SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படியளப்பான் பரமன் நமக்கும்

2019-09-05@ 15:45:32

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 28

ஆண்டவனின் பரந்து விரிந்த சந்நிதானத்தில் ‘அடையா நெடுங்கதவு அமைந்திருக்கின்றது.யார் வேண்டினாலும் மனம் உவந்து அள்ளித்தந்து  ‘அஞ்சேல்’ என்று அரவணைக்கும் அபயகரம் இருக்கின்றது. இப்படி இருக்க சுயநலமும், சூதும், வாதும் மிகுந்த மனிதர்களின் காலில் விழுந்து  அவர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்வதால் ஆகப்போவது  ஒன்றுமில்லை என்று அலுத்துப்போய் பாடி இருக்கின்றனர் பல புலவர்கள்.  மனிதர்களின் காலில் பலர் மண்டி இட்டு மன்றாடுவது அவர்கள் அறியாமையைத்தானே பறை சாற்றுகின்றது?
தேவாரம் தெளிவாகத் தெரிவிக்கின்றது:

“தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.”
“மிடுக்கு இலாதானை, “வீமனே; விறல் விசயனே, வில்லுக்கு இவன்;” என்று,
கொடுக்கிலாதானை, “பாரியே!” என்று, கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக் கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.”

தற்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பூவுலக வாழ்விலும் தன்னிறைவு பெறலாம். மேலும் சிவலோக மறுமை வாழ்வும் உங்களுக்கு  சித்திக்கும். இவ்வாறிருக்க உலோபகுணம் மிகுந்த உலுத்தரைப் புகழ்ந்து பேசி வாழும் காலத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? விழலுக்கு நீர் பாய்ச்சுவதால்  என்ன விளைவு ஏற்பட்டுவிடப் போகிறது?

“கல்லினுள் சிறு தேரைக்கும்
கருப்பை அண்டத்து உயிர்க்கும்
புல்உணவு அளித்துக் காக்கும்’
புண்ணியன் தம்மைக் கைவிட மாட்டான்”

என்ற உறுதிதான் ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்று உணர்த்துகிறது மேற்கண்ட தேவாரப் பாடல். “ஈயாத லோபி இருந்தென்ன? வாழ்ந்தென்ன?”  என்பார்கள். பொதுவாக சுயநலத்தோடு சுருங்கிப்போவதே மனித மனத்தின் சுபாவமாக இருக்கிறது. கஞ்சப் பிரபு ஒருவனைப் புகழ்ந்து பேசித்தான் பட்ட  கஷ்டத்தை கவிதையாக
வடித்துள்ளார் இடைக்கால புலவர் ஒருவர்.

நகைச்சுவை நயம்பட மிளிரும் அந்தப்
பாடலின் அற்புத வரிகளைப் பார்ப்போம்!
‘கல்லாத ஒருவனை நான் ‘கற்றாய்’ என்றேன்!
காடெறியும் மறவனை ‘நாடு ஆள்வாய்’ என்றேன்!
பொல்லாத ஒருவனைநான் ‘நல்லாய்’ என்றேன்!
போர்முகத்தை அறியாவினர் ‘புலியே’ என்றேன்!
மல்லாடும் புயம் என்றேன் ‘சூம்பல் தோளை!’
வழங்காத கையினைநான் வள்ளல் என்றேன்!
யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே!

‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற வள்ளுவரின் நெறியை இப்பாடலில் புலவர் எப்படி கடைபிடித்திருக்கிறார் பாருங்கள். ‘சாண் வயிற்றை வளர்க்க  பலர் படும் பாடு சாமானியம் அல்ல’ என்று சுவையாகவிவரிக்கிறதல்லவா மேற்கண்ட பாடல்.

அவல வயிற்றை வளர்ப்பதற்கே
அல்லும் பகலும் அதில் நினைவாய்க்
கவலைப் படுவதன்றி சிவக்
கனியைச் சேர கருதுகிலேன்!
- என்று வாட்டப்படுகிறார் வள்ளற்பெருமான்.

‘இறைவன் ஒருவருக்குத்தர விரும்புவது கட்டாயம் அம்மனிதனைச் சென்று அடையும். அதைச் சாதாரண மனிதர்களால் ஒருபோதும் தடுத்து  நிறுத்திவிட முடியாது. அதேசமயம் இறைவன் ஒருவருக்குத் தர நினைக்காததை இவ்வுலக மனிதர் எவராலும் தந்துவிட முடியாது’ என்ற பேரறிஞர்  ஒருவரின் கூற்றை நாம் நினைவில் கொண்டால் அழியும் மனிதர்களைப் புகழ்ந்து போற்றி அவர்களிடம் இறக்கும் நிலை நமக்கு ஒருபோதும் ஏற்படாது.

இறைவனிடம் கை ஏந்துங்கள்! - அவன்
இல்லை என்று சொல்லுவதில்லை!
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்! - அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை!

துறவி ஒருவர் அரசனிடம் சென்று பொருள் பெற எண்ணினார். ஒருநாள் அரசவையை அவர் அணுகினார். அப்போது ராஜா பூஜை  செய்துகொண்டிருந்தார். ‘நீங்கள் காத்திருங்கள்! வேந்தர் தற்போது இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறார். பூஜை நிறைவு பெற்றதும் தங்களைச்  சந்திப்பார்’ என்றனர் ஊழியர்கள். வழிபாட்டு அறையின் பக்கத்திலேயே காத்துக்கொண்டிருந்த துறவிக்கு அரசரின் பிரார்த்தனைகள் அனைத்தும் நன்கு  அவர் காதில் கேட்டன.

