SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோதனைகளை சாதனைகளாக்கும் பெருமாள்

2019-08-20@ 10:50:37

திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று திருப்பாடகம் எனும் தலம். ‘பாடு’ என்றால் ‘மிகப் பெரிய’ என்றும், ‘அகம்’ என்றால் ‘கோயில்’ என்றும் பொருள். எனவே பெரியகோயில் எனும் பொருள்படும்படி, இத்தலம் திருப்பாடகம் ஆயிற்று. கிருஷ்ணாவதாரத்தில், கிருஷ்ணன் பாண்டவர்களின் தூதனாக துரியோதனன் சபைக்கு சென்றார். அவரே பாண்டவர்களின் பெரிய பலம் என எண்ணிய துரியோதனன் அவரை அழிக்க எண்ணினான். தூதுவனாக வரும் கண்ணன் அமரும் இடத்திற்கு அடியில் ஒரு நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகள் கொண்டு மூடி அதன் மீது ஒரு ஆசனத்தை கண்ணன் அமர்வதற்காக வைத்தான். தன் அரண்மனைக்கு வந்த கண்ணனை வரவேற்று அந்த ஆசனத்தின் மீது அமரச் செய்தான். துரியோதனனின் திட்டப்படி ஆசனம் தடுமாற, அந்த நிலவறைக்குள் விழுந்த கண்ணன் நொடிப்பொழுதில் விஸ்வரூபத் திருக்கோலம் கொண்டார்.

பாரதப் போர் முடிந்தபிறகு, வைசம்பாயனர் எனும் ரிஷியிடம், ஜெனமேஜெய மகாராஜா பாரதக் கதையைக் கேட்டார். கிருஷ்ணர் துரியோதனன் அவையில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை தானும் தரிசிக்க ஆவல் கொண்டு அதற்கான உபாயத்தைக் கேட்டார். ‘சத்தியவிரத தலமான காஞ்சிபுரத்தில் அஸ்வமேதயாகம் செய்து யாகத்தின் முடிவில் அந்த விஸ்வரூப திருக்கோல தரிசனத்தை நீ பெறலாம்’ என்று வைசம்பாயனர் ஜெனமேஜெயனிடம் கூறினார். மன்னனும் அவ்விதமே செய்ய, யாகத்தின் பயனாக பிரமாண்டமான கண்ணன் யாக வேள்வியில் தோன்றி மன்னனுக்கு காட்சி தந்து இத்தலத்தில் நிலைகொண்டார் என்கிறது தலபுராணம்.

கருவறை விமானம் பத்ரவிமானம் என்றும் வேதகோடி விமானம் என்றும் போற்றப்படுகிறது. ஜெனமேஜெய மன்னனுக்கும், ஹாரித முனிவருக்கும் ப்ரத்யட்ச தரிசனம் தந்தவர் இந்த பாண்டவதூத பெருமாள். மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்தால், அடுத்தடுத்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் தரிசனங்கள். ஆலயத்தின் வலது புறம் மத்ஸ்ய தீர்த்தம். பிராகார வலம் வந்து கருவறையில் நுழையலாம். கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் 25 அடி உயரத்தில் பிரமாண்டமான வடிவத்தில் என்றும் மாறா புன்னகை திருமுகத்தில் தவழ, கிழக்கு நோக்கி பெருமாள் சேவை சாதிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே இத்தனை உயர (25அடி) பெருமாள் அருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  எம்பெருமானுக்கு எத்தனை எத்தனையோ திருப்பெயர்கள். நாமம் ஆயிரம் கொண்ட நாரணனுக்கு பாண்டவர் தூதுவனாக கைங்கர்யம் செய்யச் சென்றதால் அந்த திருப்பெயரிலேயே பாண்டவ தூதனாக இத்தலத்தில் அவன் அருள்வது அவனின் தனிப் பெருங்கருணையே ஆகும்.

கம்பீரமாகத் திகழும்  திருமாலின் திருமார்பில் பிராட்டியும், கேட்ட வரமளிக்க கருணையோடு வீற்றிருக்கிறாள். நிலவறையை பெயர்த்து தலைக்கு மேல் வைத்தால் எப்படி இருக்குமோ அதேபோன்று தோற்றமளிக்கிறது கருவறை. உற்சவமூர்த்தியின் இருபுறங்களிலும் தேவி, பூதேவிக்குப் பதிலாக இத்தலத்தில் ருக்மிணி, சத்யபாமா இருவரும் வீற்றிருப்பதும் இன்னொரு வித்தியாச அற்புதம். மேலும் ஆண்டாள், நர்த்தன கண்ணன், சுதர்சனர் போன்ற உற்சவ மூர்த்திகளையும் கருவறையில் தரிசிக்கலாம்.

