SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புரி ஜகன்நாதருக்கு புனர்ஜன்மம்!

2019-08-22@ 10:43:32

அதெப்படி சாத்தியம்? மனிதர்கள்தான் பிறப்பார்கள்; இறப்பார்கள். இதர உயிரினங்களுக்கும் இதுதான் கதி என விதிக்கப்பட்டிருக்கிறது. இறைவனுக்குமா இப்படி? அதுவும் அகிலத்தையே அரசாட்சி செய்பவராகக் கருதப்படும் ஜகன்நாதர் இறந்து விடுவாரா? ஆம்... இறைவன் இறக்கிறார். அதுவும் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை! கேட்கும்போதே அதிர்ச்சியாக இருக்கிறதா? அந்த நெகிழ்ச்சி தரும் மகாத்மியத்தை அறிந்துகொள்ள, ஒடிஷா தலைநகரம் புவனேஸ்வரிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் இருக்கும் பூரி என்கிற புண்ணியத் தலத்திற்கு பயணிக்கலாம். வாருங்கள்... அந்த அடர்ந்த வனப்பகுதிக்கு உத்கல்  என்று பெயர். அங்கே பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் விசுவாவசுவும் ஒருவர். மிகச் சிறந்த திருமால் பக்தர். கானகத்தின் நடுவிலே அவர் ஓர் அபூர்வமான மரத்தைக் கண்டார்.

நீல நிறத்தில் அமைந்திருந்த அந்த அதிசய மரத்தை கிருஷ்ணராகவே கருதி அவர் வழிபட்டு வந்தார். யாருமறியாமல் ரகசியமாக பூஜைகள் செய்தார். நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகின. அதே சமயம் பூரி மன்னன் இந்திரத்யும்னன் கனவிலே பகவான் கிருஷ்ணர் தோன்றி, தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு பணித்தார். மெய் சிலிர்த்துப் போனான் மன்னன். எத்தனை பெரிய பாக்கியம்! ஜகன்நாதரே தனக்கு கோயில் எழுப்பு என்று கூறும் அற்புதம் வேறு யாருக்குக் கிட்டும்? என்று உடனே பணியைத் தொடங்கினான். இதுவரை எங்குமே இல்லாத திருவடிவில் அற்புதமாக கிருஷ்ணரின் விக்ரகத்தை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய விரும்பினான். பலவிதமான சிலைகளைப் பார்த்தான். எதுவுமே அவனுக்கு திருப்தி தரவில்லை. கருவறை நாயகனைத் தேடிக் கண்டுபிடிக்க நாற்புறங்களிலும் ஆட்கள் சென்றனர். எங்கிருந்தும் உற்சாகத் தகவல் வரவில்லை.

இந்திரத்யும்னனின் அமைச்சரான வித்யாபதிக்கு காட்டுக்கு நடுவே ஒரு கிருஷ்ணர் இருப்பது தெரிய வந்தது. அது தான் விசுவாவசு வழிபட்ட மர கிருஷ்ணர். விசுவாவசுவிடம் கேட்டுப் பார்த்தார் அமைச்சர். மானசீகமாக தான் வழிபடும் கண்ணனை அவர் எப்படித் தருவார்? அந்த மர கிருஷ்ணர் இருக்கும் இடத்தைக்கூட சொல்லவில்லை. எப்படியும் மன்னனுக்கு அந்தக் கிருஷ்ணரைத் தர வேண்டும் என சங்கல்பம் செய்தார் அமைச்சர். விசுவாவசுவுக்கு ஒரு அழகிய பெண் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொண்டார் வித்யாபதி. சிறிது சிறிதாக மாமனாரின் மதிப்பைப் பெற்று, அந்த மர கிருஷ்ணரை வழிபட அனுமதி கேட்டார். ஒருநாள் வித்யாபதியின் இரு கண்களையும் கட்டி அவனைக் காட்டிற்கு அழைத்துச் சென்றார் மாமனார். வித்யாபதி ரகசியமாக ஒரு காரியம் செய்தார். மாமனாருக்குத் தெரியாமல் செல்லும் பாதை நெடுக கடுகைத் தூவிக்கொண்டே சென்றார். கிருஷ்ணரை தரிசித்த பின் மீண்டும் வித்யாபதியின் கண்கள் கட்டப்பட்டன.

