SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாயகி... நான்முகி... நாராயணி...

2019-10-23@ 16:42:29

*அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 47

சராசரி மனிதர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சில எண்ணங்கள் தன் தேவைகளையும், ஆசைகளையும், நிறைவேற்றிக் கொள்ளும் வழியைத் தேடி அலைந்து கொண்டே இருக்கும். அந்த சூழ்நிலையை நன்கு அறிந்தவர் அபிராமி பட்டர்.
நோயை நிவர்த்தி செய்வதில் மருத்துவரையும், தேவையை நிவர்த்தி செய்வதற்கு பணத்தை பெற்றுத்தரும் வழிகளையும், பசியை போக்குவதற்கு உணவையும் தேடி தானாக விழைகிறார்கள். தேடி அலைந்ததின் விளைவாக பயனை அடைகின்றனர். மேற்கண்டவர்களை எந்த அளவிற்கு உலகம் நம்புகிறதோ அந்த அளவிற்கு யார் ஒருவர் அபிராமியை நம்பி அவள் அனைத்தையும் அருள்வாள் என்று அவள் சந்நதியின் முன் வேறு வழியற்று கண்கலங்கி, மெய்விதிர்த்து, நாணமற்று ,கையேந்தி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்களோ அவர்களே அவளிடத்தில் சரணாகதி அடைந்தவர்கள்.

அப்படி அடைந்தவர்களிடம் தான் முன்னர் இது போன்ற தேவைகளுக்காக. அம்மையிடம் வேண்டி நின்ற பொழுது அவள் தனக்கு பரிவொடு அருளியதை நமக்கு நினைவு கூறுகிறார். பொருளும் அவளின் அருளும் வேண்டி நிற்கும் அடியவர்களிடம் அம்மையின் இருப்பிடத்தையும் அவளின் கருணையானது மண்ணுலகவாசிகளுக்கு விண்ணுலக செல்வத்தையும் வசையாது வாரி வழங்கும் தன்மையையும் எடுத்துக் கூறி அல்லலுற்ற பக்தர்களுக்கு அவளின் முகவரியை கூறி ஆற்றுப்படுத்துகிறார்.

இனி பட்டர் காட்டிய வழியில் பயணிப்போம் வந்தே சரணம் புகும் அடியார்க்கு சரணம் புகுதல் என்றால் என்ன? அடியவர் என்பவர் யார்? யாரிடத்து சரணம் புகுகிறார்கள். என்ற வினாக்களுக்கெல்லாம் அந்தாதியின் பிற பாடல் வரிகளைக் கொண்டே விளக்கம் காண முயல்வோம்.  நாயகி, நான்முகி, நாராயணி கை நளின பஞ்ச  சாயகி சாம்பவி, சங்கரி, சாமளை சாதி நச்சு  வாயகி, மாலினி, வாராகி சூலினி, மாதங்கி என்று ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. இதில் நாயகி என்றால் உமையம்மையின் மந்திரம், நான்முகி என்றால் சரஸ்வதியின் மந்திரம், நாராயணி என்றால் இலக்குமியின் மந்திரம் என்பதாக பிற தேவதைகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சக்தி உபாசகர்கள் வணங்கும் 12 மந்திரங்களை பெயராகவும், அவற்றை மனமுருகி ஜபம் செய்வதையே இறைவியின் அருள் அனுபவத்தை பெற்றுத்தரும். இத்தகைய மந்திர உபதேசத்தை பெறுவதற்காக குருவைத் தேடி அவர் திருவடி வணங்குவதை  சரணம் புகுதல் என்கிறார். அதையே பின் பற்ற வேண்டிய அறம் என்றும் வலியுறுத்துகின்றார்.  அந்த அரத்தை கடைபிடிப்பவரையே சரணம் புகுபவர் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். அடியவர் என்பவர் யார் - பொதுவாக அடியவர் என்பவர் இறைவியின் திருவடியை வணங்கி வழிபடுவதன் மூலமாக தான் விரும்பிய பயனை அடைய முயல்பவர்கள் அனைவருமே அடியவர்கள் தான். என்றாலும் அதை பாகுபடுத்துகிறார் அபிராமி பட்டர்.

