பெறும் காலத்திற்குள் எனது பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?  ரிடையர்மெண்ட் வாழ்க்கையாவது நிம்மதியாக அமையுமா? மனைவியுடன் தீர்த்தயாத்திரை செல்ல முடியுமா?
- சென்னை வாசகர்.


நேர்மையாக செயல்படுபவர்களுக்கு என்றுமே பிரச்னை என்பது இருக்கத்தான் செய்யும். அதிலும் நீங்கள் பணி செய்து வரும் துறையில் எல்லோருக்கும்  இதுபோன்ற தொல்லைகள் உண்டாவது இயற்கையே. உங்களது ஜாதகத்தை வாக்ய பஞ்சாங்க முறைப்படி துல்லியமாக கணித்ததில் தற்காலம் 05.05.2022 வரை  குரு தசையில் ராகு புக்தி நடைபெற்று வருகிறது. பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய் மூன்றாம் இடத்தில் அமர்ந்திருப்பது உத்யோக ரீதியாக  உங்களது துணிச்சலான செயல்பாடுகளைக் காட்டுகிறது. மற்றவர்கள் செய்யத் தயங்கும் காரியங்களையும் அநாயாசமாக செய்து முடிப்பீர்கள்.

அதன் காரணமாகவே எதிரிகள் உருவாகி அவர்கள் மூலமாக ஒரு சில தொல்லைகளையும் சந்தித்து வருகிறீர்கள். இருந்தாலும் உங்களின் துணிச்சலான  செயல்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக உங்களுக்கு நிச்சயமாக பதவி உயர்வினை பெற்றுத் தரும். 05.05.2022 க்குப் பிறகு சனி தசை என்பது துவங்குகிறது.  உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் பலத்துடன் சஞ்சரிப்பதால் சுகமான வாழ்வினை அடைவீர்கள். அலுவலக ரீதியாக உங்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும்  ஒழுங்கு நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து விடுவீர்கள். உங்களது துணிச்சலான செயல்பாடுகளும், நேர்மையும் உங்களை துறை ரீதியான நடவடிக்கைகளிலிருந்து  காப்பாற்றி விடும்.

கவலை வேண்டாம். உத்யோக ரீதியாக எந்தவிதமான இடமாற்றத்தினையும் தங்களது ஜாதகம் உணர்த்தவில்லை. தற்போது பணி புரியும் இடமே நன்மை  தருவதாக அமைகிறது. ஆகவே எந்தவிதத்திலும் பணி மாற்றத்திற்கோ, இடமாற்றத்திற்கோ முயற்சிக்க வேண்டியதில்லை. எதற்கும் அஞ்சாமல் எப்பொழுதும்  போல் உங்களது கடமையைச் செய்து வாருங்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் உங்களால் இயன்ற அளவிற்கு பொதுசேவையில்  ஈடுபடுவீர்கள். உங்கள்  விருப்பம்போல் மனைவியுடன் தீர்த்தயாத்திரையை மேற்கொள்ள இயலும். செவ்வாய் தோறும் கந்த சஷ்டி கவசத்தினை படித்து வாருங்கள். மனதில் உள்ள  கவலைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

?எனக்கும் என் மனைவிக்கும் ஜாதகத்தில் எட்டாம் பாவக அதிபதியின் தசை நடந்து கொண்டிருக்கிறது. இதனால் எங்கள் ஆயுள் முடிவடையும் காலத்தில்  இருப்பதாக உணர்கிறேன். ஜாதகத்தில் உடல், ஆன்மா, ஆயுள் பற்றி அறிய முடியும் என்று சொல்கிறார்கள். எங்கள் ஜாதகத்தினைக் கொண்டு இது பற்றிய  விவரங்களைத் தாருங்கள்.
- அனந்தராமன் - சாரதா, ஓசூர்.


உடல், உயிர், ஆன்மா, ஆயுள் பற்றிய விரிவான விளக்கத்தினைக் கேட்டுள்ளீர்கள். உங்கள் இருவருக்கும் எட்டாவது பாவக அதிபதிகளின் தசை நடந்து  வருவதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆயுளை தீர்மானிக்கும் சக்தி கடவுள் ஒருவருக்குத்தான் உண்டு. அதை நாம் அறிந்துகொள்ள முயற்சிப்பது தவறு. வாழும்வரை  அடுத்தவர்களுக்கு எந்தவிதமான துன்பமும் தராமல் வாழ இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். கும்ப லக்னத்தில் அவிட்ட நட்சத்திரக்காலில் பிறந்துள்ள  நீங்கள் செவ்வாயின் குணமான வேகத்துடன் கூடிய சனி பகவானின் ஆன்மாவினைக் கொண்டுள்ளீர்கள்.

செவ்வாய் சனி இருவரும் 11ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும் என்ற பிடிவாதம் நிறைந்த குணத்தினையும்  பெற்றிருக்கிறீர்கள். உடல் ரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆறாம் இடத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் சற்றே ஸ்தூலமான சரீரத்தைக் கொண்டவராகவும்  உள்ளீர்கள். தற்போது மாரக தசை நடந்து வருகிறது என்பது உங்களின் கற்பனையே. 2023ம் ஆண்டு ஜூலை மாத வாக்கில் உடல்நிலை ரீதியாக சிரமம்  உண்டாகி சற்று பிரச்னையைத் தரலாம். அந்த நேரத்தில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது.

தங்களது துணைவியார் ஜாதகத்தைப் பொறுத்த வரை எட்டாம் இடத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று தசை நடத்துவதால் அவரது தசா காலத்தில் பிரச்னையைத்  தருவார் என்றாலும் தீர்க்க சுமங்கலி யோகத்தினையும் தருகிறார். சிம்ம லக்னத்தில் சூரியனின் ஆன்மாவினைக் கொண்டு இவர் பிறந்திருந்தாலும் கேதுவின்  சாரம் பெற்று இருப்பதால் அடிப்படையில் சற்குணங்கள் நிறைந்தவராக இருக்கிறார். வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவர் என்றாலும் கூட சுய  கௌரவத்திற்கு குறை வரும் இடங்களில் நிற்க மாட்டார்.

தீர்க்க ஆயுளும் அவரால் நீட்டிக்கப்படுகிறது என்பதில் ஐயம் ஏதும் இல்லை. குரு தசையில் சனி புக்தி மற்றும் சூரிய புக்தி வரும் காலங்களில் உடல்நிலையில்  கவனம் செலுத்துவது நல்லது. வயதான காலத்தில் இறை சிந்தனையில் காலத்தினை கழிக்க முயற்சியுங்கள். ஆயுள், மாரகம் போன்ற சிந்தனைகளைத் தவிர்த்து  பேரன் - பேத்திகளை கொஞ்சி மகிழுங்கள். மகன், மருமகள், பேரன், பேத்தி என்று கூட்டுக்குடும்பத்தில் வாழும்போது இந்த பூலோகத்திலேயே சொர்க்கத்தினைக்  காணலாம்.

சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்