SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருமாளை வணங்கினால் திருமணம் கைகூடும்

2019-09-10@ 09:57:32

பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா


?ஆறு வயதாகும் என் பேரன் இதுநாள் வரை நடக்கவில்லை. எல்லா விதமான வைத்தியமும் செய்து பார்த்தோம். தற்போது அவனது இரண்டு கைகளையும் இரண்டு பக்கம் பிடித்துக் கொண்டால் மெதுவாக நடக்கிறான். தெளிவாகப் பேசவில்லை. அவன் எப்போது நன்றாக நடப்பான்? இது உடல் ரீதியான பிரச்னையா அல்லது தெய்வ குற்றமா? பரிகாரம் கூறுங்கள்.
- சம்பத், அம்பத்தூர்.

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய கிரஹங்கள் வக்ர கதியில் சஞ்சரிக்கின்றன. ஜென்ம லக்னத்தில் சனியின் வக்ர சஞ்சாரமும், ரோகத்தினைத் தரும் ஆறாம் வீட்டில் நீசம் பெற்ற புதனின் வக்ர சஞ்சாரமும் நரம்பியல் சார்ந்த பிரச்னையைத் தோற்றுவித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக கர்ம பலன் என்ற ஒன்றை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். பரம்பரையில் யாரோ ஒருவர் இழைத்த குற்றத்திற்கான தண்டனையை இந்தக் குழந்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் உருவாகியுள்ள குருசண்டாள யோகம் இதனை உறுதிப்படுத்துகிறது. பேரனுக்கு உண்டாகியுள்ளது உடல் சம்பந்தமான பிரச்னைதான் என்றாலும் அதற்குரிய காரணம் என்பது பரம்பரையில் உண்டாகியிருக்கும் சாபம்தான். இதனை தெய்வகுற்றம் என்று சொல்ல இயலாது. தெய்வத்தின் துணைகொண்டுதான் இந்தப் பிரச்னையை சமாளிக்க இயலும். எல்லாவிதமான மருத்துவமுறைகளையும் செய்து பார்த்துவிட்டோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஏதேனும் ஒரு மருத்துவமுறையை மட்டும் விடாமல் தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். உங்கள் பேரனுக்கு உண்டாகியிருப்பது நரம்பியல் சார்ந்த பிரச்னை என்பதால் ஆயுர்வேத மருத்துவம் என்பது நல்ல பலனைத் தரும். விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள். புதன்கிழமை தோறும் துளசிச் செடிக்கு நீருற்றி வணங்கி வருவதோடு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பகவானுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டு வாருங்கள். வீட்டினில் ஒருமுறை தன்வந்திரி ஹோமம் செய்வதும் நல்லது. இறையருளால் மட்டுமே உங்கள் பேரனின் உடல்நிலையைச் சரி செய்ய இயலும்.

