SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகத்தான வாழ்வருளும் மகாலிங்கேஸ்வரர்

2019-09-08@ 17:21:35

திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் சோழ நாடு காவிரி கரையில் அமைந்துள்ள 30ஆவது சிவத்தலமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.மருத மரத்தைத் தல மரமாகக் (ஸ்தல விருட்சம்) கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று. முதலாவது ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில். இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர். மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலிக்கு அருகே அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடை மருதூர். இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடை
மருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன.

பாண்டிய நாட்டு மன்னன் வரகுண பாண்டியன்  ஒருமுறை  அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் மன்னன் குதிரையில் அரண்மனைக்கு திரும்பினான். வரும் வழியில் வழித்தடம் அருகே மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன், மன்னனின் குதிரையின் காலில் மிதிபட்டு அவ்விடமே உயிர் துறந்தான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் அந்தணன் மரணத்திற்கு வரகுண பாண்டியன் காரணமானதால் அவனுக்கு  பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் தொற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.

மதுரை சோமசுந்தரக் கடவுளும் மன்னனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த வரகுண பாண்டியனுக்கு, சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும், அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோயிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. மன்னன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக
ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார்.

மன்னனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.திருவிடை மருதூர் தலத்தைப் பற்றி கூறும்போது திருவாரூர் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு என்பார்கள்.
பூலோக கைலாயம் என போற்றப்படும் இத்திருக்கோயிலில், பிரம்மன் பிரதிஷ்டை செய்த மூர்த்தி இருப்பதால் மிகவும் சிறப்புடையதாகிறது. இந்திரன் உண்டாக்கிய தீர்த்தம், வருணன், வாயு போன்ற தேவர்கள் பூஜித்து வழிபட்ட தலம், ஆதிசக்தியின் மத்திய ஸ்தானத்தை உணர்த்திப் பின்பு அந்த இருதய கமலமத்தியில் தியானிக்கப்பட்டு முனிவர்கள். ரிஷிகள் போன்றவர்களுக்குக் காட்சியளித்தற் பொருட்டு இங்கே எழுந்தருளியிருப்பதால் இத்திருத்தலத்திற்கு திருவிடைமருதூர் என்று பெயர் வந்தது.

இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நதிக்கு தெற்குப்பக்கம் இந்த மூகாம்பிகை சந்நதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நதி இருப்பது குறிப்பிடத்தக்கது.  இத்தலத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. 27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்துள்ளன. உமா தேவியார், விநாயகர், முருகன், திருமால், லட்சுமி, காளி, சரஸ்வதி, வேதங்கள், வசிட்டர், உரோமச முனிவர், ஐராவணம், அகத்தியர், சிவவாக்கியர், கபிலர், வரகுண பாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலம். இங்குள்ள நவக்கிரக விக்கிரகங்கள் பிற கோயிகளிலும் வேறுபட்டதாக இடம் மாறி அமைந்துள்ளது

மார்க்கண்டேயருக்கு, இறைவன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் தரிசனம் கொடுத்தது இத்தலத்தில்தான். பட்டினத்தாரும், பத்ரகிரியாரும் திருவிடைமருதூர் கோயிலில் தங்கியிருந்தபோது, கீழ்க்கோபுர வாயிலில் உட்கார்ந்திருந்த பட்டினத்தாரிடம் ஒரு பிச்சைக்காரன் வந்து பிச்சை கேட்டான்.பட்டினத்தார் அந்தப் பிச்சைக்காரனிடம், “நான் துறவி! மேலைக் கோபுர வாயிலில் ஒரு இல்லறத்தான் உள்ளான். அவனைப் போய் கேள்!” என்று கூற, அப்பிச்சைக்காரனும் அங்கு சென்று, அங்கே இருந்த பத்ரகிரியாரிடம் பிச்சை கேட்டான்.தம்மை இல்லறத்தான், சம்சாரி எனக்கூறக் காரணம், தான் உடன் வைத்திருக்கும் ஓடும், தன்னுடன் வாழும் நாயும் என உணர்ந்து அவ்வோட்டை நாயின் மேல் வீசி எறிந்தார். நாய் இறந்தது. திருவோடு சிதறிப் போனது.  அந்த நாயின் நினைவாக, திருவிடைமருதூர் குளக் கரையில் நாயடியான் கோயில் என்றொரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.

திருவிடை மருதூரில் மொத்தம் 35 தீர்த்தங்கள் இருக்கின்றன. இதில் மிக முக்கியமானது காருண்ய தீர்த்தம் என்பது. இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் பாவம் நீங்கும். உலகத்திலுள்ள எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும் என்று நம்பப்படுகிறது. இங்குள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்து தொழுவோர் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவர் என்று தலபுராணம் கூறுகின்றது. திருவிடை மருதூர் சென்று மகாலிங்க மூர்த்தியையும், அம்பாள் பிரஹத் சுந்தரகுஜாம்பிகையையும் வணங்கி நற்பேறு பெறுவோம்.கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

சித்திரையில் அன்னாபிஷேகம்

பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி மாத பெளர்ணமி அன்றுதான் அன்னாபிஷேகம் செய்வார்கள். ஆனால் தூத்துக்குடியில் உள்ள சங்கமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத புத்தாண்டு அன்று மூலவருக்கு மட்டுமின்றி ஆலயத்திலுள்ள அனைத்து சந்நதி மூர்த்தங்களுக்கும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதுபோன்று வேறு எந்த கோயிலிலும் இல்லை.   

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tvmalai

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா

 • pslv_rocket111

  ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

 • sweeden_novbal1

  சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

 • brazil_venom11

  நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

 • canada_seaplanee1

  முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்