SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

2019-09-16@ 09:44:55

பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரங்கள்!!

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த என் மகன் எனது உடல்நிலை காரணமாக வந்துவிட்டான். தற்போது வெளிநாட்டு வேலை கிடைக்காமலும், உள்ளுரில் வேலை கிடைத்தாலும் குறைந்த வருமானத்திலும் வேலை செய்து வருகிறான். திறமை இருந்தும் வெகுளித்தனத்தால் ஏமார்ந்து விடுகிறான். சூது வாது அறியாத அவனது எதிர்காலம் சிறக்க பரிகாரம் கூறுங்கள்.
- பாப்பா, புதுக்கோட்டை.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. குரு 12ம் வீட்டில் வக்கிர கதியில் அமர்ந்திருப்பதால் கடுமையான அலைச்சலை சந்தித்து வருகிறார். உள்ளூரில் உங்கள் பிள்ளைக்கு வேலை கிடைப்பது கடினம். பிறந்த ஊரிலிருந்து வடக்கு திசையில் தொலை தூரத்தில் உள்ள ஊரில் அவரது வாழ்வு என்பது அமையும். எனவே மகனை உள்ளூரில் வைத்திருக்க எண்ணாமல் வடஇந்திய மாநிலங்களில் வேலை தேடிச் செல்ல அறிவுறுத்துங்கள். அங்குள்ள உறவினர் மூலம் இவருக்கான பணி அமைந்துவிடும். உங்கள் மகனின் வெகுளித்தனத்தை சமாளித்து, குடும்பத்தை திறமையாக நடத்திச் செல்லும் வகையில் மருமகள் வந்து சேர்வார். தனது மனைவியின் மூலமாக அவர் வாழ்வினில் வெற்றி காணும் அம்சம் நன்றாக உள்ளது. நல்ல மனைவி, குழந்தைகள், சீரான வாழ்வு என்று அவரது எதிர்காலம் சிறப்பாகவே அமைந்துள்ளது. தற்போது நடந்து வரும் சூழலில் வியாழன் தோறும் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய்விளக்கேற்றி கீழ்க்காணும் ஸ்லோகத்தினை 16முறை சொல்லி வணங்கி வரச் சொல்லுங்கள். வாழ்வு வளம் பெறும்.
“தேவானாஞ்ச ரிஷீநாஞ்ச குரும் காஞ்சன                         சந்நிபம்பக்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி                      ப்ருஹஸ்பதிம்.”

?எனக்குச் சொந்தமான இடம் மற்றும் வீடு விற்பதற்கு கடந்த ஐந்து வருடங்களாக பெரும் முயற்சி செய்து வருகிறேன். அது தடங்கலாகவே போய்க் கொண்டிருக்கிறது. நல்லவிதமாக விற்று முடிந்தால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட சௌகரியமாக இருக்கும். வீடும் இடமும் விற்பனையாக என்ன செய்ய வேண்டும்?
- ஏகாம்பரம், மயிலாடுதுறை.

மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி வீடு மற்றும் இடம் விற்கும் முயற்சியை சிறிது காலத்திற்கு தள்ளி வையுங்கள். தற்போது நிலவும் கிரக சூழலின்படி உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விலை கிடைக்காது என்பது ஒருபுறம் இருந்தாலும் உங்கள் எண்ணத்தின்படி பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுப்பதிலும் தடை உண்டாகும். மேலும் விற்று வருகின்ற பணம் அநாவசிய செலவில் கொண்டுவந்து விட்டுவிடும்.
28.04.2021 வரை இது பற்றிய சிந்தனை அவசியமில்லை. விற்பனை செய்து வரும் பணத்தில் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுப்பதற்கு முன்னால் 10 சதவீத தொகையை பொதுசேவை முதலான நற்காரியங்களுக்கு பயன்படுத்துவதாக முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். மனைவியை இழந்த நீங்கள் பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வரும் சூழலில் உங்கள் உடல்நிலை குறித்த அநாவசியமான கவலையில் உள்ளீர்கள். எப்பொழுதும் போல் மருந்து மாத்திரை சாப்பிட்டு வாருங்கள். உங்கள் ஆயுள் குறித்த கவலை வேண்டாம். சர்ஜரி எதுவும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் பின்பற்றி வரும் குருநாதரின் ஆசிர்வாதம் உங்களுக்கு பூரணமாக உள்ளது. தியானப் பயிற்சியின் மூலமாக உங்கள் ஆரோக்யத்தைப் பேணிக் காக்க இயலும். வாழ்க வளமுடன்.

