SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொண்டர்க்குச் சித்தியளிக்கும் பெருமாளே!

2019-09-19@ 13:33:50

அருணாகிரி உலா 80

‘கனிதரும்’ எனத் துவங்கும் காஞ்சித் திருப்புகழிலும், அருணகிரி நாதர் அம்பிகையின் பெருமைகளையும், முப்பத்திரண்டறம் வளர்த்த தகைமையையும் பாடியுள்ளார்.
 
“அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்
தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந் ......
தளபாரை
அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண்
டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம்
பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் ......
பொலமேருத்
தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன்
றிணைசுமந் தெய்க்கப் பட்டநு சுப்பின்
தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் ...... பையினூடே
தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்
டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும்
தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும் ......
பெருமாளே!”
......... சொல் விளக்கம் .........

பொருள் :-   ஜீவாத்மா - பரமாத்மா எனும் வேறுபாடுகளைக் கடந்து, பசுபாச பந்தங்களை நீக்கி தெளிந்த உள்ளம் பெற்ற ஞானிகளுக்கு நிர்மலமான  அறிவு வடிவமான காட்சி அளிப்பவள்.

 அழகிய காஞ்சி நகரில் பிச்சிமாலை அணியப்பெற்ற கூந்தலை உடையவள்;
 அறம் வளர்த்த நாயகி.
 நுண்ணிய பச்சை நிறங் கொண்ட அழகிய கொடி போன்றவள்;
 கற்கண்டினும் அமுதினும் இனிய மொழி பேசும் பெண்.
 அனைத்துப் பிரபஞ்சங்களையும் படைப்பவள்.
 முத்து மலை போன்றவள்.

  ஒப்பற்ற ரத்ன மாலையுடன் அழகு பெற்ற கொங்கை மலையைத் தாங்குவதால் இளைத்துப் போன இடையை உடைய இளம் பெண். சங்குகள் நிரம்பி மோதுகின்ற கம்பா நதிக்கரையில் சிவனைக் குறித்துத் தவம் செய்து கொண்டு, அழகிய படியை (அளவு பாத்திரம்) கையில் ஏந்தி, 32 அறங்களையும் வளர்க்கும் காமாட்சி தேவியின் பங்காளரான சிவபிரானுக்கு மெய்ப்பொருளை உபதேசிக்கும் பெரியவனே’’ என்று முருகனையும் துதிக்கிறார்.
 
‘‘இச்சைப்படி தன் பேரறம் எண்ணான்கும்
  வளர்க்கும் பச்சைக் கொடி ’’  - வில்லிபாரதம்
 
  ‘‘நீடுலகங்களுக்கு ஆதாரமாய் நின்று
நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத்திரண்டறம் வளர்க்கின்ற
நீ மனைவியாயிருந்தும் ......’’

-  அபிராமியம்மை பதிகம்   திருத்தணிப் பாடலொன்றில் அருணகிரியார் , ‘‘கச்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்த கிளியன்ன காமாட்சி அன்னை’’ என்ற பொருளில், அன்னையை ‘அறக்கிளி’ என்று குறிப்பிடுகிறார்.உற்சவ காமாட்சியை  வணங்கி, அங்கிருந்தே தெரியும் மூல காமாட்சியையும் கண்டு மகிழ்கிறோம். உற்சவருக்கு நேர் எதிரே துண்டீர மஹாராஜா காட்சி அளிக்கிறார். இவரைப் பற்றிய புராணக்கதை ஒன்று உண்டு.ஆகாய பூபதி என்னும் அரசன் தர்மத்திற்காக வைத்திருந்த திரவியங்களையெல்லாம் அபகரித்துக் கொண்டு புத்தமதத்தைத் தழுவி தெய்வ பக்தி இழந்தவனான்.

ஆனால் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால், நீதி வழியே செங்கோல் செலுத்தி புத்தமதத்திலிருந்து விலகி, காமாட்சி தேவியின் பெரும் பக்தையானான். அவளிடமிருந்து மந்திர உபதேசங்கள் பெற்று காஞ்சியிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் திருப்பணி செய்தான். புத்திரப்பேறின்றி தவித்த அவனுக்கு, அம்பிகை கணேசரையே புத்திரனாக அனுப்பி வைத்தாள். அனைவரும் அவருக்குத் துண்டீரப் பிரபு (துண்டீரம் = தொண்டை மண்டலம்) என்று பெயர் சூட்டி ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து காஞ்சி மண்டலத்தை அவர் வசமாக்கினர்.

