SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த கோயில் என்ன பிரசாதம் ?

2019-09-05@ 15:49:11

கொல்கத்தா - ரசகுல்லா

காளிகாட் காளி கோயில், மேற்கு வங்கத் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இது சக்தி பீடங்களுள் உக்ர  சக்தி பீடமாகத் திகழ்கிறது. இந்த காளி தெய்வத்தை அனைத்து மதப்பிரிவினரும் வழிபடுகின்றனர். கல்கத்தா என்ற பெயர் (இப்போது கொல்கத்தா)  காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள்.காளிகாட் கோயில் பாகீரதி நதிக்கரையில் அமைந்துள்ளது.காட் என்பது தீர்த்தக் கட்டம் அல்லது நதியின் படித்துறையாகும்.

கொல்கத்தாவில் பல காளி கோயில்கள் அமைந்திருந்தாலும் இந்த ஆலயம் மட்டுமே கொல்கத்தா காளி கோயில் என்றழைக்கப்படுகிறது.  இவ்வாலயத்தை பல நூல்களில் காலேஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்னையின் உடற்கூறுகளில் வலது காலின் விரல்கள் (கட்டை விரல்  தவிர்த்து) அல்லது பாதம் அல்லது முகம் விழுந்ததாகக் கருதப்படும் இந்த காளிகாட்டிலுள்ள மகாசக்தி பீட நாயகியை காளி என்றும், க்ஷேத்ரபாலகரை  நகுலேஷ்வரர் என்றும் அழைக்கின்றனர். இங்கே ம்ருத்யுஞ்ஜய மந்திரங்கள் ஸித்தியளிக்கும்  என மேருதந்திரம் எனும் நூல் கூறுகிறது.

காளி என்றாலே அவளது கோரவடிவம்தான் நினைவிற்கு வரும். கோரத்தையும் கொடுமையையும் ஏற்கும் மனோபாவத்தை தம்மை வழிபடும்  பக்தர்களுக்கு அருள்பவள் காளி. ‘இடது மேற்கரத்தில் மகாபத்ராத்மஜன் எனும் கத்தி, கீழ்க்கையில் ரத்தம் சொட்டும் அசுரனின் தலை, வலது  மேற்கரத்தில் அபய முத்திரை, கீழ்க்கரத்தில் வரமுத்திரை  எனக்கொண்டு கருமை நிறத்தில் திகம்பரியாய் மண்டையோடு மாலையணிந்து  பக்தர்களுக்கு வரமருளும் காளிதேவியை பிரார்த்திக்கிறேன்’ என்பது விஸ்வாமித்ர முனிவர் உபாசித்த காளி தியான மந்திரமாகும்.

அசுர வதம் முடிந்து ஆவேசத்துடன் திரும்பி வந்துகொண்டிருந்த தேவியின் வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளைத் தடுக்க  ஈசன் காளி வரும் வழியில் குறுக்காக படுத்தார்.வேகமாய் வந்த தன் காலில் சிவன் இடறியதைக் கண்ட காளி தன் தவறை உணர்ந்து நாக்கைக்  கடிக்க அந்நிலையே காளியின் உருவமானது.இவ்வுலகிலுள்ள ஸப்தகோடி மகாமந்திரங்களுக்கும் பிரதானமானது 51 மாத்ருகா  அக்ஷரங்கள்.காளிதேவியின் கழுத்தில் 51 கபால மாலைகள் உள்ளன. எனவே இதில் ஸப்தகோடி மகாமந்திரங்களும் அடக்கம் என்பது காளிதேவியின்  உபாசகர்களின் ஒருமித்த கருத்தாகும்.

இங்கு வில் வடிவமான இந்த ஆலயத்தில் அதன் மூன்று மூலைகளிலும் மும்மூர்த்திகளும் வீற்றிருக்க கோணத்தின் நடுவில் பிரதான நாயகியாக  காளி எழுந்தருளியுள்ளாள். முக்கண்களோடு, சிவப்புப் பட்டுடுத்தி வெளியில் தொங்கும் தங்கநாக்குடன் கோர வடிவுடன் காட்சியளித்தாலும் இவள்  அன்பே உருவானவள். அருளே வடிவானவள். எனவேதான் வங்காளிகள் மா மா என அழைத்து காளியை  வணங்குகின்றனர். தேவியின் இரு  புறங்களிலும் நகுலேஸ்வரர் எனும் பைரவரும், கங்கை நதியும் இருப்பதால் இத்தலம் காசியை நினைவூட்டுகிறது.

