SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிஷப ராசி குழந்தை!!

2019-12-16@ 13:55:44

என்னோட ராசி நல்ல ராசி!! 9

ரிஷப ராசி சந்திரன் உச்சமடையும் ராசி என்பதால் பொதுவாக ரிஷப ராசியில் பிறந்த குழந்தை அழாமல் அடம் பிடிக்காமல் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும்  இருக்கும். கொழுகொழு என்று சப்லியாக அமுல் பேபி போல இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாதத்தின் முற்பகுதியில் பிறந்தவர்களாக இருப்பதுண்டு. ரிஷப லக்கினத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் இந்தப் பண்பு இருப்பதை பார்க்கலாம்.இந்த ராசி நில ராசி என்பதால் இந்த ராசியில் பிறக்கும் குழந்தைகள் எதற்கும் அசைந்து கொடுக்காமல் அப்படியே இருப்பார்கள். அவர்களுக்கு பிடிக்காத டிரஸ் மாற்றும்போது சாப்பிட வைக்கும் போதும் தாய்மார் சிரமப்படுவர். இவ்வாறு சில நேரங்களில் இக்குழந்தைகள் நம் பொறுமையை சோதிப்பது உண்டு. எலிசபெத் மஹாராணி, மார்க் சூகெர்பெர்க் ஆகியோர் பிறந்த ராசி  ரிஷபம் ஆகும்.

கொழுக் மொழுக் பாப்பா


ரிஷப ராசி குழந்தைகள் பெரும்பாலும் நல்ல போஷாக்குடன் இருப்பர். சற்று குண்டாக தோன்றுவர். நடக்கும்போது அசையாமல் நடப்பர். இக்குழந்தைகள் ஜல்லிக்கட்டு காளை போல மிதப்புடன் நடந்து வருவதை பார்க்கலாம். நாம் ‘’வேகமாக வா’’ என்றாலும் அவர்களின் நடையில் எந்தப் பதட்டமும் இருக்காது. அருகில் வந்ததும் அத்தை அல்லது தாத்தா பாட்டியின் மடியில் குதித்து உட்கார்வார்கள் பாருங்கள். வயதானவர்களுக்கு வலி உயிர் போகும். சில சமயம் அம்மா அல்லது அப்பாவை இறுகக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்கள்; அப்போது  பெற்றோருக்கு மூச்சுத்  திணறிவிடும். அப்படி இவர்கள் செல்லச்  சிட்டுக்களாக இருப்பர். ஆனால் வலிமையில் கொம்புக் காளைகள் போல இருப்பர்.

பொது இடத்தில் கௌரவம்

 ரிஷப ராசிக் குழந்தைகளை எந்த இடத்துக்கும் அழைத்து செல்லலாம். எங்கு வந்தாலும் பணிவாக பண்பாக நடந்துகொள்வர். WELL BEHAVED ஆக இருப்பார்கள். இவர்கள் அமைதியாக அறிவோடும் அடக்கத்தோடும் பேசுவார்கள். யாராவது இவர்களைக் கேலி செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். பாய்ந்து சிதைத்து விடுவார்கள். இவர்களைப் பலர் முன்னிலையில் பெற்றோர் அடிக்கவோ கோபிக்கவோ கூடாது. தடித்த வார்த்தைகளை இவர்களிடம் பேசக் கூடாது. அடிப்பது, பட்டினி போடுவது, முட்டி போட வைப்பது நாயே பேயே சனியனே என்று திட்டுவது ஆகியவை கூடவே கூடாது. கண்டிப்பு என்ற பெயரில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டால் இவர்கள் பிற்காலத்தில் பயங்கரமான முரடர்களாக மாறிவிடுவர். வன்முறை தண்டனை போன்றவை பொதுவாக குழந்தைகளிடம் குறிப்பாக இவர்களிடம் எதிர்பார்த்ததற்கு மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.  

தண்டனை கூடாது

ரிஷப ராசிக் குழந்தைகள் தவறு செய்தால் அதைக் காரண காரியத்தோடு அமைதியாக எடுத்துச்  சொல்லிப் புரிய வைக்க வேண்டும். ஏன் இதைச் செய்ய வேண்டும்; ஏன் அதைச் செய்ய கூடாது என்று சாதக பாதகங்களோடு விளக்க வேண்டும் புரிந்துகொண்ட பின்பு அதை அவர்கள் தன் வாழ்நாள் முழுக்க பின்பற்றுவர். கண்மூடித்தனமான பழக்கங்களை எல்லாம் இவர்களிடம் திணிக்க முடியாது. பகுத்தறிவு, லாஜிக் போன்றவை தான் இவர்களிடம் செல்லுபடியாகும். ஆனால் கடவுள் பக்தி இருக்கும். சடங்கு சம்பிரதாயங்களைப் புகுத்த இயலாது.