நீண்ட காலம் அரசாண்ட பின், அரசாட்சியைத் துறந்த துண்டீரப்பிரபு, தன் அன்னை இருக்குமிடம் வந்து சதா அவளைத் தியானித்திருக்கும் உறுதி பூண்டார். துண்டீர அரசராக இருந்த விநாயகர் கலியுகத்தில் விக்ர ரூபமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலயத்தின் இரண்டாவது ஆவரணத்தில் தேவியைத் தரிசிப்பதற்காக வீற்றிருக்கிறார். தனது பிம்பத்தில் யார் கண்ணிற்கும் புலப்படாது ஒளி மயமாகக் கலந்து தவக்கோலத்தில் தேவியைத் தியானித்துக் கொண்டிருக்கிறார். எனவே அவர் எதிரில் செல்லும் போது வாய்மூடி மௌனமாக அவர் தியானத்தைக் கலைக்காமல் அமைதியாகச் செல்லவேண்டும். அப்பொழுது தான் அம்பிகையின் அருளுக்கும் நாம் பாத்திரமாக முடியும் என்பது ஆன்றோர் வாக்கு.

 துண்டீரப் பிரபுவை மௌனமாக வணங்கிப்படிகள் இறங்கிக் கீழே வருகிறோம். சில அடிகள் நடந்த பின் இடது புறமாகப் பார்க்கும் போது ஒரு தனி மண்டபம் தென்படுகிறது. மூன்று படிகள் ஏறிச் சென்றால் நேரே அம்பிகையின் மந்திரிணியாகிய ராஜ சியாமளாவைத் தரிசிக்கிறோம். இடப்புறமாக சற்று முன்பு சென்றால் வள்ளி தேவனோ சமேத சுப்பிரமணியரையும் விநாயகரையும் தரிசிக்கலாம். திரும்பி ராஜ சியாமளா அருகில் வரும்போது ஒரு சந்நதியில் பாதுகைகள் மட்டும் வைத்திருப்பதைக் காணலாம். புனிதமான பங்காரு [ ஸ்வர்ண] காமாட்சி வைக்கப்பட்டிருந்த சந்நதி இது. ஹேம காமாட்சி எனும் பெயர் ஆந்திர மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் பங்காரு காமாட்சி என்று மாற்றப்பட்டது.]

மொகலாயர் படையெடுப்பின் போது, ஸ்வர்ண காமாட்சி, பாதுகாப்பின் பொருட்டு செஞ்சி, உடையார் பாளையம், திருவாரூர் ஆகிய இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டு, பின் மராட்டிய அரசர்களால் தஞ்சாவூரில் தனிக் கோயிலில் அமர்த்தப்பட்டாள். ஆனால் மஹா பெரியவாளின் அனுக்ரஹத்தால் பங்காரு காமாட்சி குடியிருந்த இந்தக் காஞ்சி ஆலய சந்நதியில் தங்கப் பாதுகைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. பங்காரு காமாட்சியின் உற்சவ மூர்த்தியும் இங்கு உள்ளது. கோயில் கொடி மரத்தின் அருகே மூடப்பட்ட வாயில் ஒன்று இருப்பதைக் காண்கிறோம். முன்பு இவ்வழியாக வள்ளி தெய்வானை சமேத முருகனையும் பாப நிவாரண கணபதியையும், பங்காரு காமாட்சியையும் நேராக தரிசித்து வந்தனர் என்று கேள்விப்படுகிறோம். இங்கும் ஒரு திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.

‘‘கறையிலங் குக்ரச் சக்தி தரிக்கும்
சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும்
கரவடன் கொற்றக் குக்குடவத்தன், தனிவீரக்
கழுவிடும் பத்மக் கட்செவி வெற்பன்
பழநி மன் கச்சிக் கொற்றவன் மற்றுங்
கடக வஞ்சிக்குக் கர்த்தன் எனச் செந்தமிழ்பாடி
குறையில் அன்புற்றுக் குற்றமறுக்கும்
பொறைகள் நந்தற்பப் புத்தியை விட்டேன்
குணமடங்கக் கெட்டு குண மற்றொன் றிலதான
குணமடைந்தெப் பற்றுக்களு மற்றுங்
குறியொடுஞ் சுத்தப் பத்தரிருக்கும்
குரு பதம் சித்திக்குக்கருள் சற்றுங் கிடையாதோ ’’

பொருள் :‘அசுரர்களின் உதிரக் கறை படிந்த உக்ரமான வேலாயுதத்தை ஏந்தியுள்ள சரவணன் ;