சந்திரனின் மனைவியான ரோகிணி கிருஷ்ணனை நோக்கித் தவமிருந்து சந்திரனை மணமுடித்த தலம் இது. ஆகவே ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. ரோகிணி நட்சத்திரத்தன்று இத்தலத்தில் ரோகிணி தீபம் ஏற்றி அந்த தீபம் அணைந்து முடியும் வரை அடி பிரதட்சிணம் செய்து கண்ணனுக்குப் பிடித்த நிவேதனமான முறுக்கு, வெண்ணெய், சீடை போன்றவற்றை நிவேதித்து விநியோகம் செய்தால் உத்யோகத்தடை, திருமணத்தடை போன்றவை நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். கிருஷ்ணர் தன் கால் கட்டைவிரலை அழுத்தி விஸ்வபாத யோகத்தை இந்த தலம் முழுதும் பரப்பியதால் இத்தலம் கிருஷ்ண பூமி என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தை அங்க பிரதட்சிணம் செய்தால் உடலின் 72,000 நாடிகளும் சுத்தி பெறும் என நம்பப்படுகிறது.

திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மணவாள மாமுனிகள் போன்ற ஆழ்வார்கள் இவரை மங்களாசாஸனம் செய்துள்ளனர்.  ராமானுஜரிடம் வாதப் போரிலே தோற்ற யக்ஞ மூர்த்தி எனும் அத்வைதி ராமானுஜரின் உண்மை வடிவத்தை அறிந்து அவரிடமே சரணாகதி அடைந்து அவர் பாதம் பற்றி சீடரானார். அவருடைய பெயரை எம்பெருமானார் என ராமானுஜர் மாற்றி அவரை திருமாலின் திருத்தொண்டராக்கி திருமாலின் கைங்கர்யங்களைச் செய்ய வைத்தார். அந்த அருளாளப் பெருமானார் இத்தலத்தில் வாழ்ந்து இந்த பாண்டவதூதப் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து பின் பரமபதம் அடைந்தார். அந்த அருளாளப் பெருமானாருக்கு இத்தலத்தில் தனி சந்நதி ஒன்று உள்ளது.

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் எனும் அடியவர் தன் நூற்றியெட்டுத் திருப்பதியந்தாதியில் யார் யார் எந்தெந்த பலன்களைக் கருதி தவம் செய்தாலும் அந்தப் பலன்களை இந்தப் பெருமாள் அருள்கிறார். சூரியன், சந்திரன், ஈசன், நான்முகன், இந்திரன் போன்றோரும் கூட ஏதேனும் கோரிக்கைகளை இந்தப் பெருமாளிடம் வைத்தால் இந்த பெருமாள் அதையும் நிறைவேற்றுகிறார். அத்தகைய கருணைமனம் படைத்தவர்தான் திருப்பாடகம் பாண்டவதூதப்பெருமாள் எனும் பொருள்படும்படி பாடிய,

‘‘தவம் புரிந்த சேதனரைச் சந்திரன் ஆதித்தன்
சிவன் பிரம்மனிந்திரனா செய்கை - உவந்து
திருப்பாடக முருவுங் செங்கண் மால் தன் மார்
பிருப்பாடக உரையாலே’’

எனும் பாடலே இந்த பாண்டவதூதப் பெருமாளின் அருளுக்கு சாட்சி. பாண்டவர்கள் வாழ்வில் எத்தனை எத்தனையோ சோதனைகள். கண்ணனின் திருவடியையே பற்றி, அத்தனை சோதனைகளையும் அவர்கள் கடந்தனர். அதே போல் பக்தர்கள் தம் வாழ்வில் சந்திக்கும் எந்த சோதனையையும் சாதனையாக்கிவிடும் தனிப்பெருங்கருணையுடன் அருள்கிறார் இந்த பாண்டவதூதன். பெரிய காஞ்சிபுரத்தில், கங்கைகொண்டான் மண்டபத்தின் அருகில் அமைந்திருக்கிறது திருப்பாடகம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChennaiBhogi2020

  பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்