SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீசபங்க ராஜயோகம்!

2019-10-29@ 17:40:27

என்ன சொல்கிறது என் ஜாதகம்

* என் கணவர் ஆறு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். 12ம் வகுப்பு படிக்கும் என் இளைய மகன் பள்ளிக்கு சரியாக செல்வதில்லை. படிப்பில் கவனமின்மை, தீய நட்பு இவற்றால் காலத்தை வீணாக்குகிறான். என் பேச்சைக் கேட்பதில்லை. ஏழையான நான் என்ன செய்வது என்று அறியாமல் நாள்தோறும் வருந்துகிறேன். என் பிள்ளையின் ஜாதகம் எவ்வாறு உள்ளது? - ராஜேஸ்வரி, விழுப்புரம்.

தங்கள் மகனின் ஜாதகத்தை வாக்கிய கணித முறையில் கணித்ததில் தற்காலம் ராகு தசையில் ராகு புக்தி நடைபெற்று வருகிறது. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவருடைய ஜாதக பலத்தின்படி இவர் சுயதொழில் செய்து வாழ்வினில் முன்னேற்றம் காண்பார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். காலசர்ப்ப தோஷம் உண்டா என்று கேட்டிருக்கிறீர்கள். உங்கள் மகனின் ஜாதகத்தில் சூரியன், புதன், கேது ஆகிய மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணைந்திருந்தாலும் நட்சத்திர பாத சாரத்தின்படி புதன் கிரகம் கேதுவை விட்டு விலகியே உள்ளது. அதாவது அனுஷம் 4ல் கேது, கேட்டை 4ல் புதன் என்ற சாரத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

கேதுவை விட்டு புதன் வெளியே வந்துவிட்டதால் காலசர்ப்ப தோஷம் என்பது உங்கள் மகனின் ஜாதகத்தில் கிடையாது. தற்போது ராகு தசை என்பது நடந்து கொண்டிருப்பதால் தீயநட்பு என்பது உருவாகி உள்ளது. வக்ரம் பெற்ற சனியும் உடன் இணைந்திருப்பதால் பிடிவாத குணம் அதிகமாகி இருக்கிறது. என்றாலும் ராகு தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் சுயதொழில் செய்து சம்பாதிப்பதில் ஆர்வம் பிறக்கும். ஜென்ம லக்னாதிபதி சூரியன் மாத்ரு ஸ்தானம் ஆகிய
நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.

பெற்ற தாய் மற்றும் தாய் வழி உறவினர்களான மாமன் முதலானவர்களால் இந்தப் பிள்ளைக்கு நன்மை என்பது நடக்கும். மகனைத் தொடர்ந்து உங்கள் கண்காணிப்பில் வைத்திருங்கள். அதற்காக அவரை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலாது. வாழ்க்கையில் அனுபவப் பாடங்களின் மூலமாக மட்டுமே அவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போது நடந்து வருகின்ற நேரம் என்பது அத்தகைய அனுபவப் பாடத்தினைக் கற்றுத் தரும். வெள்ளிக்கிழமை தோறும் ராகு கால வேளையில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வைத்து வணங்கி வாருங்கள். ராகுவின் பலத்தினால் உங்கள் மகனின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தைக் காண்பீர்கள்.

* என்னுடைய பேரனுக்கு திருமணம் தடைபட்டுக் கொண்டு வருகிறது. எப்பொழுது திருமணம் நடைபெறும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? ஜாதகத்தை கணித்துக் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன். - சுகவனம், கிருஷ்ணகிரி.

உங்கள் பேரனின் ஜாதகத்தில் தோஷம் எதுவும் இல்லை. ஆயினும் தாமதமான திருமணம் என்ற அம்சம் உள்ளது. சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம ல க்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. சுக்கிரன் ஜீவன ஸ்தானதிபதி என்பதால் தற்போது உத்யோக ரீதியான முன்னேற்றம் என்பது நன்றாக இருக்கும். மேலும் ஜீவன ஸ்தானாதிபதி ஆகிய சுக்கிரன் நான்கில் அமர்ந்திருப்பதால் சொந்தமாக வீடு, வாகனம், மனை போன்றவற்றை வாங்குகின்ற அம்சம் உண்டு. தற்போது இவரது பெயரில் புதிய சொத்து வாங்கும் முயற்சி என்பது வெற்றி பெறும்.

