SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரம் வளர்க்க மகிழ்ச்சி கிட்டும்

2019-08-07@ 15:45:17

என்ன சொல்கிறது என் ஜாதகம்

* என் மகன் துபாயில் கூலி வேலை செய்து வருகிறான். நான் தினக்கூலி செய்யும் விதவைத் தாய். அவன் இந்தியா வந்தால் நல்ல வேலை கிடைக்குமா? அல்லது அங்கேயே இருக்கட்டுமா? அவனுக்கு திருமணம் எப்போது எப்படி அமையும்? - மருதாயி, சென்னை.

உங்கள் மகனின் ஜாதகப்படி அவருக்கு வெளிநாட்டு உத்யோகம் என்பதே நன்றாக உள்ளது. அவிட்டம் நட்சத்திரம் இரண்டாம் பாதம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகக் கணக்கின்படி தற்போது குரு தசையில் சனி புக்தி என்பது நடந்து வருகிறது. வேலையைக் குறிக்கும் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதும், பத்தாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் பன்னிரண்டாம் வீட்டில் இடம் பிடித்திருப்பதும் அந்நிய தேசப் பணியை உறுதி செய்கிறது. உள்நாட்டில் அவருக்கு நல்ல உத்யோகம் என்பது கிடைக்காது.

அவர் தொடர்ந்து அங்கேயே வேலை செய்து வருவது நல்லது. 18.01.2021ற்குப் பின்னர் நேரம் மாறுவதால் அந்த நாட்டிலேயே நல்லதொரு வேலையினைப் பெறுவார். அதுவரை கடுமையாக உழைத்து வரச் சொல்லுங்கள். உண்மையான உழைப்பிற்கான அங்கீகாரம் என்பது நிச்சயம் கிடைக்கும். 28வது வயதில் அவரது திருமணம் நடைபெறும். நல்ல குணவதியான பெண் அவருக்கு மனைவியாக அமைவார். உங்கள் மகன் உங்களை என்றென்றும் நல்லபடியாக கவனித்துக் கொள்வார். உத்தமமான பிள்ளையைப் பெற்றெடுத்திருக்கிறீர்கள் என்று இந்த உலகம் உங்களைப் போற்றுகின்ற நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க வளமுடன்.

* நான் காரண காரியமில்லாமல் அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் மனைவி காலமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இரு பிள்ளைகள் வெளிநாட்டில் நிரந்தரமாக குடியேறிவிட்ட நிலையில் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறேன். அந்திம காலத்தில் துணை இல்லாத நிலையில் மனநிம்மதி இல்லை. என் இறுதிக்காலம் எப்படி இருக்கும்? - கே. இராமசாமி, கோவை.

இறைவன் படைப்பினில் காரண காரியம் இல்லாமல் எது ஒன்றும் நடப்பதில்லை. 70வது வயதில் இருக்கும் நீங்கள் மனநிம்மதி இன்றி வாழ்வதாக கடிதத்தில் எழுதியுள்ளீர்கள். முதுமையில் தனிமை என்பது கொடிதினும் கொடிது என்ற ஔவையாரின் கூற்றினை நினைவூட்டுகிறது உங்கள் கடிதம். நீங்கள் ஒரு சாதாரண தந்தை அல்ல. இரண்டு பிள்ளைகளையும் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்துள்ளீர்கள்.

இத்தனை பக்குவம் நிறைந்த நீங்கள் தனிமையில் இருப்பதாக எண்ணலாமா? முதியோர் இல்லத்தில் உங்களுடன் தங்கியிருக்கும் மற்ற வயோதிகர்களுடன் நெருங்கிப் பழகுங்கள். அவர்கள் எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள். 70 வயதானாலும் இன்னமும் நல்ல தேக ஆரோக்யத்துடன் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் ஜாதகம் உணர்த்துகிறது. கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் மிகுந்த சுறுசுறுப்பு கொண்டவர்.

மேஷ ராசிக்கு அதிபதி ஆகிய செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கிறார். செவ்வாய் பகவானே சுறுசுறுப்பிற்கும், தேக வலிமைக்கும் அதிபதி. உங்கள் ஜாதகக் கணக்கின்படி தற்காலம் சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்தில் ராகு அமர்ந்திருப்பதால் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகிறது. உங்களால் இந்த உலகத்தில் ஆக வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள். தினமும் காலை வேளையில் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மரங்களுக்கு நீர் பாய்ச்சுங்கள்.

உங்களால் இயன்ற வரை நிறைய மரக்கன்றுகளை வாங்கி நட்டு வையுங்கள். அந்த மரக்கன்றுகள் வளர வளர உங்கள் மனதில் குதூகலம் வந்து சேரக் காண்பீர்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி தீர்க்காயுள் என்பது உண்டு. இறுதிக்காலம் என்ற வார்த்தையை குறைந்தது இன்னும் பதினாறு ஆண்டுகளுக்கு யோசிக்க வேண்டிய அவசியமே உண்டாகாது என்பதையே உங்கள் ஜாதகம் தெளிவாக உணர்த்துகிறது.

