SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனுமனை வலம் வர ஆரோக்யம் கூடும்

2019-12-23@ 14:16:38

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாரிகாரமும் சொல்கிறார். திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?38 வயதாகும் என் 2வது மகன் திருமணத்தில் நாட்டம் இல்லாதது போல் நடந்து கொள்கிறார். வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. எதையோ பறிகொடுத்தது போல் காணப்படுகிறார். பி.இ., படித்திருந்தும் சுறுசுறுப்பு இல்லை. எதைச் செய்தாலும் மிகவும் மந்தமாக இருக்கிறார். இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?

தொகுப்பு: செல்வராஜ், கிருஷ்ணகிரி.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சந்திரன் 12ம் வீட்டில் சூரியனுடன் இணைந்திருப்பது அத்தனை உசிதமான நிலை இல்லை. மேலும் ஏழாம் வீட்டில் கேது இணைந்திருப்பதும், ஏழாம் வீட்டின் அதிபதி சனி மூன்றில் அமர்ந்திருப்பதும் கடுமையான களத்ர தோஷத்தினைத் தருகிறது. இதுபோன்ற அமைப்பினை உடையவர்கள் திருமண வாழ்வில் நாட்டமின்றித்தான்  இருப்பார்கள்.

அவரது திருமணம் குறித்த எண்ணத்தினை விடுத்து சுயமாக சம்பாதிக்கத் தூண்டுங்கள். ஜாதகத்தில் குரு - சனி இணைந்து குரு சண்டாள யோகத்தினைத் தருவதால் சுறுசுறுப்பின்றிக் காணப்படுகிறார். இதுபோன்ற சிரமங்கள் அனைத்தும் பூர்வஜென்ம வினை என்பதைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தவாறு செயல்படுங்கள். அவரது ஜாதகத்தின்படி பிரச்னையில் இருந்து முழுமையாக விடுபட இயலாது. அனுபவித்துத்தான் முன்ஜென்ம பாக்கியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

ஜாதகத்தில் ஜீவன ஸ்தான அதிபதி செவ்வாய் 11ல் இருப்பதால் அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலையாகத் தேடாமல் சாதாரணமான பணிக்கு அனுப்ப முயற்சியுங்கள். தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு சம்பாத்யம் இருந்தால் போதுமானது. செவ்வாய் தோறும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று ஏழுமுறை வலம் வந்து வணங்கச் சொல்லுங்கள். வாழ்வில் விடிவு பிறக்கும்.

?58 வயதாகும் எனக்கு தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டார். எனது தாயாருக்கு எங்களுடைய குலதெய்வம் எது மற்றும் அது எங்கு உள்ளது என்ற விவரங்கள் தெரியவில்லை. குலதெய்வ வழிபாட்டினை செய்ய இயலாமல் தவிக்கும் எங்களுக்கு அதுபற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

- சிவாஜி, திருச்சி.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்ததில் ஒன்பதாம் பாவகத்தில் கேது பகவான் அமர்ந்திருக்கிறார். செவ்வாயின் சாரத்தில் கேது அமர்ந்திருப்பதும், ஒன்பதாம் பாவகத்தின் மீது செவ்வாய் மற்றும் ராகுவின் இணை தனது பார்வையை செலுத்துவதும் சுப்ரமணிய ஸ்வாமியை குறிகாட்டுகிறது. ஒன்பதாம் பாவக அதிபதி சனி பகவானின் வக்கிர சஞ்சார நிலை இதுநாள் வரை உங்கள் கண்களில் இருந்து குலதெய்வத்தை மறைத்து வைத்துள்ளது. உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருவதால் இந்த நேரத்தில் உங்களால் குலதெய்வத்தினை அடையாளம் காண இயலும்.

குன்றின்மீது அமர்ந்திருக்கும் குமரக் கடவுளே உங்கள் குலதெய்வம் என்பதை உறுதி செய்யும் விதமாக உங்கள் தந்தையாரின் பெயரும் அமைந்துள்ளது. உங்களுடைய பூர்வீகத்தைக் கணக்கிட்டுக் காணும்போது கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலை திருத்தலத்தில் அருட்பாலிக்கும் சுவாமிநாத ஸ்வாமி உங்களுடைய குலதெய்வமாக இருக்கலாம் என்பது ஜாதக ரீதியான கணிப்பாக அமைகிறது. ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் சுவாமிநாத சுவாமி ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று தரிசித்து வழிபடுங்கள். ஆலயத்தில் நீங்கள் சந்திக்கும் அனுபவ உணர்வுகளும் அதனைத் தொடர்ந்து காணும் சகுனங்களும் உங்கள் குலதெய்வம் அதுவே என்பதை உறுதிசெய்யும்.