பக்தர்களின் மனங்களைத் திருடி விட்டு உள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கும் கள்வன்;
வீரமிக்க சேவல் கொடியைத் தாங்கியுள்ள கரத்தை உடைய தலைவன்,
ஒப்பற்ற வீரக்கழல் அணிந்த பாத தாமரையை உடைய நாகாசல வேலவன்,
பழநி மன்னன், காஞ்சிப்பதி வீரன்,
கங்கணம் தரித்த கொடி போன்ற வள்ளிக்கு நாயகன்’

என்றெல்லாம் செந்தமிழ்ப் பாக்களை இசைத்து சிறிதும் குறையாத பக்தி பூண்டு, குற்றங்களை நீக்க வல்ல பொறுமை முதலான குணங்கள் பெருக, கீழ்த்தரமான எண்ணங்களை விலக்கி, என்னிடமுள்ள தீய குணங்கள் ஒழிந்து, சத்வ குணம் பெற்று , எல்லா பாச பந்தங்களும் நீங்கி இறைவனை அடைவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட தூய அடியார்கள் இருக்கும் ஞானாச்சாரியப் பதவி அடியேன் பெறுவதற்கு உன் திருவருள் சற்றேனும் கை கூடுமா ?’’பாடலில் பிற்பகுதியில் சிவபெருமானையும் தேவியையும் பலவாறாகத் துதிக்கிறார்.  

 “பிறை கரந்தை கொத்துப்பணி மத்தம் தலையெலும்பப்புக் கொக்கிறக்ககம் பிரமன் அன் றெட்டற்கற்ற திருக் கொன்றையும் வேணி பிறவு நின்றொக்கத் தொக்கு மணக்கும் சரணியம், பத்மக் கைக் கொடி முக்கண் பெறு கரும்பத் தக்கத்தருள் நற் பங்கய வாவி திறை கொளுஞ் சித்ரக் குத்து முலைக் கொம்பு அறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந் த்ரிபுரை செம்பட்டுக் கட்டு நுசுப்பின் திருவான தெரிவையந் துர்க்கிச் சத்தி எவர்க்குந் தெரிவருஞ் சுத்தப் பச்சை நிறப் பெண் சிறுவ, தொண்டர்க்குச் சித்தியளிக்கும் பெருமாளே ’’

 பொருள் :- ‘‘சிவபெருமானின் பிறைச் சந்திரன் , திரு நீற்றுப் பச்சைக் கொத்து, பாம்பு , ஊமத்தம் பூ, பிரமனது சிரம், கங்கை நீர், குரண்டாசுரனது இறகு, ருத்ராட்சமாலை, பிரமனால் எட்டிப்பார்க்க முடியாத கொன்றை அணிந்த ஜடாபாரம் மற்றும் பல பொருட்களும் நிரந்தரமாக அடைந்து ஒன்று கூடி மண் வீசும். திருவடிகளை உடையவள்’’ என்று பாடுகிறார். பார்வதி தேவியுடன் ஊடல் கொள்ளும் நேரம் சிவ பெருமான் விளையாட்டாக அவள் பாதங்களில் பணிவதால் அவரது ஜடையிலுள்ள அனைத்துப் பொருட்களும் தேவியின் திருவடிகளில் மணம் வீசுகிறதாம் ! ‘‘பக்கத்தில் ஒன்று படு பச்சைப் பசுங்கவுரி பத்மப்பதம் கமழ்தரும் பாகீரதி ஜடிலயோகீசுவரர்’’ - மயில் விருத்தம் ‘‘திங்கட் பகவின் மணநாறு சீறடி சென்னி வைக்க....’’ - அபிராமி அந்தாதி அடுத்து வரும் வரிகளில் தேவியின் மேலும் பல பெருமைகளைப் பாடுகிறார்.

