SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணம், குழந்தை வரம் அருளும் அறந்தாங்கி வீரமாகாளியம்மன்

2019-09-06@ 10:09:13

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வீரமாகாளி அம்மன் கோயில்.  சுயம்புவாகத் தோன்றிய அம்மன் அறந்தாங்கி மற்றும் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக திகழ்கிறது.

தல வரலாறு: கோயில் அருகே உள்ள மூக்குடி கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறாள் வீரமாகாளி அம்மன். சுயம்புவாகத் தோன்றிய வீரமாகாளிக்கு, சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவுருவச் சிலை செய்யும் எண்ணம் கிராம மக்களுக்கு ஏற்பட்டது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால், அந்தச் சிலையின் வலது மேல் கரத்தில் ஒரு விரலில், சேதம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர். அன்றைய தினம் கோயில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன்,  நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது. என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விடுங்கள். அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டுங்கள். என் வடிவம் கிடைக்கும்’ என்று கூறியதும் அர்ச்சகர் கனவு கலைந்து எழுந்தார்.

தன்னுடைய கனவைப் பற்றி ஊர் மக்களிடம் கூறினார். அனைவரும் அவ்வாறே ஆட்டை நடக்கவிட்டனர். அது ஓரிடம் சென்று அமர்ந்தது. அங்கே மண்ணைத் தோண்டியபோது, சில அடி ஆழத்தில் அம்மனின் பிரமாண்ட கற்சிலை கிடைத்தது. அந்தசிலை எட்டு கரங்கள் கொண்டு, அசுரனை அழுத்திய கோலத்தில் இருந்தது. அதில் ஒரு அதிசயம் தென்பட்டது. அதன் வலது மேல்கரத்தில் ஒருவிரல் பின்னப்பட்டு இருந்தது. எனவே ஊர் மக்களுக்கு இதை வைத்து வழிபாடு செய்யலாமா? என்ற ஐயம் ஏற்பட்டது. அதன்பின் அன்றிரவும் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அன்னை, உங்கள் வீட்டில் ஒருவருக்கு ஊனம் என்றால் அவரை தூக்கி வீசிவிடுவீர்களா, நான் உங்களைக் காக்க வந்த அன்னை. என்னை தயக்கம் இன்றி நிறுவி வழிபடுங்கள்’ என்றாள்.  இதையடுத்து அந்த பிரம்மாண்ட சிலையை கோயிலில் பிரதிஷ்டை செய்ய ஊர் மக்கள் முடிவு செய்தனர். அன்று முதல் இன்று வரை அந்த அன்னையே ஊர் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள்.

ஆலய அமைப்பு: ஆலயம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பு மண்டபத்தின் வலதுபுறம் கருப்பசாமி மற்றும் விநாயகர் சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. கருவறை வாசலில் கல்லால் வடிக்கப்பட்ட பெரிய வடிவ துவாரபாலகியர்கள் சிலை உள்ளது. கருவறை இடதுபுற முகப்பில் பழங்கால விநாயகர், பெருச்சாளி வாகனம் உள்ளிட்ட சிறிய வடிவிலான சுவாமி சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. கருவறையின் உள்ளே அன்னை வீரமாகாளி எழிலான கோலத்தில், பிரம்மாண்ட வடிவில் கருணை வடிவாக காட்சியளிக்கிறாள். சிவசக்தி சொரூபமாக அன்னை, எண்கரங்களோடு காட்சியளிக்கிறாள். காளிக்குரிய கபாலம் அன்னையின் கரத்தில் காணப்படாதது குறிப்பிடத்தக்கது. அன்னையின் முகத்தில் சிறிய கோரைப்பற்கள் காட்சி தந்தாலும், அன்னை சாந்த சொரூபியாக காட்சி தருவது அபூர்வக் கோலமாகும்.அம்மனை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும். திருமணம் நிச்சயமான பிறகு அல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். இதேபோல, நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை வழிகாட்டுகிறாள் என்பது நம்பிக்கை. நேர்த்திக் கடன் செலுத்திய குழந்தை மண் பொம்மைகள் இங்கே குவிந்துள்ளதே இதற்கு சாட்சியாகும்.  

கோயில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா 30 நாள் திருவிழா பிரமாண்டமாக நடக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • greexe_111

  கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • octo_111

  ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

 • batman_tshirt11

  காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

 • circle_of_lightss1

  மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

 • climate_strike11

  பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்