வீடு திரும்பினர். மழை பெய்து கடுகுகள் எல்லாம் செடிகளாயின. அதை அடையாளம் வைத்து வித்யாபதி கானகம் சென்று மர கிருஷ்ணரைத் திருடி இந்திரத்யும்னனிடம் தந்தார். மகிழ்ந்த மன்னன் அந்த சிலையை கோயிலில் வைக்க, அன்றே அந்த கிருஷ்ணர் காணாமல் போனார். புதிய இடத்தில் இருக்க விரும்பாமல், காட்டுக்கே திரும்பிச் சென்று விட்டார். கிருஷ்ணரைக் காணாதமன்னன் அதிர்ச்சியடைந்தான். அதே போன்ற புதிய சிலையை அமைக்க விரும்பினான். அப்போது முதியவர் ஒருவர், பெரிய மரத்துண்டுடன் மன்னனைக் காண வந்தார். அவர்தான் தேவசிற்பி விஸ்வகர்மா. தான் சிலை செய்து தருவதாகச் சொன்ன அவர், ஒரு நிபந்தனையும் விதித்தார். ‘‘சிலை செய்ய 21 நாட்கள் ஆகும். ஒரு தனியறையில் அதைச் செய்வேன். செய்து முடிக்கும் வரை யாரும் கதவைத் திறந்து பார்க்கக் கூடாது. உருவம் முழுமையடைந்ததும் நானாக வெளியே வருவேன்’’ என்றார்.
மன்னன் அதற்குச் சம்மதிக்க மரக் கட்டையுடன் தனியறையில் புகுந்தார் விஸ்வகர்மா. நாட்கள் நகர்ந்தன. அறையி லிருந்து சிலை செதுக்கப்படும் எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை.

சிற்பிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என மகாராணி குண்டிச்சா தேவி பயந்தாள். நிபந்தனையை மறந்து சட்டென்று கதவைத் திறக்க, விஸ்வகர்மா மறைந்து விட்டார். மரக்கட்டை மூன்று துண்டுகளாக, முற்றுப் பெறாத அமைப்பில் பலராமர், சுபத்ரா, ஜகன்நாத மூர்த்தங்கள் இருந்தன. இறைவன் திருவுளம் அதுதான் என நினைத்த விசுவாவசு, அந்த மூன்று முற்றுப் பெறாத சிலைகளையே கருவறையில் பிரதிஷ்டை செய்தான். அப்போது அசரீரியாக நாராயணன் குரல் ஒலித்தது. ‘‘என் வடிவத்தை யாரும் சிலையாக வடிக்க முடியாது. தேவசிற்பி விஸ்வகர்மா வடித்த இதே வடிவங்களிலேயே இக்கருவறையில் அருள்வேன். வைகுண்டத்தின் பரிபூரண சாந்நித்யம் இத்தலத்திலும் இருக்கும்’’ என்று கூறினார் திருமால். இப்பொழுதும் அங்கு கண்ணன், பலராமர், சுபத்ரா மூவருமே கை, கால் அவயங்களுடன் இருக்க மாட்டார்கள்.

மூன்று தனித்தனி தாரு(கட்டைகளாக), அதிலே கண், காது, மூக்கு வடிவமைக்கப்பட்டு அதைத்தான் ஜகன்நாதராக வழிபடுகிறார்கள்.
கறுப்பு நிறத்தில் வட்ட வடிவமான பெரிய கண்களுடன் ஜகன்நாதர் காட்சி தருகிறார். அந்த கண்கள் ச(க்)கதோலா, ச(க்)கனன்யனா என அழைக்கப்படுகின்றன. பலராமர் வெள்ளை நிறத்தில் தாமரைக் கண்களுடன், மஞ்சள் நிறத்திலுள்ள சுபத்ராவிற்கு அருகில் உள்ளார். ஜகன்நாதரது நீட்டிய கைகள் அவர் பக்தர்களை அரவணைத்துக் காப்பதைக் குறிக்கும். பெரிய கண்கள் எல்லாவற்றையும் காண வல்ல பரமாத்ம தன்மையைக் குறிக்கிறது. இவர்களைத் தவிர சுதர்சனர், ஸ்ரீதேவி, பூதேவி, நீலமாதவர் போன்றோரும் இங்கு அருளாட்சி செய்கின்றனர். ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பஞ்சலோகத்தாலும், சுதர்சனர் வெறும் கட்டை வடிவிலும் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களை வலம் வரும் குறுகலான பாதை சஹனமேலா எனப்படுகிறது. மேலா என்றால் திறப்பு என்று பொருள்.

