SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடல்மல்லை கருக்காத்தம்மன்

2019-10-18@ 10:09:53

கடல் சூழ்ந்த கடல் மாநகரம், மலை நிறைந்த சிலை மாநகரம், ஆன்மிக நெறி பரப்பும் பூதத்தாழ்வார் அவதரித்த புண்ணிய திருத்தலம் மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம் ஆகும். இவ்வூரின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது பிடாரி ஸ்ரீகருக்காத்தம்மன் திருக்கோயில். மாமல்லபுரம் நகரப்பகுதியின் எல்லையில் இக்கோயில் அமைந்துள்ளதால் இந்த அம்மனை ஊரையும், மக்களையும் காப்பாற்றும் எல்லை தெய்வமாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆகமவிதிப்படி அமைந்ததால்தான் இவ்வூர் மேலும் சிறப்பு பெறுகிறது. ஊரின் கிழக்கே அருள்மிகு தலசயன பெருமாள், மேற்கே ஊரின் எல்லையின் காவல்தெய்வமாக ஸ்ரீகருக்காத்தம்மன் திகழ்கிறாள்.

வடக்கே முன்னோர்கள் மண்ணில் உறங்கும் பூமி, தெற்கே பல்லவ மன்னர்கள் வடித்த கலைச்சின்னம். இதன் மத்தியில்தான் ஆழ்வார்களால் போற்றப்பட்ட திருக்கடல் மல்லை என்கிற இன்றைய  மாமல்லபுரம் ஆகும். மாமல்லபுரம் கோடிக்கால் மண்டபத்தில் உள்ள கொற்றவையை குலதெய்வமாக மகேந்திரவர்மன் வழிபட்டு வந்திருக்கிறான். கொற்றவை தெய்வத்தை அதே வடிவில் மாற்றமில்லாமல் வடித்து காடும் மலையும் சூழ்ந்த ஊரின் எல்லைக்காவல் தெய்வமாக வழிபட்டு வந்த அதே இடத்தில் கிராம தேவதையாக இந்த கருக்காத்தம்மனை மக்கள் ஸ்தாபிதம் செய்து ஸ்ரீகருக்கிலமர்ந்தாள் என்ற திருநாமத்தால் வழிபடத்தொடங்கினர்.

நினைத்த காரியம் நடக்கும் என்பதால் அற்புதமான சக்தி கொண்டவள் என்பதை மக்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தனர். இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு சுகாசன நிலையில் அமர்ந்து கருணையும், வீரமும் கண்களில் பிரதிபலித்து பிரகாசிக்கும் அந்த திருகோலத்தைக் காண கண்கோடி வேண்டும். இந்த அம்மன் அந்தரி, வானத்தி, பார்ப்பனி, காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, கருக்காத்தவி என்கின்ற ஏழு சக்தியாக விளங்குகிறாள். மகிஷாசூரனை வதம் செய்த அம்மன் பூலோகத்தில் உள்ள தேவர்களும், உலக மக்களும் மகிஷாசூரன் என்னும் அரக்கனின் கொடுஞ்செயலால் பாதிக்கப்பட்டு அரக்கனை அழிக்குமாறு காளியானவளிடம் முறையிட்டனர்.

பின்னர் மைசூர் பட்டினத்தில் சினம் கொண்ட காளியானவள் கோபமான தோற்றம் கொண்டு, எருமைத் தலையுடைய மகிஷாசூரனை வதம் செய்ய மாமல்லபுரம் நோக்கி வந்தாள். மாமல்லபுரத்தில் உள்ள பிடாரி ரதம் அருகில் உள்ள மலையில் அரக்க குணம் கொண்ட மகிஷாசூரனை சூலாயுதம் கொண்டு சம்ஹாரம் செய்தாள். மகிஷாசூரனின் உடம்பில் இருந்து பூமியில் விழுந்த ரத்தத்துளி ஒவ்வொன்றும் ஒரு மகிஷாசூரனாக நூற்றுக்கணக்கில் அவதரித்து போர் புரிய, காளியவள் மிக உக்கிரமாகி கோபக்கண் தெறிக்க, அத்துனை மகிஷர்களையும் (அரக்கர்களையும்) சம்ஹாரம் செய்து அவர்களுடைய ரத்தத்துளிகள் பூமியில் விழ செய்தாள்.

