SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்டராம்பட்டு அருகே அருள்பாலிப்பு மாங்கல்ய பலம் தரும் மாரியம்மன்

2019-10-16@ 10:13:03

மாரி என்றால் மழை. மழை தரும் தெய்வம் மாரியம்மன். இருபத்தெட்டு ஆகமங்களில் ஒன்று ‘காரணாகமம்’ இந்நூல் மாரியம்மனின் வரலாற்றினை கூறுகிறது. அரிய தவமிருந்து இறைவனிடம் பல வரங்களையும், மகா பலத்தையும் பெற்ற மாராசூரன் ஆணவமும், அகங்காரமும் கொண்டு மூவுலகங்களையும் துன்பப்படுத்தினான். அனைவரும் அன்ைனயான பராசக்தியிடம் முறையிட்டனர். தேவியும் மனம் இறங்கி  காத்தருளுவதாக உறுதி பூண்டாள். ஆவேசத்துடன்  மாரசுரனின் இரு கால்களையும் பிடித்து மேலே தூக்கி அவனது தலையை பூமியில் அழுத்தி வதம் செய்தார்.

தேவர்களும், மும்மூர்த்திகளும் பூ மாரி பொழிந்து நன்றி பெருக்காற்றினர். அன்று முதல் ‘மாரசுரனை மாய்த்தமையால் மாரியம்மன்’ எனும் பெயர் வழங்கலாயிற்று என கூறப்பட்டுள்ளது. அதேபோல் சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை. அதன்படி ஆன்மிக நகரமாக விளங்கும் திருவண்ணாமலையின் அருகே தண்டராம்பட்டு அடுத்த அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் மாரியம்மன் திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறாள் அன்னை.  

கோயில் கருவறையின் மீது எழுப்பப்பட்டுள்ள கோபுரத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், லட்சுமி, சரஸ்வதி, துர்காதேவி, மாரியம்மன் மற்றும் சப்த மாதாக்களும் சுதைவடிவில் காட்சியளிக்கின்றனர். கருவறையில்  கருணையின் வடிவாக, சாந்த சொரூபினியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் அன்னை. பாசம், டமருகம், கத்தி, கபாலம் என நான்கு திருக்கரங்களுடன், அக்னிக்கொழுந்து மேல் நோக்கி சுடர் விட்டுப்பிரகாசிக்கும் கிரீடத்தையும், சிவந்த திருமேனியையும், சகல ஆபரணங்களையும் அணிந்து, வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தில் வீற்றிருக்கிறாள் மாரியம்மன்.
தல விருட்சமாக கோயிலின் எதிரே பழமை வாய்ந்த வேப்பமரம் உள்ளது. அதிக துன்பத்தைத் தரக்கூடிய காய்ச்சல், பீடை, அம்மை நோய் முதலான பிணிகளைப் போக்குபவள் மாரியம்மன். வெப்பத்தால் வரும் நோய்களுக்கு குணம் தந்து குளுமை தருபவள் அன்னை. தன்னை நினைந்து வேண்டுவோருக்கு உடனே அருள் தருபவள். மக்களை நோய்களினின்றும் காக்கும் தெய்வமாகவும், ஊர்க்காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறாள் மாரியம்மன். மாங்கல்ய பலத்துக்காக சுமங்கலிகள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால், அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து இவற்றைப் பெற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.

குழந்தைப்பேறு இல்லாமை, தொழில் பிரச்னை உள்ளவர்கள் மாரியம்மனை தரிசித்தால், அவள் கண்டிப்பாக பலன் தருவாள் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. திருமணம் ஆகாதவர்கள் ஆடி மாதத்தில் தொடர்ந்து 5 செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டு, வேப்பமரத்தில் மஞ்சள் தாலி கட்டினால் விரைவில் திருமணம் கைக்கூடும். அதேபோல் குழந்தை பேறு வேண்டி வேப்பமரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை செல்வம் கிட்டும். அம்மன் அருளால் குழந்தை செல்வம் பெற்றவர்கள், குழந்தையுடன் வந்து பொங்கல் வைத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்திவிட்டு செல்கின்றனர். அதேபோல் கோழி, ஆடுகளை காணிக்கையாக செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

போக்குவரத்து

திருவண்ணாமலையில் இருந்து வானாபுரம் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் பஸ்களில் சென்றால் சதாகுப்பம் கிராமத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது. அதேபோல் தண்டராம்பட்டில் இருந்து தென்முடியனூர் வழியாக செல்லும் பஸ்களிலும் கோயிலுக்கு சென்று வரலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hailnewzealand

  நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

 • petroliranprotest

  பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

 • christmascele

  லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

 • ausfire2011

  ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

 • goalmineexplodechina

  சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்