அழகிய தாமரை மலரைத் தன் கையில் கொண்டுள்ள கொடி போன்ற முக்கண்ணி, கரும்பு போன்ற இனிய மொழியைப் பேசுபவள், தன் அடியார்க்கு எது சிறந்ததோ அதைத்தருபவள், அழகிய குளத்தில் உள்ள தாமரை மொட்டுகளைப் போட்டியில் வெல்லக் கூடிய அழகான குவிந்த தனங்களை உடைய கொடி, சகலமும் அறிந்தவள், அழகிய கிளியைக் கையில் கொண்டவள், திரிபுரங்களை எரித்தவள், சிவந்த பட்டாடை கட்டிய இடையை உடையவள், லட்சுமிகரம் பொருந்தியவள் , அழகிய துர்கை, பேராற்றல் படைத்தவள் , எவராலும் அறிதற்கு அரியவள், தூய பசுமை நிறப் பெண்ணரசி ஆகிய காமாட்சி தேவியின் குமரானே ! அடியவர்களுக்கு நித்திய வாசஸ்தலமாக மோக்ஷத்தை அளிப்பவனே ! என்று தாய் தந்தையரின் பெருமைகளைக் கூறி மகனையும் போற்றுகிறார். பங்காரு காமாட்சியின் பாதுகா மண்டபத்திலிருந்து இறங்கி, இடப்புறம் இறங்கினால் காம கோட்டத்தின் காவல் தெய்வமான சாஸ்தா.

 பூர்ணா - புஷ்கலையுடன் காட்சி தருகிறார். ஆதிசங்கரர், தங்க விமானத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, ஆகியோரை வணங்குகிறோம். நாராயணர், பிரம்மா, வசிஷ்டர், சக்தி, பராசரர், வியாசர், சுகர் கௌடபாதர் ஆகியோரது சிற்பங்கள் உயரே வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தான நுழைவாயிலிலுள்ள அன்ன பூரணியை வணங்குகிறோம். அம்பாள் இருக்கும் காயத்ரி மண்டப வாயிலில் சிங்கார வேலரையும் சக்தி கணபதியையும் தரிசிக்கிறோம். மேலே கஜலட்சுமியின் புடைச்சிற்பம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்புறம் மஹாவிஷ்ணுவையும் லட்சுமியையும் தரிசிக்கலாம்.

ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களுள் 18 தலங்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் நாம் காயத்ரி மண்டபத்தில் காண்பது. கள்வர் பெருமாள் என்பது இங்கு திருமாலின் திருநாமம். பாற் கடலைக் கடைந்த போது வாசுகி வாயிலிருந்து வெளி வந்த விஷ ஜ்வாலைகளால், கடலின் அடியில் கூர்ம அவதாரம் எடுத்து மந்தரமலையைத் தாங்கிக் கொண்டிருந்த திருமாலின் திருமேனி நீல நிறமுடையதாயிற்று. பொன்னிறமாயிருந்த லட்சுமி, திருமாலின் கரிய நிறத்தைக் குறிப்பிட்டுப் பரிகசித்தாள். தான் அதீத அழகினால் லட்சுமிக்கு ஆணவம் ஏற்பட்டு விட்டது என்று கூறி லட்சுமியைக் குரூபியாகும்படிச் சபித்தார் திருமால்.

காஞ்சி வந்தடைந்த லட்சுமியை தனது இடப்பக்க சந்நதியில் அமர்த்தி, தன்னை அர்ச்சித்த குங்குமத்தைப் பக்தர்கள் லட்சுமியின் திருவடிகளில் சமர்ப்பிக்கும் போது குங்குமத்தின் மகிமையினால் தன் நிஜ ரூபத்தைப் பெறுவதோடு பக்தர்களுக்கு அஷ்ட ஐச்வர்யத்தை அருளக் கூடிய வரப்பிரசாதினியாய் விளங்குவாள் லட்சுமி என்று கூறியருளினாள் அன்னை காமாட்சி. குங்குமத்தின் மகிமையால் அரூப லட்சுமி சொரூப லட்சுமி ஆனாள். தான் இழந்த அழகைப் பெற்றாள். தான் பத்தினியைத் தேடி காம கோட்டம் வந்த பெருமாள் ஒளிந்திருந்து பார்த்த போது அழகிய ரூபத்தைப் பெற்ற லட்சுமியைக் கண்டு மகிழ்ந்தார். காமாட்சி அருகிலிருக்கும் தைரியத்தில் ‘கள்வா வா’ என்று கணவனை அழைத்தாள் லட்சுமி. அன்று முதல் சொரூப லட்சுமியாகிய சௌபாக்கிய லட்சுமி அருகில் எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு ’கள்வர் பெருமாள்’ என்ற திரு நாமம் ஏற்பட்டது. தீவிர வைணவர்கள் காயத்ரி மண்டபத்திற்கு வெளியே நின்று தரிசிக்க உதவியாக பெருமாளுக்கு எதிரில் அவர் பிம்பம் தெரியும்படியாக நிலைக் கண்ணாடி ஒன்று பொருத்தி வைக்கப்பட்டுள்ளது கண்டு வியக்கிறோம்.”

சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்