SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தியில் தெளிவை தருவாள் புதுக்குறிச்சி இசக்கியம்மன்

2019-10-10@ 10:07:43

நாங்குநேரி, நெல்லை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள புதுகுறிச்சியில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த அனஞ்சன் அவரது மனைவி அனஞ்சி இருவரும் குழந்தை வரம் வேண்டி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று வந்தனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருச்செந்தூர் முருகன் அருளால் பிறந்த குழந்தை என்பதால் அவனுக்கு வீரபாகு என பெயரிட்டு வளர்த்து வந்தனர். வாலிப வயது நிரம்பிய வீரபாகுக்கு தனது உறவினர் பெண்ணான முத்து வடிவேல் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். அவர்கள் இல்வாழ்க்கை இனிதாக நடந்து வந்த வேளையில் அவர்கள் ஊரில் கடுமையான பஞ்சம் நிலவியது. இதன் காரணமாக சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு பிழைப்பு தேடி சென்றனர். சொந்தமாக இருந்த சிறிய நிலத்தையும், வீட்டையும் பார்த்துக்கொள்ள யாருமே இல்லாமல் போனால் மற்றவர்கள் அபகரித்து விடுவார்கள் என்று பயந்து, மகன் வீரபாகுவை ஊரில் இருக்க வைத்துவிட்டு மருமகளை தன்னுடன் அழைத்துச் சென்றனர் அனஞ்சனும் அனஞ்சியும்.

இருக்கும் ஊரிலிருந்து ஏழு ஊரு தான் கடந்து வந்தார்ன் அனஞ்சன் குடும்பத்தார். நாங்குநேரிக்கு. அங்கே வானமாமலை பெருமாளை வணங்கிவிட்டு அங்கே சிலநாட்கள் தங்கினர். மாதங்கள் சில கடந்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டு திருக்குறுங்குடி சென்றனர். அவ்வூரில் உள்ள பண்ணையாரிடம் விவசாய கூலி வேலைக்கு மூவரும் சேர்ந்தனர். நெல் அறுவடை நேரம் ஆனது. அக்காலத்தில் அறுவடைக்கு கூலியாக பணம் கொடுப்பதற்கு பதில்  நெல்லை கூலியாக வழங்குவர். அப்படித்தான்  மூவரும் தாங்கள் பெற்ற கூலிக்கான நெல்லை மூன்று பங்காக வாங்கி மூன்று பேரும் தனித்தனி பானையில் வைத்து இருந்தனர். அந்த நேரத்தில் முத்து எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் மாமியாரின் பானையிலுள்ள நெல்லை விட மருமகள் முத்து வடிவில் பானையில் உள்ள நெல் அதிகமாக இருந்தது. இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் தகராறு ஏற்பட்டது.

இருவரின் வாய்த்தகராறு ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைந்தது ஆதலால் மாமனார் முன்னிலையில் மருமகள் மற்றும் தன் மனைவியின் நெல் பானை அளந்து பார்க்கலாம் என அறிவுரை கூறினார் அனஞ்சன். அதில் மருமகள் முத்து வடிவின் நெல் பானையில் மூன்று நாழி நெல் அதிகம் இருந்தது. உடனே அனஞ்சி மருமகளிடம் என் பானையில் இருந்து நெல்லை எடுத்திருக்கிற, நானும் உங்க மாமனாரும் உழைக்கிறது உங்களுக்குத்தான, அப்படி இருக்கும்போது ஏன், எங்கிட்ட இருந்து நீ எடுக்கணும். என்று கேட்க, அத்தை, நான் உங்க கிட்டயிருந்து எடுக்கல என்று கூறினாள் முத்துசெல்வி. அப்படி எடுக்கலைண்ணா வா, ஏதாவது கோயில்ல வந்து சத்தியம் செய் என்றாள் மாமியார். அதற்கு சரி வாரேன் என்றாள் மருமகள். மாமனார் இதெல்லாம் வேண்டாம் என்று கூறியும், அதை பொருட்படுத்தாத இருவரும் சத்தியம் செய்வதற்காக திருக்குறுங்குடி அழகியநம்பி வாசலில் உள்ள குத்துப்பிறை இசக்கி அம்மன் கோயிலுக்கு வந்தனர்.