‘இது வேண்டும், அது வேண்டும்’ என்று தன் ஆசையை ஆண்டவனிடம் வெளிப்படுத்தினார் அரசர். பூஜை முடிந்தபின் துறவியை ராஜா சந்தித்து  ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ அதைச் செய்கிறேன்!’’ என்றார். அதற்குத் துறவி ‘‘இப்போதுதான் உங்கள் தேவைகளை இறைவனிடம்  நிறைவேற்று’’ என்று பிரார்த்தனை செய்தீர்கள்.  நான் ‘ராஜா’ என நினைத்து வந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிந்தது. ஒரு பிச்சைக்காரரிடமிருந்து  நான் எதுவும் பெற விரும்பவில்லை என்றார் துறவி.

அனைத்திற்கும் மேலாக இருக்கும் சர்வேஸ்வரனிடம் நம் குறைகளைத் தெரிவிக்காமல் சாதாரணமானவர்களை நாடுவது தவறுதானே!

‘அபிராமி அந்தாதி’யில் அபிராமி பட்டர்
அற்புதமாகச் சொற்பதம் கொடுக்கின்றார்.
“ஐயன் அளந்தபடி இருநாழி நெல்கொண்டு
வையம் எலாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி
ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ் பாமாலையும் கொண்டுசென்று
பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய். இதுவோ உன்றன்
மெய்யருளே!

சிவபெருமான் இருநாழி நெல் மட்டுமே கொடுத்தார். ஆனால் அம்பாள் அதைக்கொண்டு காஞ்சிபுரத்தில் முப்பத்து இரண்டு அறச்செயல்களையும்  எவ்விதக் குறைபாடும் இன்றி முழுமையாக முடிக்கின்றாள்’ என்கிறது மேற்கண்ட பாடல்.

“இருநாழி நெல்லால் இப்புவனத்தையே காப்பாற்றும் இறைவி
இருக்கும்போது நாம் இருகையை நம் போன்றவர்களிடம்
ஏந்துவது ஏற்புடையசெயலா என்று கேட்கிறார் அபிராமி பட்டர்.

அருணகிரிநாதரின் திருப்புகழ் செல்வந்தர்களிடம் சென்று பொருள் கேட்கும் புலவர்கள் நோக்கி இப்படி பாடுகின்றது.

“உடையவர்கள் ஏலர் எவர்கள் என நாடி
உளம் மகிழ ஆக கவிபாடி
உமது புகழ் மேருகிரிஅளவும் ஆனது எனவும்
உரமான மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவும் எனவாடி முகம் வேறாய்
நலியும் முன்னே உனது அருணஒளிவீசும்
  நளின இருபாதம் அருள் வாயே!”

கவியரசர் கண்ணதாசனும் இப்படி கூறுகின்றார்.

மானிடரைப் பாடி அவர் மாறியதும் ஏதுவது என்
வாடிக்கையான பதிகம்
மலையளவு தூக்கி உடன் வலிக்கும்வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்!
ஒருகோடிப் பாடல்கள் உதவாதார் மேற்பாடி
ஓய்ந்தனையே! பாழும் மனமே!

“அதைத் தருகிறேன். இதைத் தருகிறேன். இப்போது தருகிறேன். பிறகு தருகிறேன்” என்றெல்லாம் மனம் மாறிக்கொண்டே மாற்றி மாற்றி  பேசுவதுதான் மானிடர்களின் இயல்பு. ஒளவையாரின் தனிப்பாடல் ஒன்று வள்ளல் என்று தன்னைப் புகழ்ந்து கொள்ளும் கோரைக்கால் ஆழ்வான்  கொடையைப்பற்றி இலக்கியச்சுவையுடன் எவ்வளவு அழகாக சித்தரிக்கிறது பார்ப்போமா?

யானை ஒன்றை பரிசாக அளிக்கிறேன் என்று முதலில் சொன்ன அந்த கோரைக்கால் ஆழ்வான் பிறகு யானை தர இயலாது. குதிரை தருகிறேன்  என்று வாக்களித்து பிறகு அதையும் மாற்றி எருது தருகிறேன். ஒரு சேலை வேண்டுமானால் தருகிறேன் என்று கீழே கீழே இறங்கி என் உள்ளங்கால்  தேய, தேய அலைய விட்டானே தவிர, எதையுமே வழங்க அவனுக்கு மனம் வரவில்லை என்கிறார்.

“கரியாய்ப் பரியாகிக் கார்எருவை தானாய்
எருதாய் முழப்புடவை ஆகித்-திரிதிரியாய்
கோரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்து கால் ஓய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை.”

பரமன் நமக்கு படி அளப்பான். நம் கவலைகளை காணாமல் போகச் செய்வான். மழைக் குடையாகவும், பசி நேரத்துக்கு உணவாகவும், தேவையான  நேரத்தில் வேண்டுவதை வழங்குவான். நம் கண்ணீரை அவன் கரங்கள் கட்டாயம் துடைக்கும் என்ற பூரண நம்பிக்கையுடன் அவன் பொற்பாதங்களைச்  சரண் அடைந்தால் மட்டுமே நம் வேதனைகள் விலகும் என்று ஆணித்தரமாக அறிவுரை பகர்கின்றார் திருவள்ளுவர்.

“தனக்கு உவமை இல்லாதான் தாள்
சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.”

(இனிக்கும்)

திருப்புகழ்த்திலகம்
மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2019

  17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்