SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேண்டுதலை நிறைவேற்றும் மகிஷாசுரமர்த்தினி

2019-12-02@ 11:06:02

குமரி மாவட்ட திருக்கோயில்களில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் ஒரே கோயில் வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி. இந்த ஊர், நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் காட்டாத்துறை ஊரில் இருந்து இடதுபுறம் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து இந்த ஊர் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த கோயில் முன் மண்டபத்தில் உள்ள 12  தூண்களிலும் சிற்பங்கள் உள்ளன. ராவணேஸ்வரன், பிக்சாடனா, வேணுகோபாலன் இங்கு அபூர்வமான சிற்பம் ஆகும். சங்கு, சக்கரம் ஏந்திய விஷ்ணு இரு கைகளில் பெண் ஒருத்தியை ஏந்தி நிற்கிறார். இவள் பெயர் ஆபகந்தி. பாற்கடல் கடையும் போது விஷ்ணு கடலில் இருந்து எழுந்து வந்த லட்சுமியை ஏந்தி எடுத்த நிகழ்ச்சி இது. அப்போது லட்சுமி ஆபகந்தி எனப்பட்டாள். இது அபூர்வமான விஷயம் ஆகும்.

அந்தக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து வழிபட்ட இடமாகும்.  போரில் வெற்றி பெற்று திரும்பும் பாதையில், ரத்தக்கறை படிந்தவாளை இந்தக்கோயிலின் பக்கத்திலுள்ள குளத்தில் கழுவிய பின்னர் மகிஷாசுரமர்த்தினியை வழிபட்டுச் செல்வார்கள். ஆதலால் வாள்வச்சகோஷ்டம் ஆனது. இந்தப் பெயரை இங்குள்ள 16-ம் நுற்றாண்டு கல்வெட்டு ஒன்றும் கூறுகிறது. வாள்வச்சகோஷ்டம் என்னும் பெயர் பற்றிய வாய்மொழி–்க் கதையும் இந்தப்பகுதியில் நிலவுகிறது. சங்கரவாரியார் என்ற எடத்துவா போற்றி அந்தப் பகுதியில் வரி பிரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். ஒரு நாள் இரவு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இரண்டு அழகிகளைக் கண்டார். அதில் ஒரு பெண் இவரை அருகே அழைக்க, அவர்கள் யட்சிகள் என்பதைப் புரிந்துகொண்ட சங்கரவாரியார் அவர்கள் இருவரையும் அங்குள்ள ஒரு மருதமரத்தின் கீழ் ஸ்தாபித்தார். இந்த மரத்துக்கருகே சங்கர வாரியாரியாரின் வேண்டுகோளுக்கிணங்க அன்றைய வேணாட்டு அரசர் இந்தக் கோயிலைக் கட்டியதாக கூறுகிறது.

இந்த கோயிலில் நான்கு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று 1234ம் ஆண்டினது. கருவறையின் தென் பகுதி சுவரில் உள்ள இக்கல்வெட்டு மேல் மரியத்தூரை சேர்ந்த காவல் அரங்க நாராயணர் என்பவர் இக்கோயில் கட்டியதை குறிப்பிடுகிறது. 1521ம் ஆண்டு கிரந்தம் கலந்த கல்வெட்டு உள்ளது. முல்லை மங்கலம் திருவிக்ரமன் என்பவர் இங்கு முக மண்டபத்தை கட்டியதை கூறுகிறது. 1622ம் ஆண்டு கல்வெட்டு, இக்கோயில் கட்டுமானத்தை செய்த முல்லை மங்கலம் தாமோதரன் இறந்ததை கூறுகிறது. ஒருவர் இறப்பை பற்றிய கல்வெட்டு விருத்தப்பாடல் வடிவில் அமைந்தது. இது போன்ற கல்வெட்டு வேறு எங்கும் இல்லை.

