SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள் 5 : வடக்கு வாசல் செல்வி

2019-09-18@ 17:35:16

இனாம் வெள்ளக்கால், தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி அருகேயுள்ள இனாம் வெள்ளக்கால் கிராமத்தில் அருட் பாலிக்கிறாள் ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன்.
வெள்ளக்கால் கிராமத்தில் முப்பிடாதி அம்மன் கோயில் முன்பு நின்ற ஆல மரம் வெள்ளை நிறத்தில் வளர்ந்தோங்கி நின்றதால் வெள்ளை ஆல் என அழைக்கப்படலானது. அது மருவி வெள்ளக்கால் என அழைக்கப்படலாயிற்று.

அது மட்டுமன்றி இவ்வூரிலிலுள்ள கால்வாயில் வெள்ளம் எப்போதும் பெருக்கெடுத்து கரை முட்ட ஓடுமாம். அதனால் வெள்ளக்கால்வாய் என அழைக்கப்பட்டது. அது சுருங்கி வெள்ளக்கால் என அழைக்கப்படலாயிற்று என்றும் கூறுகின்றனர். அந்த கால்வாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மேடை தளவாய்க்கு பிரிட்டீஷ் காரர்கள் இனாமாக பட்டயம் போட்டு கொடுத்ததால் இவ்வூர் இனாம் வெள்ளக்கால் என்று அழைக்கப்படலாயிற்று என்கின்றனர். வெள்ளக்காலை சுற்றியுள்ள ஏழூ ஊர் ஜமீன்தார்களிடம் வரிவசூல் செய்யும் பொறுப்பை மேடை தளவாய்க்கு வழங்கியிருந்தனர் பிரிட்டீஷ்காரர்கள்.

மேடைத்தளவாய்  கீழ் இருந்த ரங்கநாத முதலியார், சண்முகநாத முதலியார், சுப்பிரமணிய முதலியார் மூவரும் வெள்ளக்கால் பகுதியை கவனித்து வந்தனர். ஒரு நாள் செவ்வாய்க்கிழமை ரங்கநாதரின் மனைவி கல்யாணி, வேலைக்காரி வேலம்மாளுடன் தனது தோட்டத்தை பார்வையிட வெயில் சாயும் நேரம் வருகிறாள். செல்வி அம்மன் குடியிருக்கும் புளியமரத்தின் அருகே வரும் போது படம் எடுத்து நின்ற நாகத்தைக் கண்டு திடுக்கிட்டாள். சிலைபோல் நின்றாள். அந்த நாகம் அவ்விடம் விட்டு நகர்ந்து புளிய மரத்தில் இருக்கும் பொந்துக்குள் புகுந்தது.

சிறிது நேரத்தில் புளியமரத்திலிருந்து அசிரீரி கூறியது. கல்யாணி, ‘‘என் பேரு செல்வி, எனக்கு இவ்விடம் கோயில் எழுப்பி வணங்கி வந்தால் எல்லா நலமும் வளமும் அருள்வேன். இதை உன் கணவனிடத்தில் சொல்.’’ என்றது. அப்போது புளியமரத்தில் அம்மன் தோற்றம் தெரிந்தது. அதனைக்கண்டு வியப்பும், அச்சமும் கொண்டாள் கல்யாணி. பின்னர் தோட்டத்தை பார்வையிடச் செல்லாமல் வேலம்மாள் வீட்டுக்கு வேகமாக விரைந்தாள், கணவனிடத்தில் நடந்ததைக் கூறினாள். அவர் தனது சகாக்கள் இருவரிடமும் கூற, உடனே கோயில் கட்டப்படலானது.

அம்மன் சொன்னது போலவே கோயில் வடக்கு வாசலுடன் எழுப்பப்பட்டது. செல்வி அம்மன் கோயில் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் வடக்கு வாசல் செல்வி அம்மன் என்று அழைக்கப்படலானது. எட்டு கரங்களுடன் வலது காலைக் குத்துக்காலிட்டு, இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அருட்பாலிக்கிறாள் வடக்கு வாசல் செல்வி. செல்லம் பிள்ளை கோயிலில் பூஜை செய்து வந்தார். ஒரு நாள் வெளியூர் செல்ல நேர்ந்ததால், தனது பன்னிரெண்டு வயது பாலகனை அம்பாளுக்கு பூஜை செய்யுமாறு கூறி சென்றார். அதன் படி பூஜை செய்ய வந்தான் செல்லம்பிள்ளையின் மகன்.

