SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாவன்மையே நல்வாழ்வு அளிக்கும்!

2019-09-23@ 14:18:53

என்ன சொல்கிறது என் ஜாதகம்?

?33 வயதாகும் என் மகனுக்கு திருமணம் கூடி வரவில்லை. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? சொந்தமாக தொழில் ஆரம்பித்துக் கொடுக்கலாமா? என்ன தொழில் செய்யலாம்? நாங்கள் சுமாரான குடும்பம்தான்.
- ஸ்ரீநிவாஸன், மந்தைவெளி.

உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு கணிதம் செய்ததில் மூன்று கிரஹங்கள் வக்ர கதியில் அமர்ந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. செவ்வாய், புதன், சனி ஆகிய கிரஹங்கள் வக்ர கதியில் அமர்ந்திருப்பதால் எந்த ஒரு செயலும் சரியான நேரத்தில் நடக்காமல் சற்று தாமதமாக நடந்து கொண்டிருக்கிறது. சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகன் நினைத்ததை சாதிக்கும் திறன் படைத்தவர். அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சூரியன் வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.

உடன் புத்திகாரகன் புதனும் இணைந்திருப்பதால் அவரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதியுங்கள். அவரால் சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்க இயலும். ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ல் அமர்ந்திருப்பதால் அலைந்து திரிந்து செய்ய வேண்டிய தொழிலாக அமையும். உணவுப் பொருட்கள் சார்ந்த வியாபாரம், கேட்டரிங் காண்ட்ராக்ட், கலைத்துறை சார்ந்த தொழில் ஆகியவை சிறப்பான லாபத்தினைப் பெற்றுத்தரும். தற்போது அவருடைய ஜாதக பலத்தின்படி சனி தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது.

திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி என்பதாலும், ஏழாம் வீட்டில் குரு பகவானுடன் இணைந்து சந்திரன் சஞ்சரித்து தசாபுக்தியை நடத்திக் கொண்டிருப்பதாலும் தற்காலம் அவருடைய திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு வெகு சிறப்பாக உள்ளது. ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய சனி பகவான் உறவு முறையைச் சொல்லும் நான்காம் வீட்டில் வக்ர கதியில் அமர்ந்திருப்பதால் உறவுமுறையிலேயே பெண்ணைத் தேடலாம்.

சற்று ஏழ்மை நிலையில் உள்ள பெண்ணாகவும், தற்போது நம்மை விட்டு விலகி வசிக்கும் உறவு ஆகவும் அமைவார். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்து உறவு முறையில் உள்ள பெண்ணையே தேர்ந்தெடுங்கள். திருமணத்திற்குப் பிறகு இவரது வாழ்வில் திருப்புமுனையைக் காண்பீர்கள். ஜாதக பலத்தின்படி வருகின்ற தை மாதத்திற்குள் இவரது திருமணம் முடிவாகிவிடும் என்பதையே இவரது ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

?எங்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு பிள்ளைகளும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். நாங்கள் தனியே வசிக்கிறோம். மகன் நிரந்தரமான தொழில் இன்றி அவதிப்படுகிறான். ஓய்வூதியத்தின் துணையுடன் நாங்கள் இருவரும் வாழ்கிறோம். எங்கள் மகன் எங்களை வந்து பார்ப்பதில்லை. எப்படி இருக்கிறீர்கள் என்றும் கேட்பதில்லை. பிற்காலத்தில் நாங்கள் யாருடைய தயவும் இன்றி நல்ல ஆரோக்யத்துடன் இருப்போமா?
- லதா, சென்னை.

நீங்கள் இருவரும் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர் என்பதால் பொருளாதார ரீதியாக எந்தவிதமான சிரமமும் இன்றி வாழ்ந்து வருகிறீர்கள். நல்ல சம்பாத்யத்துடன் வேலையில் இருந்த உங்கள் மகன் வேலை பார்த்த நிறுவனம் கம்பெனியை இழுத்து மூடிவிட்டதால் திடீரென்று வேலையை இழந்திருக்கிறார். அவருடைய கிரெடிட் கார்டு கடனை அடைத்ததோடு வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்கும் பண உதவி செய்திருக்கிறீர்கள். பணத் தேவைக்கு மட்டும் பெற்றோரை நாட வேண்டியிருக்கிறதே என்ற குற்ற உணர்வும், வயதிற்கு வந்த பிள்ளைகளுக்குத் தேவையான செலவுகளைச் செய்ய இயலாமல் தடுமாறும் நிலையும் உங்கள் மகனின் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

உத்திராடம் நட்சத்திரம் மகர ராசியில் பிறந்திருக்கும் உங்களுக்கும், மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்திருக்கும் உங்கள் கணவருக்கும் ஜாதக ரீதியாக எந்தவிதமான பிரச்னையும் உண்டாகவில்லை. பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தை கணிதம் செய்து பார்த்ததில் தற்காலம் ராகு தசையில் சந்திர புக்தி நடந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. பொதுவாக இந்த நேரத்தில் அதிக மன உளைச்சலை சந்திப்பார்கள். உங்கள் மகனின் ஜாதகத்தில் ராகு சிரமத்தைத் தரக்கூடிய ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளார். கடன் பிரச்னை என்பது அவரை வாட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் அவரது ஜாதகத்தில் குருவும், சனியும் வக்ர கதியில் அமர்ந்திருப்பது வளர்ச்சியைத் தடை செய்து கொண்டிருக்கும்.