இந்த கோயிலில் பூஜை, விழா தாந்திரீக ஆகமப்படி நடக்கிறது. நிர்மால் பூஜையில் திருமதுரம் படைக்கப்படும். செவ்வாய் சிறப்பு பூஜை, சுமங்கலிகள் தாலி பாக்கிய பூஜை, முழு நிலவில் புஷ்பாபிஷேகம், துலாபாரம் உண்டு. தேங்காய் மூடியில் நல்லெண்ணெய் விட்டு திரியிட்டு எரிப்பது கன்னி பெண்கள், சுமங்கலிகளுக்கு நல்லது என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வூர் கோயிலை மகாபாரத கதையுடன் இணைத்து கூறுகின்றனர். பாண்டவர்கள் 14 ஆண்டுகள் வனவாசம் செல்வதற்கு முன், தங்கள் ஆயுதங்களை மறைவான இடத்தில் வைக்க விரும்பினர். அதற்கு சரியான இடம் மகிஷாசுரமர்த்தினி குடி கொண்ட கோயிலே என முடிவு கட்டின. இங்கே தங்கள் ஆயுதங்களை வைத்தனர். அதனால் இத்தலம் வாள்வச்ச கோஷ்டம் என்றும் கூறுவர்.

இந்த கோயிலில் அம்மனின் படிமம் முழுவதும் மூடிய தங்க கவசம் உண்டு. கி.பி. 18ம் நூற்றாண்டில் மார்த்தாண்ட வர்மா தன் வெற்றியின் அடையாளமாக இக்கவசத்தை கொடுத்திருக்கிறார். கருவறையில் இருந்து ரகசிய அறைக்கு செல்லும் பாதை இருந்தது. அங்கே தாந்திரீக பூஜை நடந்தது என்று வாய்மொழி செய்தி உள்ளது. இந்த கோயிலில் உட்பிரகாரத்தில் உள்ள சிறு பலி பீடத்தை சாமுண்டி, பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி என்றே கூறுகின்றனர். பிற கோயில்களில் வெறும் பீடங்களாக கொள்ளப்படும் போது இங்கு சப்த மாதாக்களாக வழிபாடு செய்கின்றனர். கணபதி, நாகர் ஆகியோரும் பரிவார தெய்வங்களாக உள்ளனர். இக்கோயிலில் பலிக்கல் மண்டபம், கதிர் மண்டபம், நமஸ்கார மண்டபம், முக மண்டபம் ஆகியவற்றில் உள்ள தூண்களில் புடைப்பு சிற்பங்கள் உள்ளன. இந்த கோயில் மன்மதன் அருகே உள்ள விளக்கு பாவை சிற்பம் அற்புதமானது.

இம்மண்டபத்தில் தாடியுடன் கூடிய அர்ஜூனன் கையில் நாகபாஷத்துடன் கர்ணன், நர்த்தன காளி, ராம லட்சுமணர் என சிற்பங்கள் உள்ளன. காளி எட்டு கைகள் உடையவளாய் நிற்கிறாள். இவை ஆளுயர சிற்பங்கள் ஆகும். இக்கோயிலின் விமானம் 32 அடி உயரமுடையது. ஏகதளம் உடையது. கோயிலின் வடக்கே ஆறாட்டுக்குளம், ஆறாட்டுப்புரை, வடக்கே ஊட்டுப்புரை உண்டு. கோயில் வளாகத்தில் பலா, தென்னை, மா, நாகவல்லி, செண்பகவல்லி மரங்கள் உள்ளன. குமரி மாவட்ட திருக்கோயில்களில் பெரிய அளவிலான மகிஷாசுரமர்த்தினி இவளே. இப்படிவம் தமிழக, கேரள பாணியில் அமைந்தது அல்ல. இது ஆரம்ப கால விஜயநகர மணி சிற்பம் ஆகும். இந்த கோயிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 6.30க்கு அபிஷேகம், 7 மணிக்கு தீபாராதனை, காலை 10 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. காலை 10.20க்கு நடை அடைக்கப்படுகிறது.  மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாலை 6.30க்கு தீபாராதனை நடக்கிறது. இரவு 7.15க்கு நடை அடைக்கப்படுகிறது. கார்த்திகை கமுக திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்