குத்துப் பிற இசக்கியம்மன் வாசலில் மருமகளும் மாமியாரும் கற்பூரத்தை ஏற்றி வைத்து சத்தியம் செய்தனர். எட்டு மாத சூலியான முத்து வடிவு  நான் நெல்லை எடுக்க வில்லை என்று பொய் சத்தியம் செய்தாள். அந்திப்பொழுதில் ஆங்காரம் ரூபத்தோடு இருந்த இசக்கியம்மன் முன்பு பொய் சத்தியம் செய்த காரணத்தினால், முத்து வடிவை பின்தொடர்ந்தாள் இசக்கி. பொய் சத்தியம் செய்த பின்பு அங்கே இருக்க மனம் வெறுத்து மூவரும்...
தங்களுடைய கிராமமான புதுக்குறிச்சியை அடைந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த குத்துப்பிறை இசக்கி, புதுக்குறிச்சி ஊருக்குள் வந்தாள். அன்றிலிருந்து புதுக்குறிச்சி ஊரில் இரவில் யாரும் தெருவில் நடமாட முடியாத நிலையில் அச்சம் தொற்றிக்கொண்டது அனைவரிடமும். எலும்பு துண்டுகளும், செங்கற்களும் தானாக தெருவில் வந்து விழுந்தன. செவ்வாய், வெள்ளி நள்ளிரவு நேரங்களில் ஆதாளி சத்தம் ஊரையே மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியது. எட்டு நாளாக பொறுத்து பார்த்த ஊர்மக்கள் ஒன்றுகூடி ஏதோ ஒரு  துள்ளத்துடிக்க போன ஆவியின் வேலையா, அல்லது தெய்வ சக்தியின் திருவிளையாடலா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு விடை காண, ஊர்பிரமுகர்கள் சிலர், மலையாள தேசத்திற்குச் சென்று மாந்திரீகவாதியை அழைத்து வந்து மை போட்டு பார்த்தனர். அப்படி பார்க்கும்போது குத்துப் பிறை இசக்கி தென் பட்டாள். பச்ச கலயபானையை  எடுத்து அதனுள் இசக்கியை அடைத்தான் மந்திரவாதி. புதுக்குறிச்சி மடையடி வயலில் கலையத்தை புதைத்தான். ஆண்டுகள் சில உருண்டோட, மட்டையடி வயல் புதுக்குறிச்சியில் வசித்து வந்த  பெரியசாமியிடம் வந்தது. அவர் அந்த வயலில் விவசாயம் செய்யும் பொருட்டு ஏழு ஏர் மாடுகளை கொண்டு உழுது  மரம் அடிக்கும் பொழுது குத்துப்பிறை இசக்கி அம்மனை அடைத்த கலைய பானை புதைக்கப்பட்ட இடம் மட்டும் மண் திரடாக காணப்பட்டது. அதைக்கண்ட பெரியசாமி என்னடா இது புதிதாக நம் வயலில் இப்படி ஒரு மண் திரட்டு என்று எண்ணி, மண் வெட்டியைக் கொண்டு வெட்டி சரி செய்ய புறப்பட்டார். அந்த திரட்டை மூன்றாவது வெட்டு, வெட்டும் பொழுது ரத்தம் பீரிட்டு எழுந்தது. சிறிது நேரத்தில் பெரிய அளவில் பெண் குரல் கேட்டது.

