SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வானுலகில் வசிக்க வசதியான வீடு

2019-10-10@ 16:09:48

* இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 32

இப்பூவுலகில் வாழும் நாம் அனைவருமே ஏற்ற முயற்சிகள் செய்து எப்படியோ வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் பெற்று நலமுடன் வாழ்ந்து வருகின்றோம். ''பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை'' என்று புலவர்கள் சொன்னதை நாம் எல்லோரும் புரிந்து கொண்டிருக்கின்றோம். அதே புலவர்கள் இன்னொன்றையும் வலியுறுத்திப் பேசியுள்ளனர் என்பதைத்தான் நம்மவர்கள் பலரும் மறந்து போய் இருக்கின்றனர்.அது என்ன தெரியுமா ? பூலோக வாழ்க்கை ஒருநாள் முடிந்து அனைவரும் மேல் உலகம் சொல்லப் போகிறோம் அல்லவா ?

அந்த வானுலக வீட்டில்  நலமாக வாழ் ஏற்ற முயற்சிகளை இவ்வுலகில் உயிருடன் வாழும் போதே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். மேல் உலகம் என்று உள்ளதா? என்றெல்லாம் சந்தேகம் கொள்பவர்களைப் பார்த்து திருவள்ளுவர் தீர்மானமாகச் சொல்கிறார். பூவுலகில் பொருளோடு நீங்கள் வாழ்கின்ற போதே அப்பொருளை அற வழியில் செலவழித்து அடுத்தவர்களின் நலம் நாடி தான தருமங்கள் செய்து நீங்கள் பெற்றிருக்கும் பொருள் மூலம் அருள் பெற்றால் தான் உங்களுக்கு வானுலகில் வாழ வசதியான வீடு கிடைக்கும்.

''அருள் என்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு.'' அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை ராமலிங்க அடிகளார் அமுத்தம் திருத்தமாக ஆணித்தரமாகச் சொல்கிறார்.''ஜீவ் காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்!'' ஆகவே வாழும் போதே நாம் அனைவரும் வானுலக இல்லத்திற்கான சாவியைத் தயார் செய்து கொள்ளவேண்டும். ஒளவைப் பெருமாட்டி அற்புதமாகக் கூறுகின்றாள்.பெறுதற்கு அரிதான மானிடப் பிறவியைப் பெற்ற நாம் இப்பிறவியின் பெருமையை ஞானத்தின் மூலமாகவும், கல்வி கேள்விகளாலும் அறிந்து இனி வாழவேண்டிய வானவர் நாட்டிற்கான அனுமதியை தான தருமங்கள் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்வதரிது.
தானமும் தவமும் தான் செய்வ ராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே.
வாழ்வித்து வாழ்வதே மனிதகுலத்தின்

அடிப்படை நெறியாக அறிஞர்கள் அனைவராலும் வரையறுக்கப்பட்டுள்ளது.

உலகம் உண்ண உன்! உடுத்த உடுப்பாய் !
மானுட சமுத்திரம் நான் என்று கூவு!
என்றும்
தன் வீடு! தன் மனைவி! பெண்டு, பிள்ளை
சம்பாத்யம் இவையுண்டு! தானுண்டு! என்போன்
சின்னதொரு கடுகைப் போல் உள்ளம் கொண்டோன்!

என்றும் பாடும் பாரதிதாசன்

‘தொல் உலக மக்கள் எல்லாம் ஒன்றே என்னும் தாய் உள்ளம்’ அனைவரும் பெற வேண்டும் என்கின்றார்.அற உணர்வு அறவே இல்லாதவர்கள் வாழ்வது பூமிக்கு பாரம் என்று புகழ்கின்றனர் சான்றோர் பெருமக்கள்!

நிலச்சுமை என வாழ்ந்திடப் புரி குவையோ!
வல்லைகா ராயோ! இந்த
மாநிலம் பயனுற வாழுதற்கே

என்று பராசக்தியிடம் முறையிடுகின்றார் மகாகவி பாரதியார்.  உழைத்து சம்பாதித்து அச்செல்வத்தை வறியவர்களுக்கும் வழங்குவதே கடவுள் இருகைகளைப் படைத்ததற்கான காரணம் என்கின்றனர் அறிஞர்  பெருமக்கள்.

