SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

2019-11-07@ 16:46:59

* ஆழ்வார் திருநகரி - வங்கார தோசை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இங்கு தாயார் ஆதிநாதவல்லி குகூர்வல்லியுடன் ஆதிநாதர் என்ற பெயரில் பெருமாள்  திருவருட்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நவகிரக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  மூலவர் ஆதிநாத பெருமாள் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார். மணவாள மாமுனிகள் மற்றும் நம்மாழ்வாரின் மங்களாசாசனம் பெற்ற திருத்தலமாக இந்த தலம் விளங்கு கிறது. மூலவரின் முன்புறம் உள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகளே கட்டினார். மூலவரின் கருவறை விமானத்தை விட, நம்மாழ்வார் சந்நதியின் விமானம் பெரியதாகும். அடியவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டவன் ஆதிநாதப் பெருமாள் என்பதால் இவ்வாறு கட்டப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் உள்ள நம்மாழ்வாரின் விக்கிரகம் தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி, அதில் ஆழ்வாரால் அவரது சக்தி பிரயோகிக்கப்பட்டு உருவானது என்று கூறப்படுகிறது. இத்தல ‘மோகன வீணை’ எனும் ‘கல் நாதஸ்வரம்’ உலக அதிசயமாகும். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் சுயம்புவாகத் தோன்றியவர். அவரின் பெரிய திருமேனியுடைய திருப்பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக கருதப்படுகிறது. ரங்கத்தில் அரங்கனுக்கு நடைபெறும் அரையர் சேவை, இத்தல ஆதிநாத பெருமாளுக்கும் உண்டு, இத்தலத்தின் தெற்கு மாடத் தெருவில் திருப்பதி ஏழு மலையானும், ரங்கம் அரங்கனும் தனிச் சந்நதியில் எழுந்தருளி உள்ளனர்.

வடக்கு மாட வீதியில் ஆண்டாளுக்கும், தேசிகருக்கும் சந்நதிகள் உள்ளன. திருமால் பிரம்மனுக்குக் குருவாக வந்ததால் திருக்குருகூர் என்ற பெயர் பெற்றது. இத்தலத்தின் இன்னொரு சிறப்பு திருப்புளியாழ்வார் என்றும், உறங்காப்புளி என்றும் அழைக்கப்படும் புளிய மரமாகும். இம்மரம் 5,000 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. இதன் இலைகள் மற்ற புளிய மர இலைகளைப் போல் இரவில் மூடாது. இம்மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் பழுக்காது. நம்மாழ்வார் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தார்.

அவருடைய பெற்றோர் இத்தலத்துக்கு வந்து இறைவன் முன் அவரைத் தரையில் இட்டனர். உடனே அக்குழந்தை தவழ்ந்து சென்று அருகில் இருந்த இப்புளிய மரத்தின் பொந்தில் சென்று தியானத்தில் ஆழ்ந்தது. 16 ஆண்டுகளுக்குப் பின், அருகில் உள்ள திருக்கோளூரைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் வடதிசை சென்றபோது, தென்திசையில் தெரிந்த தெய்வீக ஒளியைப் பின்பற்றி வந்து நம்மாழ்வாரை அடைந்தார். புளியமரப் பொந்திலிருந்த பாலகனைப் பார்த்து அவர், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.

அப்பாலகனும் கண் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று கூறினார். அவர் கேட்டது - சடப்பொருளான உடம்பில் உயிர் சேர்ந்தால் என்னவாகும் என்பதாகும். உடம்பையே தானாக நினைத்து அதில் உழன்று கொண்டிருக்கும் என்று நம்மாழ்வார் கூறியவுடன், அந்தப் பண்டிதர் அவரது காலில் விழுந்து, அவரது சீடனாகி, அவரை மட்டுமே பாடி, மதுரகவி ஆழ்வார் என்ற பெயருடன் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவருமானார். ஆதிசேஷனே புளிய மரமாக வந்ததாகவும் கூறப்படுகிறது. ராமாவதாரத்தில் ராமர் இவ்வுலகை விட்டுச் செல்லும் இறுதி நேரத்தில் தனிமையில் இருக்க விரும்ப, இலக்குவன் காவலிருந்தான். அப்பொழுது வந்த துர்வாசரை ராமரைப் பார்க்க விடாமல் தடுக்க, அவர் புளிய மரமாகும் படி இலக்குவனைச் சபித்துவிடுகிறார். அதன்படி இலக்குவனாக வந்த ஆதிசேஷன் புளிய மரமாகித் திருக்குருகூரில் நிற்க, பெருமாளே நம்மாழ்வாராக வந்து அதனடியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.ஆகவே கருடாழ்வார்,
சக்கரத்தாழ்வார், இளையாழ்வார் என்பதைப் போல் ‘திருப்புளியாழ்வார்’ என்று வைணவ மக்களால் இந்தப் புளிய மரம் கொண்டாடப் படுகிறது.