ஜகன்நாதரை அனைவரும் அருகில் சென்று தரிசிக்கலாம். பூரியில் அருளும் இந்த ஜகன்நாதருக்கு 9 முதல் 12 வருடங்கள்தான் ஆயுட்காலம். அது என்ன கணக்கு? ஒன்பதிலிருந்து பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும். அப்படிப்பட்ட வருடத்தின் ஆடி மாதத்தில் பூரி ஜகன்நாதர் ஆலய கருவறையில் அருளும் ஜகன்நாத மூர்த்தியின் உயிரான பிரம்மாவை எடுத்து, புதிய ஜகன்நாத திருவுருவ மூர்த்திக்குள் செலுத்துகிறார். பழைய ஜகன்நாதரை கோயிலில் ‘வைகுண்ட்’ எனும் இடத்தில் புதைத்து விடும் சடங்கு நடைபெறுகிறது. புது ஜகன்நாதரை உருவாக்கும் சடங்கும், சிலிர்க்க வைக்கும் பாரம்பரியம் கொண்டது. சிலை செய்யப்படும் தாரு எனும் வேப்ப மரம் இருக்கும் இடத்தை இத்தலத்தில் அருளும் ஐம்பத்தோரு சக்தி பீடங்களுள் ஒன்றான விமலை பீட நாயகி, ஆலயத்தின் தலைமை பூசாரியின் கனவிலும் வேப்ப மரத்தின் உரிமையாளர் கனவிலும் வந்து கூறுவதும், நாகம் வந்து மரத்தை அடையாளம் காட்டுவதும் அற்புதங்களாக நிகழ்கின்றன.

குறிப்பிட்ட நல்ல நாளில் அந்த வேப்ப மரத்தருகே யாகங்கள் செய்து,  பூரி மன்னர் முதலில் தங்கக் கோடரியாலும், பின்னர் வெள்ளிக் கோடரியாலும், இரும்புக் கோடரியாலும் வெட்டி மரத்தை ஆலயத்துக்கு எடுத்து வந்து ஜகன்நாதரின் உருவச் சிலையை செதுக்கு கின்றனர். அப்போது பாதாள நரசிம்ம அஷ்டோத்திர அர்ச்சனையை அந்தணர்கள் ஓதுகின்றனர். இப்படி முதன்முதலாக வடித்த ஜகன்நாதரின் தோற்றம் உக்ர பார்வையாக இருந்ததால், நரசிம்ம க்ஷேத்ரம் எனவும் இத்தலம் வழங்கப்படுகிறது. எனவேதான் புது ஜகன் நாதரின் திருவுருவத்தை வடிக்கும்போது பாதாள நரசிங்க அஷ்டோத்திரம் ஓதப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக அந்த திருவுருவச் சிலைகளை செய்யும் தைத்தாபதி வம்சா வழியினர் 21 நாட்கள் விரதமிருந்து, நான்கு புறங்களிலும் மூடிய சுவர்களுக்கு இடையே, மேற்கூரையே இல்லாத ‘கோயிலி வைகுண்டா’ எனும் யானை நுழைவு வாயில் அருகிலுள்ள இடத்தில் திருவுருவங்களை செதுக்குகின்றனர்.

