SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த கோயில் என்ன பிரசாதம் ?

2019-09-05@ 14:41:15

சிதம்பரம் நடராஜர் கோயில்  - சம்பா சாதம், கத்தரிக்காய் கொத்சு, உளுந்து வடை, கல்கண்டு சர்க்கரைப் பொங்கல்

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா? எனும் கோபால கிருஷ்ணபாரதி அவர்கள் தில்லை நடராஜப் பெருமானைப்பற்றி இயற்றிய பாடல் வெகு பிரசித்தம். சபாபதிக்கு மட்டுமல்ல நடராஜப் பெருமானுக்கு தினமும் ஆறு கால பூஜைகளிலும் நிவேதிக்கப்படும் நைவேத்தியங்களும்  வெகு பிரசித்தமானவை. அதை அறியும் முன் தில்லை தல வரலாற்றை அறிவோம்.

ஈசன் கனகசபையில்  - சபாநாயகர் என்றும், திருமூலட்டானத்தில்  - திருமூலநாதர் என்றும், அம்பிகை கனகசபையில்  - சிவகாமியாகவும், திருமூலட்டானத்தில்  - உமையம்மையாகவும் அருட்பாலிக்கும் திருத்தலம்  சிதம்பரம். சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோயில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் தில்லை சிதம்பரம் கோயிலின் உள்ளே அமைந்திருக்கிறது. நடராஜப் பெருமானின் சந்நதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பி நின்றால் கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியைக் காணலாம். இரண்டு சந்நதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோயிலின் சிறப்பாகும்.

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம். தரிசிக்க முக்தி தரும் தலம். பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம். ஆதாரத் தலங்களில் இதய தலமாக விளங்கும் தலம்.  அம்பாள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என முப்பெருஞ் சக்தியாகக் காட்சி தரும் தலம். சைவர்களுக்கு கோயில் என்று அறியப்படும் தலம். இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம்தான் சிதம்பரம்.

இந்த சிதம்பரம் கோயில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு ராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது. கோயில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்கு கோபுரங்களில் 108 நடன பாவங்களையும் அறிவிக்கும் சிற்பங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

 சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை சிதம்பரம் கோயிலுக்குள் எழுந்தருளினர் என்று தல வரலாறு கூறுகிறது. மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும், தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும், வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும், கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும் வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள நடராஜப்பெருமானை வழிபட்டுள்ளனர்.
தில்லை சிதம்பரத்தில் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருப்பெயர் மூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்).

அர்த்தஜாம வழிபாடு முடிந்தவுடன் எல்லக் கோயில்களிலுமுள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால் இந்த பெயர் அமைந்தது. திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி திருப்பெயர் உமையம்மை. நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம் கனகசபையாகும். மற்றவை 1) திருவாலங்காடு - ரத்தினசபை, 2) மதுரை - வெள்ளிசபை, 3) திருநெல்வேலி - தாமிரசபை, 4) திருக்குற்றாலம் - சித்திரசபை. இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு இக்கோயிலிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை முறையே சிற்சபை (சிற்றம்பலம்), 2) கனகசபை, 3) ராஜசபை, 4) தேவசபை, 5) நிருத்தசபை ஆகியவையாகும்.

சிற்சபை (சிற்றம்பலம்) நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும். முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன் இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் “லெய்டன்” நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. கனகசபை (பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்துள்ளது. இங்கு ஸ்படிகலிங்கத்திற்கு நாள்தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது. இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் “இடங்கழி நாயனார்” வரலாற்றில் கூறுகின்றார்.

தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர். நாம் தினம், 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

ராஜசபை என்பது ஆயிரங்கால் மண்டபம். ஆண்டுதோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில் நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவார். தேவசபை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விமானம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது. நிருத்தசபை நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. ஊர்த்துவ பெருமானின்
அற்புதத் திருமேனி இங்கு உள்ளது.

மூன்றாம் பிராகாரத்தில் சிவகங்கை திருக்குளத்திற்கு மேற்கே அம்பிகை சிவகாமசுந்தரியின் சந்நதி சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடையுடுத்தி ஒரு தனிக்கோயிலாக பிராகாரத்துடன் அமைந்து விளங்குகிறது. கோயிலின் வடமேற்குத் திசையில் அம்பிகை சிவகாமசுந்தரியின் கோயிலை ஒட்டியும், வடக்கு கோபுரத்தை ஒட்டியும் முருகன் கோயில் அமைந்து விளங்குகிறது. ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானை இருபக்கங்களிலும் எழுந்தருள  மயிலின் மீது  ஆரோகணித்து அருட்காட்சி தருகிறார்.  இந்த முருகனின் திருவுருவம் ஒரே கல்லினால் அமைந்ததாகும்.

சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும்.

இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம்  என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும். சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த பெரும் விழாக்களாகும்.

