SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உங்கள் லக்னம் லக்னாதிபதியின் நிலை என்ன?

2019-08-07@ 15:31:39

ராசி, நட்சத்திரம், சந்திரன், சூரியன் என்றால் பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். நான் இந்த ராசியில் பிறந்துள்ளேன், என்ன நட்சத்திரம் இது என்று சொல்லி விடுவார்கள். ஆனால் உங்கள் லக்னம் என்ன என்று கேட்டால் பலருக்குச் சரியாகத் தெரியாது. ராசி எல்லோருக்கும் தெரிந்தளவிற்கு லக்னம் தெரிவதில்லை.

சந்திரனின் சஞ்சாரம் அதாவது தினமும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் செல்லும். அதை வைத்து இந்த ராசியில் ஒருவர் பிறந்துள்ளார் என்று கணிக்கிறோம். அதேபோல் சூரியன் இருக்கும் ராசியை வைத்துக் கணிப்பதுதான் லக்னம். சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு ராசியில் இருப்பார். உதாரணமாக சித்திரை மாதம் என்று எடுத்துக்கொண்டால் சூரியன் மேஷ ராசியில் அந்த மாதம் முழுவதும் இருப்பார். சூரியன் இருக்கும் ராசியில் இருந்துதான் அதிகாலை தொடக்கம் முதல் லக்னம் தொடங்கும். சித்திரை மாதம் சூரிய உதய நேரத்தில் முதல் லக்கினமாக மேஷம் தொடங்கி, தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு லக்னம் என்ற கணக்கில் ஒரு நாளைக்கு மேஷம் முதல் மீனம் வரை 12 லக்கினங்கள் முடிவு பெறும்.

குழந்தை இந்த பூமியில் பிறந்த இடத்தையும், நேரத்தையும், கணக்கில் எடுத்துக்கொண்டு ராசி கட்டத்தில் எந்த லக்னம் என்று குறிப்பதுதான் பிறந்த லக்னம், ஜென்ம லக்னம், ஜெனன லக்னம் என்று சொல்கிறோம். ஒரு குழந்தை ஜெனனமாகும் சமயத்தில் கீழ்வானத்தில் உதயமாகி நகர்ந்து கொண்டிருக்கும். ராசி இல்லமே ஒருவரின் பிறந்த லக்கினம். இந்த லக்கினம்தான் ஜாதகத்தில் மிகவும் முக்கியமான ஸ்தானம். இந்த இடத்தில் இருந்துதான் மற்ற ஸ்தானங்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த லக்னம் அமையும் ராசிதான் நம் வாழ்க்கையின் அமைப்பு, தத்துவம், இதன் அதிபதி லக்னாதிபதி ஆவார்.

அவர்தான் ஜாதகத்தில் மிக மிக முக்கியமான கிரகம். ஒருவரின் ஜாதகத்தையும், அதன்மூலம் ஜாதகரையும் இயக்குபவர், இவர்தான் தலைமைப்பீடம். இந்த லக்னம் என்பதுதான் உயிர், இதை ஆன்மா என்று சொல்லலாம். எந்த லக்னமாக இருந்தாலும் உயர்வு, தாழ்வு என்ற பாகுபாடு பிரச்னைகள் கிடையாது. எல்லா லக்னமும், லக்னாதிபதியும்  ஒவ்வொரு வகையில் சிறப்பு மிக்கவர்கள், அவரவர்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப ஜாதகருக்கு பலன்களைத் தருவார்கள். லக்னமும், லக்னாதிபதியும் சிறப்பாக, யோகமாக அமைவது அவரவர்கள் செய்த பூர்வ புண்ணிய பலம்.

வாங்கி வந்த வரம் என்று சொல்வார்கள். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். அதுபோல ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக, யோகமாக இருந்தால்தான் அந்த ஜாதகம் முதல் தரமான ராஜயோகத்தை தரும். இந்த லக்ன பலம் ஒருவரின் இறுதிக்காலம் வரை பலன் தரக்கூடிய ஒன்றாகும். ஜாதகத்தில் தசா மாற்றங்கள் மூலம் தீய, நீச, கிரக தசைகள், கோச்சார பெயர்ச்சி கோளாறுகள் எல்லாம் பலமான லக்னம், லக்னாதிபதி அமைந்த ஜாதகங்களை பாதிப்பது கிடையாது. இத்தகைய சக்தி வாய்ந்த லக்னத்தின் மூலம் பல விஷயங்களை அறிய முடியும்.