பிறகு காளியானவள் சிந்திய ரத்தங்களை கபால ஓட்டில் ஏந்தி பூதங்களை குடிக்கச்செய்து சம்ஹாரம் செய்து முடித்தாள். அவள் பெற்ற வெற்றியை தேவர்கள் பூமாரி பெய்து பாடல்கள் பாடி அர்ச்சித்து, போற்றித் துதித்தனர். பின்னர் காளியவள் கோபம் தணிந்து சாந்தமாகி மாமல்லபுரம் காட்டில் மலைப்பாறையில் கருக்காத்த கருக்கில் அமர்ந்தாள். பின்னர் இந்த அம்மன் கருக்காத்த அம்மனாக உருவெடுத்து மக்களுக்கு காட்சி தந்தாள். பிறகு இந்த இடத்தில் கருக்காத்தம்மன் கோயில் உருவானதாக வரலாற்றில் கூறப்படுகிறது. இன்றும் இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள மலையின் பாறையில் அம்மன் வதம் செய்தபோது மகிஷாசூரர்கள் ரத்தம் சிந்திய இடத்தை காணலாம்.

மகிஷாசூரனோடு யுத்தம் புரிந்து சினத்துடன் அவன் மார்பைப் பிளந்து கிழித்து ஆலயத்தின் கன்னி மூலை பாறையில் வீசினாள். அம்மனின் சிங்கமும் அரக்கனை பாறையில் இழுத்துச்சென்றது. சிங்கம் இழுத்துச் சென்ற அடையாளம் ரத்தக்கரையுடன் பாறையின் நீளவாட்டில் ஆலயத்தின் பின்புறத்தில் உள்ளதை இன்றும் பக்தர்கள் கண்டுகளிக்கின்றனர். அந்த இடத்தை தொட்டு வணங்குகின்றனர். அகங்காரமிக்க துஷ்ட அரக்கன் மகிஷாசூரனை கொன்றுவிட்டு உக்கிரமாக காட்சி அளித்ததால் மக்கள் நடுங்கினர். திடீரென்று சுடர்மிகுந்த ஒரு ஜோதியை எழச்செய்து பின்பு திருநீறைத் தூவியதும் அது மஞ்சள் நிறமாக மாறியதைக்கண்ட மக்கள் அதிசயித்து தலைக்குமேல் கைகூப்பி எங்களை காத்த அன்னையே.

அரக்கனின் பிடியில் இருந்து எங்களை மீட்ட தாயே என்று அம்மனை வணங்கி போற்றினர். பிறகு கருக்காத்தம்மன் கோபம் தணிந்து சாந்த முகத்துடன் கருவறையில் காட்சி அளித்தாள். பிறகு தேவி கருக்காத்தம்மன் சிங்கவாகனத்தின் மீது அமர்ந்து மஞ்சள் மகிமையை கூறி அருள் புரிந்தாள். இதனை உணர்ந்த தேவலோக கன்னியர்கள் அரக்கனின் கொட்டத்தை அடக்கிய அம்மனை தொழுது மகிழ்ந்தனர். உக்கிரமான, கோபமான இந்த காட்சி மாமல்லபுரம் வராக மண்டபத்திலும், சினம் தணிந்து மலர்ந்த (சிரித்த) முகத்தை உடைய காட்சியினை ஆதிவராக பெருமாள் கோயிலிலும் குடைவறை சிற்பங்களாக் காணலாம்.
முன்னோர்களின் சாபத்தால் கரு தங்காமல் குழந்தை பாக்கியமில்லாமல் தவித்த ஒரு பெண்ணின் கண்ணீருக்கு மனம் இரங்கி, தாயன்பைக் காட்டி அருள் செய்ததால் உடனே அப்பெண் கருவுற்று அழகான பெண் குழந்தையைப் பெற்றாள். இதனால் கருவுக்கே மூலமாக திகழ்கின்ற காவல் தெய்வமாக இந்த அம்மனை நம்புகின்றனர். அதனால்தான் கருவைகாத்த அம்மன் என்று இந்த அம்மனை வணங்கி போற்றுகின்றனர். ஏவல், பில்லி, சூனியம் அகலவும், சித்தபிரமை விலகவும், வறுமை நீங்கி குடும்பம் வளம் சேரவும், தீராத நோய்கள் தீரவும், மாங்கல்ய பாக்கியம் பெறவும் எல்லாம் வல்ல சக்தியாக விளங்கும் கருக்காத்தம்மன் வினை தீர்த்து திருவருள் புரிகிறாள்.