‘‘தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர் வரியா மனம் தரும், தெய்வ வடியும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும். நல்லன எல்லாம் தரும்’’

- 69 என்று உலகியல் இன்பங்களை மண்ணுலக வாழ்கையை விரும்பாமல் சொர்க்கத்தையும், மோட்ச இன்பத்தையும் விரும்புபவர்களாய் பக்தி செய்பவர்கள் துறவியர்கள் ஆவர். இவர்களை மோக்ஷகாமிகள் என்கிறது சாத்திரம். ஆனால் இரு வகையினரும் சார்ந்தவரல்லர் பட்டர். ஆனால் இரு வகையினரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவர்களே.   உலகின்பத்தை விரும்பாமலும், முக்தியின்பத்தை நாடாமலும், அபிராமி அம்மையின் இயல்பான உயர்வு கருதி அவளின் திருவடியையே தான் விரும்பும் பயனமாக கொண்டவராக திகழ்கிறார். இத்தகைய பண்பைக் கொண்டவரையே இங்கு அடியவர் என்கிறார் பட்டர். இதையே இந்த பாடல் வரிகள் மேலும் உறுதி செய்கிறது.

‘‘அபிராம வல்லி அடியினை பயனென்று கொண்டவர்’’ - 74 இப்படிப்பட்ட பட்டர் அபிராமியிடத்து சரண்புகுதலுக்கு உண்டான தகுதி தனக்கு இல்லை என்ற போதும் ‘‘தமியேனும் உன் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது - 88 தன்னை விட்டு விடாதே என்று தானே நம் சார்பில் உமையம்மையினிடத்து சரண் புகுகின்றார். தான் சரணடைந்தது அபிராமி தான் என்பதை எவ்வாறு உணர முடிகிறது என்றால் ‘‘சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார் ’’- 51 இந்த இடத்தில் நாயகி என்ற வார்த்தைக்கு பின் அழைக்கப்படுகின்ற உமையம்மையையே குறிக்கும். அந்த வகையில் திருக்கடையூர் அபிராமி அம்மையே சரணம் புகும் இடமாக குறிப்பிடுகிறார்.

‘‘வந்தே சரணம் புகும் அடியார்க்கு’’ இந்த வார்த்தையினால் ‘‘வந்தே’’ என்ற சொல்லை உமையம்மையின் உயர்வும் இயல்பும் கருதி மானுடர்,தேவர்கள்,மூத்ததேவர் முதலானோரும் அவளிடத்திலே சரணம்புக விழைகின்றார்களேயன்றி உமையம்மையானவள் யாரையும் தேடிச் செல்வதில்லை என்பதை அபிராமி பட்டர் வலியுறுத்தவே ‘‘வந்தே’’ என்ற வார்த்தையை பயன் படுத்துகின்றார். இதையே ‘‘மனிதரும் தேவரும் மாயா
முனிவரும் வந்து சென்னி குனிதரும் ’’4   ‘‘முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே - 92 என்பதன் மூலம் நன்கு அறியலாம்.

வானுலகம் சந்தே பரிவொடு  வானுகலம் என்பது எங்கே உள்ளது? அது எப்படி இருக்கும்? அங்கு வாழ்கின்றவர்களைப் பற்றிய குறிப்பு என்ன ? என்பதை எல்லாம் அபிராமி பட்டர் தன்பாடல் வரிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றாய் உற்று நோக்கி ஒருவாறு வானுலகத்தை யூகித்துக் கொள்ள முயல்வோம்.   சக்தி தத்துவங்களை பொறுத்த வரை உலகங்கள் இருபத்தி ஒன்று எனப்படுகிறது. அதில் ஒன்று தான் வானுலகம் இதை‘‘புவி ஏழையும் பூத்தவளே புவனம் பதி நான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே - 13 என்பதனால் நன்கு அறியலாம்.

