SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அற்புதங்கள் நிகழ்த்தும் அந்திலியான்

2019-09-05@ 15:39:17

*நலம் தரும் நரசிம்மர்  10

பறவைகளுள் மிக உயரத்தில் பறக்கும் வல்லமையும் சக்தியும் உடையது கருடன். கருட தரிசனம் சகல விதமான பாபங்களிலிருந்தும் விமோசனம்  அளிக்கவல்லது. வானில் பறக்கும் கருடனைக் காண நேர்ந்தால் ‘மங்களானி பவந்து’ என்று சொல்லுமாறு பணிக்கின்றது தர்மசாஸ்திரம்.  நாராயணன்  வைகுண்டம் எனப்படும் திருநாட்டில் ஒற்றைக் காலினை மடக்கி மறுகாலினை தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் கோலத்தினை பரவாசுதேவன்  என்றழைக்கின்றோம். பரவாசுதேவனுக்குப் பலவிதங்களி்ல் பணிவிடை புரியும் நித்யஸுரிகளில் முக்கியமானவர் கருடன் ஆவார்.

கருடன் இன்றளவும் வைகுண்டத்திற்கும் பூமிக்கும் இடையே சென்று வரக்கூடிய பராக்ரமம் மிக்கவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இந்து மதத்தில்  நிலவுகின்றது. வேதங்களும் கருடனின் பெருமையினைப் பரக்கப் பேசுகின்றன. இதனால் கருடன் ‘வேத புருஷன்’ என்று அறியப்படுகின்றான்.  இத்தகைய பராக்ரமம் மிகுந்த கருடன் மகாவிஷ்ணுவின் வாகனம் ஆவார்.

தர்மத்தினைக் காக்கும்பொருட்டு அவதாரங்கள் எடுக்கும்போதிலும் சரி, அவதார காரியம் இல்லாத உத்ஸவங்கள், தேவலோகத்து விழாக்கள்  போன்றவற்றிற்குச் செல்லும்போதும் சரி, விஷ்ணுவானவர் கருடன் மீதுதான் பயணிக்கின்றார். விஷ்ணுவின் மேல் உயர்ந்த பக்தி கொண்ட கஜேந்திரன்  என்ற யானையின் காலினை முதலை வேடம் தரித்து வந்த அசுரனானவன் கவ்விக்கொள்ள, வலி தாங்க முடியாமல் ‘ஆதிமூலமே’ என்று அந்த  யானை கதறியது.

அப்பொழுதும் தனது பக்தனாம் அந்த யானையினைக் காப்பாற்றும் பொருட்டு விஷ்ணு வந்தது. கருடனின் மீது ஏறிக்கொண்டு தான் என்கிறது  கஜேந்திர புராணம். இப்படி விஷ்ணுவின் பராக்ரமம் மிகுந்த வாகனமாக இருக்கும் கருடனும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏமாந்தது நரசிம்ம  அவதாரத்தின்போதுதான்.மிகவும் எளிமையான ஒரு அவதாரம் நரசிம்ம அவதாரம். ப்ரஹ்லாதனின் சரித்திரம் புகட்டும் உண்மையான பக்தியின்  உணர்வு நரசிம்ம அவதாரத்தின் மூலக்கருவாக அமைந்தது. எளிமையான கதையாக இருப்பினும், பற்பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை தன்னுள்  அடக்கிய ஒரு உன்னத சரித்திரம் நரசிம்ம அவதாரம்.

திருப்பாற்கடலில் திருமால், அவருடைய மனைவியான திருமகள் கால்களைப் பிடித்துவிட, கண்ணை மூடிக்கொண்டு மோன நிலையில் இருந்தார்.  எல்லாமே அசாத்தியமான அமைதியுடன் இருக்க, திடீரென்று அவர் காதுகளில் ‘தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்  நாராயணன்’ என்று ஒரு குரல் கேட்டது. அதிர்ந்துபோய், யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் அங்கிருந்து திருமால் பூவுலகிற்கு கிளம்பி விட்டார்.

