SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புரட்டாசி மாதத்தில் ஐதீக உற்சவங்கள் : திருமலையப்பனும் சனிக்கிழமையும்

2019-09-21@ 09:49:59

புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருமலையில் மலையப்ப சுவாமி அவதாரம் செய்தபடியால், புரட்டாசி மாதம் முழுவதுமே திருமலையப்பனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசி மாதத்திலுள்ள சனிக்கிழமைகள் அனைத்துமே திருவேங்கடமுடையானுக்கு மிகவும் விசேஷமான நாட்களாகக் கருதப்படுகின்றன. சூரியனுக்கு சஞ்சனா, சாயா என இரண்டு மனைவிகள். அவர்களுள் சஞ்சனாவின் பிள்ளைகள் யமனும், யமுனா நதியும். சாயாவின் மகன் சனீஸ்வரன். அந்த சனீஸ்வரனுக்கு ஒரு குறை. அவனது சகோதரியான யமுனா நதி, கங்கையைப் போல் புனிதமானவள் என்று அனைவராலும் கொண்டாடப் படுகிறாள்.

கண்ணனே அந்த யமுனைக் கரையில் அவதரித்து பற்பல லீலைகள் செய்தான். இவ்வாறிருக்க, அதே யமுனையின் சகோதரனான சனீஸ்வரனை எல்லோரும் அமங்களமானவன் என்று வெறுத்தார்கள். தன் சகோதரிக்குக் கிடைக்கும் மரியாதை தனக்குக் கிடைக்காததை எண்ணி வருந்தினான் சனீஸ்வரன். அதன் பின் நாரதரின் அறிவுரைப்படி கண்ணனிடம் சென்ற சனீஸ்வரன், தனது அமங்களங்களைப் போக்கி அருளும்படி பிரார்த்தித்தான். கண்ணனும், “இனி சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது சனி உஷஸ் என்று அழைக்கப்படும். அது மிகவும் மங்களமான பொழுதாகக் கருதப்படும். திதியோ நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும் சனிக்கிழமை விடியற்காலைப் பொழுதில் செய்யும் செயல்கள் மங்களமாக நிறைவடையும்!” என்று சனீஸ்வரனுக்கு வரமளித்தான்.

அதுமட்டுமின்றி, “அடுத்து கலியுகத்தில் நான் திருமலையில் ஸ்ரீநிவாசனாகக் கோயில் கொள்வேன். அப்போது என்னைச் சனிக்கிழமைகளில் யார் வந்து தரிசனம் செய்கிறார்களோ, அவர்களின் அனைத்துப் பிரார்த்தனைகளையும் நான் நிறைவேற்றுவேன்!” என்றும் கூறினான் கண்ணன். அதனால் தான் சனிக்கிழமைகள் அனைத்துமே திருமலையப்பனுக்கு உகந்த நாட்களாகச் சொல்லப்படுகின்றன. அதிலும், புரட்டாசி மாதம் அவர் அவதரித்த மாதமான படியால், புரட்டாசி மாதச் சனிக்கிழமைகள் தனி ஏற்றம் பெறுகின்றன.

புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமலையப்பனுக்கு மாவிளக்குபுரட்டாசி மாதச் சனிக்கிழமைகளில் திருமலையப்பனுக்காக வீடுகளில் மாவிளக்கு போடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதன்பின்னால் ஒரு அழகான ஐதீகமும் உள்ளது. திருமலையில் வாழ்ந்த சில முனிவர்கள் அங்கிருந்த ஒரு மரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபட்டு வந்தார்களாம். அதைக் கண்ட ஒரு வேடன் அவர்களிடம் சென்று, “ஏன் இந்த மரத்தை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு முனிவர்கள், “உங்களைப் போன்ற வேடுவர்களுக்கு அருள்புரிவதற்காகவே பெருமாள் இப்படி மரத்தின் வடிவில் இங்கு காட்சி தருகிறார்!” என்று விடையளித்தார்கள்.

“என் போன்ற தாழ்ந்தவனுக்கும் அருள்புரிவதற்காக இந்த வடிவில் பெருமாள் வந்திருக்கிறாரா?” என்றெண்ணிப் பரவசப்பட்ட அந்த வேடன், அடுத்த நாள் முதல் வேட்டைக்கு வருகையில், தேனும் தினைமாவும் கொண்டு வந்து மரத்திலுள்ள பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதை வழக்கமாகக்
கொண்டான்.மலையப்பனின் அருளால் அந்த வேடனுக்கு ஒரு மகன் பிறந்தான். மகனுக்கு விவரம் வந்த பின் அவனையும் தன்னோடு மலைக்கு அழைத்து வந்து மரத்திலுள்ள பெருமாளுக்குத் தேனும் தினைமாவும் சமர்ப்பித்து
வந்தான் வேடன்.
   
இந்நிலையில் ஒருநாள் வேடன் தேன் கொண்டு செல்ல மறந்துவிட்டான். மரத்துக்கு அருகில் சென்று தன் பையைப் பிரித்துப் பார்த்த போது, தினைமாவு மட்டுமே இருப்பதைக் கண்ட வேடன், அந்தப் பையைத் தன் மகனிடம் கொடுத்து, “இங்கேயே இரு! நான் தேன் கொண்டு வந்து விடுகிறேன்! தேனையும் தினைமாவையும் பெருமாளுக்குச் சமர்ப்பித்து விட்டு அதன்பின் நாம் சாப்பிடுவோம்!” என்று சொல்லிவிட்டுத் தேனைத் தேடிச் சென்றான். வேடுவன் வருவதற்கு நீண்ட நேரம் ஆனபடியால், பசி தாங்காத அவனது மகன், வெறும் தினைமாவைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்து விட்டு, அதை உண்ணப் போனான். அப்போது தேனுடன் வந்த வேடன் மகனின் செயலைக் கண்டு கோபம் கொண்டு அவனை அடிக்கப் போனான்.
   
