SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிர்த்தெழுதல்

2019-08-21@ 10:18:09

மகத்தான ஐந்து இறைத்தூதர்களில் ஒருவர் இப்ராஹீம் (அலை) அவர்கள். ‘இறைவனின் தோழர்’ எனும் சிறப்புப் பெற்றவர் இவர்.  ஓரிறைக் கொள்கையைப் பன்னாட்டளவில் பரப்புரை செய்தவர்களில் இவர்தாம் முதலாமவர். இத்தகைய சிறப்புகள் நிறைந்த இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களுக்குத் திடீரென்று ஓர் எண்ணம். “இறந்தவர்களை இறைவன் எப்படி மீண்டும் உயிர்ப்பிக்கிறான்?”மறுமைக் கொள்கையில் ஐயமோ தடுமாற்றமோ அவருக்கு இல்லை. மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை உண்டு, மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள், தங்களின் செயல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும், நல்லவர்களுக்கு சொர்க்கம், தீயவர்களுக்கு நரகம் என்பதில் எல்லாம் அவருக்கு எந்த ஐயமும் இருக்கவில்லை.

இருந்தாலும் மனம் நிம்மதி அடைவதற்காக  உயிர்த்தெழும் நிகழ்வைக் கண்கூடாகப் பார்க்க விரும்பினார். தம் விருப்பத்தை இறைவனிடமும் சமர்ப்பித்தார். இறுதிவேதம் குர்ஆன் கூறுகிறது: “என் இறைவனே, மரித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக” என்று இப்ராஹீம் கூறிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். “அப்பொழுது இறைவன்,“நீ நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டான்.
“அவ்வாறில்லை. (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) எனினும் என் மனம் அமைதி அடையும் பொருட்டே இவ்வாறு கேட்கிறேன்” என்று அவர் கூறினார்.
அதற்கு இறைவன், “அப்படியானால் நீ நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றை (நன்கு பழக்கி) உன்னுடன் இணங்கி இருக்கச் செய்.
“பின் அவற்றைத் துண்டுகளாக்கி அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையில் வைத்துவிடு.

“பிறகு அவற்றை நீ கூப்பிடு. அவை உன்னிடம் விரைந்துவரும். இறைவன் நிச்சயமாக வல்லமை மிக்கவனும் நுண்ணறிவுடை யோனுமாய் இருக்கிறான் என்பதை நீ நன்கு அறிந்துகொள்.” (திருக்குர்ஆன் 2:260) இந்த நிகழ்வின் மூலம் இறைத்தூதர் இப்ராஹீமின் இதயம் அமைதி அடைந்தது. மறுமைக் கொள்கையை மக்களிடம் முன்பைவிட அதிகமாக எடுத்துரைத்துப் பரப்புரை செய்தார். உயிர்த்தெழுதல் குறித்து வேதம் கூறும் சில கருத்துகளைப் பார்ப்போம். “இறந்துபோனவர்களை இறைவன்(அடக்கத்தலங்களிலிருந்து) எழுப்பியே தீருவான். பிறகு அவர்கள் அவனிடமே (நீதி விசாரணைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள்.”(குர்ஆன் 6:36)

“அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைவரும் பெரும் திகில் அடைவார்கள். அந்த திகிலில் இருந்து எவர்களை இறைவன் காப்பாற்ற நாடுகிறானோ அவர்களைத் தவிர! மேலும் அனைவரும் அடங்கி ஒடுங்கியவர்களாக அவன் திருமுன் வருவார்கள்.”(குர்ஆன்27:87) மறுமை விசாரணைக்காக மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பது குறித்து இதுபோல் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உண்டு. அனைத்து இறைத்தூதர்களும் அனைத்து மதச் சான்றோர்களும் மரணத்திற்குப் பின்னுள்ள பெருவாழ்வு பற்றி மனிதர்களுக்கு எச்சரித்தே வந்துள்ளனர். ஆகவே நாமும் அந்தச் சான்றோர்கள் வழியில் மறுமையை முன்வைத்து இம்மையில் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வோம்.

-சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. இது இறைவனின் உண்மையான வாக்குறுதியாகும். நிச்சயமாக படைப்புகளை முதன் முறையாக அவனே படைக்கிறான். பின்னர் மறுமுறையும் அவனே படைப்பான். ஏனெனில் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற் காக...”(குர்ஆன் 10:4)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • flood18

  இத்தாலியில் ஒரே வாரத்தில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • fire18

  மேகாலயாவில் நூற்றாண்டு பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து: 2 பேர் பலி, ஏராளமான பொருட்கள் சேதம்

 • light18

  கிறிஸ்துவ பண்டிகை: பாரிஸில் கடல் உயிரினங்கள் வடிவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான விளக்குகளின் தொகுப்பு

 • snow18

  சீனாவில் கடும் பனிப்பொழிவுடன் வீசிய அதிவேக காற்று: பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

 • 18-11-2019

  18-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்