கங்கை, வங்கக் கடலுடன் கலக்கும் இடத்தை கங்கா சாகர் என்பர். பழங்காலத்தில் அந்த முகத்துவாரத்தில் கபில முனிவர் வசித்து வந்தார்.அங்கு  இன்றும் அவருக்கு ஒரு கோயில் உள்ளது.ஒருமுறை சில காபாலிகர்கள் கங்கா சாகரில் புனித நீராடி கபில முனிவரை தரிசிக்கச் சென்றனர். வழியில்  விரல்கள் வடிவில் ஓர் அதிசயப் பாறை தென்பட்டது. அது காளியின் சாயலாகத் தோன்றியது.காபாலிகர்கள், நரபலியை மனதில் கொண்டு அந்தப்  பாறையை அங்கேயே ஸ்தாபித்து தங்களது முறைப்படி வழிபட்டனர்.அந்தச் சிலையே இன்றைய காளிகாட் காளி அம்மன்.

இக்கோயிலுக்கு இன்னொரு தலவரலாறும் உண்டு. அந்தக் காலத்தில் இந்த தேவியை ஆத்மராம் என்கிற பக்தன் ஆழ்ந்த பக்தியோடு ஆராதித்து  வந்தான். மாலை நேரத்தில் பாகீரதிக் கரையில் அவன் ஜெபம் செய்யும்போது கண்களைப் பறிக்கும் ஒளிக்கதிர் ஒன்று திடீரென்று தோன்றியது. வியந்த  அவன் ஒளிவந்த இடத்தை மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, தெளிவான தண்ணீருக்கு அடியில் மனிதக் கால்விரல்கள்போல் வடிக்கப்பட்ட  சிறு கல் ஒன்றைக் கண்டான். அத்துடன் அவன் அன்றிரவு ஒரு கனவும் கண்டான்.அந்த விரல்கள் தாட்சாயணியின் வலக்கால் விரல்கள் என்று  உணர்ந்து, அதை எடுத்து வந்து தேவியின் பாதங்களை ஒட்டி வைத்து அதற்கு பூஜையும் செய்யத் தொடங்கினான். அந்தப் புனித இடமே காளி  தேவியின் மகா சக்தி பீடமாயிற்று.

கல் கிடந்த இடத்தின் அருகிலேயே அவனுக்கு ஒரு சிவலிங்கமும் கிடைத்தது. சிவலிங்கத்துக்கு நகுலேஷ்வர பைரவர் என்று நாமம் சூட்டி காளி  சிலையின் அருகிலேயே அமைத்து வழிபட்டான்.விரல்கள் போல் காணப்பட்ட அந்தக் கல், ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இப்போதைய  காளி சிலையின் அடியில் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் ஹவுரா பாலத்திலிருந்து 12 கி.மீ.தொலைவில் தக்ஷிணேஸ்வர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது. மூலவராக காளி ‘பவதாரிணி’ ரூபமாக  வீற்றிருக்கிறார். தக்ஷிணேஸ்வர் காளி கோயில் 18ம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த ராணி ரஷ்மோனி என்பவரால்  கட்டப்பட்டிருக்கிறது.பாரதத்தில் உள்ள ஐம்பத்தியொரு தேவி பீடங்களில் ஸ்ரீ காளி மாதா சுயம்புவாக அவதரித்த பீடமாகும். ஸ்ரீ லலிதா  ஸஹஸ்ரநாமத்தில் நம் அன்னையை லலிதா, திரிபுரசுந்தரி, ஸ்ரீமாதா, ஸ்ரீ மஹாராஜ்க் நீ என்று அழைக்கிறார்கள். அதாவது, தேவர்கள்  துன்பப்படும்போது அன்னை பராசக்தி அசுரர்களை ஒரு கையால் அழித்து தேவர்களை மற்றொரு கையால் அணைத்துக் கொள்கிறாளாம்!பகன், முகன்  என்ற இரு அசுரர்கள் பெரும் தவம் செய்து பெற்ற வரங்களினால் செருக்குற்று மூவுலகையும் ஆட்டிப் படைத்தனர்.

அதனால் மிகவும் துன்புற்ற முனிவர்களும் தேவர்களும் காசி விஸ்வநாதரிடம் முறையிட்டனர். அவர்களுடைய துன்பத்தைப் போக்கத் திருவுளம்  கொண்ட பரமேஸ்வரன் காளி, பகவதி என்ற இரு பெண்களை உருவாக்கினார். இருவரும் பகனையும் முகனையும் அழித்து அவர்களுடைய  அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். பின்னர் காளி பாரதத்தின் வடக்கிலும், பகவதி கன்னியாகுமரியாக பாரதத்தின் தெற்கிலும் கோயில்  கொண்டு அருட் பாலித்து வருகின்றனர்.

கொல்கத்தாவில் குடி கொண்டிருக்கும் காளியை துதித்து வழிபட்டவர்களில் முதன்மையானவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். முதலில் இந்த  தட்சணேஸ்வரத்தில் தேவியின் ஆலயத்தில் அர்ச்சகராக பணியாற்றிய அவர், அன்னையிடம் நீங்காத பக்தி கொண்டு அவளையே ஆராதித்து வந்தார்.  காளி தேவியின்  திருக்காட்சியை பல முறை நேரில் கண்டவர் அவர். அவருடைய சீடராக விளங்கிய நரேந்திரன் முதலில் நாத்திக வாதம்பேசி  வந்தவர். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆன்ம பலம் அவரை மாற்றி, பார் புகழும் சுவாமி விவேகானந்தராக மாற்றியது.