ஆனால் பின்னால் இருந்து ஒரு கை வேடுவனின் கையைத் தடுத்தது. திரும்பிப் பார்த்தால் சாட்சாத் திருவேங்கடமுடையானே அங்கு நின்று கொண்டிருந்தார். “உன் மகன் தேன் கலக்கவில்லை என்று யார் சொன்னது? அவன் தினைமாவோடு சேர்த்து, பக்தி என்னும் தேனைக் கலந்து எனக்கு அர்ப்பணித்தான். அதை நான் ஆனந்தமாக உண்டுவிட்டேன்!” என்று கூறினார்.திருமாலைத் தரிசித்துப் பரவசமடைந்த வேடுவனும் அவன் மகனும் திருமலையப்பனின் திருவடிகளில் விழுந்து பணிந்து அருள்பெற்றார்கள் என்பது வரலாறு. இந்தச் சம்பவம் நடைபெற்ற நாள் புரட்டாசி மாதச் சனிக்கிழமை ஆகும். அதனால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில், அந்த வேடுவன் சமர்ப்பித்த தினைமாவுக்கு இணையாக அரிசி மாவும், தேனுக்கு இணையாக வெல்லமும் கலந்து மாவிளக்கு போடும் வழக்கம் ஏற்பட்டது.
   
அந்த மாவு உருண்டையின் மேல் விளக்கு ஏற்றுவதன் தாத்பரியம் என்னவென்றால், அந்த மாவு உருண்டையானது திருவேங்கட மலையைக் குறிக்கிறது. அதன் மேல் தீபம் போல் மலையப்பன் விளங்குவதை மேலே ஏற்றும் விளக்கு நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு மாவிளக்கு போட்டு புரட்டாசி சனிக்கிழமைகளில் மலையப்பனை வழிபடுவோர் அனைவருக்கும், அந்த வேடனுக்கு அருள்
புரிந்தது போல், மலையப்ப சுவாமி அனைத்து அனுக்ரஹங்களையும் புரிவார்.

நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத லட்சார்ச்சனை கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில், திருவாரூர் சாலையில் உள்ள நாச்சியார்கோவில் என்னும் திவ்யதேசம் அமைந்துள்ளது. இங்கே வஞ்ஜுளவல்லித் தாயாரோடு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயிலில் உள்ள கல் கருடன் உலகப் பிரசித்தி பெற்றவர்.இக்கோயிலில் உள்ள பெருமாள் திருமலையப்பனுக்கு அண்ணனாகச் சொல்லப்படுகிறார். திருமங்கை ஆழ்வார் இந்தப்
பெருமாளைப்பாடும் போது,

“தேன்கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான்சென்று நாடி நறையூரில் கண்டேனே!”

என்று பாடியுள்ளார். அதாவது, சாட்சாத் திருமலையப்பனையே தாம் நாச்சியார்கோவிலில் ஸ்ரீநிவாசப் பெருமாள் வடிவில் கண்டதாகத் திருமங்கை ஆழ்வாரின் அனுபவம். அதனால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாளைத் தரிசிப்பவர்களுக்கு, பதினாறு முறை திருமலையப்பனைத் தரிசித்த பலன் உண்டு என்று நாச்சியார்கோவிலில் ஒரு ஐதீகம் கூறுகிறது.திருமலையில் பின்பற்றப்படும் ஆகமமான வைகானஸ ஆகமமே நாச்சியார்கோயிலிலும் பின்பற்றப்படுவது மற்றோர் சிறப்பாகும். இத்திருக்கோயிலில் திருவேங்கடமுடையானுக்குத் தனி சந்நதி உள்ளது. ஏனெனில், மேதாவி முனிவரின் மகளாக அவதரித்திருந்த வஞ்ஜுளவல்லித் தாயாரை மணக்க ஸ்ரீநிவாசப் பெருமாள் வந்த போது, மேதாவி முனிவர், “நான் என் மகளைக் கன்னியாதானம் செய்து வைக்கத் தயார். ஆனால் பாணிக்கிரகணம் செய்து வைக்க மாப்பிள்ளையின் தந்தை இருக்க வேண்டுமே! உங்களின் தந்தை எங்கே?” என்று ஸ்ரீநிவாசனிடம் கேட்டாராம். திருமாலுக்குத் தந்தையோ தாயோ ஏது? என்ன பதில் சொல்வதென்று அறியாமல் ஸ்ரீநிவாசன் சிந்தித்திருக்க, திருமலையப்பனே ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குத் தந்தையாக வந்திருந்து அந்தத் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தாராம்.

அதன் நினைவாகவே இன்றும் திருவேங்கடமுடையானுக்கு நாச்சியார்கோவிலில் தனிச்சந்நதி உள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் நாச்சியார்கோயிலிலுள்ள அந்தத் திருவேங்கடமுடையானுக்கு லட்சார்ச்சனை நடைபெறும். லட்சார்ச்சனையில் பங்குபெற வரும் அடியவர்கள் அனைவருக்கும் சங்கல்பம் செய்து வைத்த பின், அர்ச்சகர்கள் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள ஆயிரம் திருப்பெயர்களில் இருந்து ஒவ்வொரு பெயராகச் சொல்லித் திருவேங்கடமுடையானுக்கு அர்ச்சனை செய்வார்கள். இதில் பங்கேற்பவர்களுக்குத் திருமலையப்பன் திருமுன்பே அமர்ந்து அவன் பெயர்களைப் பாடுவதைப் போன்ற அனுபவம் ஏற்படுகின்றது.

குடந்தை உ.வே. வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChennaiBhogi2020

  பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்