மகனிடம் இருந்து எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் அவருக்கு உங்களால் இயன்ற அளவில் பொருளாதார உதவியைச் செய்து வாருங்கள். ஏற்கெனவே நீங்கள் அவருக்கு அளவிற்கு அதிகமாகவே உதவி செய்திருக்கிறீர்கள் என்றாலும், தற்போது நிலவுகின்ற சூழலில் நீங்கள் செய்யும் நிதியுதவி அவருடைய மனதிற்கு சற்று ஆறுதலைத் தரும். ஆழ்மனதில் அவருக்கு பெற்றோர் மீதும், உடன்பிறந்த சகோதரியின் மீதும் அன்பு, பாசம் அத்தனையும் உண்டு. அவருடைய சூழ்நிலையின் காரணமாக அதனை வெளிப்படுத்த இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இரு பிள்ளைகளைப் பெற்ற நீங்கள் உங்கள் பிள்ளையின் நிலையினை உணர்ந்து, அவரிடம் எந்த கௌரவமும் பார்க்காமல் நீங்களாகவே வலியச் சென்று உதவி செய்யுங்கள். பிற்காலத்தில் நீங்களும், உங்கள் கணவரும் யாருக்கும் பாரமாக இருக்கமாட்டீர்கள். இறுதி வரை நல்ல ஆரோக்யத்துடன் இருப்பீர்கள். ஆயுள் பலம் அத்தனையும் சிறப்பாகவே உள்ளது. தேவையற்ற சிந்தனைகளை விடுத்து மகனின் நல்வாழ்வில் அக்கறை கொண்டு செயல்படுங்கள். மனதளவில் ஒருங்கிணைந்து செயல்படுவதால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது நிலைத்திருக்கும். உங்களால் உங்கள் மகனின் வாழ்வியல் தரத்தினை உயர்த்திக் காட்ட இயலும் என்பதையே உங்களது ஜாதகம் உணர்த்துகிறது.

?என் பேரனுக்கு உடம்பில் வெள்ளையாக வெண்குட்டம் போல் உள்ளது. அதற்கு வைத்தியம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கடவுள் அருளால் அவனுக்கு குணமாக வேண்டும். அவனுடைய ஜாதகத்தை கணித்து பதில் கூறவும்.
- பரமேஸ்வரி, போடி.

உங்களது பேரனின் ஜாதகத்தை பஞ்சாங்க கணித முறைப்படி துல்லியமாக கணித்ததில் தற்காலம் 03.06.2020 வரை சனி தசையில் புதன் புக்தி நடைபெற்று வருகிறது. புனர்பூசம் நட்சத்திரம் முதல் பாதம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே ராகு அமர்ந்திருக்கிறார். இதுபோன்ற தோல் சம்பந்தப்பட்ட நோயினைத் தரக்கூடிய கேது ஏழில் சுக்கிரனுடன் இணைந்திருக்கிறார். அதே போல உடம்பின் மேல்தோலை ஆளக்கூடிய சனி பகவான் இவரது ஜாதகத்தில் நீச பலத்துடன் அமர்ந்திருக்கிறார்.

அதோடு குருவின் இணைவினைப் பெற்று குரு சண்டாள யோக அமைப்பும் உண்டாகியிருக்கிறது. தற்போது நடந்து வரும் புக்திக்கு உரிய கிரஹம் ஆன புதன் எட்டாம் வீட்டில் வக்ர கதியில் அமர்ந்திருப்பதும் சற்று சிரமத்தினைத் தந்து கொண்டிருக்கும். என்றாலும் 03.06.2020ற்குப் பின் துவங்க உள்ள கேதுபுக்தியின் காலத்தில் நிச்சயம் இந்தப் பிரச்னைக்கான தீர்வு கிடைத்துவிடும். இவரது ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் 12ல் அமர்ந்திருந்தாலும் குருவின் சாரம் பெற்றிருக்கிறார்.

நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் இறைவனின் திருவருளால் நிச்சயமாக இவரது உடம்பில் உண்டாகியிருக்கும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை குணமாகிவிடும். அதற்கு முன்னதாக குருவின் அருள் என்பது தேவைப்படுகிறது. சாதுக்கள், சந்யாசிகள் முதலானோருக்கு தங்களால் இயன்ற உதவியைச் செய்யச் சொல்லி இவரது பெற்றோரிடம் அறிவுறுத்துங்கள். குரு மகான்களின் ஆசியினைப் பெறுவதன் மூலம் இந்த நோயிலிருந்து உங்களால் பேரனால் முற்றிலுமாக வெளியே வந்துவிட முடியும் என்பதையே அவரது ஜாதகம் உணர்த்துகிறது.

சுபஸ்ரீ சங்கரன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.
என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்