SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லாம் அவன் செயல்..!

2019-11-01@ 17:47:25

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

* 37 வயதாகும் என் மகனுக்கு இதுவரை சரியான வேலை கிடைக்கவில்லை. எம்சிஏ படித்திருக்கும் அவனுக்கு நல்ல உத்யோகம் கிடைக்குமா? சொற்ப சம்பளத்தில் இரவு பகலாக ஓய்வின்றி பணிபுரிகிறான். குடும்பம் நடத்த போதிய வருவாய் கிடைக்கவில்லை. அவனது ஜாதகத்தைப் பார்த்து உரிய தீர்வு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். - சேஷப்பிள்ளை, சங்கராபுரம்.

தங்கள் மகனின் ஜாதகத்தை வாக்ய கணித முறையில் கணித்ததில் தற்காலம் குரு தசையில் குரு புக்தி நடைபெற்று வருகிறது. உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவருடைய ஜாதக பலத்தின்படி தன்முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் காண்பார் என்பதை உணர முடிகிறது. ஜென்ம லக்னாதிபதி சூரியன் 12ல் அமர்ந்திருப்பதால் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் சற்று அலைந்து திரிந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும்.

உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 11ல் ராகுவுடன் இணைந்திருப்பது நல்ல நிலையே. லாப ஸ்தானம் ஆகிய 11ம் வீட்டின் அதிபதி ஆகிய புதன் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதும் நினைப்பதை சாதிக்கும் திறனைத்தரும். இருந்தாலும் மூன்றாம் வீட்டில் அமர்ந்து திசையை நடத்திக் கொண்டிருக்கும் குரு பகவான் சீரான வளர்ச்சியைத்தான் தருவார். அதிர்ஷ்டம் என்பது குறைவாகத்தான் உள்ளது. கடுமையாக உழைத்தால் மட்டுமே இவரால் தனக்குரிய வளர்ச்சியைக் காண இயலும். நீங்கள் நினைத்துக் கவலைப்படுகின்ற அளவிற்கு அவருடைய பொருளாதார நிலை அத்தனை குறைவாக ஒன்றும் இல்லை. பௌர்ணமியில் பிறந்திருக்கும் அவருக்கு என்றைக்கும் வாழ்க்கையை நடத்த போதுமான அளவிற்கு வருமானம் என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

தற்போது துவங்கியிருக்கும் குரு தசை தன்முயற்சியால் முன்னேறுவதற்கான வாய்ப்பினை பிரகாசமாக்கும். வருமானத்திற்கு ஏற்றவாறு செலவினை அமைத்துக்கொண்டால் வாழ்க்கையை நடத்துவதில் எந்தவித பிரச்னையும் உண்டாகாது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசியில் பிறந்திருக்கும் தன் மகளை நன்றாகப் படிக்க வைத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவார். தற்போது குரு தசை நடப்பதால் வியாழன் தோறும் குரு பகவானின் சந்நதியில் நெய் விளக்கேற்றி வைத்து குரு பகவானுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வணங்கி வருவது நல்லது. வாழ்க்கை எந்தவிதமான சிரமமின்றி சீராகச் செல்லும் என்பதையே அவரது ஜாதகம் உரைக்கிறது.

* என்னுடைய மகளின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். திருமணம் எப்பொழுது நடக்கும் என்பதை  ஜாதகத்தை கணித்து பதில் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். - ராமலிங்கம், பாண்டிச்சேரி.

உங்கள் மகளின் ஜாதகத்தில் திருமணத்தைப் பொறுத்த வரை தோஷம் எதுவும் இல்லை. திருமண வாழ்வினைக் குறித்து அறிய உதவும் ஏழாம் வீடாகிய களத்ர ஸ்தானம் என்பது அவரது ஜாதகத்தில் சுத்தமாக உள்ளது. விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம், துலாம் ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சூரிய புக்தி துவங்க உள்ளது. சூரியன் களத்ர ஸ்தான அதிபதி என்பதால் தற்போது திருமணப் பேச்சினைத் துவக்கலாம். இளம் வயதிலேயே திருமணம் நல்லபடியாக நடப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சூரியன் தனது சுயசாரத்தில் வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியாகிய புதனுடன் இணைந்து அமர்ந்திருப்பதால் அவரது மனதிற்கு பிடித்தமான வகையில் வாழ்க்கை அமையும். கௌரவம் நிறைந்த குடும்பத்தின் மருமகளாக செல்வார். உங்கள் மகள் விரும்புகின்ற அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக வருகின்ற வாழ்க்கைத்துணைவர் இருப்பார். குடும்ப ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டில் குருவும் சனியும் இணைந்திருந்தாலும் இருவருக்கும் இடையேயான தூரம் அதிகமாக உள்ளதால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. குடும்ப வாழ்வு என்பது சிறப்பாகவே அமைந்துள்ளது. வருகின்ற 09.09.2019 முதல் 21.08.2020 வரை திருமணயோகம் கூடி வருவதால் இடைப்பட்ட காலத்திற்குள் அவரது திருமணத்தை நடத்த இயலும் என்பதையே அவரது ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

* எனக்கிருந்த வேலையையும் இழந்து மன சஞ்சலத்துடன் வாழ்கிறேன். திரும்பவும் வேலை கிடைக்குமா? நிம்மதி உண்டா? மனது மறத்துப் போய்விட்டது. என் வாழ்வில் மனைவி, அப்பா ஊதியத்தில் நான் சாப்பிடுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. கையெழுத்து நன்றாக இருப்பதால் தலையெழுத்து சரியாக இருக்காது என்கிறார்களே, உண்மையா? என் நிலைக்கு நல்ல வழி உண்டா? - விழுப்புரம் மாவட்ட வாசகர்.

கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக அமையாது என்ற கருத்தினில் சிறிதளவும் உண்மையில்லை. திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தில் கேது அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி சூரியனும் சிரமத்தைத் தருகின்ற ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் வாழ்க்கையில் போராட்டத்தினை சந்தித்து வருகிறீர்கள். அமாவாசை நாளில் பிறந்திருப்பதால் சூரியனுக்கு அடுத்தபடியாக சந்திரனால் கிடைக்க வேண்டிய நன்மையும் கைவிட்டுப் போயிருக்கிறது.

அதோடு தன லாபாதிபதி ஆகிய புதன் வக்ரம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்கிறார். ஆக வாழ்வின் போக்கினை நிர்ணயம் செய்யக் கூடிய இந்த மூன்று கிரஹங்களும் ஒன்றாக இணைந்து போராட்டத்தைத் தரக் கூடிய ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிரமத்தினை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். என்றாலும் சிம்ம லக்னத்தில் பிறந்திருப்பதால் எந்த ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடத்தில் உண்டு. மனம் தளராது எதிர்நீச்சல் போட வேண்டும். மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் குருவும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் மனைவி மூலம் நற்பலன்களை அனுபவித்து வருகிறீர்கள். உங்கள் ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய சுக்கிரன் ஏழில் அமர்ந்திருப்பதால் இழந்த உத்யோகத்தை விரைவில் பெற்று விடுவீர்கள். முதலில் உத்யோகத்தை இழந்ததற்கான காரணத்தை யோசியுங்கள்.

செய்த தவறை உணர்ந்து அதற்கான பிராயசித்தம் தேட முயற்சியுங்கள். தற்காலம் சனி தசையில் சனிபுக்தியின் காலத்தில் கேதுவின் அந்தரம் முடிந்து சுக்கிரனின் அந்தரம் துவங்கி இருப்பதாக நீங்கள் இணைத்துள்ள ஜாதகம் தெரிவிக்கிறது. சுக்கிரனுக்கு உரிய இந்த நேரத்தில் முயற்சிக்கும்போது இழந்த உத்யோகத்தினைப் பெற்றுவிடுவீர்கள். ஏழரைச் சனியின் காலம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாது நிதானத்துடன் செயல்படுங்கள்.
விரக்தியான எண்ணங்களை விடுத்து உற்சாகமாக செயல்படுங்கள்.

மனைவி மற்றும் தந்தையை சார்ந்திருப்பதால் கௌரவம் ஒன்றும் குறைந்துவிடாது. தனக்குரிய காலம் வரும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள். கண்ணிற்குத் தெரியும் கடவுளான சூரியனை வணங்கிவிட்டு அன்றாட செயலைத் துவக்குங்கள். வாழ்க்கையில் உண்டாகும் துன்பங்களை போராடி வெல்வீர்கள் என்பதையே உங்களுடைய ஜாதகம் உணர்த்துகிறது.

* என் மகன் 10ம் வகுப்பில் தேர்ச்சி அடைய இயலுமா? படிப்பில் மிகவும் பின்தங்கி உள்ளான். +2 வில் எந்த வகை படிப்பில் சேர்க்கலாம்? அரசுப் பணி கிடைக்குமா? தயவுசெய்து எங்கள் மகனின் கல்வி மற்றும் எதிர்காலம் பற்றிக் கூற வேண்டுகிறேன். - அன்புமணி, பண்ருட்டி.

நீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தினை ஆய்வு செய்ததில் அவரது கல்வியின் நிலை சற்று பின்தங்கியிருப்பதை உணர முடிகிறது. கல்வியைத் தருகின்ற வித்யாகாரகன் புதன் அஸ்தங்க தோஷம் பெற்று அதாவது சூரியனுடன் இணைந்து ஒரே ராசியில் அமர்ந்திருப்பதால் படிப்பு என்பது சற்று சுமாராக அமைந்துள்ளது. படிப்பு சுமாராக இருந்தாலும் உலக வாழ்வியலைப் பொறுத்த வரை நல்ல புத்திசாலியாகவும், சாமர்த்தியசாலி ஆகவும் செயல்படுவார். ரேவதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டில் குரு அமர்ந்திருக்கிறார். ஐந்தாம் வீட்டுச் செவ்வாயும் நல்லதொரு அனுபவ அறிவினைத் தருவார். அவரது ஜாதகத்தை கணிதம் செய்ததில் தற்காலம் சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருவதை அறிய முடிகிறது.

