SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவருள் பெருக்கும் திருவாரூர் தியாகராஜர்

2019-10-12@ 07:40:37

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். சப்த விடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையானதும், பிரதானமானதுமாகும். திருவாரூரைத் தொடர்ந்து திருமறைக்காடு (வேதாரண்யம்), திருநள்ளாறு, திருக்குவளை, திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்), திருக்காரவாசல் மற்றும் திருவாய்மூர் ஆகிய தலங்களிலும் ஸ்ரீ தியாகராஜப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். திருவாரூர்  திருத்தலத்திற்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவர்களை நான்கு புறங்களிலும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. நான்கு புறங்களிலும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இத்திருத்தலத்தை கற்றளிக் கோயிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் இத்தல வரலாறு கூறுகிறது.

பாம்புப்புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட வன்மீகநாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம். முசுகுந்த சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்ட தலைநகரமாகிய விளங்கிய திருத்தலம். சப்தவிடங்கத் தலங்களில் மூலாதாரத் தலம், பஞ்ச பூதங்களில் பிருத்வி (பூமி) தலம், முக்தியளிக்கக்கூடிய தலம். திருமுதுகுன்றம் தலத்தில் மணிமுத்தா நதியில் சுந்தரர் தான் இட்ட பொன்னை கமலாலயம் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ள அருளிய தலம். சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய திருத்தலம். சங்கிலி நாச்சியாரைப் பிரிய மாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழந்த சுந்தரர். காஞ்சிபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின், திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்ற தலம். விறன்மிண்ட நாயனார், நமி நந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம்.

தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் தலம். இத் தியாகேசப் பெருமானே சோமாசிமாற நாயனாரின் வேள்விக்கு அம்பர் மாகாளம் தலத்தில் எழுந்தருளி ஹவிர்ப்பாகம் ஏற்றார் என்னும் சிறப்பை உடைய தலம். இத்திருக்கோயிலுக்குள் சென்று விட்டால், குவித்த கரங்களை விரிப்பதற்கு வழியே இல்லை என்ற அளவிற்கு ஏராளமான சந்நதிகள் உள்ளன. திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம். என்ற பல பெருமைகளை உடைய தலம் திருவாரூர் ஆகும்.நவகிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும் இத்தலத்தின் சிறப்பம்சம்.இத்தல நாயகன் வன்மீகநாதர் கிழக்கு நோக்கி தரிசனமளிக்கிறார். அதன் வலதுபுறம் இத்தலத்தின் பிரதான மூர்த்தியான தியாகராஜர் சந்நதி உள்ளது. தியாகராஜரின் பக்கத்திலுள்ள அம்பிகை ‘‘கொண்டி’’ என அழைக்கப்படுகிறாள்.  தியாகேசர் சந்நதியின் வலதுபுறம் ஒரு பீடத்தில் உள்ள பெட்டகத்தில் வீதிவிடங்கராகிய மரகத லிங்கமூர்த்தி உள்ளார். இவருக்குத் தான்  தினந்தோறும் காலை மாலை வேளைகளில் அபிஷேகம் நடைபெறும்.

ஆண்டு முழுவதும் தியாகராஜரின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி மாத திருவாதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும், பங்குனி உத்திர தினத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்கலாம். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப் பட்டிருக்கும். அவை மிகவும் ரகசியமானவையாக கருதப்படுகிறது.கமலாம்பிகை திருக்கோயில் மூன்றாவது பிராகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும்,பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள். பராசக்தியின் 51 சக்தி  பீடங்களுள் இந்த கமலைபீடமும் ஒன்று.  அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. நீலோத்பலாம்பாள் சந்நதியில் அம்பிகை இரண்டு கரங்களுடன் ஆதிசக்தியாக காட்சி தருகிறாள். அல்லியங்கோதை என்று தமிழிலும், வடமொழியில் நீலோத்பலாம்பாள் என்றும் பெயர். அம்பாளுக்கு இடது புறமாக  அம்பிகையின் தோழி நின்ற நிலையில் முருகப்பெருமானை தன் தோளின் மீது உட்கார வைத்துக்கொண்டு காட்சி அளிக்கிறாள்.  தேவியின் ஒரு விரல் முருகனின் ஒரு விரலைப் பிடித்தவாறு ஒரே கல்லில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. வலது கையில் ஒரு குவளை மலரை வைத்துக் கொண்டிருக்கிறாள். இவ்வாறான திருவுருவத்தை வேறுஎங்கும் தரிசிக்க முடியாது. கருவறையில் பள்ளியறையும் அமைந்து தனித்தன்மை பெற்று விளங்குகிறது. இத்தலம் திருவாரூர் நகரில் அமைந்துள்ளது.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்