திருந்திய ஜென்ம நோக்கு
சீர்க்குண மழகு காந்தி
பொருந்திய சரீர நன்மை
புகழோடு வர்ணம் புத்தி
வருத்திய வாயுள் புத்தி
வாய்த்த லட்சணங்களெல்லாம்
திருத்தவே லக்கினத்தார்
சீர்பெற வறிந்து சொல்லே.
 
என்பதற்கேற்ப ஜாதகருடைய உதயம், கீர்த்தி, மூர்த்தி, தேக நிறம், சிந்தனை, அறிவு, ஆற்றல், பேச்சு, தோரணை, மனோபலம், கவர்ச்சி, கற்பனாசக்தி சமயோசித புத்தி, நிர்வாகத்திறன், ஒழுக்கம், நற்பண்புகள், பூர்வ புண்ணிய கர்மா என எண்ணிலடங்கா விஷயங்களை, அமைப்புக்களை உள்ளடக்கியதுதான் ஜென்ம லக்னம்.
ஜாதக அமைப்பின்படி 12 ராசி வீடுகள், 12 ஸ்தானங்கள். இவை ஒவ்வொன்றிற்கும் சூசகமான சம்பந்தம் உள்ளது. அதில் முக்கியமாக கேந்திரம், கோளம் என்று சொல்வார்கள். லக்னம், நான்கு, ஏழு, பத்து. இது கேந்திர ஸ்தானமாகும். இது நம்முடைய வாழ்வாதாரத்தைக் குறிக்கும்.

லக்னம் தலைமைச் செயலகம் இங்கு இருந்துதான் எல்லாம் இயங்குகிறது. அடுத்து நான்காவது கேந்திரம். இது சுகஸ்தானம், மண், மனை, வீடு, பூமி, தாய், கல்வி என பல விஷயங்களைக் கொண்டுள்ளது.  அடுத்து ஏழாம் இடம். இது மிக முக்கியமான இடம். லக்னம் ஜாதகரைப்பற்றி அறிவிக்கும். ஏழாம் இடம் கணவன் அல்லது மனைவி பற்றி பேசக்கூடிய இடம். இல்லற சுகம், ஆசாபாசங்கள், காமம், நடத்தை, பயணங்கள், நண்பர்கள் என பல்வேறு வாழ்க்கையின் மறுபக்கத்தை காட்டும் இடம். அடுத்து தசம ஸ்தானம் எனும் பத்தாவது கேந்திரம் வாழ்வாதாரத்தை  பற்றி உணர்த்தும் இடம்.

தொழில், வியாபாரம், பதவி, வேலை வாய்ப்பு என பல அம்சங்கள் இந்தப் பத்தாவது கேந்திரத்தில் உள்ளது. கோணம், திரிகோணம் என்று சொல்லப்படும் ஐந்து மற்றும் ஒன்பதாம் இடத்தை குறிக்கும். பஞ்சம ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், சிந்தனை, அதிர்ஷ்டம், யோகம் போன்றவற்றை தெரிவிக்கும். அடுத்து பாக்கியஸ்தானம் என்ற இடம் பூர்வீக விஷயங்கள், தகப்பனார், பக்தி, அனுபவிக்கும் யோகம் என பல மிக முக்கிய அம்சங்களை தன்னகத்தே கொண்டது. ஆகையால்தான் ஜாதகம் என்று எடுத்துக்கொண்டால் ஒன்று, ஐந்து, ஒன்பதுக்குரியவர்கள் பாபி சுபரானாலும் மிஞ்சி, விஞ்சி பலன் தருவார்கள் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.