தேர்வு நேரத்தில் ராகு புக்தி என்பது நடைபெற்றுக் கொண்டிருக்கும். ராகு ஒன்பதாம் வீட்டில் கேதுவின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதால் பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவிடுவார். அறிவியல் பாடங்களை விடுத்து பொருளாதாரம், வரலாறு பாடங்களை உள்ளடக்கிய பாடப்பிரிவினை பன்னிரெண்டாம் வகுப்பில் எடுத்துப் படிக்கலாம். அனுபவ அறிவு என்பதுதான் இவரது எதிர்காலத்தை தீர்மானிக்குமே தவிர படித்துப் பெறுகின்ற பட்டங்கள் இவரது வாழ்வினில் பலனைத்தராது. கல்வி என்பது வாழ்க்கையில் உண்டாகும் பிரச்னைகளை எதிர்கொள்ள உதவும். அது மட்டும் இவரது வாழ்வினைத் தீர்மானித்துவிடாது.

அரசுப்பணிக்கான வாய்ப்பு இல்லை என்றாலும் சுயதொழில் என்பது இவருக்கு நல்ல சம்பாத்தியத்தைத் தரும். தற்போதைய சூழலில் மாணவப் பருவத்தினை சுகமாக அனுபவிக்க அவரை அனுமதியுங்கள். 22வது வயதில் தனக்கான தொழிலை அவர் நிரந்தரமாக்கிக் கொள்வார். உங்கள் மகனின் எதிர்காலம் என்பது நன்றாகவே உள்ளது. நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

* 81 வயதாகும் எனக்கு தினமும் இரவினில் கெட்ட கெட்ட கனவுகள் வந்து தொல்லைப்படுத்துகிறது. நல்ல உறக்கம் என்பது இல்லை. மனைவி இறந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. மகன் வீட்டில்தான் வசிக்கிறேன். எனது அந்திமக் காலம் நல்லபடியாக அமையுமா? - கும்பகோணம் வாசகர்.

வயதான காலத்தில் பொதுவாக எல்லோர் மனதிலும் தோன்றுகின்ற  எண்ணம் உங்கள் மனதிலும் உதயமாகி இருக்கிறது.  உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதக கணக்கின்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ராகு பகவான் ரோக ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் அமர்ந்து தசையை நடத்திக் கொண்டிருப்பதால் மனதில் பயம் உண்டாகி உள்ளது. அதிலும் தற்போது நடந்து வரும் கேது புக்தியின் காலம் மனதில் பலவிதமான சந்தேகங்களைத் தோற்றுவித்து அதற்கான விடையினைத் தேடச் சொல்லும்.

 12ம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது உங்களுக்கு தேவையான ஞானத்தினை இந்த நேரத்தில் வழங்குவார். மரண பயம் என்பது உங்கள் ஜாதகத்தைப் பொறுத்த வரை தற்போது எதுவும் இல்லை. எண்பத்தி எட்டாவது வயது முடியும் வரை உங்கள் ஆயுர்பாவம் என்பது நன்றாக உள்ளது. மனைவியை இழந்திருந்தாலும் உங்கள் மகனும் மருமகளும் உங்களது தேவைகளை உணர்ந்து அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பார்கள். நமக்காக அடுத்தவர்கள் கஷ்டப்படுகிறார்களே என்ற எண்ணத்தினை தூக்கி எறியுங்கள்.

பிள்ளைகள் தங்கள் கடமையைத்தான் செய்து வருகிறார்கள். இந்த வயதில் நாம் அவர்களது நலனைக் கருதி இறைவனிடம் பிரார்த்தனை செய்து வர வேண்டும். நமது வாழ்வினில் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்கான பிராயசித்தமாக இறைவழிபாட்டில் முழுமூச்சுடன் இறங்க வேண்டும். இறைநாமங்களை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருப்பதால் நாம் வசிக்கின்ற இடம் புனிதத்தன்மை அடைவதோடு, நம்மைச் சுற்றியுள்ளோரின் மன நிலையும், உடல் ஆரோக்கியமும் சிறந்து விளங்கும்.

இந்த வயதில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். எதிர்மறையான எண்ணங்களை விடுத்து மனதில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் அவன் செயல் என்ற எண்ணத்தோடு முமுமையாக இறைவனைச் சரணடைய வேண்டும். ஆண்டவனின் திருப்பாதங்களைச் சரணடைபவர்களை இறைவன் என்றும் கைவிடுவதில்லை. ஆயுளை நிர்ணயிக்கும் சக்தி ஆண்டவன் ஒருவனுக்குத்தான் உண்டு. தற்போதைய கிரஹ நிலையின்படி உங்கள் ஆயுர்பாவத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதையே உங்கள் ஜாதகம் எடுத்துச் சொல்கிறது.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

- சுபஸ்ரீ  சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்