ஆனால் திருமணத்திற்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். களத்ர ஸ்தானாதிபதி ஆகிய சனி பகவான் ஆறில் அமர்ந்திருப்பதும், 12ம் வீட்டிற்கு அதிபதி ஆகிய சந்திரன் ராகுவின் சாரம் பெற்று ஏழில் அமர்ந்திருப்பதும் திருமணத்தை சற்று தாமதமாக்கி வருகிறது. 29வது வயதில் திருமணம் என்பது நடந்து விடும்.  இவரது சொந்த ஊரில் இருந்து மேற்கு திசையில் உள்ள ஊரைச் சேர்ந்த பெண்ணாக அமைவார். தோஷம் ஏதும் இல்லாத காரணத்தால் பரிகாரம் என்பது தேவையில்லை. திருமணத்திற்கான காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும், அவ்வளவு தான். மற்றபடி உங்கள் பேரனின் ஜாதகத்தில் தற்காலம் நடந்து வரும் தசா புக்தியின் காலம் சொத்து சேர்க்கைக்கான காலம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். எதிர்கால வாழ்வு என்பது சிறப்பாகவே உள்ளது.

* என் பேரன் பி.எஸ்சி., படித்துள்ளான். ஒரு பாடத்தில் பெயில் ஆகி அதனை எழுதிக் கொண்டிருக்கிறான். இரண்டு வருடங்களாக எழுதியும் தேர்ச்சி பெற முடியவில்லை. அவனது எதிர்காலம் எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறவும்.
- ஞானம், தேனி.

உங்கள் பேரனின் கவனம் கல்வியில் இருந்து உத்யோகத்திற்கு திசை திரும்பிவிட்டது. பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் என்பது நல்ல வலிமையுடன் காணப்படுகிறது. லக்னாதிபதி சூரியனும், ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிரனும் ஒன்றாக இணைந்து உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் வலிமையுடன் அமர்ந்திருக்கிறார்கள். தற்காலம் நடந்து வரும் சந்திர தசையில் சுக்கிர புக்தியின் காலத்தில் அவர் தனது கல்லூரிப் படிப்பை நல்ல படியாக முடித்துவிடுவார். அதனைத் தொடர்ந்து மேற்படிப்பு படிப்பதை விட உத்யோகம் தேடுவதில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. நிதி நிறுவனம், ஃபைனான்ஸ் சார்ந்த தொழில்கள் இவருக்கு நன்றாக கைகொடுக்கும். அதிலும் வண்டி, வாகனங்களுக்கு ஃபைனான்ஸ் செய்வது போன்ற துறைகள் நல்ல பலனைத் தரும். தனது ஜென்ம லக்னத்தில் செவ்வாயின் இணைவினைக் கொண்டிருப்பதால் செயல் வேகம் என்பது இவரிடத்தில் நிறைந்திருக்கும். கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வதற்குத் தானே அன்றி வாழ்வை நிர்ணயிப்பது அல்ல. உங்கள் பேரனின் சொந்தத் திறமை அவரது வாழ்வினை நல்லபடியாக அமைத்துத் தரும். தற்போது நடந்து வரும் நேரம் நன்றாக இருப்பதோடு, எதிர்கால வாழ்வும் சிறப்பாகவே உள்ளது. உங்கள் பேரனைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

* 1998ல் பெற்றோரின் விருப்பமின்றி எனது தாய்மாமன் மகனை திருமணம் செய்து கொண்டேன். என் பெற்றோர் இதுவரை என்னிடம் பேசுவது கிடையாது. அவர்கள் சொத்தில் பங்கு தருவார்களா? இல்லையா? எங்கள் வீட்டில் புறாக்களை வளர்க்கலாமா? - ருக்மிணிதேவி, வேலூர்.

நீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் ஜாதகத்தினை ஆய்வு செய்ததில் பூர்வீகச் சொத்தினால் பெருத்த ஆதாயம் ஏதுமில்லை என்பதை அறிய முடிகிறது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே கேதுவும், ஏழில் சந்திரன் - ராகுவும் இணைந்திருக்கிறார்கள். பூர்வீகச் சொத்தினைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருப்பது நல்ல நிலையே என்றாலும், ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் உங்களால் நேரடியாக அந்த சொத்துக்களை அனுபவிக்க இயலாது.