?எங்கள் குடும்பத்தில் மனநிம்மதி இன்றி குழப்பமாக உள்ளது. மகனுக்கு இன்னும் திருமணம் அமையவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை. மாரடைப்பு வந்துவிட்டது. எனது பெயரிலும் குழப்பம் உள்ளது. ஜாதகம் பார்த்ததில் பூர்வீக வீட்டில் இருக்க வேண்டாம் என்று சொன்ன காரணத்தால் தற்போது வாடகை வீட்டில் வசிக்கிறேன். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- ராஜமாணிக்கம், சேலம்.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் 12ம் வீட்டில் இணைந்திருக்கும் நான்கு கிரகங்கள் அநாவசியமான மனக்குழப்பத்தைத் தோற்றுவிக்கிறது. மேலும் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரன் உங்களுக்கு சுகவாசியாக வாழும் எண்ணத்தைத் தருகிறது. எண்ணம்போல் காரியங்கள் நடைபெறாமல் இழுபறியைத் தருவதால் மன வருத்தத்திற்கு ஆளாகிறீர்கள். நடப்பதெல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். 55 வயதிற்கு மேல் உங்கள் பெயர் எது என்பதில் குழப்பம் எதற்கு? தற்போது நீங்கள் பின்பற்றி வரும் இந்தப் பெயரே நன்றாக உள்ளது. வீணான குழப்பத்திற்கு இடம் தராமல் தெளிவாக இருங்கள். நீங்கள் பூர்வீக வீட்டினில் வசிப்பதால் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. பூர்வீக வீட்டினில் இருந்தாலும் சரி, வாடகை வீட்டில் வசித்தாலும் சரி ஒரே மாதிரியான பலன்களைத் தான் காண்பீர்கள். மீண்டும் நீங்கள் பூர்வீக வீட்டிற்குச் செல்வதால் எந்த பிரச்னையும் உண்டாகாது. ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் வீட்டினில் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்து வழிபடுங்கள். கீழ்க்காணும் ஸ்லோகத்தினை தினமும் 16முறை சொல்லி வாருங்கள். மனக்குழப்பம் தீரும்.
“த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம்     புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்”.

?70 வயதாகும் நான் எனது குடும்பத்தில் ஒற்றுமை வேண்டி கடிதம் எழுதுகிறேன். என் கணவர் சில காலமாக மூத்த மகளுடன் பேசுவதில்லை. இரண்டு பெண்கள், ஒரு மகன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்யோன்யமின்றி உள்ளனர். தங்கமான மருமகள் அமைந்திருப்பது ஆறுதல் தருகிறது. எங்கள் குடும்ப ஒற்றுமைக்கு நல்லதொரு பரிகாரம் சொல்லுங்கள்.
- ஒரு வாசகி.

உங்கள் கணவர் ஆணாதிக்க குணம் கொண்டவர் என்பதை உங்கள் கடிதம் உணர்த்துகிறது. இந்த வயதிலும் அவரது கட்டுப்பாட்டிற்குள் நீங்கள் இருப்பது நமது கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கிறது. புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் கணவரின் ஜாதகத்தில் பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று சுபகிரஹங்களின் இணைவு நற்பலனையே தருகிறது. மூவரின் மீதும் அவருடைய ஆழ்மனதில் பாசம் என்பது உண்டு.

ஆதிக்க குணம் நிறைந்த அவர் தனது ஆலோசனையின்படி மகள் செயல்படவில்லை என்ற ஆதங்கத்தினாலும் மகளின் நடவடிக்கை தனது கௌரவத்திற்கு குறைவாக இருப்பதாகக் கருதுவதாலும் பேசுவதைத் தவிர்க்கிறார். 47வது வயதில் இருக்கும் மகள் கூட தந்தையின் பேச்சிற்குக் கட்டுப்பட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் சென்ற மகள் அவரது குடும்ப சூழலின்படிதான் செயல்பட இயலும் என்பதை வெகுவிரைவில் புரிந்து கொள்வார். குடும்பத் தலைவராக இருக்கும் அவர் சரியாக செயல்பட்டால்தான் பிள்ளைகளும் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்ற உண்மையை அவர் உணர்ந்து கொள்ள தற்போதைய கிரகச் சூழல் துணை புரிகிறது. வைகுண்டம் திவ்யதேசத்திற்கு குடும்பத்துடன் சென்று தரிசிப்பதுடன் அன்னதானம் செய்வதாகவும் பெருமாளிடம் பிரார்த்தனையை வையுங்கள். தினமும் 108 முறை ராமஜெயம் எழுதி வருவதோடு முடிந்த அளவில் மனதிற்குள் ஜபம் செய்து வாருங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை குடும்பத்தினர் எல்லோரும் அனுபவப் பூர்வமாக உணர்வார்கள்.