தினந்தோறும் நடராஜப்பெருமானுக்கு 6 கால பூஜையும் நைவேத்யமும் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு  சம்பா சாதம், கால சந்தி காலை 9 மணி சுமாருக்கு சம்பா சாதம், இரண்டாம் காலம் காலை சுமார் 11 மணிக்கு சம்பா சாதம், வெண்பொங்கல், வெல்ல சர்க்கரைப் பொங்கல். மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் சம்பாசாதம், தயிர் சாதம், மாலை 6 மணிக்கு சம்பாசாதம், புளிசாதம், இரவு 7.30 மணிக்கு (இரவு 2ம் கால பூஜை) சம்பா சாதம், கத்தரிக்காய் கொத்சு, கற்கண்டு சாதம், உளுந்து வடை, (இந்த பூஜை சிதம்பா ரகசியத்திற்கும் சேர்த்து செய்யப்படுகிறது), 9 மணிக்கு தேங்குழல், அப்பம், அதிரசம், முறுக்கு வடை(மிளகு சேர்க்காமல் அனுமார் வடை), அர்த்த ஜாமபூஜை இரவு 10 மணியளவில் சம்பாசாதம், பால் சாதம், வடை, பாயசம், தேங்காய் சாதம், பழம், வெற்றிலை பாக்கு மடித்துக்கட்டிய பட்டி போன்றவை நிவேதிக்கப்படுகின்றன. தில்லைவாழ் தீட்சிதர்கள் நடராஜப் பெருமானையும் சிவகாமி அம்பிகையையும் தாத்தா பாட்டி போன்று பாவிப்பதால் இந்த வெற்றிலைப்பட்டியை சமர்ப்பிக்கிறார்கள்.
இனி இரவு இரண்டாம் கால பூஜையில் நிவேதிக்கப்படும் பிரசாதங்களின் செய்முறையை அறிவோம்.

1. சம்பாசாதம்

தேவையான பொருட்கள்.

பச்சரிசி - 4 ஆழாக்கு
நெய் - 100 கிராம்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

பச்சரிசியை சாதமாக வடித்து ஆற வைத்துக் கொள்கிறார்கள்.  மிளகு, சீரகத்தை இரண்டாகப் பொடித்துக் கொள்கிறார்கள். நெய்யைக் காய வைத்து மிளகு, சீரகப்பொடியை அதில் வறுத்து  சாதத்தில் போட்டு, தேவையான உப்பையும் சேர்க்கிறார்கள். மணக்கும் சம்பா சாதம் தயார்.

2. கத்தரிக்காய் கொத்சு

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - கால் கிலோ
புளி - சிறு எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை- 1 ஆர்க்கு
காய்ந்த மிளகாய் - 3
நல்லெண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க மிளகாய், வெந்தயம், தனியா - தலா 25 கிராம்.

புளியை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்கிறார்கள். நல்லெண்ணெயில் கடுகு தாளித்து , கருவேப்பிலை சேர்த்து    கத்தரிக்காயை நறுக்கி நன்கு வதக்கிக் கொள்கிறார்கள்.  கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் வறுத்து  அரைத்த பொடியை அதில் சேர்க்கிறார்கள்.     பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலையும், உப்பையும் அதில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கிறார்கள். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும் மத்தால் நன்கு மசித்து 3 காய்ந்த மிளகாயைக் கிள்ளி கருக வறுத்து அதில் சேர்க்கிறார்கள்,  கம கமக்கும் கத்தரிக்காய் கொத்சு பிரசாதம் தயார்.

3. உளுந்து வடை

தேவையான பொருட்கள்.

உளுந்து - 2 ஆழாக்கு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

உளுந்தை ஊறவைத்து வெண்ணெய் போல் மைய கெட்டியாக அரைத்தெடுத்து தேவையான உப்பு சேர்த்து கலந்து  ஒரே  பெரிய வடையாகத் தட்டி எண்ணெயில் மொறு மொறுவென பொரித்தெடுக்கிறார்கள்.. மயக்கும் உளுந்து வடை பிரசாதம் தயார்.

4. கல்கண்டு சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்

அரிசி - 2 ஆழாக்கு
பயற்றம்பருப்பு - 1/4 ஆழாக்கு
கற்கண்டு - 400 கிராம்
நெய் - 1/4 கிலோ
ஏலக்காய் - 3
ஜாதிக்காய் - 1/4
குங்குமப்பூ - 1 சிட்டிக்கை

அரிசியையும், பயற்றம் பருப்பையும் நெய்யில் வாசனை வரும் வரை வறுக்கிறார்கள். பின் அதை நன்கு குழைய வேக வைக்கிறார்கள். வெந்ததும் கற்கண்டைத் தூள் செய்து சிறு தீயில் சுமார் 1 மணி நேரம் கொதிக்க வைக்கிறார்கள். பின் ஏலக்காய், ஜாதிக்காயைப்பொடித்து நெய்யில் வறுத்து குங்குமப்பூவை பாலில் இழைத்து அதில் சேர்க்கிறார்கள். அதிம் மீதமுள்ள நெய்யில் முந்திரியை பொன்னிறமாக வறுத்து சேர்த்துக் கிளறுகிறார்கள். நாவெல்லாம் இனிக்கும் கல்கண்டு சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் தயார். இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும். சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் சென்று அடையலாம்.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்