அச்சமும், அதிர்ச்சியும் கொண்ட பெரியசாமி அவ்விடத்திலேயே மயங்கி விழுந்தார். அருகில் இருந்த ஆட்கள் அவரை வீட்டுக்கு தூக்கி சென்றனர் அவருக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே புளிப்பாட்டம் என்னும் ஊரிலுள்ள வள்ளி குறத்தி ஒருவரிடம் குறி கேட்க சென்றார் பெரியசாமி. வள்ளி குறத்தி, நடந்ததை சொன்னாள். மலையாள மந்திரவாதி புதைத்த கலயபானையை நீ வெட்டியதால் குத்துப்பிறை இசக்கி, உன்னை பின் தொடர்ந்து வருகிறாள். பெரியசாமி, அந்த இசக்கிக்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்கிறேன் என்னை தொட்ட பிணி மாறினால் போதும் என்றுரைத்தார்.
உடனே வள்ளி குறத்தி,  ஊருக்கு வடக்கே மூன்று படி அரிசி பொங்கி ஒரு பொட்ட கோழி வெட்டி கறி சமைத்து மண் சட்டியில் படப்பு போட்டு தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு வைத்து, ஒரு மண்பானையில் ஒரு படி அரிசி பச்சரிசி பொங்கல் வைத்து ஒரு செங்காட பலிகொடுத்து அனைத்தையும் அந்த இடத்தில் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுங்கள் என்று கூறினாள்.

வள்ளி குறத்தி சொன்னது போலவே அதே திசையில் எல்லா பொருட்களையும் படைத்து கிடாவை வெட்டக் கூடிய நேரத்தில், அந்த கிடா அங்கும் இங்கும் ஓடியது .... என்னடா? இன்னுமாடா கிடாய் வெட்டுகிறாய் என்ற ஆங்கார சத்தம் போட்டாள் குத்துப் பிறை இசக்கி. அந்த ஆங்கார சத்தம் கேட்ட பெரியசாமி பயந்து வீடு திரும்பினார். வீட்டுக்குள் வந்து கட்டிலில் படுத்திருந்த அவரது நெஞ்சில் ஏறி நின்று குழந்தை பொம்மை உருவில் இசக்கி வந்து, எனக்கு உரிய பங்கை கொடுக்காவிட்டால் உன்னை இப்பொழுது கொன்று விடுவேன் என்றாள். உடனே தாயே! உனக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என் குடும்பத்தையும் என்னையும் வாழ வை என்று கூறினார் பெரியசாமி. சாந்தமான இசக்கி எனக்கு ஓட்டு உருவம் இட்டு, நிலையம் கொடுத்து நீ வணங்கி வந்தால் உன் நோயும் குணமாகும். வாழ்வும் வளமாகும்.

என்னை நம்பி, யார் கை எடுத்து வணங்கி வந்தாலும் அவர்களையும் வாழ வைப்பேன் என்று கூறினாள் இசக்கி. உடனே பெரியசாமி உன் கோயில் கட்டக்கூடிய இடத்தை நீயே எனக்கு காண்பித்து வை என்று கூறினார். ஊருக்கு வடக்கே வயக்காட்டில் கீழ்புறம் ஓடைக்கரையை காண்பித்தாள் இசக்கி. அந்த இடத்தில் கோயில் கட்டினார் பெரியசாமி. பின்னர் அந்த இடம் சுடுகாடு அருகே இருக்கிறது. அங்கிருந்து வரும் மாண்ட பிணங்களை எரிக்கும் புகையானது எனக்குப் பிடிக்கவில்லை என்று இசக்கியிடம் கூறிய பெரியசாமி, என் மனதிற்குப் பிடித்த மாதிரி ஊருக்கு கன்னி மூலையில் உனக்கு நிலையம் போட்டு தருகிறேன் என்றார். உடனே இசக்கி, கோயில் கட்டி நீ நிலையம் போடும்போது எனக்கு முன்னால் முண்டனுக்கு நிலையம் கொடு என்றுரைத்தாள் இசக்கி. அவ்வாறே புதுக்குறிச்சி குளத்தாங்கரையில் குத்துப்பிறை  இசக்கி அம்மனுக்கு கோயில் உருவானது. பொய் சத்தியம் செய்வோருக்கு பாடம் புகட்டி நல்ல புத்தியை அளிப்பாள் புதுக்குறிச்சி இசக்கி.

படங்கள்: ச. சுடலை ரத்தினம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்