SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை பவழப்பாறை பச்சையம்மன்

2019-08-13@ 09:51:08

அம்பிகை சிவனாணைப்படி பூமியில் பல தலங்களை வணங்கி இறுதியில் திருவண்ணாமலையை அடைந்தாள். அங்கு மலையின் ஈசானிய பாகத்தில் பவழக்குன்றின் கீழ் தங்கினாள். அங்கு சிவனின் உடலில் இடப்பாகத்தில் இடம்பெற வேண்டி உறுதி பூண்டு தவம் மேற்கொண்டாள். சிவபெருமான் அவளுக்காகச் சூலத்தால் ஒரு தீர்த்தத்தைத் தோற்றுவித்தார். அது முனிகளால் காக்கப்படுவதால் முனி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. அதன் கரையில் நெடுநாள் தவம் இருந்து அவள் இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றாள். அம்பிகை இறைவனின் திருமேனியில் இடப்பாகத்தைப் பெற்று மகிழ்ந்த நாள் கார்த்திகை மாதம் கிருத்திகை நாளிலாகும். இருவரும் இணைந்து அர்த்தநாரி கோலத்தில் இன்ப நடனம் ஆடினர்.

அந்த ஆனந்த நடனமே கார்த்திகை தீபத் திருநாளில் நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு நோக்கி மலை சுற்றும் சாலையில் 2 கி.மீ. பயணித்து இடது புறம் மலையை நோக்கிச் செல்லும் சாலையில் சென்றால் மலையடிவாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயத்தை அடையலாம்.  கோயிலுக்கு முன்பாகவும், தெற்குப் புறத்திலும் குளங்கள் உள்ளன. தென்புறத்திலுள்ள தீர்த்தம் சிவபெருமானால் உருவாக்கப்பட்டதாகும். உயரமான இடத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றதும், இரண்டு வரிசையாக சப்தமுனிகள் நெடிய வடிவில் அமைந்துள்ளனர். பழைய முனிவரிசை மிகவும் சிதிலமாக இருந்ததால், அதை அகற்றாமல் புதிய வரிசையை அமைத்தனர்.

இப்போது இரண்டு வரிசைகளுமே புதுப்பித்து வண்ணம் தீட்டப்பட்டுப் பொலிவுடன் விளங்குகின்றன. இவர்களை வணங்கி மகாமண்டபத்தை அடையலாம். இதன் முகப்பில் பத்மாசனத்தில் நாகம் குடைபிடிக்க அமர்ந்திருக்கும் பச்சையம்மன், சப்தமாதர்கள், அஷ்டபைரவர்கள் முதலியோரின் சுதை வடிவங்கள் பொலிவாக உள்ளன. கருவறைக்கு நேராக அமைந்த சிறிய மண்டபத்தில் நந்திதேவர் அன்னையை நோக்கியவாறு உள்ளார். இவரை வணங்கி உட்சென்று மகாமண்டபத்தை அடையலாம். மகா மண்டபத்தின் பெரிய முனிகளின் வடிவங்களும், அவர்களில் ஒரு சிலரின் அபிஷேகத் திருமேனிகளும் உள்ளன. இம்மண்டபத்தின் தென்  முனையில் விநாயகரும் வடமுனையில் வள்ளி தெய்வானை உடனாய முருகப்பெருமானும் கல்திருமேனி கொண்டு தனித்தனிச் சந்நதிகளில் உள்ளனர்.

இவர்களை வணங்கி கருவறைக்குள் செல்லலாம். இதன் நான்கு புறத்தில் திண்ணைகள் அமைக்கப்பட்டு, பச்சையம்மன் தோழியர், மன்னாதீசுவரர், மகா விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி முதலியோர் பெரிய சுதைச் சிற்பங்களை அமைத்து வண்ணம் தீட்டியுள்ளனர். நடுவில் பெரிய அலங்கார வளைவு அமைக்கப்பட்டு, அதில் பச்சையம்மன் சுதை வடிவமாகக் காட்சி தந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு முன்பாக அவளது அபிஷேகத் (கல்லால் ஆன) திருமேனி உள்ளது. அம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்துள்ளாள். வலக்கை மலரேந்த, இடது கரத்தை இடது முழங்கால் மீது நீட்டியுள்ளாள். இரு புறமும் சாமரம் வீசும் அரம்பையர் உள்ளனர். பச்சையம்மனின் அழகிய உலாத்திருமேனி உள்ளது.

கருவறையில் பச்சையம்மன் வீற்றிருக்கிறாள். உள்மண்டபம், வெளி மண்டபம் ஆகியவற்றில் அழகிய வளைவுக்குள் காத்தாயி, வேங்கமலை நாச்சியார் முதலிய தேவியர்களும், முனிகளும், உள்ளனர். பாம்பு வடிவங்கள் பல உள்ளன. ஆலயத்திற்கு  வடக்கில் முற்றத்திலுள்ள முனிகளை நோக்கியவாறு நெடிய யானை, குதிரை உருவங்கள் உள்ளன. அம்பிகை இறுதியாகத் தவம் இருந்த இடம் என்பதாலும், சிவனருள் பெற்று அவருடலில் பாகம் பெற்று மேன்மை பெற்ற இடம் என்பதாலும், இந்த இடம் தனிச்சிறப்பு பெறுகிறது. அருகிலுள்ள குன்றில் இறைவனும் இறைவியும் இணைந்து காட்சியளிக்கும் அர்த்தநாரீசுவரர் ஆலயம் உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

 • peru_kovilll11

  பெருநாட்டில் பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 3000 ஆண்டுகால பழமை வாய்ந்த 21 கோபுரங்களுடன் கூடிய ஆலயம் கண்டுபிடிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்