SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிள்ளையார் அருளால் பிள்ளைப்பேறு கிட்டும்!

2019-09-23@ 15:09:01

பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?நான் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஒன்பதரை ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். எனக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும்?
-பச்சையப்பன், மத்திய சிறை, திருச்சி.

கடந்த 2009ம் ஆண்டு முதலாக உங்களுடைய நேரம் சிறப்பாக இல்லை. நமது உயிரைக் காப்பாற்ற வேண்டித்தான் இறைவன் நம்மை சிறையில் பாதுகாப்பாக வைத்திருக்கிறான் என்று எண்ணுங்கள். ரேவதி நட்சத்திரம், மீனராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது சந்திர தசை முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆயுள் ஸ்தானம் ஆகிய எட்டாம் வீட்டில் சந்திரன் அமர்ந்து தசையை நடத்துவதாலும், 12ம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் என்பதாலும் சிறை வாழ்வினை அனுபவித்து வருகிறீர்கள். வருகின்ற 10.11.2019 முதல் நல்ல நேரம் துவங்குவதால் அடுத்த வருடத்தில் நீங்கள் விடுதலையை எதிர்பார்க்கலாம். செவ்வாய்க்கிழமை தோறும் கந்தசஷ்டி கவசத்தினை படித்து வாருங்கள். இயலாவிட்டால் ஓம் சரவணபவ எனும் ஷடாக்ஷர மந்திரத்தினை 108 முறை ஜபித்து வாருங்கள். முருகனின் திருவருளாலும், உங்கள் குலதெய்வமான பச்சையம்மனின் துணையாலும் விரைவில் விடுதலை அடைவீர்கள்.

?நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்தபோது ஜாதகம் பார்த்த ஜோதிடர் எனக்கு தோஷம் இருப்பதாகவும், அந்தப் பெண்ணிற்கு சுத்த ஜாதகம் என்றும் சொல்லியதன் பேரில் எங்களைப் பிரித்துவிட்டார்கள். மேலும் எனக்கு திருமணம் நடக்காது என்றும், சந்யாசி என்றும் சொன்னதால் என் குடும்பத்தினர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். எனக்கு திருமண பாக்கியம் இல்லையா? பரிகாரம் செய்தால் சரியாகுமா?
- செந்தில்குமார், நாகை.

திருமண பாக்கியம் இல்லையா என்ற கேள்வியே உங்களுக்கு சந்யாச யோகம் கிடையாது என்பதை உறுதியாக உணர்த்துகிறது. அதோடு ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்திருக்கிறீர்கள். ஜாதகத்தில் சந்யாச யோகம் உடையவர்களுக்கு காதலிக்கத் தோன்றாது. உங்களுக்கு இல்லற வாழ்வினில் முழுமையான ஈடுபாடு என்பது உள்ளதால் திருமண பாக்கியம் என்பது நிச்சயமாக உண்டு. உங்கள் மனம் என்ன நினைக்கிறது என்பதையே ஜாதகமும் சொல்லும். லக்னத்தில் ராகு, எட்டில் கேது என்று ஜோதிடர் சொன்னதாக எழுதியுள்ளீர்கள். லக்னத்தில் ராகு இருந்தால் ஏழில்தான் கேது இருப்பார். எட்டில் கேது என்பது தவறு. புனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் கேது இருப்பதாலும் தற்போது களத்ர காரகன் சுக்கிரனின் புக்தி நடப்பதாலும் இந்த நேரத்தில் உங்கள் திருமணம் நடந்துவிடும். பாம்பணையில் படுத்து பள்ளிக் கொண்டிருக்கும் பெருமாளை வெள்ளிக்கிழமை தோறும் வணங்கி வாருங்கள். பெருமாள் கோயிலில் உங்கள் திருமணத்தை நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வருகின்ற 05.08.2020ற்குள் உங்கள் திருமணம் நடந்துவிடும்.