‘பகடு நடந்த கூழ் பல்லோரோடு உண்க’
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

போன்ற வாசகங்களை வாழும் ஒவ்வொருவரும் தம் மனதில் பதித்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.ஒருவர் செய்யும் தான  தருமங்களே அவருக்கு இம்மைப் பயன்களையும். மறுமைப் பயன்களையும் அளிக்க வல்லது.சொர்க்கத்தில் வசிப்பதற்கு ‘முன் பதிவு’ செய்வது தான் பிறருக்கு உதவுவது. எது எதற்கோ முன்பதிவு முறையைக் கையாளும் நாம் அவசியம் இதற்கு ஆவன செய்வோம்!

‘‘திடம் இலி’ என்று தொடங்கும் பழநித்திருத்தல திருப்புகழில் வாக்கிற்கு அருணகிரியார் கீழ்க்கண்ட வண்ணம் கூறுகின்றார்.

‘சொர்க்கமும் மீதே இடம் இலி’கைக் கொடை இலி’

பரோபகாரமே முக்தி வீட்டைப் பரி பாலிக்கும். பெருந்தொகை ஒன்றை பொதுத் தொண்டிற்கு நன் கொடையாகத்தந்தோர் ..அழியக்கூடிய பொருட்செல்வம் மூலம் அழியாத அருட்செல்வத்தைப் பெற நாம் அனைவரும்... வாழ்வாங்கு வாழும் வழிமுறையாகும்.அதனையே.ஆறுமுகப் பெருமானிடம் அருணகிரி நாதர் வினோதமான வேண்டு கோளை வைக்கிறார்.

அது என்ன தெரியுமா ? நான் செல்வம் அனைத்தையும் இழந்து வறுமையில் வாட வேண்டும், முருகா ! என்கின்றார்.இப்படி யாராவது வேண்டுவார்களா என்று ஆச்சர்யப்படுகின்றீர்களா? ஆம்! பல பாடங்களில் ஏழ்மை நிலை என்னை வாட்டாமல் இருக்க வேண்டும்! வறுமை என்பதே என் வாழ்வில் வரக் கூடாது என்றும் பாடியவர் தான் அருணகிரியார். மிடி என்றால் வறுமை. அவர்பாடுகின்றார்.

‘மதியன் மிடியால் மயக்கம் உறுவேனோ ?’
‘சிறிது மிடியும் அணுகாதே’
‘முழுதும் கெடுக்கும் மிடியால் படியில்விதனப்படார்’
‘மிடி என்றொரு பாவி’

மேற் கண்ட வண்ணம்பாடியவர் கந்தரலங்காரப் பாடல் ஒன்றில் குறிப்பிடுகின்றார்.வாடும் ஏழையர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் நான் என்னிடம் உள்ள பொருள் அனைத்தையும் வழங்கி அதன் மூலம் வறுமை நிலையை அடையவேண்டும் முருகா என்கின்றார்.அறம் செய்வதில் அருணகிரியார்க்கு இருக்கும் ஆர்வத்தைப் பாருங்கள்.

படிக்கின்றிலை பழநித்திருநாமம்! படிப்பவர் தான்
முடிக்கின்றிலை ! முருகா என்..!
முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை !

முக்திப் பேற்றை தருமம் தான் நிச்சயிக்கின்றது. நாம் செய்யும் வழிபாடு நம்மைக் கடவுள் இருக்கும் இடத்தின் பாதிதூரம் வரைதான் அழைத்தும் செல்லும் ! நாம் கடை பிடிக்கும் நோன்பும் விரதமும் நம்மை தெய்வ சந்நிதானத்தின் கதவு வரை இட்டுச் செல்லும். நாம் செய்யும் தருமமோ நம்மைக் கடவுள் இடத்திலேயே அமர வைக்கும்.

(தொடரும்)
திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்