SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்

2019-11-09@ 08:30:44

காவிரிக் கரையில் காசிக்கு நிகரானதாக கருதப்படும் சிவாலயங்களில் மயிலாடுதுறையும் ஒன்றாகும்.  மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது. சுவாமி மாயூரநாதர், தாயார் அபயாம்பிகை.

கோயில் வரலாறு:  மாயூரநாதரை பிரம்ம தேவன் பூஜித்தான். இதேபோல் அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் சபித்து விடுகிறார்.

மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்தாள். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது. இதேபோல் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தண்டிக்கப்பட்ட தேவர்கள் யாவரும் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு நலன் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

கடைமுழுக்கு:

ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷம். அங்கு காவிரிக்கு, ரிஷப தீர்த்தம் எனப்பெயர். நந்திதேவருக்கு ஒருசமயம் அகம்பாவம் வந்துவிட்டது. அதை அறிந்த சிவபெருமான், நந்திதேவரைப் பாதாளத்தில் அழுத்தினார். அப்படி நந்தி தேவர் அழுத்தப்பட்ட இடம், மயிலாடுதுறை. இது காவிரியின் துலாக் கட்டமாகும். அந்த இடத்தின் நடுவில் இருக்கும் சுவாமியின் திருவடிவை இன்றும் பார்க்கலாம். ரிஷப தேவர் அழுந்திய இடம் ஆதலால், அது ரிஷப தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி,லெட்சுமி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே நீராடுவதற்கு ‘கடை முழுக்கு’ என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர்.

அதனால் துலா ஸ்நானம் பாவம், துன்பம் போக்கி புண்ணிய பலனை அளிக்கும். ஐப்பசி மாதத்தின் முதல் நாள் தொடங்கி, கார்த்திகை மாதம் முதல் தேதி முடிய  இங்கு நீராடுவது, மிகவும் விசேஷம். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுழுக்கு அன்று நீராடுவது மிக சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும், அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

முடவன் முழுக்கு...

கார்த்திகை மாதத்தின் முதல் நாள் “முடவன் முழுக்கு” என்று கொண்டாடப்படுகிறது. துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தை போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் துலா கட்டத்துக்கு ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், சிவபெருமான் ‘’நீ போய் மூழ்கு! உனக்கும் பேறு கிடைக்கும்’’ என்று அருள் செய்தார். அவர் வாக்குப்படியே அவரும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று புனித நீராடி முக்தி பெற்றார்.

அதுவே ‘முடவன் முழுக்கு’ எனப்படுகிறது. இதேபோல் கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை  தம்பதியர்  மாயூரம் வருவதற்குள் 30ம் நாள் நீராடல் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் சிவனை வேண்டி தங்கிய  நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்