மகாபாரதத்தின் இறுதியில் வேடனின் அம்பால் உயிர் துறந்த கிருஷ்ணரின்  திருவுடல் இந்தக் ‘கோயிலி வைகுண்டா’வில்தான் எரிக்கப்பட்டது என்பது கூடுதல் ஆச்சரியம். எனவேதான் புது ஜகன்நாதரையும் மற்ற தெய்வங்களின் திருவுருவங்களையும் இங்கேயே வடிக்கின்றனர். சிலையைச் செதுக்கும் மூவரைத் தவிர தலைமைப் பூசாரிக்கே கூட அனுமதி இல்லை. அந்த மூன்று தைத்தாபதி வம்சாவளியினரும் ஆலயத்திலேயே 21 நாட்கள் தங்கி சிலையை வடிக்கின்றனர். ஐந்து அடி ஏழு அங்குல உயரத்தில் ஜகன்நாதர், பன்னிரெண்டு அடி அகலத்தில் உள்ள கையுடன் செதுக்கப்படுகிறார். அவரை இருபது அடியார்கள் எழுந்தருளச் செய்கின்றனர். ஐம்பது அடியார்கள் கயிறு கட்டி இழுத்து வந்து, கருவறைக்குள் பழைய ஜகன்நாத மூர்த்திக்கு நேரே நிறுத்துகின்றனர். பலராமர் ஐந்தடி ஐந்து அங்குல உயரத்திலும், சுபத்ரா ஐந்தடி பன்னிரெண்டு அங்குல உயரத்திலும், சுதர்சனர் ஐந்தடியிலும் செதுக்கப்படுகின்றனர்.

பழைய நான்கு மூர்த்திகளுக்கு முன்னே புதிய மூர்த்திகள் வைக்கப்பட்டபின், சிலை வடித்த மூன்று சிற்பிகள் மட்டும் கருவறையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஜகன்நாதர் அணிந்த துணிகளால் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும், கைகளில் ஜகன்நாதர் அணிந்த துணிகளை உறை போலவும் சுற்றிக் கொண்டு, பழைய ஜகன்நாதரின் உள்ளே உள்ள பிரம்மம் எனும் ஆத்மாவை புது ஜகன்நாதரின் உள்ளே வைக்கின்றனர். அப்போதும் ஆலய பிரதான பூசாரிக்கு கருவறையில் அனுமதி இல்லை. பிரம்மத்தைத் தொடும்போது முயல்குட்டி ஒன்று துள்ளி ஓடுவதைப் போன்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றுமாம். அந்த பிரம்மம் என்ன உலோகம்? எதனால் ஆக்கப்பட்டது? என்பதெல்லாம் அந்த ஜகன்நாதருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இந்தச் சடங்கு மூன்று நாட்கள் நடக்கிறது. அப்போது ஜகன்நாதருக்கு பூஜைகளோ, நைவேத்யமோ நடைபெறுவதில்லை. தைத்தாபதி வம்சத்தைச் சேர்ந்த அம்மூவரும் அந்த மூன்று நாட்களும் முகச்சவரம் செய்யாமல் தீட்டு காப்பர்.

பிரம்மம் எனும் ஆத்மாவை வைத்த புது ஜகன்நாதர் முன் அன்று முழுவதும் ஜபம் செய்வர். பிரதிஷ்டையின்போது  இருபது பேர்கள் சுமந்து, ஐம்பது அடியார்கள் மூலம் எழுந்தருளப்பட்ட பழைய ஜகன்நாத மூர்த்தி, அன்று நள்ளிரவு மூன்று பேர்கள் தூக்கும் அளவிற்கு லேசாகி விடுவாராம். அந்த மூன்று பேர்கள் மட்டும் ஜகன்நாதர், பலபத்ரா, சுபத்ரா போன்ற மூவரையும் தன் தோளில் சுமந்து சென்று கோயிலில் வைகுண்டா எனும் இடத்தில் முந்தைய ஜகன்நாதர் மற்றும் மற்ற இருவரையும் புதைத்த இடத்தைத் தோண்டி சூரிய உதயத்திற்குள் அங்கே புதைத்து விடுகின்றனர். இம் மூவருக்கும் அங்கு தனித்தனி சமாதிகள் உள்ளன. இந்நிகழ்வை தைத்தாபதி வம்சத்தைச் சேர்ந்த அந்த மூவரைத் தவிர யார் பார்த்தாலும் அவர்கள் இறந்து விடுவார்களாம். எனவே அன்று இரவு ஒடிஷா மாநில அரசாங்கமே பூரி முழுவதும் மின் தடையை ஏற்படுத்தி விடுகிறது.