?என் மகனுக்கு புரோட்டின் குறைபாடால் ரத்தம் கெட்டியாகி மூளை, வயிறு பகுதியில் அடைப்பு ஏற்பட்டு சிகிச்சையில் சரியாகி தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறான். மாதாமாதம் தொடர்ந்து ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து வருகிறோம். எனது மகனின் ஆரோக்யம் எப்போது சீரடையும்?
- லட்சுமி, மதுரை.

விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ரோக ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் குரு அமர்ந்துள்ளார். ராகுவின் சாரம் பெற்று குரு அமர்ந்திருப்பதாலும், ராகு ஜென்ம லக்னத்தில் இடம் பிடித்திருப்பதாலும் இந்தப் பிரச்னை உருவாகி உள்ளது. ஜென்ம லக்னாதிபதியே சனி என்பதாலும், லக்னத்தில் ராகு அமர்ந்திருப்பதாலும் தற்போது நடந்து வரும் சனி தசையில் ராகு புக்தியின் காலம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காண துணை நிற்கும். ராகுவின் தாக்கம் பெற்ற கருப்பு உளுந்து தானியத்தை உடைத்து களியாகச் செய்து சனியின் ஆதிக்கம் பெற்ற எள்ளு தானியத்தால் உருவான நல்லெண்ணெயில் உருட்டி சிறிதளவு வாரம் இருமுறை சாப்பிட்டு வரச் சொல்லுங்கள். சனிக்கிழமை தோறும் ராகு கால வேளையில் அருகிலுள்ள ஐயனார் அல்லது ஐயப்பன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு வரச் சொல்லுங்கள். உடல்நிலை சரியானதும் சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க வருவதாகப் பிரார்த்தனை செய்து கொள்வதும் நல்லது. கூடிய விரைவில் உங்கள் மகனின் ஆரோக்யம் சீரடையக் காண்பீர்கள்.


?மனநிலை சரியில்லாத பெண் என்பதை அறியாமல் எனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. பிரசவத்திற்குப் பின் அந்தப் பெண்ணின் மனநிலை இன்னமும் மோசம் அடையவே பெண் வீட்டார் அழைத்துச் சென்று தற்போது விவாகரத்தும் ஆகிவிட்டது. குழந்தை மகனிடம்தான் வளர்கிறது. எனது மகனுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுமா? பரிகாரம் உண்டா?
- ஞானசுந்தரம், தஞ்சாவூர்.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் குமாரனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடைபெறுகிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி மூன்றில் அமர்ந்து களத்ர தோஷத்தினைத் தருகிறது. மூன்றில் உச்சம் பெற்ற புதன் இணைந்துள்ளதால் மறுவிவாகம் செய்து கொள்வதற்கான அதிகாரமும் வந்து சேர்கிறது. என்றாலும் புதன் வக்ர கதியில் அமர்ந்துள்ளதால் முயற்சியில் தடை உண்டாகி வருகிறது. 24.05.2020க்குப் பின் தன்னையும் தனது மகனையும் நன்கு கவனித்துக் கொள்ளும்படியான பெண்ணை சந்திப்பார். உங்கள் இனமும், இனம் சார்ந்த தொழிலும் மிகவும் முக்கியம் என்றாலும், மகனுக்குப் பெண் பார்க்கும் விஷயத்தில் சற்று சமரசம் செய்து கொள்ளுங்கள். உங்கள் இனத்தைச் சேர்ந்த பெண் இவரது வாழ்க்கைத் துணைவியாக அமையும் வாய்ப்பு அத்தனை சிறப்பாக இல்லை. கௌரவம் ஏதும் பாராமல் மகனின் மனதிற்குப் பெண்ணை பிடித்திருக்கிறதா என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அவரது திருமணத்தை நடத்துங்கள். புதன்தோறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டகம் படித்து வருவது நல்லது. உங்கள் பகுதியில் உள்ள சிவாலயம் ஒன்றில் ஏதேனும் ஒரு புதன் கிழமையில் பரமேஸ்வரனுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து இயன்ற அளவில் பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். அடுத்த வருடத்தின் இறுதிக்குள் மகனின் மறுமண வாழ்வு நல்லபடியாக அமையக் காண்பீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்