?21 வயதாகும் நான் டிகிரி முடித்துள்ளேன். சிறுவயது முதல் உறவினர்களின் வசைபாடுதலுக்கு ஆளாகி நெகடிவ் சிந்தனையுடன் வளர்ந்ததால் திருமணம் குறித்த பயம் வந்துள்ளது. காதல் திருமணத்தில் நாட்டம் உண்டு. வசதியான குடும்பம் என்பதால் பெற்றோர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஜோதிடர் நான் விரும்பியது கிடைக்காது என்கிறார். விதிவிட்ட வழியில் செல்லவா, அல்லது விதியை மதியால் வெல்லமுடியுமா?

- ஒரு வாசகி, கும்பகோணம்.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி தற்போது திருமணம் குறித்த சிந்தனையே தேவையில்லை. வசதிவாய்ப்புள்ள குடும்பம் என்பதால் நீங்கள் மேற்படிப்பு படிப்பதிலோ வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதிலோ உங்கள் கவனத்தை செலுத்தவில்லை என்பதை உங்கள் கடிதம் உணர்த்துகிறது. ஜாதக பலத்தின்படி வேலைவாய்ப்பு என்பது உங்களுக்குச் சிறப்பாக அமைந்துள்ளது. மேற்படிப்பிலும், உத்யோகத்திற்குச் செல்வதிலும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

மேலும் வாழ்க்கைத்துணையைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தில் அமர்ந்துள்ளதால் உத்யோகம் சார்ந்த மணாளனே அமைவார். காதல் திருமணத்திற்கான வாய்ப்பு இல்லை. பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமே உங்கள் மனதிற்குப் பிடித்தமான வகையில் அமையும். சிறப்பான எதிர்காலம் என்பது காத்திருப்பதால் வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் படிப்பினில் கவனத்தை செலுத்துங்கள். அவரசப்பட்டு திருமணத்தை நடத்துவதால் வாழ்வினில் நிம்மதி என்பது காணாமல் போய்விடும். 25வது வயதில் உங்கள் திருமணம் வெகு விமரிசையாக நடைபெறும். செவ்வாய் தோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வர குழப்பம் நீங்கி மனத்தெளிவு பெறுவீர்கள்.

?என் மகனின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் அவனுக்கு களத்ர தோஷம் இருப்பதை அறிந்து அதிர்ச்சியாக உள்ளது. முகம் தெரியாத பெண்ணின் ஜீவனை பணயம் வைக்க என் மனம் பேதலிக்கிறது. இதற்கு சரியான பரிகாரம் உண்டா? இந்த தோஷத்தில் இருந்து என் வருங்கால மருமகளின் (மகளின்) ஆபத்தான கண்டம் நீங்கிவிடுமா? என் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டிய பொறுப்பு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது அந்தப் பெண்ணின் உயிர். உரிய வழிகாட்டுங்கள்.

- பெயர் வெளியிட விரும்பாதசென்னை வாசகர்.

அரைகுறை அறிவு என்பது மருத்துவத்தில் மட்டுமல்ல, ஜோதிடத்திலும் ஆபத்தானது என்பதை உங்களது கடிதம் தெளிவாக உணர்த்துகிறது. முதலில் ஒரு விஷயத்தை நன்றாக உங்கள் மனதில் நிலைநிறுத்துங்கள். அதாவது ஒருவருடைய ஜாதகம் எந்தவிதத்திலும் மற்றொருவருடைய ஆயுளைத் தீர்மானிக்காது. அவரவர் ஜாதக பலமே அவரவருடைய ஆயுளைத் தீர்மானிக்கும். அதைவிட முக்கியமான விஷயம் யாதெனில் ஆயுளைத் தீர்மானிக்கும் சக்தி இறைவன் ஒருவருக்கு மட்டுமே உண்டு. எந்த ஜோதிடராலும் ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிக்க முடியாது. மனித சக்தியால் ஆயுளை முடிவு செய்யமுடியும் என்றால் அந்த மனிதனே கடவுள் ஆகிவிடுவான். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு சுத்தமாக இருப்பதால் எந்தவிதமான தோஷமும் அண்டாது. களத்ர தோஷம் என்று நீங்கள் எழுதியிருக்கும் காரணங்கள் எந்தவிதமான ஜோதிட விதிக்கும் உட்பட்டது அல்ல.

 இது முற்றிலும் உங்களுடைய மனோபயத்தையே காட்டுகிறது. உங்களுக்கு இருக்கும் அரைகுறை ஜோதிட அறிவைப் பயன்படுத்தி தவறாக வழி நடத்தும் மனிதர்களின் ஆலோசனைகளை பின்பற்றாதீர்கள். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து நீங்களாக உங்கள் மகனின் வாழ்வினைக் கெடுத்துவிடாதீர்கள். தற்போதுதான் அவர் தனது 23வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ளார். இந்த நிலையில் அவரது தொழில்நிலையை சிறப்பாக அமைத்துத் தருவதில் கவனத்தைச் செலுத்துங்கள். 27வது வயதில் அவரது திருமணம் நடந்து மகனும் மருமகளும் நீண்ட ஆயுளோடு நல்லபடியாக குடும்பம் நடத்துவார்கள். அவரது ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் இல்லாததால் பரிகாரம் ஏதும் தேவையில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்