SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விநாயகர் வழிபாடு வெற்றியை தரும்!

2019-08-26@ 13:07:47

* என் கணவர் வேலையில் இருந்தபொழுது சில ஃபிளாட்டுகளை வாங்கிப் போட்டுள்ளார். அந்த மனைகளை விற்று தற்போது வீடு வாங்க இயலுமா? நெருங்கிய உறவினர் மத்தியில் கௌரவம் உயரும் வகையில் எப்பொழுது வீடு வாங்குவோம்? எங்கள் வாழ்நாளில் நாங்கள் அந்த வீட்டை அனுபவிப்போமா? மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- ரூபா, கும்பகோணம்.

அடுத்தவர்களின் வார்த்தைக்காக நாம் வாழக்கூடாது. நமது மனதிற்கு எது நிம்மதியைத் தருமோ அந்த வாழ்வினையே நாம் வாழ வேண்டும். உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ராகு பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து தசையை நடத்தி நற்பலனைத் தந்து கொண்டிருக்கிறார். அவர் இறங்கிய பணியில் வெற்றியைப் பெற இயலும். அவருடைய ஜாதகத்தில் வீடு கட்டுகின்ற யோகத்தினைச் சொல்லும் நான்காம் வீட்டின் அதிபதி சந்திரன் 12ல் அமர்ந்திருப்பது அத்தனை சிறப்பான யோகத்தினைத் தராது. சொந்தமாக வீடு கட்டுவதில் உங்கள் கணவரின் மனம் அத்தனை ஈடுபாடு கொள்ளாது. உங்கள் பிறந்த குறிப்பில் திங்கள் இரவு விடிந்தால் செவ்வாய்கிழமை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அனுப்பியிருக்கும் ஜாதகமோ செவ்வாய் இரவு விடிந்தால் புதன் என்ற கணக்கினைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இதில் எது சரியானது என்பதனைத் தெரிந்துகொண்டு அதன்பிறகு வீடு கட்டும் முயற்சியில் இறங்குவது நல்லது. உங்கள் கணவரின் ஜாதக பலத்தின்படி நேரம் என்பது நன்றாக உள்ளது. வாங்கிப்போட்ட மனைகளை விற்று வேறுவிதமாக உருமாற்றம் செய்து வைத்துக் கொள்ளலாம். புதிதாக வேறு வீடு கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவருக்கு எந்தவிதமான உபயோகமும் இல்லை. அநாவசியமான கௌரவத்திற்கு ஆசைப்பட்டு ஆரோக்யத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கணவரின் விருப்பம் எதுவோ அதன்படி செயல்படுங்கள். பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

* என் மகளுக்கும் அவளது அத்தை மகனுக்கும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லை. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். சொந்தத்தில் திருமணம் செய்வதால் குழந்தை பிறப்பதில் ஏதேனும் பிரச்னை உண்டாகுமா? இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாமா? வேண்டாமா? ஒரு நல்ல வழி கூறுங்கள்.
- சுபலட்சுமி, குடியாத்தம்.

உறவுமுறையில் இல்லாமல் திருமணம் செய்யும் தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட பிரச்னை என்பது உண்டாகிறது. இது அவரவர் ஜாதக பலத்தினைப் பொறுத்துதான் அமையுமே தவிர, சொந்தம் என்பதால் மட்டும் பிரச்னை உண்டாகிவிடாது. திருமணத்திற்கு பத்துப்பொருத்தம் என்பதைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் குறிப்பிடுகின்ற ரஜ்ஜூப்பொருத்தம் என்பதும் அதில் ஒன்று. அவரவர் ஜாதக அமைப்பின் படியும், கிரஹ நிலைகளின் அமர்வினைக் கொண்டும்தான் பொருத்தம் என்பதைப் பார்க்கவேண்டும். கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளுக்கும், பூரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது அத்தை மகனுக்கும் ஜாதக ரீதியான பொருத்தம் என்பது நன்றாக உள்ளது. கும்ப ராசிக்கு, மேஷ ராசி வசியம் என்பதால் இந்த இரு ராசியினரும் திருமணம் செய்துகொள்வதால் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பார்கள். அநாவசியமான பயத்தினை விடுத்து குலதெய்வத்திடம் உத்தரவு பெற்று இவர்களது திருமணத்தை நடத்துங்கள். வருகின்ற மாசி மாத வாக்கில் உங்கள் மகளின் திருமணத்தை அவரது மனம் விரும்பும் வரனோடு நல்லபடியாக நடத்தும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குலதெய்வ வழிபாடு என்பதே உங்கள் மனதில் உள்ள குழப்பத்தினைப்
போக்கும் தலைசிறந்த பரிகாரம் ஆகும்.