இந்தப் புளியமரத்தின் அடியிலேயே நம்மாழ்வாருக்கு 36 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் வந்து காட்சி அளித்ததாகவும், இங்கிருந்தே அவர்களைப் பாடியதாகவும் கூறப்படுகிறது. புளிய மரத்தின் அடியில் கட்டப்பட்டிருக்கும் சுவரின் நான்கு பக்கங்களிலும் 36 திவ்ய தேசப் பெருமாள்களின் சிற்பங்கள் உள்ளன.  இங்குள்ள புளியமரம் ஆதிசேஷனே ஆகும். எனவே இத்தலத்திற்கு ‘சேஷ க்ஷேத்திரம்’ என்றும் பெயர் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளியமரத்துக்கு தலா 9 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் அகலும்.

இத்தலம் வராக க்ஷேத்திரமும் ஆகும். ஞானப்பிரான் சந்நதி முதல் பிராகாரத்தில் உள்ளது. கருடன் இங்கு வழக்கமான கூப்பிய நிலையில் இல்லாமல் அபயஹஸ்தம், நாகர், சங்கு, சக்கரத்துடன் இருக்கிறார். நகரின் பழைய பெயர் திருக்குருகூர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் பல இறுதிப் பாசுரங்களில் ‘குருகூர்ச் சடகோபன்’ என்றே தன் பெயரைக் குறிப்பிடுகிறார்.  இக்கோயிலில் வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள், இத்தலத்திலுள்ள புளியமரத்தில் பெருமாள் பிரம்மச்சர்ய யோகத்தில் இருப்பதால், மகாவிஷ்ணு மகாலட்சுமியை மகிழ மாலையாக ஏற்றுக்கொண்டாராம். இத்தலத்தில் நம்மாழ்வார் சந்நதியும், மூலவர் ஆதிநாதன் சந்நதியும் தனித்தனியே உள்ளது.

இத்தல ஆதிநாதருக்கு தினமும் காலையில் 6 எண்ணிக்கை வங்கார தோசை நிவேதிக்கப்படுகிறது. அந்த பிரசாதத்தின் செய்முறையை அறிவோம்.

வங்கார தோசை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - அரைக்கால்படி
தோலுடன் உளுந்து  - 400 கிராம்
மிளகு -  2 ஸ்பூன்
சுக்கு - 2 - 3 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 கப்.

செய்முறை: முதல் நாள் மாலையில் பச்சரிசியையும், தோலுடன் கூடிய உளுந்தையும் 5மணி நேரம் ஊற வைத்து ஒன்றாக நைஸாக அரைத்துக்கொள்கிறார்கள். சுக்கையும், மிளகையும் மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து அரைத்த மாவில் உப்போடு சேர்த்துக் கரைத்துக் கொள்கிறார்கள்.  மறுநாள் காலை  3 கரண்டிதேங்காய் சிரட்டை ஆப்பையில் பெரியதாக 6 எண்ணிக்கை தோசை  வார்த்து நெய் ஊற்றி வேக வைத்து மணமணக்கும் வங்கார தோசையை பெருமாளுக்கு நிவேதிக்கின்றனர். திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்பாதையில் ஆழ்வார் திருநகரி ஸ்டேஷனிலிருந்து 1 மைல் தொலைவில் இத்தலம் உள்ளது.

- ந. பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2020

  20-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்