சாமரம் வீசிக்கொண்டும், அவரது கை கால்களை இதமாகப் பிடித்துக்கொண்டும், அவருக்கு பலவிதங்களில் பணிவிடைகள் செய்துகொண்டிருந்த  அனைவருக்கும் திடீரென்று அவர் அங்கில்லை என்றவுடன் பதற்றம் உண்டாயிற்று. அவர்களுள் அதிகம் துணுக்குற்றவர் கருடன். கருடனுக்கு  ஆச்சர்யமாம். தானில்லாமல் திருமால் எங்கும் செல்ல மாட்டாரே. இப்பொழுது திடீரென்று எங்கு சென்றுவிட்டார் என்று அதிர்ந்துபோய்விட்டாராம்.

ஒவ்வொரு உலகமாய் சென்று திருமாலைத் தேடினாராம். எங்கும் திருமால் இல்லாது போகவே, பூவுலகில்தான் எண்ணிலடங்கா பிரச்னைகள்.  அதனால் அங்கே தான் போயிருப்பார் என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு பூமியை நோக்கி வந்தார். அவரது வேகத்திற்கு  நேரடிப்பொழுதில் பூமிக்கு வந்து சேர்ந்த கருடன், தான் கண்ட காட்சியில் மலைத்துப்போய் நின்றுவிட்டார். பூமி முழுவதும், இண்டு இடுக்கு  என்றில்லாமல் ஒவ்வொரு இடத்திலும் சிங்கமுகம் தெரிந்ததாம். அப்படி பூமியை அதற்கு முன்னர் கருடன் பார்த்ததில்லை என்பதினால் இது  கண்டிப்பாக   திருமாலின் வேலைதான் என்றுணர்ந்தார்.  

திருமாலின் பராக்ரமத்தின் மீது எள்ளளவும் சந்தேகம் இல்லாததினால் கண்ணிமைக்கும் நேரத்தில் கருடன் அனைத்து சிங்க முகங்களுக்கும்  வாகனமாகச் சென்றமர்ந்தார்.
கருடன் நினைத்ததுபோல, தன்னுடைய பக்தனாம் பிரஹலாதன். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என் நாராயணன்’ என்று கூறியதைக்  கேட்ட அதே நொடி, பூமியில் இருந்த உயிருள்ள மற்றும் உயிரில்லாத அனைத்துள்ளும் வந்து நிறைந்து நின்றவன் அந்த நாராயணனேதான்.

பூமியில் இருந்த அனைத்திலும் சிங்கமுகத்தைப் பார்த்த கருடனால். அந்த சிங்கமுகத்தோன் பக்தப் பிரஹ்லாதனின் தந்தையான ஹிரண்ய கசிபு  என்ற அந்த அசுரனை கண்ணிமைக்கும் நேரத்தில் வதம் செய்த கோலத்தைக் காண முடியவில்லை. நரசிம்ம அவதாரம் முடிந்து விஷ்ணுவை அவரது  இருப்பிடமாம் வைகுண்டத்துக்கு அழைத்துச்சென்றுவிட்ட போதிலும் கூட, கருடனுக்கு இந்த ஏக்கம் தீராமல் மனதினை உறுத்திக்கொண்டே  இருந்ததாம்.

பூமியில் சிறு பாறைகளாலான குன்றுகள் நிறைந்த பகுதி ஒன்றுக்கு வந்து, ஒரு குன்றின் மேலேறி நின்று, தீவிரமாகத் தவம் புரியத் தொடங்கினார்  கருடன். தவத்தின் வெப்பம் மூவுலகத்தையும் தகித்தது. கருடனின் குறையைத் தீர்க்க பெருமாள், லட்சுமி நரசிம்மராக தோற்றம் அளித்தார்.    தன்னுடைய நாயகன் காட்சி தந்ததும், கருடன் மகிழ்ச்சிப் பெருக்கில் மிதந்தார். தானே வானில் சிறகடித்துப் பறப்பது போல் உணர்ந்தார். அந்திலியில்  தான் கண்ட இந்த தோற்றத்தை மக்கள் அனைவரும் எக்காலத்திலும் காண
வேண்டுமென்று அருள் புரிய வேண்டினார்.