* இரண்டரை வயதே ஆகும் என் பேரனுக்கு 9வது மாதத்தில் இரண்டு அறுவை சிகிச்சையும், 11வது மாதத்தில் ஒரு பெரிய அறுவை சிகிச்சையும் நடந்தேறின. சிறுநீரகக் கோளாறு உருவாகி இடது சிறுநீரகத்தை விட வலது சிறுநீரகம் சிறுத்துக் கொண்டிருப்பதாகவும் போகப்போக பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் ஆங்கில மருத்துவர்கள் கூறுகிறார்கள். சித்த மருத்துவர்கள் குழந்தை வளர வளர சரியாகிவிடும் என்றும் அறுவை சிகிச்சையால் பலன் இல்லை என்றும் கூறுகிறார்கள். மிகுந்த குழப்பத்திலும் பயத்திலும் உள்ளோம். தகுந்த வழிகாட்டி உதவிடுங்கள்.
- வெங்கடேசன், சென்னை.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் கேதுவின் நிலை இதுபோன்ற பிரச்னைகளைத் தந்து கொண்டிருக்கிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுக்தியின் காலம் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்புடைய காலம் அல்ல. ஆரம்பத்தில் முதுகுத் தண்டுவடத்திற்கு கீழே உருவான கட்டியால் உண்டான பிரச்னையே இது அத்தனைக்கும் காரணமாய் அமைந்துள்ளது. சிறுநீரகங்களைப் பற்றிச் சொல்லும் எட்டாம் பாவகம் இவரது ஜாதகத்தில் நன்றாகவே உள்ளது. தற்போது நீங்கள் மேற்கொண்டு வரும் மருத்துவமுறையே போதுமானது. விடாமல் தொடர்ந்து அதே மருத்துவமுறையை பின்பற்றி வாருங்கள். குழந்தையின் மனதில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பது போன்ற மனநிலையை உருவாக்கிவிடாதீர்கள். மற்ற குழந்தைகளைப் போலவே விளையாட அனுமதியுங்கள். எல்லாப் பிள்ளைகளையும் போல இவரையும் நீங்கள் பள்ளியில் சேர்க்கலாம். எந்தவிதமான தவறும் உண்டாகாது. செவ்வாய் தோஷம் என்பது குழந்தையின் ஜாதகத்தில் கிடையாது. இது முழுமையாக கேதுவினால் உண்டான பிரச்னையே அன்றி மற்ற கிரகங்களால் அல்ல. தற்போது நடந்து வரும் ராகு புக்தியின் காலம் முடியும் வரை தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். அதன்பின்பு அதாவது 01.01.2022 முதல் மருந்து, மாத்திரைகள் எதுவும் குழந்தைக்கு தேவைப்படாது. உங்கள் மகன் மற்றும் மருமகள் இருவரின் ஜாதகத்திலும் புத்ர ஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடம் வலிமையாக உள்ளதால் குழந்தை தீர்க்காயுளுடன் வாழ்வான். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள விநாயகப் பெருமானின் ஆலயத்திற்குச் சென்று குழந்தையின் பெயரில் அர்ச்னை செய்து வழிபட்டு வாருங்கள். விநாயகருக்கு தும்பைப்பூ மாலை சாத்தி வழிபடுவதும் நன்மை தரும். இறைவனின் அருள் பரிபூரணமாக நிறைந்திருப்பதால் பயம்கொள்ள தேவையில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

 • peru_kovilll11

  பெருநாட்டில் பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 3000 ஆண்டுகால பழமை வாய்ந்த 21 கோபுரங்களுடன் கூடிய ஆலயம் கண்டுபிடிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்