 பூவுலகம் என்னும் நாம் வசிக்கும் உலகமானது நடுவில் அமைந்துள்ளது. அந்த உலகத்திற்கு மேலே உள்ளது வானுலகம் என்பதை பாரில் உன்னை -14  ககனமும் புவனமும் - 65 என்ற வரியால் அறிவிக்கின்றார்.  பூவுலகத்தை விட மேலானது வானுலகமென்பதனால் அதை ககனம் என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். பூவுலகத்தில் வசிப்பவர்களை மனிதர்கள் என்று அழைப்பது போல வானுலகத்தில் வசிப்பவர்களை அமரர்கள் என அழைக்கிறார் என்பதை ‘‘அமரர் தங்கோன்’’- 97 ‘‘மனிதரும் தேவரும்’’ - 4 என்பதனால் உணரலாம்.

 மண்ணுலக வாசிகள் பிறவி, பால்யம், இளமை, முதுமை மரணம் என்ற ஐந்து பருவங்களாக வளர்ந்து வாழ்ந்து மரிக்கிறார்கள். ஆனால் விண்ணவர்களோ மரணமற்றவர்களாயும், மூப்பு, பிணி, அற்றவர்களாயும் என்றும் இளமையுடன் இருப்பார் என்பதை ‘‘மரணம் பிறவி இரண்டும் எய்தார் ’’- 51 என்பதிலிருந்து அறியலாம்.
 விண்ணுலகத்தில் எண்ணியதை எண்ணிய படியே வழங்கும் கற்பக விருட்சம் என்ற மரமும், நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்ல ஐராவதம் என்ற யானையும், பாவங்களை அழித்து ஆன்மாக்களை தூய்மை செய்ய கங்கை என்ற நதியும் இருக்கிறது.

 மேலும் நினைத்த வடிவத்தை தான் விரும்பிய வண்ணம் எடுத்து மகிழ்விக்கும் வல்லமை உள்ள மகளிர்களும், எப்பொழுதும் எதிரிகளினால் வரும் துன்பத்திலிருந்து காத்தருளும். குலிசம் என்ற வெற்றிப் படையும், இவை அனைத்துமே நிரந்தரமாய் வானுலகத்தில் இருக்கிறது. கருத்து வேறுபாடில்லாமல் ஒருமித்த எண்ணம் உடையவர்களாக, மகிழ்ச்சியுடன் கூடிய உறவுடையவர்களாய் வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள் என்பதையே.

‘‘அயிராவதமும், பகீரதியும் உரவும் குலிசமும்
 கற்பகக் காவும் உடையவரே - 83
 ‘‘பாவையர் ஆடவும் பாடவும் பொன் சயனம்
  பொருந்து தமனியக் காவினில் தங்குவரே’’ - 74

என்று விண்ணுலகத்தின் அதிசயங்களை தம் பாடலின் மூலம் பட்டியலிடுகிறார்.   மனிதர்களின் ஆசை கடல் போன்றது. அந்த ஆசை அனைத்தும் நிறைவேறாமல் நாய் போல் அல்லலுற்று திரிபவராயும் ‘‘குடரும் கொழவும் குறுதியும் தோயும் குறம்பை’’ - 48 மத்தில் அகப்பட்ட தயிர் போல ஆவி சோர்ந்தவர்களாக. ‘‘இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு’’ (54) நிற்பவர்களாயும் அறிவொன்றில்லாத விலங்கின் இயல்புடையவராயும் இருக்கின்ற மண்ணுலக மானிடர்களின் இயல்பான இழி நிலையை பட்டியலிட்டிக்கிறார் பட்டர்.

