SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நன்மைகள் அருளும் நரசிம்ம சாஸ்தா

2019-11-21@ 17:17:34

தூத்துக்குடி, திருச்செந்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில், திருநெல்வேலி செல்லும் சாலையில் அங்கமங்கலம் கிராமம் உள்ளது. இந்த ஊரில் அன்பே உருவாக நரசிம்மர் தனது தங்கையான அன்னபூரணியுடன், மானிட வடிவில் அருள்பாலிக்கிறார். இப்படி ஒரு அபூர்வமான ஆலயம் வேறெங்கும் காணக்கிடைக்காதது என்கிறார்கள். 800 ஆண்டுகள் பழமையானது. நரசிம்மரும் அன்னபூரணியும் இங்கு குடிகொள்ள காரணம் என்ன? மகாவிஷ்ணு பிரகலாதனின் துயர் துடைப்பதற்காக தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்ட புராணக்கதை தெரியும். இரண்யன் பெற்ற வரத்தின்படி, சந்தியா வேளையில் தனது திருக்கரங்களால் அவனைத் தன் மடிமீது இருத்தி அவன் வயிற்றை கிழித்து வதம் செய்தார், நரசிம்மர்.

இரண்யன் அசுரன் அல்லவா? இந்த வதத்தில் அவன் குருதி நரசிம்மர் மீது பட்டதால் அவருக்குக் கோபம் இன்னும் அதிகமானது. மகாஉக்கிரத்துடன் அனல் பறக்கும் கோபத்துடன் இருந்த அவரைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் அஞ்சினர். இதனால் அவரை நெருங்கவே அனைவரும் பயந்தனர். அவரை சாந்தப்படுத்த பாமாலைகள் பாடினர். நரசிம்மரின் கோபம் குறையவில்லை. எனவே அவரைத் தம் பக்தியினால் வரவழைத்த பக்தப் பிரகலாதனிடமே சரணடைந்து அவரின் கோபத்தை தணிக்குமாறு வேண்டி நின்றனர். பிரகலாதனும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நரசிம்மரை பலவாறு துதித்தார். பிரகலாதனையும் தன் அருகில் வரவழைத்து அதே மடியில் அமர்த்திக் கொண்டார் அந்தக் கருணாமூர்த்தி! அப்போதும் அவர் கோபம் தணியவில்லை. இந்த உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடும் என எல்லோருமே அஞ்சினர்.

அனைவரும் ஒன்று கூடி சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள். அவரும் தன் தேவியான அன்னபூரணியை அனுப்பி வைத்தார். அன்னபூரணியும் ஹரியிடம் வேண்டுகோள் வைக்க, தங்கையின் சொல்லைத் தட்டாமல் சாந்தமானார் நரசிம்மர். பின் அன்னபூரணியின் விருப்பத்திற்கேற்ப அங்கமங்கலத்தில் உள்ள சரப தீர்த்தத்தில் நீராடி முழுவதுமாக சாந்தியடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினார். பின்னர் இங்குள்ள சிவபெருமானை நரசிம்மர் போற்றித் துதித்தார். நரசிம்மர் வழிபட்டதால் இங்குள்ள சிவனுக்கு நரசிங்கநாத ஈஸ்வரன் என்று பெயர். இந்த ஈஸ்வரன் மேற்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆவுடைநாயகி கிழக்கு திசை நோக்கி, இறைவனுக்கு எதிரே இருந்து அருளாட்சி செய்கிறாள். இங்குள்ள தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். மிகவும் சிதிலமடைந்த, மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தைப் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தும் காலத்தை பக்தர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இங்குள்ள அன்னபூரணி ஆலயத்தில் சாஸ்தா குடியிருந்தாலும் மூலவராக நரசிம்மர் வீற்றிருப்பதால், இக்கோயில், நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் எனப்படுகிறது. ஆலயத்தின் தலவிருட்சம் இலுப்பை மரம். தீர்த்தம், சரப தீர்த்தம். ஆலய முகப்பில் பிரமாண்ட தோற்றத்தில் ஆதிபூதத்தார் விளங்குகிறார். பிராகாரத்தில் ஆனந்தகணபதி, பாலசுப்ரமண்யர், மங்கள ஆஞ்சனேயர், பேச்சியம்மன், பிரம்மசக்தி, அகத்திய மாமுனிவர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். காவல் தெய்வமாக வீரமணி திகழ்கிறார். தீபாவளி அன்று அன்னபூரணிக்கு லட்டு அலங்காரம், ஆவணி மூலம் மற்றும் நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மருக்கு பானக அபிஷேகம் செய்யப்படுகின்றன. அரசுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்காக வித்யா கணபதி, ஹயக்கிரீவர், மூகாம்பிகை, சரஸ்வதி ஹோமங்களும் வியாபார அபிவிருத்திக்காக லட்சுமி கணபதி, சௌபாக்கியலட்சுமி, குபேர லட்சுமி, லட்சுமி நரசிம்மர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஹோமங்களும் நடைபெறுகின்றன. இங்கு மங்கள ஆஞ்சநேயர் வீற்றிருப்பதால் ராம நவமியும், அனுமன் ஜெயந்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. நரசிம்மரின் உக்கிரம் தணிய வெற்றிவேர் மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்