SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லிங்கமாக காட்சியளிக்கும் பிரம்மா, விஷ்ணு, சிவன்

2019-08-14@ 09:57:34

ரேணிகுண்டா அருகே அபூர்வம்

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா மண்டலம் குடிமல்லம் கிராமத்தில் சுவர்ணமுகி ஆற்றின் கரையில் உள்ளது பரசுராமேஸ்வரர் கோயில். இங்கு காணப்படும் சிவலிங்க வடிவம்தான் இந்தியாவின் மிகப்பழமையான லிங்கம் என்றும், கி.மு.2 அல்லது 3ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். தொன்மை சிறப்பு மிக்க இத்தலத்தில் சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் அருள்பாலிக்கின்றனர். லிங்கத்தின் அடிபாகத்தில் சித்திரசேனன் எனும் யட்சன் காணப்படுகிறான். இவனுக்கு ‘பிரம்மயட்சன்’ என்று பெயர்.

அவனுக்கு மேலே ஒரு கையில் பரசு மற்றும் மற்றொரு கையில் வேட்டையாடப்பட்டு தொங்கும் ஆட்டுக் கிடாவுடன் நின்றுகொண்டிருக்கிறார் சிவபெருமான். கையில் பரசு இருப்பதால் இவர் பரசுராமர் என்றும் அழைக்கப்படுகிறார். நின்ற உருவத்துக்கு மேலே சிவலிங்கத்தின் உருண்டையான ருத்ரபாகம் காணப்படுகிறது. பிரம்மன் யட்ச ரூபத்திலும், விஷ்ணு பரசுராம அவதார வடிவத்திலும், சிவபெருமான் லிங்க வடிவத்திலும் ஒருசேர எழுந்தருளி அருள்புரிவது அபூர்வமானது. பொதுவாக லிங்கத்துக்கு அடியில் ஆவுடையார் அமைந்திருக்கும். ஆனால், இங்கு மட்டும் சதுர வடிவிலான ‘அர்க்க பீடம்’ அமைந்திருக்கிறது. வேதங்களில் கூறப்படும் உருத்திரன் எனும் வேடனின் வடிவத்தில் சிவபெருமான் அருள்புரிவாதல் ‘வைதிகலிங்கம்’ என்ற திருநாமத்திலும் அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு: தந்தையின் கட்டளைப்படி, பரசுராமர் தனது தாயைக் கொன்ற பாவம் தீர இத்தலத்துக்கு வந்து தவமிருந்து சிவபெருமானை வழிபட்டார். அங்கு காணப்பட்ட அதிசய செடியில் தினமும் ஒரு பூ மட்டும்தான் மலரும். பரசுராமர் தினமும் அருகில் பாய்ந்தோடும் சுவர்ணமுகி ஆற்றில் நீராடி அந்த மலரை பறித்துக் கொண்டு வந்துதான் சிவபெருமானை வழிபடுவார். அந்த ஒற்றை மலருக்கு காவலாக சித்திரசேனன் எனும் காவலனையும் நியமித்தார் பரசுராமர். இந்த சித்திரசேனன் சிவபெருமானின் அதிதீவிர பக்தன். ஒருநாள் பரசுராமர் வேட்டைக்கு சென்றுவிட செடியில் பூ மலர்ந்தது.

குறிப்பிட்ட நேரத்துக்கு பரசுராமர் திரும்பி வராததால் சித்திரசேனன் அந்த மலரை பறித்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுவிட்டான். திரும்பி வந்ததும், மலர் பறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த பரசுராமருக்குக் கடும் கோபம் வந்தது. உடனே சித்திரசேனனைத் தாக்கினார். இதனால் இருவருக்கும் இடையே போர் ஏற்பட்டது. வெற்றி, தோல்வி இல்லாமல் பல ஆண்டுகள் இது நடைபெற்றது. கடைசியாக சிவபெருமான் தோன்றி இருவரையும் சமாதானப்படுத்தி தன்னுள் ஐக்கியமாக்கிக்கொண்டார். அதனால்தான் இந்தத் தலத்தில் சித்திரசேனன், பரசுராமன், லிங்கம் என்று சிவபெருமான் பரசுராமேசுவரராக அருள்புரிகிறார்.

இந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆறு அடி பள்ளத்தில் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. பல்லவர்கள் காலத்தில் இந்தக் கோயில் கற்றளியாக மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கு ஆதாரமாக கஜ பிருஷ்ட வடிவத்தில் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் வைஷ்ணவிதேவி ஆகியோரின் சிலைகளும் காணப்படுகின்றன. இங்கு அம்மன் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து, ஆனந்தவல்லி என்ற திருநாமத்தோடு அருள்பாலித்து வருகிறார். கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும், அபயம், வரத முத்திரைகளுடன் கருணை பெருகும் முகப் பொலிவுடன் அருள்பாலிக்கிறாள்.

கோயில் திருச்சுற்றில் தனிச்சந்நிதிகளில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமானும், சூரிய பகவானும் அருள்புரிகிறார்கள்.  இக்கோயிலில் மற்றொரு விசேஷமாக 60ஆண்டுகளுக்கு ஒருமுறை கருவறையில் நீர் ஊறி சிவலிங்கம் நீர்மயமாக மாறிவிடுகிறது. கடந்த 2005ம் ஆண்டு இதுமாதிரி நடந்தது. அடுத்து 2065ம் ஆண்டு இதே மாதிரியான அதிசயம் நிகழும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். சிவபெருமான் மும்மூர்த்திகளின் அவதாரமாக அருள்புரிவதால் இத்தலம் ‘குழந்தைப் பேறு’ வழங்கும் சந்தான பிராப்தி தலமாகப் போற்றப்படுகிறது. இதற்குசாட்சியாக  பல்வேறு தாய்மார்கள் கோயிலில் உள்ள நெல்லி மரத்தில் சிறிய தொட்டில் கட்டிச் செல்கிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்