?எங்கள் குடும்பப் பொறுப்பில்தான் குலதெய்வ கோவிலும் உள்ளது. அறங்காவலராக தற்போது நான் இருந்து வருகிறேன். இந்நிலையில் எங்கள் குலத்தைச் சேர்ந்த வேறு பிரிவினர்கள் இரண்டு விதமான அம்மன்களை குலதெய்வம் என்று வழிபடத் தொடங்கியுள்ளார்கள். எது சரியானது என்பதைச் சொல்லி வழிகாட்டுங்கள்.
- கதிர்வேலு, கோயமுத்தூர்.

ஐந்து தலைமுறைகளாக ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வணங்கி வரும் பட்சத்தில் மற்றவர் சொல்வதை நீங்கள் காதில் வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கொள்ளுப்பாட்டனார், உங்கள் தந்தை என்று எல்லோரும் அந்த தெய்வத்தின் பெயரையே தங்கள் பெயராக சூட்டிக் கொண்டுள்ளார்கள். அதோடு உங்கள் குடும்பம் அந்த ஆலயத்தின் நிர்வாகப் பணியையும் செய்து வருகிறது. நீங்கள் அறங்காவலராக இருந்து ஆலயத்தை கட்டிக்காத்து வருகிறீர்கள். இந்த நிலையில் நீங்கள் அந்த தெய்வத்தைத்தான் உங்கள் குலதெய்வமாகக் கொள்ள வேண்டுமே தவிர, ஒரு பிரிவினர் ஒரு அம்மனையும், மற்றொரு பிரிவினர் வேறொரு அம்மனையும் குலதெய்வமாக எண்ணி பூஜை செய்கிறார்கள் என்பதை எண்ணி குழப்பம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் 12ம் வீட்டில் இணைந்துள்ள கிரஹங்கள் பெருமாளின் அம்சத்தில் உள்ள தெய்வமே உங்கள் குலதெய்வம் என்பதை அறுதியிட்டுச் சொல்லும். நீங்கள் பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்து வரும் தெய்வமும் அதே அம்சத்தில் உள்ளதால் மனதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் உங்கள் சேவையைத் தொடருங்கள். வம்சம் வளர்ச்சி பெறும்.

?எனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பெற்றோரை இழந்த நான் உடன்பிறந்தோரின் உதவி இன்றி தனிமையில் வாழ்ந்தேன். அருகில் வசித்த ஒரு பெண்ணின் நட்போடு அவரது உறவினர் ஒருவரை மறுமணம் செய்துள்ளேன். திருமணம் செய்த நாள் முதல் எங்களுக்குள் ஒரே பிரச்னையாக உள்ளது. எனக்கு பிள்ளைப்பேறு உண்டா? சந்தோஷமாக வாழ வழி சொல்லுங்கள்.
- ரேவதி, ஆத்தூர்.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் கடிதத்தில் மீன ராசி என்று எழுதியுள்ளீர்கள். கேட்டை நட்சத்திரம் என்பது விருச்சிக ராசியில்தான் வரும். மீன ராசியில் வராது. உங்கள் பெயரில் உள்ள நட்சத்திரம் மீன ராசிக்குள் வரும் என்பதால் யாரோ நீங்கள் மீன ராசியைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னதை மனதில் கொண்டுள்ளீர்கள். உங்களுடைய ராசிப்படி தற்போது ஏழரை சனி முடியும் தருவாயில் உள்ளதால் வெகுவிரைவில் நல்லது நடக்கக் காண்பீர்கள். கடந்த எட்டு வருடங்களாக நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் விடிவுகாலம் பிறக்க உள்ளது. சந்தோஷமாக வாழ்வது என்பது நம் கைகளில்தான் உள்ளது. பறப்பதற்கு ஆசைப்படாமல் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தால் வாழ்வினில் என்றென்றும் மகிழ்ச்சி நீடித்திருக்கும். உங்கள் ஜாதகத்தில் புத்ர ஸ்தானம் ஆகிய ஐந்தாம் வீட்டில் மூன்று கிரகங்கள் இணைந்துள்ளதால் குழந்தை பாக்கியம்  நிச்சயம் உண்டு. மாதந்தோறும் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி நாளில் பகல் முழுவதும் விரதம் இருந்து மாலை நேரத்தில் விநாயகப் பெருமானையும், வானில் சந்திரனையும் தரிசித்த பின்பு உணவு அருந்துங்கள். சதுர்த்தி விரதம் உங்கள் சங்கடங்களை தீர்ப்பதோடு மகிழ்ச்சியான வாழ்விற்கும் வழிகாட்டும்.
பிள்ளையாரின் திருவருளால் பிள்ளைப்பேறு சாத்தியமாகும்.