அதே நேரத்தில் அந்த சொத்திற்கு பதிலாக ஒரு தொகை என்பது உங்கள் கைக்கு வந்து சேரும். அந்தத் தொகையானது பெயரளவிற்கு இருக்குமே தவிர சொத்திற்கு இணையாக இருக்காது. கௌரவம் பார்க்காமல் பிறந்த வீட்டிலிருந்து வருவதை வேண்டாம் என்று தவிர்த்து விடாமல் ஏற்றுக்கொள்வது நல்லது. உங்கள் ஜாதக பலத்தின்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி என்பது நடந்து வருகிறது. 27.05.2022ற்குள் பெற்றோர் வழியில் இருந்து உங்களுக்கு வரவேண்டிய தொகையானது வந்து சேரும். நீங்கள் தாராளமாக உங்கள் வீட்டில் புறாக்களை வளர்க்கலாம். நீங்கள் புறாக்களை வளர்ப்பதற்கும், உங்கள் வம்சத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. பறவைகளை வளர்ப்பதன் மூலம் மனதில் அன்பும் பரிவும் பெருகும். இதனால் மன அமைதி என்பது கிடைக்கும். மனதில் அமைதி நிலவினாலே ஆரோக்யம் என்பது நிலைத்திருக்கும். வாழ்க வளமுடன்.

* 31 வயதாகும் என் மகளுக்கு கடந்த எட்டு வருடங்களாக மாப்பிள்ளை பார்க்கிறோம். இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏதோ ஒரு காரணம் காட்டி திருமணம் தடைபடுகிறது. பல்வேறு பரிகாரங்களை செய்து விட்டோம். என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வழி சொல்லுங்கள். - பத்மா, போடிநாயக்கனூர்.

பிரச்னை உங்கள் மகளின் ஜாதகத்தில் இல்லை. உங்கள் அணுகு முறையிலும் நீங்கள் மாப்பிள்ளை தேடும் விதத்திலும் தான் உள்ளது. உங்கள் மகளின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்பது கிடையாது. கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதக கணக்கின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைக் குறிக்கும் களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் வீட்டில் களத்ர காரகன் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும், ஸ்தான அதிபதி புதன் உச்ச பலம் பெற்று இணைந்திருக்கிறார். நீசன் நின்ற ராசி நாதன் உச்சம் ஆட்சி ஆகிடின் நீச பங்க ராஜயோகம் என்ற விதியின் படி உங்கள் மகளுக்கு ராஜயோகம் என்பது கிடைத்துள்ளது. திருமணத்தின் மூலம் அவர் நல்லதொரு வாழ்வினையே அடைவார்.

படிக்காத பையன், சம்பளம் குறைவு என்றெல்லாம் காரணத்தை அடுக்காமல் உங்கள் மகளின் மனதிற்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள். உங்களுடைய அபிப்ராயத்தை மகளின் மீது திணிக்காமல் அவரது விருப்பத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தாருங்கள். குருபலம் செப்டம்பர் மாதம் வரைதான் உள்ளது என்ற கருத்தில் உண்மை இல்லை. திருமண யோகம் என்பது உங்கள் மகளின் ஜாதகத்தைப் பொறுத்த வரை 22.09.2020 வரை சிறப்பாக உள்ளது. அதுவரை தாமதம் செய்யாதீர்கள்.
 
தற்போது நடந்து வரும் நேரமே நன்றாக உள்ளதால் நம்மை நாடி வருகின்ற வரன்களில் உங்கள் மகளின் மனதிற்கு பிடித்தமானதை தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்யுங்கள். ஜாதகப் பொருத்தம், கிரக தோஷம் என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக சொல்லும் கருத்திற்கு முக்கியத்துவம் தராமல் மனப் பொருத்தம் மற்றும் சகுனம் ஆகியவற்றைப் பொருத்து முடிவு செய்யுங்கள். உறவினர்கள் மூலமாக உங்கள் மகளுக்கான வரனைப்பற்றித் தெரிய வரும். உங்கள் மகள் பிறந்த ஊரிலிருந்து வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்து மணமகன் வந்து சேர்வார். ‘உங்கள் கடிதத்தில் நீங்கள் இதுவரை செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் பரிகாரங்களின் பட்டியலைப் பார்த்தால் வருத்தம்தான் உண்டாகிறது.

இத்தனை பரிகாரங்களைச் செய்ய வேண்டிய அளவிற்கு உங்கள் மகளின் ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் இல்லை. தெய்வ நம்பிக்கை என்பது எல்லோருக்கும் அவசியம் தேவை. அதே நேரத்தில் அவை மூடநம்பிக்கைகளாக இருந்தால் எந்தவிதமான பலனும் உண்டாகாது. மூடநம்பிக்கைகளை விடுத்து உங்கள் குலதெய்வத்தை முழுமையாக நம்புங்கள். குலதெய்வ வழிபாடு ஒன்றே உங்கள் மகளுக்கு நல்வாழ்வினை உருவாக்கித்தரும். இந்த வருட இறுதிக்குள் மகளின் திருமணத்தை நிச்சயம் செய்துவிட இயலும் என்பதையே அவரது ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்