SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லட்சுமி கடாட்சம் பெருகும்..!

2019-08-19@ 16:37:31

1. என் மகள் சிறப்பாக படிக்கக்கூடிய மாணவி. மருத்துவம் முடித்துள்ளார். அவர் தற்போது தனக்கு சிறிதும் தகுதி இல்லாத ஒருவரை காதலிப்பதாகக் கூறி பெரும் பிரச்னை செய்து வருகிறார். மேற்படிப்பிற்கு செல்லமாட்டேன் என்றும் கூறுகிறார். அவரது நல்வாழ்விற்கு பரிகாரம் சொல்லுங்கள்.
- குணசேகரன், ஈரோடு.

அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ராகு ஆறாம் வீட்டில் அமர்ந்து தசையை நடத்தி சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறார். அதிலும் தற்போது நடந்து வரும் செவ்வாய் புக்தி அவரது பிடிவாத குணத்தையே பிரதானமாக இயங்கச் செய்யும். திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் என்பதாலும், செவ்வாய் ஐந்தில் அமர்ந்துள்ளதாலும் இது போன்ற நிலை உருவாகி இருக்கிறது. தற்போதைய சூழலில் அவரது எண்ணத்திற்கு மறுப்பேதும் சொல்லாதீர்கள். மேற்படிப்பிற்கான முயற்சியில் ஈடுபடச் சொல்லி அறிவுறுத்தி வாருங்கள். தனது வாழ்வின் அடிப்படை ஆதாரமான உத்யோகத்தை ஸ்திரப்படுத்திக் கொண்ட பிறகு திருமண வாழ்வு பற்றி யோசிக்கலாம் என்று ஆலோசனை கூறுங்கள். அவரது ஜாதக பலத்தின்படி அவர் அரசுத்துறையில் பணிக்கு முயற்சிக்கலாம். ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 09.07.2020 முதல் துவங்க உள்ள குரு தசை இவருக்கு உரிய சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க துணைபுரியும். அதுவரை திருமணம் குறித்த பேச்சினைத் தள்ளிப்போடுவது நல்லது. வியாழன் தோறும் ஸ்கந்த குரு கவசம் படித்து வாருங்கள். சென்னிமலை முருகன் கோயிலுக்கு உங்கள் மகளை அழைத்துச் சென்று அவரது பெயரில் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். உங்கள் மகளின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்.

2. என் 7வது வயதில் தந்தை இறந்த நிலையில் நானும் என் தாயும் பெரியம்மாவின் ஆதரவில் வாழ்ந்தோம். பெரியம்மாவின் பிள்ளைகளான அண்ணன், தங்கையுடன் பேச்சுவார்த்தை இல்லை. என்றாலும் அண்ணன் மட்டும் சீர்வரிசை அனுப்புகிறார். 67வது வயதில் இருக்கும் நான் ஒவ்வொரு நாளும் செய்நன்றி மறந்தவளாக தவிக்கிறேன். அவர்களுடன் நல்லுறவு தொடர பரிகாரம் கூறுங்கள்.
- சண்முககணேஷ், திருச்சி.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்களுடைய ஜாதக பலத்தின்படி தற்போது உங்கள் எண்ணம் ஈடேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறவு முறையைப் பற்றிச் சொல்லும் நான்காம் வீட்டில் குரு அமர்ந்திருப்பது நல்ல நிலையே. வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நீங்கள் உங்கள் பெரியம்மாவின் பிள்ளைகளை சந்திக்கும் வாய்ப்பு நன்றாக உள்ளது. உங்களது நன்றிக் கடனை செலுத்துவதற்கான வாய்ப்பும் அந்த நேரத்தில் கூடி வரும். ஜென்ம லக்னத்திலேயே சந்திரனின் அமர்வினைப் பெற்றிருக்கும் நீங்கள் சென்ட்டிமென்ட் உணர்வுகளுக்கு அடிமையாகி உள்ளீர்கள். திருப்பதி பெருமாளுக்கு உரிய வேண்டுதல்களை ஒப்பிலியப்பன் ஆலயத்திலேயே செலுத்தி விடலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். இயலாதவர்கள் உண்டியல் காணிக்கையை இங்கேயே செலுத்தலாம். ஆனால் முடி காணிக்கை முதலான இதர பிரார்த்தனைகளை எந்த பெருமாளுக்கு வேண்டிக்கொண்டீர்களோ அந்த திருத்தலத்திற்கு நேரில் சென்று செலுத்தினால் தான் முழுமையான பலனை அடைய இயலும். தற்போது உங்கள் மனதை உறுத்தி வரும் இந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வினையும் திருமலைவாசனை தரிசிப்பதால் மட்டுமே காண இயலும். கால தாமதம் செய்யாமல் திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த வருட இறுதிக்குள்ளாக உங்கள் மனக்குறை தீர்ந்துவிடும்.

