SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!

2019-09-12@ 14:32:52

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்,” என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி  சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை சொல்வார்கள். பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம்  இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது.

போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், “” பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது.

பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்