  இப்படிப்பட்ட நிலையில் உள்ள மானுடர்களுக்கு தாழ்வு நீக்கி உயர்வான வானுலகத்தைத் தருபவள் உமையம்மை என்பதைக் குறிக்கவே ‘‘வானுலகம் தந்தே’’ என்கிறார். மேலும் ‘’‘தந்தே’’ என்ற வார்த்தையால் தருவேன் என்று எதிர்காலம் குறிப்பிடாமல் தருகிறேன் என்ற நிகழ்காலம் நீக்கி ‘‘தந்தே’’ என்று கடைக்குறையாய் தந்தேன் என்று வணங்கும் முன்னமே கருணையினால் கொடுப்பவள் உமையம்மை. அதனால் தான் ‘‘வானுலகம் தந்தே’’ என்று கூறுகின்றார். ‘‘வானுலகம் தந்தே பரிவொடு என்றிருந்தாலும் இதில் வார்த்தையை ‘‘வானுலகம் பரிவொடு தந்தே’’ என்று அமைத்துக் கொள்ளலாம்.

‘‘பரிவொடு’’ என்ற வார்தை மிக நுட்பமானதாக அமைந்துள்ளது. துன்பம் என்பது உடலுக்கு வருவது. வருத்தம் என்பது மனதுக்கு வருவது, இவற்றை நீக்கிக் கொள்ள மானுடர்கள் பல வழியை மேற்கொள்கிறார்கள். அந்த வழிகளில் ஒன்று தான் இறையன்பினால்  அதை போக்கிக் கொள்ள முயல்வதாகும்.  அப்படி அந்த இறையன்பின் வழியாக தோன்றுவது அருளைப் பெறக் கூடிய பக்குவம். இத்தகைய பக்குவம் கொண்ட ஆன்மாக்களுக்கு இறைவியே அனுதாபப்பட்டு உடலுக்கு ஆரோக்கியமாகிற சுகத்தையும், உள்ளத்துக்கு இன்பத்தையும் அளித்து அருளினால். உமையம்மை என்பதையே ‘‘வானுலகம் பரிவொடு  தந்தே’’ என்கிறார்.

‘‘தான் போயிருக்கும்’’   தன் இயல்பான கருணையினால் மிகும் துன்புறுவோர்களுக்கு உயர்ந்த விண்ணுலகத்தை வழங்குகிற உமையம்மையானவள் எங்கேயிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள நமக்கெல்லாம் ஒரு ஆவல் பிறக்கும். அதற்கும் விடை கூற ஆசைப்பட்ட அபிராமி பட்டர் இப்பாடலில் எட்டு இடத்தில் உமையம்மை எங்கு எப்படியிருக்கிறாள் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார்.  எந்த அடியவரானவர் தன் இயல்புகளை இழந்து தான் எனும் தன்மை போய் உமையம்மையையே தியானித்து இருக்கிறாரோ அத்தகைய தன்மை உடைய பக்தருக்கே உமையம்மையின் உறைவிடம் தெரியும் என்கிறார்- இதையே ‘‘எனக்குள்ள வெல்லாம் அன்றே உனதென்றளித்து விட்டேன்’’- 95 என்பதனால் மேலும் உறுதி செய்யலாம் இனி உறைவிடம் ஒவ்வொன்றாய் காண்போம்.

‘‘சதுர்முகமும்’’ - சதுர்முகம் என்பது இரண்டு சொற்கள் இணைந்த வடசொல்லாகும் ஒன்று சதுர் ஒன்று முகம், முகம் என்பதற்கு வாய், நாக்கு என்பது பொருள். சதுர் என்பதற்கு அறிவு, நான்கு என்பது பொருள். நான்கு திரு முகங்களிலும் உள்ள நான்கு நாக்கிலும் உமையம்மை யானவள் இருந்து யாவராலும் அறியமுடியாத அறிவாகிற ஆன்ம அறிவை விளக்கும் பாடலாகிய வேதத்தை வெளிப்படுத்தக் காரணமாகிறாள். இவளே சரஸ்வதி எனப்படுகின்றாள். சரஸ் என்றால் ஈரம் உலராத குட்டை என்பது பொருள். (நீர் நிலை) அது போல் நான்கு முகங்களை கொண்ட பிரம்மாவின் நாக்கில் வாக்கிற்கு  காரணமாகிற ஈரமாக இருப்பதனாலேயே சரஸ்வதி என்று பெயர். இந்த எல்லா கருத்துக்களையும் ஒன்றாக இணைத்தே ‘‘சதுர் முகமும்’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். இதையே ‘‘நற்றிசை முகர் - 14 வேதம் சொன்ன வழிக்கே- 79 பண்ணிக்கும் சொல் - 15 என்பதனால் நன்கு உணரலாம் பிரம்மாவானவர். நான்கு முகத்தின் வழி ரிக், யஜுர், சாமம், அதர்வம் என்ற ஆன்ம அறிவை உணர்த்தும் வேதத்தை வெறிப்படுத்தினார் என்கிறது புராணம்.

