SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவாமியே சரணம் ஐயப்பா!

2019-11-19@ 17:25:31

மாலை அணிதல்

சபரிமலை யாத்திரையின் முதல் அம்சமே மாலையிடுதல்தான். மாலை அணிவதற்கு கார்த்திகை மாதமே ஏற்றதாகும். மாலை அணியும் முன் பெற்றோரையும், குருஸ்வாமியையும் வணங்கிவிட்டு குருவின் மூலம் மாலை அணிய வேண்டும். குருஸ்வாமி இல்லாவிட்டால் அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோவியிக்குச் சென்று ஐயப்பனையே குருவாக நினைத்து மாலை அணிந்து கொள்ளலாம். துளசிமணி மாலை அணிந்து அன்று முதல் நீலம், கறுப்பு அல்லது காவி உடைகளையே அணிய வேண்டும்.

விரதங்கள்


‘கார்த்தவய விஷயே நியத ஸங்கல்ப விரதம்’. இதன் பொருள் தான் மேற்கொள்ள வேண்டிய விஷயத்தில் உறுதியாக மனதில் தீர்மானம் செய்வதே விரதம். ஆகவே விரதம் அனுஷ்டிக்கும்போது என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதை சாஸ்திரங்கள் எடுத்துச் சொல்கிறது. ’” ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி” என்பதே விரத நெறியின் உயிரோட்டம். ஐயப்ப விரதம் மனக் கட்டுப்பாட்டின் பயிற்சிக் களம். சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு தற்காலிக சன்னியாசம். மாலை அணிந்து கொள்வதுதான் விரதத்தின் முதலாவது மற்றும் முக்கிய அம்சம். குறைந்த பட்சம் 48 நாட்கள் விரதம் இருப்பது அவசியம்.  தினமும் இருமுறை நீராடி, பூஜை செய்ய வேண்டும். புலால் உணவு தவிர்த்து ஸாத்வீக உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சரீர சுகம் தவிர்க்க வேண்டும். எந்த வித தீய பழக்கத்திற்கும் இடமளிக்கக் கூடாது.
 
48 நாட்கள் விரதம் என்பது என்ன கணக்கு?

ஒரு மனிதனுக்கு தோஷம் என்பது நட்சத்திரம், ராசி மற்றும் கிரகங்களின் அடிப்படையில்தான் ஏற்படுகிறது. 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் ஆக மொத்தம் 48. எனவே 48 நாட்கள் ஒருவர் விரதம் இருக்கும் பட்சத்தில் அவருக்கு தோஷங்கள் எதுவும் அண்டாது. இது தான் 48க்கான காரணம். 48 நாட்கள் முழுமையான விரதம் இருப்பதுதான் சிறந்தது. எனவேதான் கார்த்திகை 12ம் தேதிக்குள் மாலை போட வேண்டும் என்கிறார்கள்.
 
குரு ஸ்வாமி

18 முறை சபரிமலை சென்று 18 படிகளிலும் தேங்காய் உடைத்து வழிபட்டவர்கள் மட்டுமே மற்றவர்களை வழிநடத்திச் செல்லும் குருசாமி என்ற பட்டம் பெறத் தகுதி பெறுவார்கள். இதில் ஐதீகம் மட்டுமல்லாது அனுபவமும் ஒரு காரணமாகக் கொள்ளப்படுகிறது. காட்டில் எந்த வழியில் சென்றால் பாதுகாப்பாக இருக்கும். எங்கெங்கு என்ன இருக்கும், ஒருவருக்கு உடல்நலம் குன்றிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் 18 வருடங்களில் ஒருவருக்கு மனப்பாடம் ஆகிவிடும், சபரிமலை யாத்திரையில் குருஸ்வாமியின் பங்கு மகத்தானது. குரு என்பவர் ஆன்மீக வழிகாட்டி. யாத்திரையின் நாளும் நேரமும் குறிப்பவரும் இவர்தான். சரணம் ஒலிக்க இருமுடிகட்டி தீபாராதனை செய்து, தலையில் ஏற்றி யாத்திரை புறப்பாட்டை நெறிப்படுத்துபவரும் அவர்தான்.

இருமுடி கட்டு


சபரிமலைக்கு விரதமிருந்து செல்வோர் எடுத்துச் செல்லும் முக்கியமான ஒன்று இருமுடி கட்டு. இரண்டு பகுதிகளாகக் கொண்ட இந்தக் கட்டின் முன் முடியில் நெய் தேங்காய் மற்றும் பூஜை பொருட்களும், பின் முடியில் தங்களது தேவைக்கான அரிசி போன்ற ஆகாரப் பொருட்களும் வைத்துக் கொள்ள வேண்டும். இதில் முன்முடி தெய்வீகமானது. பின்னது வழித்துணைக்கானது. முன்முடியின் துணையே பின்முடி. ஐயப்பனை நெருங்க, நெருங்க முன்முடியின் கனம் கூடி பின்முடியின் கனம் குறையும். இருமுடி சுமத்தல் இருவினை சுமத்தல் என்பதாகும். இதை நன்கு சிந்தித்தால் வாழ்க்கைப் பயணத்தில், இரை முடியும், இறை முடியும் இணைந்து இருமுடியின் குறியீடாகவே இருப்பது தெரியவரும்.

நெய் தேங்காய்

இருமுடியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு அம்சம். நெய் தேங்காய். இது மனித இதயம் போன்றது. பிறக்கும் போது நமது இதயம் களங்கமற்றதுதான். ஆனால் அதில் களங்கம் ஏற்படும்போது இதயத்திற்கு மாசு உண்டாகிறது. தேங்காயில் உள்ள இளநீர் உலகியல் சுவை போன்றது. தேங்காயின் ஒரு கண்ணைத் திறந்து அதை அப்புறப்படுத்தி விட்டு, அதில் ஞானமென்னும் நெய்யை ஊற்றி அதைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த தேங்காயை உடைப்பது நமது இதயத்தையே பிளந்து காட்டுவது போன்றது. நமது தூய்மையான மனதின் தன்மையைக் காட்டவே இந்த அம்சம். இதனால்தான் ஐயப்பன் நெய் அபிஷேகப் பிரியனாக இருக்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்