அம்பாளுக்கு அபிஷேகம் செய்யும்போது சிலையில் எண்ணெய் பிசுபிசுப்பு இருப்பதை கண்டு, தென்னங்குச்சி கொண்டு அம்மன் சிலையிலிருந்து பிசுபிசுப்பை எடு்த்தான். அப்போது செல்லம்பிள்ளையின் உடலில் காந்தல் எடுத்தது. பூஜை முடிந்து வீட்டுக்கு வந்த செல்லம்பிள்ளையின் உடம்பு முழுவதும் அம்மை போட்டது. மறுநாள் காலையில் அவன் மாண்டு போனான். வெளியூர் போன அவனது தந்தை வரும் முன் அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மூன்றாம் நாள் மாலை ஊருக்கு சென்ற செல்லம்பிள்ளை வீடு திரும்பினார். வரும் வழியில் பாட்டு பாடிக்கொண்டு வந்த அவரை ஆடு மேய்க்கும் ஒருவர் நிறுத்தினார்.

‘‘பூசாரி அய்யா, நின்னுங்க! உம்ம மொவன் செத்துப்போனான். மத்தியானம்தான் அடக்கும் பண்ணினாவோ.’’ ‘‘என்னது என்ற என் மகனா, ஆத்தா செல்வியம்மா’’ என்று அலறியபடி வீட்டை நோக்கி ஓடினார். நடந்தை அறிந்தார். வேகமாக மையானம் வந்தார். புதைத்த மகனின் சடலத்தை தோண்டி எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வந்தார். கோயில் சந்நதி முன்னே கொண்டு கிடத்தினார். ‘‘ஆத்தா, நீ இருக்கது உண்மைன்னா, நான் உனக்கு செஞ்ச பணிவிடையில குறவு இல்லைன்னா, என் மவன் உசுரு புழைக்கணும். இல்லையாங்கும், நான் உன் சந்நதி முன்ன, நாக்கு புடுங்கிட்டு செத்திருவேன்.

கோயில மூணு சுத்து சுத்தி வாரேன். என் மவன் உசுர திருப்பிக்கொடு. ஆத்தா அவன் விதி முடிஞ்சா போனா போட்டும். எனக்கு கொள்ளி வைக்க வேண்டியவனுக்கு நான்தான் கொள்ளி வைக்கணும்முன்னு விதியிருந்தா அது மாத்த முடியாது. ஆனா வாந்தி, பேதி வந்து செத்தா என் மனசு ஆறிரும். அம்மை போட்டு செத்துட்டான் அம்மன் கோயில் பூசாரி மகன்னு ஊருசனங்க பேசுவாங்களே. அந்த குத்தம் குறைக்கு ஆத்தா நீ ஆளாகப்பிடாது.’’ என்றார். முதல் முறை சுற்றி வந்தபோது இறந்த சிறுவனின் கால் பெருவிரல் அசைந்தது. இரண்டாவது முறை சுற்றி வரும் போது உடல் அங்கமெல்லாம் அசைந்தது.

மூன்றாவது சுற்று சுற்றி வந்த போது அப்பா என்று அழைக்கலானான். சுற்றி நின்றிருந்த உறவினர்கள், ஊர்க்காரர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. அப்போது பூசாரி செல்லம்பிள்ளையின் மேல் அம்பாள் வந்து இறங்கினாள். ‘‘உன் வேண்டுதலின் படி உன் மகன் உயிர்பெற்றான். ஆனால் அவன் ஆயுள் முடிந்து விட்டது. அதனால் இவன் நீண்ட நாள் உயிர் வாழ உத்திரவாதம் இல்லை’’ என்றாள். அதன் படி இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகளில் அவன் இறந்துவிட்டான்.

அதன் பிறகு செல்லம்பிள்ளை தனது தங்கையின் மகனான ஆறுமுகம்பிள்ளையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அவரது வாரிசு தாரர்கள் தான் இப்போது பூஜை செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 3ம் செவ்வாய்க் கிழமை கொடை விழா நடைபெறுகிறது. கோயில் தல விருட்சமாக உள்ள புளிய மரத்தில் நாகமாக அம்பாள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த மரம் பூக்கும் இதுவரை காய் காய்த்ததில்லை. திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது இனாம் வெள்ளக்கால் கிராமம்.

படங்கள்: ஆர். பரமகுமார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்