SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரனை கும்பிட குழந்தை கிட்டும்!

2019-09-12@ 17:36:38

பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

எங்களுக்குத் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. உரிய பரிகாரம் சொல்லுங்கள்.
- கிரிதரன்,சைதாப்பேட்டை.

அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் மனைவியின் ஜாதகத்தில் புத்ர ஸ்தானம் ஆகிய ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சூரியன் நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிப்பது தோஷம் என்றாலும் லக்னத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவானின் பார்வை சந்தானப்ராப்திக்கு துணை புரிகிறது. அதே போல உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய சுக்கிரன் நஷ்டத்தை உண்டாக்கும் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதோடு சூரியனுடன் இணைந்து அஸ்தங்கத தோஷத்தினைப் பெற்றிருப்பது பிள்ளைப்பேற்றினை தாமதமாக்கி வருகிறது.

என்றாலும் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு நிச்சயமாக வம்சவிருத்திக்கு துணைபுரிவார். குருப்ரீதி செய்வதே உங்கள் இருவர் ஜாதகத்தின்படியும் சிறந்த பரிகாரமாக அமைகிறது. காலதாமதம் செய்யாது முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற்று உரிய சிகிச்சையினைப் பெற முயற்சியுங்கள். வியாழன் தோறும் விரதமிருந்து குரு பகவானுக்கு வடக்கு முகமாக நெய்விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். குரு ஸ்தலமாகிய திருச்செந்தூர் சென்று பிள்ளைப்பேறு வேண்டி அங்கப்ரதட்சிணம் செய்து வழிபடுவது உடனடியாக பலனைத் தரும். குமரனை கும்பிட குழந்தை கிட்டும். உங்கள் இருவரின் ஜாதக பலத்தின்படி 22.05.2021க்குள் பிள்ளைப்பேற்றினை அடைந்துவிடுவீர்கள்.

30 வயதாகும் என் மகன் படித்து நல்ல வேலையில் இருக்கிறார். அவருக்கு வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எல்லா வரனும் தட்டிக்கொண்டு போகிறது. ஒரு ஜோதிடர் பார்த்து அவருக்கு திருமண தோஷம் இருப்பதாகக் கூறி பரிகாரம் செய்யச் சொன்னார். ஆனால் எங்கள் குடும்ப ஜோதிடர் நவம்பருக்குள் திருமணம் முடிவாகிவிடும், பரிகாரம் செய்கிறேன் என்று யாரிடமும் பணத்தைக் கொடுத்து செலவு செய்யாதீர்கள் என்று கூறுகிறார்.
அவருக்கு தோஷம் உள்ளதா? பரிகாரம் செய்ய வேண்டுமா, வேண்டாமா?
- ராஜம், தஞ்சாவூர்.

குடும்ப ஜோதிடர் என்று ஒருவர் இருக்கும்போது தனியாக மற்றொரு ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன? ‘எத்தத் தின்னா பித்தம் தெளியும்’ என்பது போல நீங்கள் நினைக்கும் செயல் நினைக்கும் நேரத்தில் நடந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுவதால் இதுபோன்ற குழப்பங்கள் உண்டாகிறது. மருத்துவமும் சரி, ஜோதிடமும் சரி, தொடர்ந்து ஒரே நபரிடம் பார்த்து வருவது நல்லது. பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் குடும்ப ஜோதிடர் கூறியது போல் பிள்ளையின் ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் இல்லை. திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான குரு பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், ஏழாம் வீடு சுத்தமாக இருப்பதும் தோஷமற்ற நிலையை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. இவரது உத்யோகம் சார்ந்த துறையில் பணிபுரியும் பெண்ணாகவே அமைவார். தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் திருமணயோகத்தினை வலிமையாக அமைத்துத் தருவதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபட்டு வருவதே போதுமானது. வேறு சிறப்பு பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

50 வயதாகும் நான் வேலையில்லாமலும், நிம்மதி இல்லாமலும் வாழ்ந்து வருகிறேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆகிவிட்டது. என் குழந்தைகள் என்னைப் பார்க்க வருவார்களா, அல்லது அனாதையாக சாவேனா? எனக்கு விமோசனமே இல்லையா? என்ன பாவம் செய்தேன்? உங்கள் பதிலில்தான் என் வாழ்வின் மறுபக்கம் உள்ளதாக நம்புகிறேன்.
- பிரபாகர், சென்னை.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்ஜாதகத்தின்படி தற்போது சூரிய தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. இத்தனை சிரமத்திலும் அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு மனைவியின் ஜாதகத்தினால்தான் உங்கள் நிலை இப்படி ஆகிவிட்டது என்று நடந்த தவறை திசை திருப்பப் பார்க்கிறீர்கள். சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகம் பலம் பொருந்தியதே. அவரது ஜாதகம் எந்த விதத்திலும் உங்களை பாதிக்கவில்லை. உங்களுடைய ஜாதகத்தில் பிரச்னையைத் தரும் ஆறாம் பாவகத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரஹங்கள் உங்களது நடத்தையில் குறையினை உண்டாக்கி குடும்ப வாழ்விலும் பிரச்னையைத் தந்திருக்கிறது. அடுத்தவர் மீது பழி போடாமல், நீங்கள் செய்த தவறினை உணர்ந்தீர்களேயானால் விமோசனம் என்பது நிச்சயம் உண்டு. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலத்தில் நிச்சயமாக வேலை என்பது கிடைத்துவிடும். நினைத்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் வேலைக்குச் செல்லுங்கள். 52வது வயதில் உங்கள் பிள்ளைகளை சந்திப்பீர்கள். பிரதி ஞாயிறு தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று அம்பிகையின் சந்நதியில் அபிராமி அந்தாதி பாடல்களைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். மனக்குழப்பம் அகன்று நிம்மதி காண்பீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்