SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேண்டிய வரம் அருளும் மாவூற்று வேலப்பர் கோயில்

2019-11-08@ 10:16:45

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து 19 கிமீ தொலைவில் மேற்குதொடர்ச்சி மலையில் பழமையான மாவூற்று வேலப்பர் கோயில் உள்ளது. பசுமை படர்ந்த மலைத்தொடர்ச்சிகளின் நடுவே சிறு குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோயிலில் சுயம்புவாக வேலப்பர் எனப்படும் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். முருகன் சன்னதியில் மரவள்ளிக்கிழங்கை தோண்டி எடுக்க பயன்படும் உசிலை குச்சி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் வளாகத்தில் விநாயகர் சிலையும், கருங்கல்லால் ஆன மயில் சிலையும் உள்ளது. கோயில் அருகே மாவூற்று எனப்படும் சிறு ஊரணி உள்ளது. அருகில் உள்ள மருது மர வேரில் இருந்து கிளம்பும் ஊற்று நீரானது இந்த ஊரணியை வந்தடைகிறது. இங்கு நீராடினால் தீராத நோயும் தீரும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. தினமும் விநாயகர், மூலவர், உற்சவருடன் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள குச்சிக்கும் பூஜை செய்யப்படுகிறது.  

தல வரலாறு

400 வருடங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் கண்டமனூர் ஜமீன் கட்டுப்பாட்டில் வருசநாடு இருந்தது. அருகே அடர்ந்த  வனப்பகுதியில் பளியர் இன மக்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். கடும் வறட்சி காரணமாக பளியர் இனத்தவர்கள் ஒட்டுமொத்தமாக வேறு பகுதிக்கு புலம் பெயர்ந்தனர். ஒரு தம்பதி மட்டும் இடம் மாறி செல்ல மனமின்றி அப்பகுதியிலேயே வசித்தனர். ஒருநாள் அதிகாலை இருள் சூழ்ந்த வேளையில் அப்பகுதியில் மரவள்ளி கிழங்குகளை குச்சிகளால் தோண்டி எடுக்கும் பணியில் அத்தம்பதி ஈடுபட்டனர்.

குழி தோண்டி தேடுகையில் ஒரு கிழங்கின் வேரை பின்பற்றி அருகில் இருந்த குகைக்குள் அந்த பெண் சென்றார். நீண்ட நேரமாகியும் குகைக்குள் சென்ற மனைவி திரும்பாததால் அதிர்ச்சியடைந்த கணவரும் உள்ளே  சென்றார். அங்கு தனது மனைவி மற்றொரு நபருடன் பேசுவது போன்று சத்தம் வந்ததால், ஆத்திரமடைந்த அவர் தன்னிடம் இருந்த குச்சியால் மனைவியை தாக்க முயன்றார். இதில் மண்ணில் பதிந்திருந்த ஒரு கற்சிலையின் தலை மீது அடி பலமாக விழுந்தது. அடுத்த சில நொடிகளில் அடிபட்ட சிலையின் தலைப்பாகத்தில் இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது.

இதனை கண்டு  பயந்த இருவரும் சிலையின் தலையை துடைத்தனர். தொடர்ந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் திடீரென ஜோதி வடிவில் தோன்றிய முருகப்பெருமான் ‘என்னை தினமும் வணங்கி வாருங்கள். பக்தியுடன் பொங்கலிட்டு வணங்கும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை கொடுப்பேன்’ என கூறி மறைந்தார். இது குறித்து அவர்கள் கண்டமனூர் ஜமீன்தாரிடம் கூறினர். அங்கு மண்ணில் புதைந்த நிலையில் இருந்த முருகன் சிலையை மீட்டெடுத்த ஜமீன்தார், மாவூற்று வேலப்பர் என பெயரிட்டு, கோயில் எழுப்பினார். ஜமீன்தாரின் உத்தரவின் பேரில் பளியர் இனத்தவர்களே தற்போதும் இக்கோயிலில் பூசாரியாக உள்ளனர்.

*******

கடந்த 1973ல் உற்சவர் சிலையை பிரதிஷ்டை செய்து கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. ஆடி மற்றும் தை அமாவாசை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட நாட்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. சித்திரை திருவிழாவும் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம், அக்னி சட்டி , காவடி மற்றும் பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். பொங்கலிட்டு வழிபட்டால், வேண்டும் வரத்தை தருவார் வேலப்பர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-11-2019

  15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • princecharlesbday

  தனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்!

 • childrensday

  குழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை!

 • modibrics

  பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

 • 14-11-2019

  14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்