?38 வயதினைக் கடந்திருக்கும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதுவரை ஒரு பெண்ணையும் பார்க்கவில்லை. எத்தனையோ பரிகாரம் செய்துவிட்டோம். பலனில்லை. படித்த படிப்பிற்கு ஏற்ற உத்யோகமும் கிடைக்கவில்லை. கிடைக்கும் உத்யோகமும் நிலைப்பதில்லை. அரசுப்பணிக்கு முயற்சித்து அதுவும் கிடைக்கவில்லை. என்னுடைய எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்கக்கூட பயமாக உள்ளது. தகுந்த தீர்வு கூறுங்கள்.
- நாராயணகுமார், சேலம்.

இல்லை என்ற வார்த்தை உங்கள் கடிதத்தில் பெரும்பான்மையான இடத்தினை ஆக்கிரமித்திருக்கிறது. இல்லை என்ற வார்த்தையே இனி உங்கள் வாழ்வினில் இல்லை என்ற சங்கல்பத்தினை மனதில் நிலைநிறுத்துங்கள். எல்லாம் இருக்கிறது என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். எதை நீ எண்ணுகிறாயோ நீ அதுவாகவே ஆகிறாய் என்கிறது பகவத்கீதை. கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் புதன் புக்தி நடைபெறுகிறது. பௌர்ணமியில் பிறந்தவர்களுக்கு அரசயோகம் உண்டு என்பது ஜோதிட விதி. ஜோதிடம் என்றும் பொய்ப்பதில்லை. படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைதான் அமைய வேண்டும் என்று நினைத்தால் இந்த உலகில் 95 சதவீதம் பேர் வேலையே பார்க்க முடியாது. உங்கள் ஜாதகத்தில் ஜீவன ஸ்தான அதிபதி சனி என்பதால் நீங்கள் கடுமையான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.

லக்னத்தில் இருக்கும் செவ்வாய் உங்கள் உடல் உறுதிக்கு துணை புரிவார். சுயதொழில் கூட நீங்கள் செய்யலாம். கௌரவம் பாராமல் எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் உங்களால் முன்னேற்றம் காண இயலும். எதையும் என்னால் சாதிக்க இயலும் என்ற தன்னம்பிக்கை ஒன்றே உங்கள் வாழ்வினை உயர்த்தும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். வேலையைத் தேடி நீங்கள் அலைவதை விட அந்த வேலையை நீங்களே உருவாக்கிக்கொள்ள முயற்சியுங்கள். பத்து பேருக்கு உங்களால் வேலைவாய்ப்பினை வழங்க இயலும். குருவும், சனியும் ஒரே பாதசாரத்தில் ஒரே ராசியில் இணைந்திருப்பது உங்கள் வளர்ச்சியைத் தடுக்கிறது. குரு-சண்டாள யோகத்திற்குப் பிராயச்சித்தமாக சனிக்கிழமை நாட்களில் உங்கள் சக்திக்கு ஏற்றவாறு ஆலய வாசலில் அமர்ந்திருக்கும் சந்யாசிகளுக்கு அன்னதானம் செய்து வாருங்கள். உங்கள் ஜாதகத்தில் திருமணத்தடை போன்ற தோஷம் ஏதுமில்லை. அதற்கான பரிகாரம் ஏதும் தனியாக அவசியமில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்