ஆகையால் இந்த ஒன்று என்று சொல்லக்கூடிய லக்னம், நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து ஆகிய வீடுகள், வீடுகளின் அதிபதி கிரகங்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்து அல்லது பார்த்து இருப்பது, பரிவர்த்தனை பெற்று இருப்பது சிறப்பாகும். கேந்திராதிபதி கேந்திரத்தில் இருப்பது யோகம், கோணாதிபதி கோணத்தில் இருப்பது யோகம். கேந்திராதிபதி கோணத்தில் மாறி நிற்பது ராஜ யோகம், கோணாதிபதி கேந்திரத்தில் இருப்பது பாக்கிய யோகம். லக்கினமும், லக்னாதிபதியும் பலம் பெற்றால்தான் தனக்கென உயர்ந்த லட்சியங்கள், கொள்கைகள், நல்ல சிந்தனைகள், நோக்கங்கள் ஏற்படும்.

நிர்வாகத்திறன், ஆளுமைத்தன்மை, அதிகாரம், பேச்சாற்றல், சொல்லாற்றல், தர்க்க வாதம், தன்னிச்சையாக செயல்படும் திறன், முடிவு எடுக்கும் தைரியம் போன்ற போர்க்குணங்கள் அமையும். ஜாதகத்தில் பல ஸ்தானங்கள் பலமாக அமைந்தால்தான் அந்த ஜாதகம் சாதனை செய்யும். யோகாதிபதிகள் நல்ல அம்சத்தில் இருந்து வசதி, வாய்ப்பு, பட்டம், பதவி, சொத்து சுகம் என சேரும்போது லக்னாதிபதி நல்ல நிலையில் இருந்தால்தான் அதை ஒன்றுக்கு பத்தாக பெருக்கி யோக, யோக பாக்கியங்களை அடைய முடியும்.
 
விதி - மதி - கதி

ஜோதிட அமைப்பில் விதி என்பது லக்னத்தை குறிக்கும். சாதாரணமாக பேச்சு வழக்கில் நன்மையோ, தீமையோ எது நடந்தாலும் அவன் விதிப்படி நடக்கிறது என்று சொல்வார்கள். இதன் உள் சூட்சுமம் தெரிந்து சொல்கிறார்களோ அல்லது தெரியாமல் சொல்கிறார்களோ அதுதான் உண்மை. அந்த விதியை இயக்குவது, நடத்துவதுதான் விதி என்ற லக்னம். இந்த லக்னம் பலமாக அமைந்தால்தான் அந்த ஜாதகருக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது.

இந்த லக்னம் சரியாக அமையாதபோது மதி என்று சொல்லப்படும் சந்திரனை வைத்து அதாவது ராசிப்படி பலன்கள் பார்ப்பார்கள். கோச்சார பலன்களையும் சந்திரனை வைத்துத்தான் பார்க்க வேண்டும். இந்த இரண்டும் சரியாக அமையாதபோதுதான் கதி என்ற சூரியனை மையமாக வைத்து பலன்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் எல்லாம் முதலில் சூரியன் பலமாக இருக்கிறதா என்று பார்த்துத்தான் ஜாதகத்தை பார்க்கத் தொடங்குவார்கள். அந்தளவிற்கு இந்த லக்னம், சந்திரன், சூரியன் இந்த மூன்றும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.
 
லக்ன வகைகள்

பல வகையான பிரச்னைகள், விஷயங்கள், போன்றவற்றை தெரிந்துகொள்வதற்கு சாஸ்திரம் பலவகை கணக்குகளை குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் துவாதச லக்னங்கள் என 12 வகையான லக்ன விளக்கங்கள் பழமையான அபிதான சிந்தாமணி எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது. 1) ஜென்ம லக்னம், 2) ஒரோ, 3) கடிகா, 4) ஆருடம், 5) நட்சத்திரம், 6) காரகம், 7) ஆதரிச, 8) ஆயுள், 9) திரேக்கானம், 10) அங்கிசம், 11) நவாம்சம், 12) பாவம்.