கருடன் கேட்டுக் கொண்டபடி பகவான் சாந்த மூர்த்தியாகக் காட்சியளிக்க ஒப்புக் கொண்டார். அவரே அந்திலி லட்சுமி நரசிம்மர். பாஞ்சராத்ர ஆகம  முறைப்படி பூஜை புனஸ்காரங்கள் நடைபெறும். அந்திலி  நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கருட  பகவானின் கடும் தவத்தினால் உருவான கோயில் என்பதினாலோ என்று நாம் ஆச்சர்யப்படும் விதத்தில் அந்திலி சிங்கபிரான் கோயில் அமைந்துள்ள  சிறு குன்றானது  கருட வடிவத்திலேயே அமைந்துள்ளது.

பெண்ணையாற்றின் கரையினில் அமைந்துள்ள இந்தக் கோயிலானது பல அதிசயங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. பல யுகங்கள் கடந்து, இந்தக்  கோயிலினைப்பற்றிய, குறிப்புகள் ஞானத்தில் சிறந்த பக்திமானான வியாஸராஜருக்கு கனவில் வந்தது என்பது இந்தக் கோயிலின் அதிசயங்களும்  தலையாய ஒன்றாகும். கனவில்தான் உணர்ந்த குறிப்புகளினை வழிகாட்டிகளாகக் கொண்டு வ்யாஸராஜர் மத்வ சம்பிரதாயத்தினை சார்ந்தவர். பிரம்ம  தேவனால் வகுக்கப்பட்ட  வைஷ்ணவ மரபுகள் மத்வாச்சார்யாரால் பிற்காலத்தில் போற்றிக்கொண்டாடப்பட்டது.

மத்வாச்சார்யாரால் நிறுவப்பட்ட மரபு என்பதினால் ‘மத்வ மரபு’ என்று இன்றும் பலரால் பின்பற்றப்படுகின்றது. மத்வ மரபினைச் சார்ந்தவரான  வ்யாஸராஜர் சிதிலமடைந்திருந்த அந்திலி சிங்கபிரான் கோயிலினைப் புதுப்பித்து மேலும் பல மூர்த்திகளின் விக்ரகங்களை அங்கு பிரதிஷ்டை  செய்தார்.   ‘அந்தம் இலி’ என்ற பதத்திற்கு ‘முடிவு இல்லாதது’ என்று பொருள். ஆதி அந்தம் இல்லாத பராக்ரமம் நிறைந்தவனான சிங்கபிரானுக்கு,  மங்காப் புகழ் நிறைந்தவரான வ்யாஸராஜர் அமைத்த கோயிலானது, இன்றளவும் நிலைத்து நின்று பக்த கோடிகளை காத்து வருகின்றது. சனாதன  தர்மத்தினை நிலைநிறுத்தும் பொருட்டு வ்யாஸராஜர் இந்தியாவில் பல இடங்களில் ஹனுமனுக்கு கோயில்கள் அமைத்துள்ளார். அந்திலி  நரசிம்மபிரான் கோயிலிலும் வ்யாஸராஜர் மிகவும் விசேஷமான அனுமன் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்துள்ளார்.

 கருடன் கடுந்தவம் புரிந்து காண்பதற்கரிய சிங்கபிரான் ரூபத்தினை தரிசனம் செய்ததினால், கருடனுக்கு அந்திலியில் மிகுந்த முக்கியத்துவம்  அளிக்கப்படுகின்றது. இங்குள்ள எண்கோணப்பட்டை வடிவில் ஓங்கி உயர்ந்து காணப்படும் கருடஸ்தம்பம் (தூண்) இந்தக் கோயிலின் பல சிறப்பு மிக்க  அம்சங்களில் முக்கியமானதாகும். வருடத்தின் எல்லா நாட்களிலும் சந்நதிக்குள் அமைந்துள்ள மூலமூர்த்தியான லட்சுமி நரசிம்மனின் மீது சூரியனின்  ஒளி மிகவும் துல்லியமாகப் படுவதென்பது அந்திலி நரசிம்ம பிரான் கோயிலின் மற்றொரு சிறப்பாகும்.