கற்பிக்கும் முறை

ரிஷப ராசிக் குழந்தைகளை SENSIBLE AND SENSUOUS எனலாம். இந்த ராசி சுக்கிரனுக்குரிய ராசியாக இருப்பதால் இவர்களுக்கு ஐம்புலன் இன்ப நாட்டம் அதிகம் இருக்கும்; சொகுசு விரும்பிகள். எனவே இவர்களுக்கு அறிவியல் புவியியல் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது படம் வரைந்து அல்லது வண்ணங்களைப் பயன்படுத்தி சொல்லித் தந்தால் நன்றாகப் புரிந்து கொள்வர். ஆங்கிலம்; தமிழ் போன்ற மொழிப் பாடங்களை  பாட்டு போல ராகம் போட்டு சொல்லிக் கொடுத்தால் ஆர்வமாக படிப்பார்கள்.

கண் [படம்]; காது [ராகம்]; வாய் [பாடுதல்] கை,கால்  [தொடுதல்-ACTION SONGS AND RHYMES] என அனைத்து புலன்களும் ஈடுபடும் வகையில் கற்றுத்தருவது நல்ல பலனை தரும். இவர்கள் பாடங்களை மிகவும் கவனமாகக் கருத்தூன்றி படிப்பர். படிப்பதில் ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றுவர்.  பத்து. பன்னிரெண்டாம் வகுப்பு வரும்போது பொறுப்புடன் அபாரமாக படிப்பர். போட்டித் தேர்வுகளுக்கு சின்சியராக முயற்சி செய்து படித்து தேறிவிடுவர். பெரும்பாலும் இவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றிக் கனியை பறிப்பர். அந்த அளவுக்கு இவர்களுக்குப் படிப்பிலும் செய்யும் வேலையிலும் கருத்தும் கவனமும் இருக்கும். சிறு வயதிலேயே சாணக்கியத்தனம், ராஜ தந்திரம் எல்லாம் இருக்கும். நோகாமல் நுங்கு தின்னும் குழந்தைகள் இவர்கள்.

கலையார்வம்

ரிஷப ராசிக் குழந்தைகள் மென்மையான நளினக் கலைகளில் [FINE ARTS] ஆர்வம் காட்டுவர். அமைதியான பாடல்களை பாடவும் கேட்கவும் விரும்புவர். கர்நாடக சங்கீதம் பிடிக்கும் அளவுக்கு இவர்களுக்கு சத்தம் அதிகமான சினிமா பாட்டோ ஹிப் ஹாப் பாடல்களோ பிடிக்காது. எப்போது பார்த்தாலும் மெலடி மெலடி என்றே கேட்டுக்கொண்டிருப்பர். அது போல நடனத்திலும் குத்துப் பாட்டை ரசிப்பதை விட மென்மையான உடல் அசைவுகள் கொண்ட கிளாசிக் நடனத்தை அதிகம் இக்குழந்தைகள் விரும்பும். அதில் பயிற்சி அளித்தால் சிறந்த கலைஞர்களாக உருவாகுவர்.ரிஷப ராசி குழந்தைகள் நாட்டுப்புறக் கலைகளை விட செவ்வியல் கலைகளை அதிகம் விரும்புவர். பண்பாடு, கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பதால் தாத்தா பாட்டியுடன் ஒட்டிக்கொள்வர். சட்டென்று எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள மறுப்பர். கொஞ்சம் பத்தாம் பசலிகள் போலத்  தோன்றும். ஆனால் மாற்றத்துக்கான காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வர்.

அப்பா செல்லம்

ரிஷப ராசிக் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க மாட்டார்கள். ஆனால் சிறு வயதில் அப்பா செல்லமாக மகனும் அம்மா செல்லமாக மகளும் இருந்து கொண்டு அவர்களை அடித்து துவைத்து பிழிந்து எடுத்துவிடுவார்கள். ரிஷப ராசிக்குரிய கிரகம் சுக்கிரன் என்பதால் மாற்றுப் பாலின ஈர்ப்பு சிறப்பாக அமைந்திருக்கும். [சுக்கிரன் காதலுக்குரிய  கிரகம்  அல்லவா]. தங்களுக்குப் பிரியமானவர்களை இக்குழந்தைகள் அடித்து கிள்ளி கடித்து கொஞ்ச விரும்புவார்கள். வளர்ந்த பின்பு செஸ், கேரம் போர்டு, தாயம் போன்ற ‘இண்டோர் கேம்ஸ்’ விளையாடவே விரும்புவர். வெயிலில் ஓடிப் பிடித்து விளையாடுவதை விரும்புவதில்லை. இருந்தால் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வர்.
(தொடரும்)

முனைவர் செ. ராஜேஸ்வரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்