இந்த லக்ன பட்டியலில் உள்ள லக்ன வகைகளில் தற்காலத்தில் நடைமுறையில் இருப்பது ராசிக்கட்டத்தில் உள்ள லக்கினம், நவாம்ச கட்டத்தில் உள்ள லக்னம். பாவக் கட்டத்தில் உள்ள கிரக நிலைகள். இதை வைத்துத்தான் பலன்களைத் தெரிந்துகொள்கிறோம். ராசிக்கட்டத்தில் உள்ள லக்னமும், நவாம்ச கட்டத்தில் உள்ள லக்னமும் பலம் பெறுவது முக்கியம். பலம் என்பது அந்த லக்னத்தையோ கிரகங்கள் பார்ப்பது, யோக கிரகங்கள் இருப்பது. யோக கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் லக்னம் அமைவது. சந்திரனுக்கும், சூரியனுக்கும், லக்னத்திற்கும் தொடர்பு ஏற்படுவது லக்னத்தை சுபகிரகங்கள் பார்ப்பது என பல ஜோதிட சாஸ்திர விதிகள் இருக்கின்றது.

ஒரு சிலருக்கு ஜாதக பலன்கள் பார்க்கும்போது தசா புக்தி பலன்கள் சரியாக இருக்காது. ஜோதிடர் ஜாதகத்தை பார்த்துவிட்டு சுபபலன்களைச் சொல்லுவார். ஆனால் அந்த ஜாதகருக்கு அந்த பலன்கள் நடைமுறை வாழ்க்கையில் சரியாக இருக்காது. காரணம் லக்னம் ஸ்திரமாக இருக்காத அமைப்புதான். இதை லக்ன சந்தி என்று சொல்வார்கள். அதாவது ஒரு லக்னம் முடிந்து அடுத்த லக்னம் ஆரம்பம் ஆகும் நேரத்தில் பிறப்பவர்களின் பலன்கள் இப்படித்தான் அமையும்.
 
1) லக்னம் ஸ்திரமாக ராசி, நவாம்சத்தில் இருப்பது மிகவும் சிறப்பு.

2) லக்னம், லக்னாதிபதியை யோக கிரகங்கள் பார்ப்பது நல்ல அமைப்பு.

3) லக்னாதிபதி 2ல் இருந்தால் வாக்கு பலம் உண்டு. வாய் மூலம் பேசி தொழில் செய்யும் ஜீவனம் அமையும். உதாரணம் ஆசிரியர், வக்கீல், புரோகிதர், இன்னும் பல.

4) லக்னாதிபதி 4, 7, 10 போன்ற கேந்திரத்தில் இருப்பது ராஜ யோகம்.

5) லக்னாதிபதி 5, 9ல் இருந்தால் மந்திரி, பட்டம், பதவி, சொத்து யோகம்.

6) லக்னத்தை புதன் பார்த்தாலும், லக்னத்தில் புதன் இருந்தாலும் வித்தை வரும், கணக்கு வரும், சாஸ்திர புலமை, எழுத்தாற்றல், பேச்சாற்றல், எல்லாவற்றிலும் நிபுணத்துவம் வரும். கண் பார்த்தால் கை செய்யும்.

7) லக்னத்தில் சந்திரன் இருப்பது ராசியும், லக்னமும் ஒன்றாக உள்ள அமைப்பாகும்.

8) லக்னத்திற்கு குரு சம்பந்தம் ஏற்படும்போது மதிப்பு, கௌரவம் ஏற்படும். சாஸ்திர விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். நிதித்துறை, நீதித் துறையில் பணி அமையும்.

9) லக்னத்திற்கு சனி சம்பந்தம் ஏற்படும்போது, அந்தந்த லக்னத்தைப் பொறுத்து பலன்கள் இருக்கும். கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். சேவை மனப்பான்மை இருக்கும். இரும்பு, எந்திரம், எண்ணெய், பிரிண்டிங் பிரஸ், பதிப்பகம் போன்றவற்றில் ஜீவனம் அமையும்.