  தீராத கடன் தொல்லையினால் அவதிப்படுபவர்கள் அந்திலி நரசிம்மபிரானின் பிரார்த்தனை செய்துகொண்டு சிங்கபிரானின் ருணவிமோசன  ஸ்லோகத்தினை மனமார்ந்த நம்பிக்கையுடன் 48 நாட்களுக்கு நித்தம் ஒன்பது முறை கூறிவர, கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம் என்பது  ஐதீகம். எதிரிகளினால் பாதிப்படைந்தவர்கள் அல்லது எதிரிகள் தமக்கு தீம்பிழைப்பதாகக் கருதுபவர்கள், அந்திலி கோயில் சிங்கபிரானையும்,  கருடனையும் ஒன்பது மாதங்கள் தரிசித்து வந்தால் அத்தகைய மனப்பிராந்திகளிலிருந்து விடுபடலாம். கிரஹநிலைகள் காரணமாக உண்டாகும்  தோஷங்களிலிருந்து விடுபட விரும்புபவர்கள், அந்திலி சிங்கபிரான் கோயில் ஆஞ்சநேயருக்கு 14 வாரங்கள் இடைவிடாது வியாழக்கிழமைதோறும்  வடை மாலை சாற்றி தங்கள் நிலையி்ல் முன்னேற்றம் காணலாம்.

மனநோயினால் பீடிக்கப்பட்டிருப்பவரை அந்திலி சிங்கபிரான் கோயிலுக்கு அழைத்து வந்து கருட ஸ்தம்பத்தினை பதினெட்டு முறை வலம்வரச் செய்ய  வேண்டும். பின்னர் சிங்கபிரான் சந்நதியில் அவர்களது முகத்தில் நீரை தெளிக்க வேண்டும். கருடன் ‘வேத புருஷன்’ என்று கொண்டாடப்படும்  ஞானத்தில் உயர்ந்தவர். ஆதலால், மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு சிறந்த நிவாரணமாக இந்தப் பிரார்த்தனை கருதப்படுகின்றது.

கருடன் தீர்க்கமான பார்வை உடையவர். கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.   கருட த்ருஷ்டிகள் எட்டு வகைப்படும்.   1.விசாலா  -புன்னகை பூத்த பார்வை,  2.கல்யாணி - மான் போன்ற பார்வை,  3.தாரா - குருக்குப் பார்வை,  4.மதுரா - அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை,   5.போகவதி, தூக்க கலக்கமான பார்வை,  6.அவந்தீ - பக்க வாட்டுப் பார்வை,  7.விஜயா - கணவன் மனைவியிடையே நேசத்தைப் பூக்கச் செய்யும்  பார்வை,  8. அயோத்யா - வெற்றியைத் தரும் பார்வை.  

இவ்வளவு சிறப்புகள் உள்ள கருட பகவானைப் பற்றி அறியாமல் இருப்பது சரிதானா?

கண் சம்பந்தப்பட்ட நோய்களினால் அவதியுறுபவர்கள் கருட ஸ்தம்பத்தினை பதினெட்டு ஞாயிற்றுக்கிழமைகள் ஒன்பது முறை வலம்வர கண் சார்ந்த  பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. இதயம் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் அந்திலி கோயிலில் நிறுவப்பட்டுள்ள கருட ஸ்தம்பத்தினை  மனதில் நிறுத்தி ஆத்மார்த்தமாக நித்தம் பூஜிக்க வேண்டும். வானத்தின் எட்ட முடியாத உயரத்திலும் எளிதாகப் பறக்கக்கூடிய கருட பகவான்  இத்தகைய கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணம் அளிப்பதாகக் கருதப்படுகின்றது. மேலே கூறப்பட்டுள்ள பிரார்த்தனைகள் மாதந்தோறும் ஸ்வாதி  நட்சத்திரத்தன்று செய்வது உத்தமம்.