பிறகு அம்மூவரும் துக்கம் அனுஷ்டித்து, தத்தமது உறவினர் வீடுகள் முழுவதையும் சுண்ணாம்பு அடித்து, வீட்டைப் புதுப்பித்து, புதுத் துணிகள் வாங்கி, இறந்தவர்களுக்கு செய்யும் கர்ம காரியங்களை செய்து, பழைய ஜகன்நாதருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அந்த மூன்று நாட்களும் பூரி நகரமே சோகத்தில் ஆழ்ந்திருக்கும். நவகலிபார் யாத்திரை என்று இந்நிகழ்வு அழைக்கப்படுகிறது. மரம் இருக்கும் இடத்தை விமலா  தேவி கனவில் வந்து சொல்வதிலிருந்து இந்த அனைத்து நிகழ்வுகளும் கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவிற்குப் பிறகு ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இது. அடுத்த புது ஜகன்நாதர் இந்த ஆடி மாதம் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். புதிய ஜகன்நாதர் பிரதிஷ்டை செய்த மூன்றாம் நாள்தான் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை உற்சவம் நடைபெறுகிறது.

ஆஷாடா, ஆஷாதௌ என உச்சரிக்கப்படும் ஆடி மாதத்தில், ஜூன், ஜூலையில் இந்த ரதயாத்திரை கொண்டாடப்படுகிறது. இந்த
ரத யாத்திரை கோகுலத்தை விட்டு மதுராவிற்குச் செல்வதை நினைவூட்டுகிறது என்கிறார்கள் சான்றோர். இந்த ரத யாத்திரை இந்திரத்யும்ன மன்னனின் மனைவியான குண்டிச்சா தேவி ஆலயத்திற்குச் செல்லும். சிற்பி வடிவில் வந்த திருமால், வருடத்தில் ஒன்பது நாட்கள் தன் பிறந்த வீட்டிற்குச் செல்ல  இந்திரத்யும்னனிடம் விருப்பம் தெரிவித்ததாக ஐதீகம். ரத யாத்திரை துவங்கும் அன்று காலை, மூல விக்ரகங்கள் ஊர்வலமாக, பூரி கோயிலின் சிம்மத்வாரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள குண்டிச்சா தேவி கோயிலுக்கு எழுந்தருளச் செய்யப்படுகின்றனர். ஜகன்நாதர் ‘அன்ன பிரம்மா’ என்று வணங்கப்படுகிறார். ஆலயத்தின் பிரசாதம் தயாரிக்கும் சமையலறை, ஒரே நேரத்தில்  ஒரு லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கும் வசதிகள் கொண்டது. தினமும் நானூறு மூட்டை அரிசியை, பாதாளத் தில் இருந்து பெருகும் வற்றாத கிணற்றில் இருந்து தண்ணீரை வாளி மூலம் இழுத்து, மண் பானைகளில் விறகு அடுப்பு கொண்டு சமைக்கிறார்கள்.

ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு பானைகளை வைத்து ஒரே நேரத்தில் சமைக்கும்போது மேலே உள்ள ஏழாவது பானை அரிசி முதலில் சாதமாகும் அற்புதம் இத்தலத்தில் நிகழ்கிறது. சமைத்த அத்தனை விதமான பிரசாதங்களையும் வாயை மூடிக்கொண்டு, தோளில் காவடி போன்று சுமந்து, ஜகன்நாதர் அருளும் ரத்தின சிம்மாசனக் கருவறை வரை எடுத்துச் சென்று, அவருக்கும் விமலா தேவிக்கும் நிவேதித்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. உலகிலேயே பெரிய  பிரசாத சாலை இத்தலத்து ஆனந்த் பஜார் தான். இங்கு ஜகன்நாதருக்கு படைக்கப்பட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. காஜா எனும் மைதா, நெய், சர்க்கரை சேர்க்கப்பட்ட பிரசாதம், பக்தர்களால் பெரிதும் விரும்பி சுவைக்கப்படும் பிரசாதமாகும்.
விமலா தேவி இங்கே சந்நதி கொண்டிருக் கிறாள். 51 சக்தி பீட நாயகிகளுள் ஒருவளான இந்த தேவியே, புது ஜகன்நாதர் செய்ய வேண்டிய வேப்ப மரத்தை குறிப்பாக உணர்த்துபவள். ஜகன்நாதரின் பிரசாதங்கள் இந்த அம்பிகைக்குப் படைக்கப்பட்ட பிறகே, மகாபிரசாதமாக மாறுகிறது. அவ்வளவு மகிமை வாய்ந்த வரப்பிரசாதி இவள்.

பூரி தேரோட்டத்தின்போது ஜகன் நாதரை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி தேரின் உள்ளே எழுந்தருளச் செய்கின்றனர். சில சமயம் அவர் எளிதாக உள்ளே நுழைந்து விடுவார். சில நேரங்களில் பல மணி நேரம் போராடினாலும் அசைந்து கொடுக்கமாட்டார். அந்த சமயத்தில் தலைமைப் பூசாரி மீண்டும் குளித்துவிட்டு வந்து, ஏதாவது தவறு இருந்தால் அதற்கு ஜகன்நாதரிடம் மன்னிப்புக் கேட்கிறார். எல்லோரும் மனம் ஒன்றி நாம பஜனை செய்யும்போதே மயிர்க்கூச்செறியும் வண்ணம் ஜகன்நாதர் சடக்கென தேரில் ஆரோகணித்து விடும் அற்புதம் நிகழ்கிறது. இக்கோயிலில் பூஜை சேவைகளை செய்யும் மக்கள் ‘சர்விடர்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர். முதல் சர்விடர், பூரி அரசர் கஜபதி. இவரே ரதயாத்திரையின்போது தங்கத் துடைப்பத்தால் ஜகன்நாதர், பாலபத்ரா, சுபத்ரா போன்றோரின் ரதங்களைப் பெருக்கும் கடமையைக் கொண்டவர்.

சவாரா வம்சத்தில் வந்த தைத்தாபதிகள் மட்டும் காவலர்களாக இருக்க, ஆயிரக் கணக்கான பக்தர்களால் ரதங்கள் இழுக்கப் படுகின்றன. மூல மூர்த்திகளுக்கும் பக்தர்களுக்கும் இடையே எந்த பண்டாக்களும் குருக்களும் இருப்பதில்லை. அனை வரும் அருகில் சென்று அவரை ஒரு நண்பர் போன்று தழுவிக் கொள்ளலாம். தற்போது பூரியில் ரதயாத்திரை நிகழ்வுகள் நடைபெறுகிறது. ரத யாத்திரை வாழ்வின் உயரிய உண்மையை விளக்குகிறது. மனித உடல் ஒரு தேர். அந்தத் தேரில் ஏறி ஆன்மா பயணம் செய்கிறது. ‘ஆன்மாவுக்கு எப்போதும் அழிவில்லை; இந்த உடல்தான் அழியக் கூடியது. தான் உடல் அல்ல; ஆன்மாதான்’ என்பதை ஒரு மனிதன் எப்போது உணர்கிறானோ, அப்போதே தன்னில் கடவுளைக் காண்பான். பிறப்பு- இறப்பு என்ற மாய வட்டத்திலிருந்து விடுபட்டு முக்தி பெறுவான். இதைத்தான் இறைவனே உடலெடுத்து இங்கு உணர்த்துகிறார். ‘இன்னொரு உடலில் புகுந்தும் நான் அழிவதில்லை; ஆனால், எனது உடலாக வழிபடப்பட்ட இந்த மூர்த்தங்கள் அழிகின்றன’ என்பதை அவர் காட்டுவதாகவும் தோன்றுகிறது.

நாத ஹரே! ஜகன்நாத ஹரே!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்