‘‘பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும்’’  உமையம்மையானவள் முத்துமாலையை மார்பில் தரித்தவளாக இருக்கும் போது அவளை மகேஸ்வரி என்று குறிப்பிடுவர். மறைத்தல் தொழிலை செய்வதற்கு ஈசனுக்கு துணையாக இருப்பவளாவாள். இந்த மகேஸ்வரியையே ரகசியத்தில் சிவபெருமானுடன் சேர்ந்தவளாய் தியானித்து வழிபடுவர்.   இவளை வழிபடுவதனால் தம்பதியரிடத்து அன்யோன்யமான அன்பு விளையும். இந்த இருவரையே காமேஸ்வரி - காமேஸ்வரன் என்கிறது ஸ்ரீ வித்யா போன்ற உபாசனை நூல்கள்.

‘‘முலை மேல் முத்து மாலையுமே’’ - 85
என்பதனால் இதை மேலும் உறுதி செய்யலாம்.
 ‘‘பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும்’’ என்ற வரியினால் அவற்றையுடைய காமேஸ்வரியையே குறிப்பிடுகின்றார் பட்டர்.

  சிவாலயங்களில் இத்தகைய காமேஸ்வரிக்கு வடிவங்கள் இல்லை. திருக்கடையூரில் மிருத்யுஜ்ஜய ரகசியம் என்ற யந்திரத்தின் வடிவில் இன்றும் இதைக் காணலாம். ‘‘பாகமும்’’ என்ற  வார்த்தையால் உமையம்மையின் ஒரு பாகத்தை குறிப்பிடுகின்றார். இது அர்த்த நாரீஸ்வரர் என்ற பாதி ஆண் வடிவமும், பாதி பெண் வடிவமும் கொண்ட ருத்ர மூர்த்தியின் வடிவமாகும். இந்த வடிவத்தில் அழிக்கும் தொழிலை செய்வதற்கு சிவனுக்கு பாதியாக இருந்து உதவி செய்கிறாள். இந்த உமையம்மையையே ‘‘பாகமும்’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். மேலும் இறைவனின் திருக்கரங்களில் தாங்கிய ஆயுதங்கள் அனைத்துமே ஆண், பெண், அலி என்ற தன்மையை கொண்டது. இது அர்த்த நாரீஸ்வரரின் வடிவமேயாகும் என்கிறது ஆகமம். சாதாரண ஆயுதங்களை ஆயுதம் என்ற வார்த்தையால் மட்டுமே குறிப்பிடுவர். ஆனால் அர்த்த  நாரீஸ்வரர் வடிவான ஆயுதத்தை அஸ்திர தேவர் என்று வழங்குகின்றனர். இந்த அஸ்திர தேவர் மூவிலை வேர் வடிவத்தில் அமைந்திருக்கும். இதை இன்றும் திருக்கடையூரில் காணலாம். இது மற்ற ஆயுதங்களை விட மேலானது. மற்ற ஆயுதங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த அஸ்திர தேவர் என்பது பயன்படுத்திய பின் தன் இருப்பிடத்திற்கே திரும்பவரும், பிற ஆயுதங்கள் அவ்வாறு வராது. இதையே ‘‘சூலினி’’ 50 ‘‘பாசங்குசை - 77 என்பதனால் பட்டர் குறிப்பிடுகிறார்.
(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்