* எனது கணவருக்கு 2002ல் ஸ்ட்ரோக் வந்தது. இப்போதும் நடப்பதற்கு சிரமப்படுகிறார். மனதளவில் சரியாக இல்லை. எதிலும் உற்சாகம் இல்லை. அவர் மனநிலை சரியாகி நன்றாக நடக்க வேண்டும். அவர் எப்போது குணமடைவார்? - லலிதா,ஸ்ரீரங்கம்.

விசாகம் நட்ச்த்திரம் இரண்டாம் பாதம், துலாம் ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவர் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. கேது தசையின் காலத்தில் அவருடைய உடல் ஆரோக்யம் கெட்டிருக்கிறது. ஸ்ட்ரோக் வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒன்பதாம் வீட்டு ராகு ஊழ்வினைப் பயன் இது என்பதை உணர்த்துகிறார். கணவருக்கு நீங்கள் செய்யும் பணிவிடை நிச்சயமாக பலனைத் தரும்.

அவரது ஜாதகத்தில் தசாநாதன் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் சுக ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி சந்திரனும் சுக ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். சுகமான வாழ்விற்கு அவரைப் பொறுத்த வரை குறைவு ஏதும் இல்லை. உங்களைப் போன்ற நல்ல குணமுள்ள மனைவியைப் பெற்றிருக்கும் அவருக்கு வாழ்நாள் முழுவதும் சுகமான வாழ்வு என்பது நிலைத்திருக்கும்.

ஜென்ம லக்னத்தில் செவ்வாய் நீசம் பெற்றிருப்பதால் அவரது மனநிலையில் அவ்வப்போது மாற்றத்தினை உணர்கிறீர்கள். செவ்வாய்க்கிழமை தோறும் ரங்கநாதப் பெருமாள் ஆலயத்தில் அமைந்திருக்கும் சக்கரத்தாழ்வார் சந்நதிக்குச் சென்று இரண்டு நெய்விளக்குகள் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் கணவரையும் சக்கரத்தாழ்வாரின் சந்நதிக்கு அழைத்துச் சென்று தரிசிக்க வையுங்கள். சுதர்ஸனப் பெருமாளின் பார்வை உங்கள் கணவரின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தினை உண்டாக்கும்.

* கடந்த இரண்டரை வருடத்திற்கு மேலாக வலதுகால் மூட்டு வலியால் மிகவும் சிரமப்படுகிறேன். அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி என பல டாக்டர்களிடம் காண்பித்தும் குணமடைந்தபாடில்லை. என் ஜாதகத்தின்படி கால்வலி எப்போது குணமடையும்? என் ஆயுள் பாவம் எப்படி உள்ளது? - ஜெயஸ்ரீ , மதுரை.

உங்கள் வயதினை ஒத்த பெரும்பாலான பெண்களுக்கு வருகின்ற பிரச்னைதான் உங்களுக்கும் உண்டாகி இருக்கிறது. உங்களுக்காவது வலது கால் மட்டும்தான் வலியைத் தந்துகொண்டிருக்கிறது. பல பேர் இரண்டு கால்களிலும் மூட்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஜாதகத்தினை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு கணக்கீடு செய்து பார்த்ததில் தற்காலம் சனி தசையில் புதன் புக்தி நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது.

கார்த்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் மன உறுதியினை நிச்சயம் தருவார். உங்கள் ஜாதக பலத்தின்படி எலும்புகள் உறுதியாகத்தான் உள்ளன. ஆனால் மூட்டுவலி பிரச்சினையைத் தருபவர் ராகு. அவர் ரோக ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இந்த பிரச்னையை முற்றிலுமாக சரி செய்ய இயலாது.

ஆனால் வலியினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும். ராகுவிற்கு உரிய தானியம் ஆகிய உளுந்தினை ஆகாரத்தில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். அது தோல் உளுந்தாக இருக்க வேண்டும். வெள்ளை உளுந்து சேர்ப்பதால் மூட்டு வலி பிரச்னை தீராது. உளுந்து கழுவிய கழிநீரை சுடவைத்து அந்த நீரினை வலியிருக்கும் கால் மூட்டினில் தடவிக் கொள்ளுங்கள். உளுந்து தைலம் தடவிக் கொள்வதும் வலியினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி குரு ஆட்சி பலத்துடன் இருந்தாலும் வக்ர கதியில் இருப்பதோடு சனியுடன் இணைந்துள்ளார். சனி பகவானும் வக்ரம் பெற்றிருப்பதால் மன உறுதியை அவ்வப்போது இழந்துவிடுகிறீர்கள். செவ்வாய் தோறும் சுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு வருவதாலும், தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து வருவதாலும் மனதில் உற்சாகம் பெறுவீர்கள். உடலும் ஆரோக்யமாய் இருக்கும். ஆயுள் பாவம் என்பது உங்களுக்கு மிகவும் சிறப்பாக உள்ளது. கவலை வேண்டாம்.