10) லக்னத்திற்கு சுக்கிரன் சம்பந்தம் உண்டாகும்போது இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனம், கலைத்துைற, சினிமா, சின்னத்திரையில் வாழ்வாதாரம் அமையும். வெள்ளி, தங்கம், வைரம், ஆடை, அணிகலன்கள் என கவர்ச்சிகரமான, நவநாகரீகமான, பேன்ஸி ஸ்டோர் வகையில் இன்னும் பல.

11) லக்னத்திற்கு சூரியன், செவ்வாய் சம்பந்தம் உண்டாகும்போது எல்லாத் துறைகளிலும் நிர்வாகத் திறன் மிக்கவர்களாக விளங்குவார்கள். உயர் உச்ச பதவிகள் கிடைக்கும் ஆனால் அதிகாரம், பேச்சில் கண்டிப்பு இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், பதற்றத்துடனும் காணப்படுவார்கள். அரசாங்கத்தில் IAS, IPS, UPS, IFS, கலெக்டர் தாசில்தார், ராணுவம், போலீஸ், தீயணைப்புத்துறை, மற்றும் அரசியல், சங்கங்கள், பெரிய வியாபார நிறுவனங்களை ஏற்படுத்தும் யோகம், கட்டிட சம்பந்தமான,  நெருப்பு சம்பந்தமான வகையில் வாழ்க்கை அமையும்.

12) லக்னத்திற்கு ராகு, கேது சம்பந்தப்படும்போது ராகு கேதுவின் யோக பலத்தை பொறுத்து பலன்கள் அமையும். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் என்று சொல்வார்கள். இதில் நிறை, குறைகள் உண்டு. இந்த அமைப்புள்ளவர்கள் வீண் விவாதம் செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் குணாதிசயங்கள், மனநிலை, ஒருநிலை இல்லாததாக இருக்கும். ஆன்மிகம், மந்திரம், தந்திரம், சாஸ்திர ஞானம் இருக்கும். மருத்துவர்களாக இருப்பவர்களின் ஜாதகத்தில் ராகு, கேது சம்பந்தம் இருக்கும். மருத்துவ சம்பந்தமான மருந்து கடை, பரிசோதனை கூடம், ரசாயன சம்பந்தமான தொழில்கள் என பல வகைகளில் ஜீவனம் அமையும்.

லக்னத்தில் நீச கிரகம் இருப்பது, லக்னாதிபதியுடன் நீச கிரகம் இருப்பது நல்ல அமைப்பு கிடையாது. ஜாதகரின் பழக்க வழக்கங்கள் சரியாக இருக்காது. தீய பழக்க வழக்கங்கள், தீயோர் சேர்க்கை இருக்கும். லக்னம், லக்னாதிபதியுடன் 6, 8, 12க்கு உடையவர்கள் சம்பந்தம் பெற்றால் ஏதாவது பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கும். பிடிவாத குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். வழக்கு, பஞ்சாயத்து என்று இருக்கும். அடிக்கடி உடலில் காயங்கள் ஏற்படும். கடன், நோய், எதிரிகள் அதிகம் இருப்பார்கள். அடிக்கடி வீண் செலவுகள், மருத்துவச் செலவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

நீச கிரகங்கள், ராகு, கேது சம்பந்தப்பட்ட தசா புக்தி காலங்களில் மனநிலை பாதிப்பு, நரம்பு கோளாறுகள், தற்கொலை எண்ணங்கள், முயற்சிகள் உண்டாகும். விபத்துக்கள் மூலம் அங்கஹீனம், உயிர் இழப்பு ஏற்படும். வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடித் தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்பதற்கேற்ப அவரவர் வாங்கி வந்த வரத்திற்கேற்ப ஜாதக கிரக அமைப்புக்கள் பலன் தரும். இதில் பிரதானமானது லக்னம். இந்த லக்ன, லக்னாதிபதி யோகமாக அமைவதன் மூலம் அந்த ஜாதகம் பலம் பெறுகிறது. யோக அமைப்புக்கள் யோக, பாக்ய தசைகள் வரும்போது அதை அனுபவிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கிறது.


ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-11-2019

  17-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-11-2019

  16-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jet15

  1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்

 • amgun

  அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

 • zimbabwe_elephant111

  ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்