திருமணம் ஆன பெண்கள் மஞ்சள் கயிற்றில் ஒரு துண்டு மஞ்சளை கட்டி அம்மனை நினைத்து ஸ்தலவிருட்ச எட்டி மரத்தில் கட்டி மூன்று முடிச்சு போடுகின்றனர். இதனால் தங்கள் மாங்கல்யம் பலம் பெறும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த அம்மன் 6 மாதம் ஆக்ரோஷமான முகத்துடனும், 6 மாதம் சாந்தமான முகத்துடனும் காட்சி தருவது இக்கோயிலின் இன்னொரு சிறப்பு அம்சமாகும். 2004-ல் தமிழகத்தில் ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடியபோது, கடற்கரை பகுதிகள் சின்னாப் பின்னமானது. ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். சென்னை மற்றும் கல்பாக்கம் கடற்கரை பகுதிகளில் ஏராளமானோர் பலியானார்கள்.

ஆனால் மாமல்லபுரத்தில்  ஆழிப்பேரலையால் உள்ளூர் மக்கள் யாரும் பாதிக்கவில்லை. எனவே, ஆழிப்பேரலையில் இருந்து  ஊரையும், தங்களையும் காத்த தெய்வமாக இந்த அம்மனை மக்கள் வணங்கி வருகின்றனர். இந்த அம்மனுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே புரட்டாசி மாதம் நடைபெறும் 10 நாள் நவராத்திரி விழா சிறப்பு வாய்ந்த திருவிழா ஆகும். விழாவின் 10 நாட்களும், ஸ்ரீகருக்காத்தம்மன் வீணை ஏந்தும் சரஸ்வதி, அஷ்டலட்சுமி, பத்ரகாளி, மகிஷாசூரனை (அரக்கனை) சம்ஹாரம் செய்தல், சிவனுடன் கூடிய பார்வதி உள்பட பல தேவதைகளின் திருக்கோலங்களில், பூக்களாலும் ஆபரணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதுண்டு.

10ம் நாள் இறுதி விழாவில் அருள்மிகு கருக்காத்தம்மன் சிங்க வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் மாமல்லபுரத்தில் வாணவேடிக்கைளுடன் திருவீதியுலா விழா சிறப்பாக நடைபெறும். இந்த 10ம் நாள் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூமாலைகள் சாற்றி அம்மனை பயபக்தியுடன் வழிபடுவர். அன்றுதான் முக்கிய நிகழ்ச்சியாக எருமைத் தலையுடன் உடைய மகிஷாசூரனை அம்மன் தனது சூலாயுதத்தால் குத்தி தனது காலில் போட்டு மிதித்து சம்ஹாரம் செய்யும் காட்சி நடக்கும். அப்போது இக்காட்சியினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்து அம்மனை வணங்குவர்.

மேலும் வரலாற்று ஆதாரமாக மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் உள்ள பாறையில் அரக்கனை (மகிஷாசூரன்) போர் புரிந்து, வதம் செய்யும் காட்சியினை பல்லவர்கள் தங்கள் கைவண்ணத்தில் குடைவரை சிற்பமாக செதுக்கி, அழகுற வடிவமைத்துள்ளதை இன்றும் நாம் காணலாம். மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும், அம்மன் பக்தர்களும் இதனை கண்டுகளித்து செல்ல தவறுவதில்லை. இத்தகைய சிறப்பு மிக்க கடல்மல்லை காவல் தெய்வம் பிடாரி கருக்காத்தம்மனை நாமும் சென்று வழிபட்டு அம்மனின் அருள்பெறுவோம்.

- இரத்தின.கேசவன்,
படங்கள்: ஆர். பாலாஜி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்