தோஷ நிவர்த்திக்காக பிரார்த்தனை செய்துகொண்டு அவற்றை நிறைவேற்றுபவர்கள், பிரதோஷ காலங்களில் மேற்கூறப்பட்ட பரிகாரங்களைச்  செய்யலாம்.  கருடனுக்கும் ஸ்வாதி நட்சத்திரம் மிகவும் உகந்தது என்பதினால் அந்திலி கோயிலில் சிங்கபிரானுக்கும் கருடனுக்கும் நேர்த்திக்கடன்  செலுத்த விரும்புபவர்கள் ஸ்வாதி நட்சத்திரம் நிறைந்த நன்னாட்களில் அவற்றை செலுத்துவது ஏற்புடையது. வருடந்தோறும் நரசிம்ம ஜெயந்தி அன்று  அந்திலி கோயில் சிங்கபிரானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன.

கருடனை உபாசனா தெய்வமாகக் கொண்டவர்களுக்கு அந்திலி கோயில் ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது. தகுந்த குருவின் மூலம் உபதேசம்  பெற்று, கருட மந்திரம் மூலம் சக்தியேற்றப்பட்ட தகடுகளை அஸ்திரவாரமாகக் கொண்ட கருட ஸ்தம்பத்தின் அருகில் அமர்ந்து கருட மந்திர ஜபம்  புரிபவர்களுக்கு வேண்டியது அனைத்தும் கிட்டும் என்பது திண்ணம். அவ்வையார் தனக்கு ஆதரவளித்த பாரி மகள்கள் இருவரையும்  இத்தலத்திலேதான் மூவேந்தர்களையும் வரவழைத்துத் திருமணம் நடத்தி வைத்தார்.

அவர் விநாயகர் அகவலைப் பாடியதும் இங்குதான். திருக்கோவிலூர் ரெயில் நிலையம் உள்ள கீழூர், அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. இங்கு  சம்ஹாரம் செய்யப்பட்டவன் அந்தகாசுரன். இங்கு மாத்வ சுவாமிகள் மடமொன்று உள்ளது. பிள்ளை வரம் வேண்டி இங்கே பிரார்த்தனை செய்து  கொண்டு நிறைய பெண்கள் வருகிறார்கள்.  400 வருடங்களுக்கு முன்பு அந்திலி ஆச்சாரியார் என்பவர் இக்கோயிலில் தங்கி பூஜைகள் செய்து வந்தார்.  அவரின் நினைவாக இக்கோயிலில் அவரின் உருவ சிலை பொறிக்கப்பட்டுள்ளது.

ஜாதகம், தோஷங்களில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு ஒரு விஷயம் எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கும். அதாவது, ஜாதகத்தில் நல்ல காலம்  போட்டிருக்கிறதே ஆனால் நிகழ்காலம் அப்படி இருக்கவில்லையே என்பதுதான் அது. அப்படி கருதுபவர்களில், பலருக்கு கடன் தொல்லை,  சச்சரவுகளால், வீட்டில் சண்டை என குடும்ப உறவுகள் கலங்கப்படும் வகையில் இருக்கும். சில சமயங்களில் பேசித் தீர்க்கவேண்டிய விஷயங்களைக்  கூட சண்டையில் கொண்டுவந்து, ஆத்திரத்தில் நடக்கக்கூடாது நடந்துவிடும் அளவுக்கு போய்விடும். அத்தகைய பிரச்னைகளால் தவித்து  வருகிறீர்களா நீங்கள். கவலைய விட்டு, குடும்பத்துடன் இந்த திருத்தலத்திற்கு சென்று வந்தால், குடும்பப் பிரச்னைகள் நீங்கி, நல்ல காலம் பிறக்கும்.

அந்திலி சிங்கபிரான் கோயில் விழுப்புரம் - காட்பாடி மார்க்கத்தில் உள்ளது. அந்திலி சிங்கபிரான் கோயிலுக்குச் செல்ல விரும்புபவர்கள், நூற்றியெட்டு  திவ்ய தேசங்களுக்குள் ஒன்றான ஆழ்வார் பாடல் பெற்ற வைணவத்தலமான திருக்கோவிலூர் ரயில் நிலையம் சென்றடைய வேண்டும். அங்கிருந்து  சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்திலி சிங்கபிரான் கோயிலை சாலை மூலமாக அடையலாம்.
 
( தரிசனம் தொடரும்)

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

 • 13-12-2019

  13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • erimalai_11

  தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

 • china_isaai1

  150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

 • german_paanddaa1

  ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்