? என்னுடைய ஒரே மகனுக்கு ஒரேயொரு பெண் குழந்தை மட்டுமே. தற்போது 14 வயதாகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். ஆனால் படிப்பில் ஆர்வம் இன்றி உள்ளாள். என் மகன் எந்த பொருளுக்கும் ஆசைப்படாதவன். தன் மகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் உள்ளான். சிறந்த தரமுள்ள பள்ளியில் படிக்க வைத்தும் மகள் படிப்பில் ஆர்வம் இன்றி இருக்கிறாளே என்று கவலைப்படுகிறான். நல்லதொரு தீர்வினைச் சொல்லுங்கள்.
- லட்சுமி, உடுமலைப்பேட்டை.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் ராகு புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. அவரது ஜாதக பலத்தின்படி அவர் நன்றாகவே படிப்பார். தற்போது நடந்து வரும் ஏழரைச்சனியின் காலம் சற்று சோம்பல் தன்மையைத் தந்து கொண்டிருக்கும். இருந்தாலும் தனது நிலை உணர்ந்து நன்றாக படிக்கக்கூடிய குணாதிசயம் கொண்டவர் என்பதால் வீணாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் மகனின் அளவு கடந்த எதிர்பார்ப்பு அந்தக் குழந்தையின் மீது வீண் சுமையை உண்டாக்குகிறது. உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதியும், வித்யா ஸ்தான அதிபதியுமாகிய குரு பகவான் வித்யாகாரகன் ஆன புதனுடன் இணைந்து 11ல் சஞ்சரிப்பது மிகச்சிறப்பான அம்சம் ஆகும். மேலும் கல்வி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு இவரை ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளில் ஈடுபடச் செய்வார். பி.எச்டி பட்டத்தைப் பெறும் அளவிற்கு உங்கள் பேத்தியின் ஜாதகம் வெகுசிறப்பாக அமைந்துள்ளது. இந்த வயதில் அதிக சுமையை ஏற்றாமல் அவரை அவரது போக்கிலேயே செயல்பட அனுமதியுங்கள். ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது தந்தையிடம் மகளை அளவிற்கு அதிகமாக படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்பதைச் சொல்லிப் புரியவையுங்கள். தன் தந்தையின் எதிர்ப்பார்ப்பிற்கும் மேலாகவே உங்கள் பேத்தியின் செயல்பாடு அமைந்திருக்கும். அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி அவரை படிக்க வைக்க இயலாது. தானாகவே உணர்ந்து நன்றாக படிக்கத் துவங்கிவிடுவார். வருகின்ற 09.09.2019 முதலே ராகு தசையில் குரு புக்தியின் காலம் துவங்கிவிடுவதால் கல்வி நிலையில் அவரது முன்னேற்றத்தைக் காணத்துவங்குவீர்கள். நேரமும் ஜாதகமும் நல்ல பலத்துடன் இருப்பதால் பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

? 58 வயதாகும் நான் இதுநாள் வரை எனக்கு என்று எதையும் செய்து வைக்காமல் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இவர்களது சேவையே பெரியது என்று வாழ்ந்துவிட்டேன். என் எதிர்காலம் குறித்து கவலையாக உள்ளது. பூர்வீகத்தில் பரம்பரை இடம் உள்ளது. அதில் வீடு அமைக்கலாமா? ஆன்மிக பணியைத் தொடர இயலுமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- சிவப்பிரகாசம், மயிலாடுதுறை.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ராகு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து நற்பலனைத் தந்து கொண்டிருக்கிறார். ஒன்பதாம் வீட்டில் குருவும் சனியும் இணைந்து குரு  சண்டாள யோகத்தினைத் தருகிறார்கள். பூர்வீகத்தில் உள்ள பரம்பரை இடத்தில் உங்களால் வீடு அமைக்க இயலும். அவ்வாறு பரம்பரை இடத்தில் வீட்டினை அமைப்பது எதிர்காலத்திற்கு உதவிகரமாய் அமையும். வாழ்வின் இறுதி காலத்தில் நிம்மதியை அனுபவிப்பதற்கு பெரிதும் துணைபுரியும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் அமைப்பு நீங்கள் ஆன்மிகப் பணியைச் செய்ய அனுமதிக்கும். 26.09.2021 முதல் முழு மூச்சாக ஆன்மிகப் பணியில் இறங்க கால நேரம் துணைபுரியும். தற்போதுள்ள கிரஹ நிலையின்படி மனதளவில் நிலவி வரும் குழப்பத்தினைப் போக்க புதன்கிழமை தோறும் மயூரநாதர் ஆலயத்திற்குச் சென்று சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். வளர்பிறை சதுர்த்தசி நாட்களில் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வருவதாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். இதுநாள் வரை மட்டுமல்ல, இனிமேலும் உங்கள் வாழ்வு அடுத்தவர்களின் சேவையிலேயே கழியும் என்றாலும் மனதிருப்தி காண்பீர்கள்.

விநாயகரும் தட்சிணா மூர்த்தியும்

புதுக்கோட்டை மாநகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில். தெற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் உள்ள சந்நதி ஒன்றில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும் அருகருகே அமர்ந்து காட்சி தருவது விசேஷ அம்சம் எனப்படுகிறது. இதுபோல் வேறு எந்தக் கோயிலிலும் காண இயலாது என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்