SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஞானம் அளிப்பாள் ஞானேஸ்வரி

2019-08-17@ 20:32:33

உயிர்கள் இயல்பாக வாழ்வதற்கு வேண்டிய ஞானத்தை அளிப்பவள் அன்னை பராசக்தி எடுத்துக்காட்டாக, தாய் தன் குழந்தையின் முகத்தை மார்பின் அருகே கொண்டு செல்லும் போதே அது பாலை உண்ணத் தொடங்குகிறது. இது இயல்பான அறிவால் அதற்கு வந்ததாகும். இது போன்றே உண்ணத்தக்கது, அடைய வேண்டியது விலக்கத்தக்கது போன்றவற்றை உயிர்கள் அறிந்து வாழ இறைவி அடிப்படை ஞானத்தை அளித்துள்ளாள். மனம் கலங்கி அறிவு இழந்து வாழும் பைத்தியங்கள் கூட, உலகில் உயிர் வாழத் தேவையான உள்ளுணர்வையும் அறிவையும் இறைவியால் அருளப் பெற்றிருக்கின்றன.

உயிர்கள் வளரவளர உலக நிகழ்வுகளைப் பார்ப்பதாலும், தன் அனுபவத்தால் அறியும் அறிவினாலும், மற்றவர்களின் அனுபவத்தில் பெற்ற பாடத்தாலும் தம் அறிவை மேன்மேலும் பெருக்கிக்கொண்டு மேன்மை அடைகின்றன. லலிதா ஸஹஸ்ரநாமம் இறைவியை (ஸ்வக்ஞா) ஞானமாக இருப்பவள். (ஞானவிக்கிரக) ஞான வடிவாக இருப்பவள் என்று போற்றுகிறது.  அறிவு மயமாக விளங்கும் அம்பிகை பரம ஞானத்தைச் சிவபெருமானிடமிருந்து பெற்று, உரியவர்கள் மூலம் உலகிற்கு வழங்குகிறாள் என்று புராணங்கள் கூறுகின்றன.

சிவபெருமானிடம் மாணவியாக இருந்து ஞானத்தைப் பணிவுடன் கேட்கும் அம்பிகையைச் சிஷ்ய பாவ கௌரி என்று அழைக்கின்றனர். அவள் தாம் பெற்ற ஞானத்தை உலக மக்களுக்கு உபதேசிக்கும் கோலமே ஞானேஸ்வரி எனப்படும். இவளை அம்பிகா   குரு என்று பூஜாபத்ததி நூல்கள் கூறுகின்றன. சிவாகமங்கள், சிவபெருமான்
அம்பிகைக்கு முதலில் ஆகம நூல்களை அருளிச் செய்தான் என்றும், அவள் வழியாகவே ஞானம் உலகில் தழைக்கிறது என்றும் கூறுகின்றன.

நித்திய சிவபூஜையில் ஏழு குருமார்களுக்கு வணக்கம் சொல்லி வழிபடுகிறோம். இவர்களில் ஒரு குருவாக அம்பிகை போற்றப்படுகிறாள். இவளை அம்பிகா குரு என அழைக்கின்றனர். குரு வடிவில் விளங்கும் ஞானேஸ்வரியான அம்பிகை உடுக்கை  தீயகல் ஏந்திச் சின்முத்திரை தரித்துப் புத்தகம் கையில் கொண்டு காட்சியளிக்கின்றாள் என்று சிற்ப நூல்கள் கூறுகின்றன. லலிதா ஸஹஸ்ரநாமம் பராசக்தியை ஞானமுத்திரை தரித்தவள் என்கிறது. மேலும் அவள் ஞானதாயினி எனப்படுகிறாள். இதற்கு ஞானத்தை அளிப்பவள் என்பது பொருள்.

இவளைத் திருமந்திரம்,

“ஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி
வேடம்பளிங்கு விளங்கு வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய் தோத்திரம் சொல்லுமே..”

என்கிறது. இதன் பொருள் அம்பிகை தூய வெண்ணிறத்துடன் வெண் தாமரை மலரில் வீற்றிருந்தவாறு ஓதிக் கொண்டிருக்கிறாள் என்பதாகும். குருவடிவாக விளங்கும் அம்பிகையை வைகாசி நிறைமதி நாளான வைகாசி விசாகத் திருநாளில் கொண்டாடுகின்றனர்.

- ஆட்சிலிங்கம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்