கல்கத்தாவில் காளிகா தேவி திருக்கோயில் கொண்டு அருளைப் பொழிகிறாள். காளிகட் என்ற இடத்தில் திருக்கோயில் கொண்டுள்ள இந்த காளி  பார்ப்பதற்கு பயங்கரமான வடிவுடையவள். வடிவம் தான் அப்படி. ஆனால் அவள் கருணை பொழிவதில் அவளுக்கு நிகர் அவளே. தீயவர்களைக்  கொன்று தர்மத்தைக் காக்கும் வல்லமை கொண்டவள் என்பதனை உணர்த்தவே இவ்வடிவம் தாங்கி நிற்கிறாள்.

இந்த இடத்தில் கங்கையும் சமுத்திரமும் சங்கமிப்பதால் ஸ்நான மகிமை மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அன்னை காளியின் அருள் மழையில்  நனைந்தவர்கள் ஏராளம். ஜாதிமத பேதமின்றி எல்லோரும் அன்னையைநாடி வருகின்றனர். இங்கு நவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.  இச்சமயம் அம்பாள் தனது புகுந்த வீடான கயிலாயத்திலிருந்து பிறந்த வீட்டிற்கு வருவதாக இங்கு ஐதீகம். பூஜையின் முடிவில் அன்னைக்கு சகல  சீர்வரிசைகளுடனும் தாம்பூலம் சமர்ப்பித்து அவளை வழியனுப்புகிறார்கள். பின்னர் நவராத்திரியில் பூஜிக்கப்பட்ட சிலைகளை கடலில் கரைத்து  விழாவினை பூர்த்தி செய்கின்றனர். திருமணமான பெண்களும் இச்சமயத்தில் பிறந்த வீடு சென்று வருகின்றனர்.

இத்திருக்கோயில். இந்த பீட சக்தியை நாம் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.  அகிலாண்ட நாயகியே! பிறவி நோயைத் தீர்க்கும் மாமருந்தே! காளிகா  பீடத்தில் அமர்ந்திருக்கும் காளிகா தேவியே! அருள் புரிய வேண்டும் தாயே! அஞ்ஞான இருளை நீக்கி, மெஞ்ஞான ஒளியினை ஏற்றும் அன்னை  அடியவரைப் பற்றும் துன்பங்களை நீக்கி வரம் அளித்துக் காக்கும் மஹாதேவியாவாள். கருணை நிறைந்த நீலகண்டராம் நகுலீசர் உள்ளத்தில் என்றும்  பேரழகுடன் வீற்றிருப்பவள்.

இவ்வன்னையின் தாமரைப்பாதங்கள் கற்பக விருட்சமாய் சகல உயிர்களுக்கும் கருணையுடன் அபயம் தந்து காக்கக் கூடியது. அன்னையின் அற்புதத்  திருநாமங்களைத் துதிப்பவருக்கு திருவடி தீட்சை தர விரும்பி இமயமலையில் சர்வேஸ்வரராம் ஈசனுடன் இணைந்து கரைகாணா இன்பப்  பெருங்கடலாய் கற்புக் கரசியாய் காட்சி தருபவள்.
நம்மைக் காக்கும் காளிதேவியின் பொற்பாதங்கள் பணிவோம்! இக்காளி தேவிக்கு ரஸகுல்லாவே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.

ரசகுல்லா

தேவையானவை: பால்  100 லிட்டர் , எலுமிச்சைச் சாறு, தயிர்  தலா  இரண்டு லிட்டர், சர்க்கரை  25 கிலோ , ஏலக்காய்த்தூள்  6 மேஜைக்கரண்டி.

செய்முறை: அடிகனமான பாத்திரம் ஒன்றில் பாலைக் காய்ச்சுகிறார்கள். பால் பாதி கொதிக்கும்போதே எலுமிச்சைச் சாறு, தயிர் சேர்த்துக்  கலக்குகிறார்கள். பால் திரிய ஆரம்பித்துவிடும். முழுவதும் திரிந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, மெல்லிய துணியால் வடிகட்டுகிறார்கள்.

அடியில் தண்ணீரும் மேலே பனீரும் தங்கிவிடும். அந்தப் பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டுகிறார்கள்.  அடிகனமான பெரிய பாத்திரத்தில்  சர்க்கரை மூழ்கும் வரை நீர் விட்டு பாகு காய்ச்சி பனீர் உருண்டைகளை அதில் சேர்க்கிறார்கள். . உருண்டைகள் வெந்து பெரிதானதும் ஏலக் காய்த்தூள்  தூவி இறக்கினால் நாவெல்லாம் மணக்கும் ரஸகுல்லா பிரசாதம் தயார்.

குறிப்பு: கொல்கத்தா காளிதேவிக்கு ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவே பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்