SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கழி ஓட்டம் செய்து நேர்ச்சை

2019-09-11@ 17:47:24

கொடுங்களூர், கேரளா

கேரளத்தில் பரசுராமர் நிறுவிய காளி கோயில்களில் கொடுங்களூர் பகவதி அம்மன் கோயிலும் ஒன்று. தற்சமயம் பகவதி அம்மன் கோயில் இருக்கும் இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்ததாகவும், கண்ணகிக்கு கோயில் எழுப்பிய சேர மன்னன் காளிகோயிலில் இருந்த விக்ரகத்தையே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததாகவும், காளியின் ரூபத்திலேயே கண்ணகி வழிபடப்படுவதாகவும் கூறப்படுகிறது.இங்கே இரண்டு உற்சவங்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. ஒன்று தாலப்பொலி என்னும் உற்சவம். இது நான்கு நாட்கள்கொண்டாடப்படுகிறது. மகரசங்கராந்தியன்று (பொங்கல்) இவ்விழா தொடங்குகிறது. நாம் போகியன்று வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களைத் தெருவில் போட்டு எரிப்பதைப்போல, மகரசங்கராந்திக்கு முன்தினம் கோயிலில் இருக்கும் வேண்டாத பொருட்களையெல்லாம் கோயில் வளாகத்தில் போட்டு எரிக்கிறார்கள்.

இரண்டாவது, பரணி உற்சவம். இது ஏழு நாட்கள் நடைபெறும். மலையாள மாதமான கும்பத்தில் (பங்குனி) பரணி நட்சத்திரத்தன்று கொடியேற்றுவார்கள். இந்த உற்சவத்தின் முதல் நாளன்று, கோயிலின் வடக்கு நுழைவாயிலின் அருகே புதைக்கப்பட்டிருக்கும் இரண்டு வட்ட வடிவமான கற்களை எடுத்துப் பூஜை செய்து, அவற்றிற்கு சிவப்பு நிறப்பட்டுத் துண்டு சாற்றி, அந்தக் கற்களை மீண்டும் பூமியில் புதைக்கிறார்கள். இதற்கு “கோழிக்கல்லு மூடுதல்’ என்று பெயர். ஒரு காலகட்டம் வரை இந்தக் கற்களின் மீது கோழியின் ரத்தத்தை ஊற்றி காளிக்குச் சமர்ப்பித்ததாகவும், தற்சமயம் அது நிறுத்தப்பட்டு சிவப்புநிற பட்டுத்துண்டு சாற்றப்படுவதாகவும் கூறுகிறார்கள்.இந்தச் சமயத்தில் நடக்கும் இன்னொரு சடங்கு காவு தீண்டல். இந்தச் சடங்கில் கலந்து கொள்ள கேரளத்தின் பல பாகங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்..

ஒவ்வொரு குழுவையும் தலைமை தாங்கி ஒரு வெளிச்சப்பாடு (ஆணோ, பெண்ணோ) அழைத்து வருகிறார். அனைவரும் செந்நிற ஆடையே அணிந்திருப்பர். இந்த வெளிச்சப் பாடின் கையில் ஒரு நாந்தகம் வாள் (வாளின் நுனி பிறைச் சந்திரன்போல காணப்படும்) இருக்கும். அந்த வாளின் பல இடங்களிலும் சிறிய சிறிய சலங்கைகள் கொத்து கொத்தாகக் கட்டித் தோரணமாக்குகிறார்கள். அந்த வெளிச் சப்பாடு அடிக்கடி வாளை தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து வாளை ஆட்டும்போது சதங்கைகளின் நாதம் கேட்கும். அந்த வெளிச் சப்பாடின் இடுப்பிலும் ஒலிஎழுப்பும் சிறிய மணிகள் கட்டப்பட்டிருக்கும். அனைவரும் கால்களில் சிலம்பு அணிந்திருப்பர்.

இந்த உற்சவத்தில் பங்கு கொள்ளும் பக்தர்கள்- தெறிப்பாடல் எனப்படும் பாடல்களைப் பாடிக்கொண்டு கோயிலின் வெளிப்புறத்தைச் சுற்றி ஆவேசம் வந்ததுபோல மூன்று முறை ஓடுகிறார்கள். ஒருசிலரின் கைகளில் இரண்டு சிறிய கழிகள் காணப்படுகின்றன. அந்தக் கழிகளினால் கோயிலின் மேற்கூûரையின் ஓரத்தில் தட்டிக் கொண்டே பாடல்களைப் பாடிக்கொண்டு வேகமாக ஓடுகிறார்கள். ஓடிக்கொண்டே மஞ்சள் பொடி, தேங்காய், மிளகு ஆகியவற்றை கோயிலினுள் வீசி எறிகிறார்கள். அந்த நேரத்தில் கருவறை மற்றும் எல்லா சந்நதிகளின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.இந்த காவு தீண்டல் சடங்கு முடிந்த பிறகு கோயில் ஒரு வாரத்திற்கு மூடப்படும். பிறகு “சுத்திகரணம்’ செய்த பிறகே ஆலயத்தைத் திறப்பார்கள். கோயிலில் நடக்கும் இன்னொரு முக்கியச் சடங்கு, சந்தனப் பொடி சாற்றுதல். மூல விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டுள்ளதால் அதற்கு உறுதி கொடுக்கும் வண்ணம் இந்தச் சடங்கு பரணி உற்சவம் தொடங்கும்முன் நடைபெறுகிறது.

பக்தர்கள் கொடுங்களூர் பகவதியை, “கொடுங்களூர் அம்மா’ என்று வாஞ்சையுடன் அழைக்கிறார்கள்.ஒரு காலகட்டம் வரை சேர நாட்டின் தலைநகரமாக கொடுங்களூர் விளங்கியது. சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது கொடுங்களூர். கண்ணகி மதுரையை எரித்த பிறகு கொடுங்கல்லூரை நோக்கிச் சென்றாள் என்றும்; இளங்கோ அடிகள் மூலம் கண்ணகியின் வரலாற்றைக் கேட்ட சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கொடுங்கல்லூரில் ஒரு கோயில் கட்டினான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்