3. 30 வயதாகும் நான் பிறந்தபோதே ஏழரைச்சனியாம். குடும்பத்தை அலட்டி எடுத்துவிட்டேனாம். எனக்கு நிரந்தரமான உத்யோகம் அமையவில்லை. கிடைத்த வேலையைச் செய்து வருகிறேன். சொந்த வீட்டிலேயே மதிப்பில்லை. ஒரு தடவை விஷம் குடித்து பிழைத்தேன். ஜாதகம் பார்ப்பவர்கள் இவன் ஒரு தரித்திரன் என்கிறார்கள். குறிசொல்பவர்கள் யோகவான் என்கிறார்கள். நான் இருக்கட்டுமா அல்லது இறக்கட்டுமா?
- செல்வக்குமார், கும்பகோணம்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார் ஔவையார். கிடைத்தற்கரிய இந்த மானிடப் பிறவியை ஆக்க பூர்வமாக பயன்படுத்துவதை விடுத்து எதிர்மறையாக யோசிக்கலாமா? ஒவ்வொரு மனிதனின் பிறப்பிற்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். நாம் பிறந்த இந்த பூமிக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படும் வகையில் நடக்க வேண்டும். உங்களை வைத்து ஆதாயம் காண்போர் பலர் இருக்கிறார்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நம்மாலும் ஒரு சிலர் நன்மையை அனுபவிக்கிறார்கள் என்று நேர்மறையாக எண்ணுங்கள். அவர்களிடம் இருந்து பிரதிபலனை எதிர்பார்க்கும் போது தான் பிரச்னை என்பது துவங்குகிறது. பலனை எதிர்பாராமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்து வாருங்கள். அடுத்தவர்களின் வாழ்வோடு நம் வாழ்வினை ஒப்பிட்டுப் பார்த்தல் என்பது தவறு. உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ஏழரைச் சனி என்ற ஒரு விஷயத்தைத் தவிர ஜாதகத்தில் தற்போது நடந்து வருகின்ற தசாபுக்தியின் காலம் உங்களுடைய முயற்சிக்குத் துணைபுரியும். உங்களுடைய ஜாதக பலத்தின்படி ஆசிரியர் தொழில் என்பது கிடையாது. அரசுப்பணி கிடைக்கும் என்று காத்திருக்காமல் சுயதொழில் செய்யுங்கள். சிலை பாலீஷ் செய்யும் தொழில் நல்ல பலனைத் தரும். உணவுத்துறை சார்ந்த தொழிலும் கைகொடுக்கும். ஐந்தாம் இடத்தில் உண்டாகியிருக்கும் கிரகங்களின் இணைவு உங்களை மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவே காட்டுகிறது. 35வது வயதில் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள் என்பது உறுதி. உங்கள் கேள்வியின் இறுதி வரியினை உங்கள் மனதில் இருந்து சுத்தமாக அழித்துவிடுங்கள். அடுத்தவர்களின் பேச்சினை காதில் வாங்காமல் உங்கள் உள்ளத்தினையும், இறைவனையும் மட்டும் நம்பி உண்மையாக உழைத்து வாருங்கள். வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் விளக்கேற்றி வைத்து அம்பிகையின் சந்நதியை ஆறு சுற்றுகள் வலம் வந்து வணங்குவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். அம்மனின் அருளால் அற்புதமான வாழ்வினை அடைவீர்கள்.

4. 55 வயது ஆகும் நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். கலைத்துறையில் நுழைய வேண்டும் என்ற ஆசையும் எட்டாக் கனியாக போய்விட்டது. அரசியல், பைனான்ஸ் உட்பட பல தொழில்களில் இறங்கியும் எதுவும் கைகொடுக்கவில்லை. தற்போது வாட்ச்மேன் வேலை பார்த்து குடும்பத்தை நடத்துகிறேன். மகளை மேலே படிக்க வைக்க இயலவில்லை. திருமணத்தை நடத்தவும் வசதி இல்லை. நல்ல தீர்வு கூறுங்கள்.
- கணேசன், கம்பம்.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது கேது தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதக பலத்தின்படி தற்போது திருமணம் செய்ய எண்ண வேண்டாம். முதலில் அவர் தனது உத்யோகத்தை நிலைப்
படுத்திக் கொள்ளட்டும். நீங்கள் பார்க்கும் வாட்ச்மேன் வேலையை உங்கள் ஊரில் தான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சென்னை முதலான பெருநகரத்தில் அதே வேலையைச் செய்யும் போது சம்பளம் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உங்களது கனவான கலைத்துறை வாய்ப்பு என்பது உங்கள் மகளின் ஜாதகத்தில் நன்றாக உள்ளது. நடிப்பு தவிர கலைத்துறையில் மற்ற தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் உங்கள் மகளின் நல்வாழ்விற்குத் துணைபுரியும். காஸ்ட்யூம் டிசைனிங் முதலான பணிகள் நற்பலனைத் தரும். அதற்கான வாய்ப்புகள் சென்னை போன்ற பெருநகரத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் குடும்பத்துடன் இடம் மாறுவது நல்லது. உங்கள் மகளின் ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கிறார். தற்போது நடந்து வரும் கேது தசை முடிந்து சுக்கிர தசை துவங்கும் காலத்தில் அவரது சம்பாத்தியம் என்பது மிகச்சிறப்பான முறையில் அமையும். புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்திருக்கும் உங்களையும், பூசம் நட்சத்திரம் கடக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியையும் உங்களது மகள் நல்லபடியாக வைத்துக் காப்பாற்றுவார். நடந்தவற்றைப் பற்றி எண்ணி வருந்திக் கொண்டிருக்காமல் நடக்கப்போவதை நினைத்து உற்சாகமாய் செயல்படுங்கள். தன்னால் எதுவும் சாதிக்க இயலவில்லையே என்று ஆதங்கப்படாமல் உங்கள் அனுபவத்தை மகளுக்கு பாடமாகச் சொல்லித் தந்து அவரது வாழ்வினை உயரத்திற்குக் கொண்டு செல்ல துணை புரியுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் உங்கள் கண்ணில் படுகின்ற பசுமாட்டிற்கு இரண்டு வாழைப்பழங்களைத் தந்து தொட்டு நமஸ்கரித்து வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். பூர்வஜென்ம பாபம் என்பது தொலைவதோடு லட்சுமி கடாட்சமும் பெருகக் காண்பீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்