SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்னிக்கு விடைகொடுப்போம் வருணனை வரவேற்போம்!

2019-09-05@ 15:32:26

வசந்த காலம் மகிழ்ச்சி நிறைந்த காலமாகும். பூக்கள் அதிகமாக மலர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்றன.

வசந்தம் கொண்டாடுதல் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வரும் விழாவாகும். சித்திரை வைகாசி மாதங்களில் வசந்த விழா  கொண்டாடப்படுகிறது. பெரிய ஆலயங்களில் மூன்று நாட்களுக்குக் குறையாமல் வசந்த விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. பல ஆலயங்களில்  வசந்த விழாவிற்காக மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த மண்டபங்கள் பெரிய தோட்டத்தின் நடுவில் அமையப்பெற்றிருக்கிறது.

நடுவில் அமையும் மண்டபம் உயர்ந்த மேடை மீது கட்டப்பட்டிருக்கும். மேடையைச்சுற்றி அகழிபோல் நீரைத் தேக்கி வைத்து அதில் பூக்களை இட்டு  வைப்பர். மேடைமீது அமையும் மண்டபம் பதினாறு கால்களைக் கொண்டதாக அமையும். மண்டபத்தின் மீது ஸ்ரீவிமானம் அமைந்திருக்கும்.  விழாக்காலங்களில் மண்டபத்தைச் சுற்றிலும் நீரில் நனைத்த வெட்டிவேர் தட்டிகளை வைப்பர். இதனால் அவ்விடம் குளிர்ச்சியாக இருக்கும்.

உச்சிக்காலத்தில் இறையுருவங்களை இங்கே எழுந்தருளுவித்துப் பெரிய அளவிலான அபிஷேகம் நடைபெறும்.  அபிஷேகம் முடிந்ததும் சந்தனத்தை  அணிவித்து மருக்கொழுந்தால் அலங்காரம் செய்வர். அதன் பின் பன்னீர் தெளிப்பர். வெள்ளரிப் பிஞ்சு, நீர்மோர், பானகம் தயிர்சாதம் போன்றவற்றைப்  படைப்பர். வெப்பத்தைத் தணிவிக்கச் செய்யும் விழாவாகவே இது நடைபெறுகிறது.

சென்னை நகரிலுள்ள ஆலயங்களில் வசந்த விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. சிறிய செய்குளங்களைப் பிராகாரத்தில் அமைப்பர். அதன் நடுவில்  சிறிய நீராழி மண்டபம் அமைப்பர். குளத்தைச் சுற்றிலும் பூந்தொட்டிகளை வைத்து அழகுபடுத்துவர். மாலையில் சுவாமி அம்மனுக்கு அலங்காரம்  செய்து பெரிய தீபாராதனை
நடைபெறும்.

பின்னர் சுவாமியை அந்த செய்குளத்தைச் சுற்றி ஒற்றை எண்ணிக்கையில் மூன்று முறைக்குக் குறையாமல் சுற்றிவரச் செய்வர். சுற்றி வரும் போது,  முன்னாளில் ஆடல் மகளிரின் ஆடல், பாடல்கள் நிகழ்ந்து வந்தன. இப்போது நாதஸ்வரம், வேதகோஷம், திருமுறை ஓதுதல் ஆகியன  நடைபெறுகின்றன. வசந்த விழா முன்னாளில் கலைஞர்களின் ஆடல் பாடல் திறத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி மகிழ்ச்சியூட்டும் விழாவாக இருந்து  வந்ததை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். வசந்தம் என்பது மகிழ்ச்சியின் அடையாளம் ஆதலின் அந்தப் பெயரை மக்கள் சூடினர். மன்மதனுக்கு  வசந்தன் என்பது பெயர்.

வசந்தம் கலைகளின் வெளிப்பாடாக அமைந்து மக்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதால் கலைகளின் தெய்வமான சரஸ்வதியை வசந்தி என்றும் வசந்தா  என்றும் அழைக்கின்றனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் வீர வசந்த வைபோக வல்லாள மகாராஜனுக்குக் குழந்தையாகத் தோன்றியதால்  அருண வசந்தர் என்று அழைக்கப்படுகிறார்.   குயில்கள் வசந்த காலத்தை வரவேற்றுப்பாடுகின்றன. அதனால் வசந்த கோகிலங்கள் என்று  அழைக்கப்படுகின்றன. அம்பிகைக்கு வசந்த வல்லி, வசந்த நாயகி எனும் பெயர்கள் வழங்குகின்றன.

செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள வல்லம் எனும் திருத்தலத்திலுள்ள மலையில் குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வசந்தீஸ்வரம்  என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.

பூசை. ச. அருணவசந்தன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்