* 25 வயதாகும் என் பேத்திக்கு இதுவரை நான்கைந்து மாப்பிள்ளைகள் வந்து பார்த்துவிட்டு சென்றார்கள். ஜாதகப் பொருத்தமெல்லாம் சரியாகத்தான் உள்ளது. பெண் பிள்ளைக்குப் பிடித்துத்தான் இருக்கிறது. ஆனால் பெற்றோர் ஏதாவது காரணத்தைச் சொல்லி தடைசெய்து விடுகிறார்கள். என் பேத்திக்கு எப்போது திருமணம் நடக்கும்? - சுப்ரமணியம், சேலம்.

உங்கள் பேத்தியின் ஜாதகத்தை சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தின்படி கணிதம் செய்து பார்த்ததில் அவர் பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி குரு பகவான் வக்ரம் பெற்றிருப்பதால் எந்த ஒரு விஷயமும் அவருக்கு நிதானமாகத்தான் நடைபெறும். நிதானமாக நடந்தாலும் அது அவருக்கு பிடித்தமானதாய் அமையும். 08.06.2019 முதல் அவருக்கு திருமண யோகம் என்பது துவங்குகிறது.

இந்த வருடத்தின் இறுதிக்குள்ளாக திருமண நிச்சயதார்த்தம் என்பது நடந்துவிடும். 2020ம் ஆண்டின் முற்பாதியில் சிறப்பான முறையில் திருமணத்தை நடத்திவிடுவீர்கள். கௌரவம் நிறைந்த ஒரு குடும்பத்தில் உங்கள் பேத்தி தனது குடும்ப வாழ்வினைத் துவக்குவார். அவரது ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் இல்லை. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் பிதுர் காரகனும், பித்ரு ஸ்தான அதிபதியும் ஆகிய சூரியன் அமர்ந்திருப்பதால் தகப்பனார் வழி உறவு முறையில் மணமகன் அமைவதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் பேத்தி பிறந்த ஊரில் இருந்து கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்து மணமகன் வந்து சேர்வார்.

ஏழரைச் சனி என்ற ஒன்றைத் தவிர ஜாதகத்தில் வேறு எந்த இடைஞ்சலும் இல்லை. சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் முடிச்சிட்ட விளக்கினை ஏற்றி வைத்து வணங்கி வரச் சொல்லுங்கள். விரைவில் உங்கள் பேத்தியினை மணக்கோலத்தில் காண்பீர்கள்.

* என் மகனுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. மறுமணம் எப்போது நடைபெறும்? மறுவாழ்வு சிறப்பானதாக அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - கன்னிகா, சென்னை.

உங்கள் மகனின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகத்தில் செவ்வாயும் கேதுவும் இணைந்து கடுமையான தோஷத்தினைத் தருகிறார்கள். ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தினை கணிதம் செய்து பார்த்ததில் தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்தில் லக்னாதிபதி குரு வக்ரம் பெற்ற நிலையில் ராகுவுடன் இணைந்திருக்கிறார்.

மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவக அதிபதி புதன் நஷ்டத்தைத் தரும் எட்டாம் வீட்டில் நீசம் பெற்ற சூரியனுடன் இணைந்திருப்பது என பல்வேறு வழிகளில் தோஷத்தின் வீரியம் கூடுதலாக உள்ளது. வக்ரகதியில் சஞ்சரித்தாலும் ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வை பலத்தாலும், ஐந்தாம் வீட்டில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கும் சந்திரனாலும், பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரனின் அமர்வினாலும் இந்த தோஷங்களைக் கடந்து நல்வாழ்வினைப் பெறுகின்ற வாய்ப்பும் உள்ளது. மனைவியால் சுகமில்லை என்றாலும் பிறக்கின்ற மகளால் இவரது வாழ்வு சிறப்படையும். மகள் பிறக்கும் நேரம் உங்கள் மகனின் வாழ்வில் மகிழ்ச்சி என்பது கிட்டும்.

உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசமரத்தடி நாகருக்கு செவ்வாய் தோறும் பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள். சாதுக்கள், சந்யாசிகள், குருமகான்கள் போன்றவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதும் இவரது ஜாதகத்தில் உள்ள தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கும். அவரது திருமணத்தை சுப்ரமணிய ஸ்வாமியின் திருத்தலத்தில் வைத்து நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 23.09.2020ற்குள் மறுமணம் நடக்கக் காண்பீர்கள்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது,  என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்